இந்து மதத்திற்குள் ஒரு சிறுபான்மை மதம் அய்யாவழி

இந்து மதத்திற்குள் ஒரு சிறுபான்மை மதம் அய்யாவழி
"அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவ சிவா சிவ மண்டலம்" அய்யா வைகுண்டசாமியின் மதிய நேரத்து வழிபாட்டில் இடம் பெறுகிற "உச்சிப்படிப்பு" வாசகம் இது.மகிமைகள் நிறைந்தவனாகிய அல்லாவாலும் நிறைந்திருக்கும் சிவ மண்டலம் என அல்லாவைப் போற்றுகிறது இந்த வாசகம்.அய்யாவழியில் மதிய நேரத்து வழிபாட்டுப் பாடலுக்கு "உச்சிப்படிப்பு" என்று பெயர்.அய்யாவின் மதிய நேரத்து வழிபாட்டில் இஸ்லாமியர்களின் மதிய தொழுகையின் சாயலையும் உணர முடியும். இந்து மதத்திற்குள் அய்யா வைகுண்டர் காட்டிய வழிபாட்டு முறை என்பது முற்றிலும் புதியது.தனித்துவமானது.பல்வேறு விதமான மெய்மைகளை ஒன்றை நோக்கி நெறிப்படுத்தியவர் அய்யா வைகுண்டசாமிகள்.
அய்யாவழியில் வைகுண்டசாமியையே ஏக பரம்பொருளாகக் கண்டு வழிபடுகின்ற மக்களும் இருக்கிறார்கள்.அவரை அவதாரமாகக் கண்டு ,அவர் காட்டிய ஏக பரம்பொருளை வழிபாடு செய்பவர்களும் உண்டு.வைகுண்டசாமிகளின் வழிபாட்டுத் தலங்களான பதிகளிலும் ,நிழற்தாங்கல்களிலும் மதிய நேரத்தில் பாடப்படுகிற "உச்சிப்படிப்பு "என்கிற இந்த பாடல் மாணிக்க வாசகரின் திருவாசகத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
அய்யா வைகுண்டசாமிகள் சுட்டிக்காட்டித் தந்திருக்கும் பரம்பொருள் ,வழக்கமான இந்து மதம் சுட்டிக் காட்டிய பரம்பொருள் அல்ல.அது சிவனையோ , விஷ்ணுவையோ மட்டும் குறிப்பதல்ல.சிவனையும் விஷ்ணுவையும் அது ஒரு சேரக் குறிக்கிறது.பிறவற்றையும் சேர்த்துக் குறிக்கிறது. "அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா ;சிவசிவ சிவசிவ அரகரா அரகரா " என்பது அய்யாவழி வழிபாட்டின் மூல மந்திரம்.இது அய்யாவழியில் "உகப்படிப்பு "என்னும் வழிபாட்டுப் பாடலில் இடம்பெறக் கூடிய வாசகம்.வைகுண்ட சாமியின் அய்யாவழியைப் பின்பற்றுகிற மக்கள் பெரும்பாலோரின் நாவில் சதா உச்சரிக்கப்படும் மந்திரம் இதுவே.என்றாலும் கூட இந்த வாசகமும் அய்யா வைகுண்டர் காட்டிய பரம்பொருள் என்ன என்பதற்கு விடை சொல்வதில்லை.அது ஏக பரம்பொருளையே சுட்டுகிறது.
சிலர் தாங்கள் பின்பற்றுகிற பெருமாள் வழிபாட்டு முறைகளை சொல்லி,அதனால் நாங்களும் இந்த வழிபாட்டைச் சார்ந்தவர்கள்தாமே என்று இவ்வழியைச் சார்ந்த பெரியவர்களிடம் சொல்லும்போது மறுத்துவிடுவார்கள்.அங்கே நீங்கள் வழிபடுவது பெருமாளை அல்லது நாராயணனை மட்டுமே.ஆனால் வைகுண்டசாமிகளின் வழியில் வழிபடப்படுவது அதுவல்ல.நாமம் சூடுவது அங்கும் இருக்கிறது என்பதால் இது ,வைஷ்ணவம் அல்ல.அதுபோல சிவ நாமம் போற்றப்படுகிறது என்பதால் இது சைவமும் அல்ல. அய்யா வைகுண்டசாமிகளின் முதற்சீடரான அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யாவின் ஏக பரம்பொருள் தத்துவத்தை விளக்கக் கூடியது.அந்த நூல் வைகுண்டசாமியால் அடியெடுத்துக் கொடுத்து படைக்கப்பட்டது என்கிற சிறப்பும் பெற்ற நூல்.
வைகுண்டசாமிகள் காட்டித் தந்திருக்கும் பரம்பொருள் ஏக பரம்பொருள்.அது சிவனையும் ,விஷ்ணுவையும் குறிப்பதோடு மட்டுமல்லாமல்,சப்த கன்னிமார்களையும் ,பகவதியையும் சேர்த்தே குறிக்கிறது.அது கன்னியாகுமரி பகவதியையும் குறிக்கிறது,மண்டைக்காடு பகவதியையும் குறிக்கிறது. அகிலதிரட்டம்மானையில் இடம் பெறுகிற இகனை திருமணங்கள்,பரம்பொருளில் பெண் தன்மையையும் இணைந்து ஏக பரம்பொருளாக்கம் பெறுவதை உணர முடியும்.அது கர்த்தாவையும் ,அல்லாஹ்வையும் தன்னின் இணைத்துக் கொள்கிறது.
ஏக பரம்பொருளில் இயற்கையின் பெண் தன்மையையும் ஒருங்கே இணைத்து தன்னில் கொண்டிருக்கிற பிற இந்து உருவகங்கள் இல்லை.அர்த்தநாரீஸ்வரரில் ஆணும் பெண்ணும் தனித்தனியாக இணைப்பு பெறுகின்றன.முப்பொருளும் ஒரு பொருள் என்னும் சித்தாந்தத்தை சுசீந்திரம் தாணுமாலயனில் காண முடிகிறது.ஆனால் அய்யா சுட்டிக் காட்டியிருக்கும் ஏக பரம்பொருள் அத்தனையும் கடந்தது,ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டவற்றிலிருந்து வேறுபட்டது.அனைத்து விதமான தன்மைகளையும் இணைக்கக் கூடியது.இது அய்யா வைகுண்டசாமியின் தனிச் சிறப்புகளில் ஒன்று .வேதாத்திரியம் அருளிய வேதாத்ரி மகரிஷியின் கருப்பொருள் மையமும் ,அய்யா வைகுண்டரின் ஏக பரம்பொருளும் ஒன்றெனக் கொள்ளலாம்.அய்யாவழியில் உள்ள பெரியவர்கள் "நீங்கள் அலைந்து அங்கேயும் ,இங்கேயுமாக குழம்ப வேண்டியதில்லை" எனச் சொல்வதற்கு வைகுண்டசாமிகளின் ஏக பரம்பொருள் தத்துவமே காரணம்.
அய்யா வைகுண்டசாமியின் வழியில் பெண்கள் வழிபாட்டு முறைகளை செய்வதற்கு உரிமை பெற்றவர்கள்.பல இடங்களில் பெண்களே நடத்துகிற , நிர்வகிக்கிற பதிகளும், நிழற்தாங்கல்களும் நிறைய உள்ளன.பெண்களுக்கு கருவறைக்குள் செல்ல அய்யாவழியில் எந்த தடையும் கிடையாது.சாதி எப்படி இங்குள்ள வழிபாடுகளை ஒருவர் மேற்கொள்ள தடையில்லையோ அது போலவே பால் அடையாளங்களும் இங்கே தடையில்லை.அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண் தாலியைக் கழற்றக் கூடாது.வெள்ளைப் புடவை கட்டக் கூடாது .அவள் விரும்பினால் மறுமணமும் செய்து கொள்ளலாம். அய்யாவழியில் ஆணைப் போன்றுதான் பெண்ணும் வேறுபாடுகள் கிடையாது.
தமிழ் நாட்டில் பெரும்பாலும் இந்து சமய கோயில்களில் ஆகம பூஜை முறைகளே பின்பற்றப்படுகின்றன.கேரளாவில் தாந்த்ரிக் பூஜை முறைகள் பேணப்படுகின்றன.இந்த இரண்டு விதமான முறைகளுக்கும் அய்யா வைகுண்டசாமியின் வழிபாட்டு முறைகளுக்கும் இடையே ஒரு சிறிய தொடர்பும் கிடையாது.தொடர்பு இல்லை என்பது மட்டுமில்லாமல் இவற்றுக்கு எதிரான முறையே வைகுண்டசாமிகளின் முறை ஆகும்.வைகுண்ட சாமிகளின் வழிபாட்டுத் தலங்கள் எதிலும் ஆகம பூஜை முறைகளையோ,தாந்த்ரிக் பூஜை முறைகளையோ பின்பற்றுவதற்குரிய வாய்ப்புகளே கிடையாது.அனைத்து சாதியினரும் சமமாகப் பங்கேற்கும் முறை இது.ஆகம பூஜை முறைகளில் உண்டியல் வைப்பதை போன்று அய்யாவின் தலங்களில் உண்டியல் வைப்பதற்கு வாய்ப்பில்லை.
"காணிக்கை போடாதீங்கோ ,கைக்கூலி கேளாதீங்கோ ; அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்தாண்டிடுங்கோ...எவனெவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாமே ....என்னிலும் பெரியோன் நீங்கள் ,உங்களிலும் மேலோன் நான் " என்பதெல்லாம் வைகுண்டசாமியின் வாக்குகள்.வழிபாட்டு முறைகளிலும் பின்பற்றப்படும் வாக்குகள் இவை.வைகுண்டசாமி பதிகளிலும் ,நிழற்தாங்கல்களிலும் காணிக்கை போடுகிற பழக்கம் கிடையாது.
இந்து மதம் என்பது பல்வேறு விதமான முரண்பட்ட தத்துவங்களாலும்,வேறுபாடுகளும் நிறைந்த அவற்றிற்கெல்லாம் இடமளிக்கிற பரந்துபட்ட பெரிய வெளி என்பது உண்மை.காலத்தில் இப்படியான முரண்பட்ட போக்குகள் ஒன்றிணைவதற்கு அவகாசம் அதிகமாக தேவைப்படுகிறது. கால அவகாசத்திற்கு முன்பாகவே ஒன்றிணைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள்,புதிதாக மதத்திற்குள் உருவாகும் போக்குகளை சிறுமைப்படுத்துவதாகி விடுவதோடு மட்டுமல்ல.புதிய போக்குகளின் நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும் ஆகிவிடும்.
அய்யா வைகுண்ட சாமியின் அய்யாவழி என்பது இந்து மதத்திற்குள் சிறுபான்மையாக உருவாகி பல லட்சம் மக்களின் நம்பிக்கையாக இன்று உருவெடுத்திருக்கும் புதிய போக்கு.தனிப் பெருஞ்சக்தி . அரசாங்கமோ,பிற தரப்பு இந்து மத பிரிவினரே இந்த வழியை கபளீகரம் செய்ய முயல்வது ; வைகுண்ட சாமிகளின் நெறிகளுக்கும் ,அதனை பின்பற்றும் மக்களுக்கும் எதிரானது.ஏனெனில் அய்யாவழி இந்து மதத்திற்குள் உருவாகியிருக்கும் சிறுபான்மை மதம்.வேறுபாடுகளற்ற பெருநெறிகளை தன்னகத்தே கொண்ட மதம்.அதனை யார் சிறுமை செய்ய முயன்றாலும் அது நன்மை தராது. "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் பேரிலக்கை தன்னகத்தே கொண்டது .அய்யாவழி தனித்துவமானது;இந்து மதத்தின் நீண்ட கிளையைப் போன்றது அது..அதனை முறிப்பதற்கு ,அச்சுறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படக் கூடாது.வைகுண்டசாமிகளின் அனைத்து முறைகளும் தூய தமிழால் ஆனவை.தமிழுக்கு இடம்மறுக்கும் தரப்புகள் இதில் தலையிடுவது ஒருபோதும் ஆரோக்கியமானதல்ல.

Comments

  1. Sir i parents and me are following this way. it's wonderfull article sir, thanks a lot

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"