போலிச் சாமியாட்டங்கள்

போலிச்  சாமியாட்டங்கள்

நடிகர்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து அரசியலுக்கு முயற்சி செய்வதை பார்க்கும் போது ,தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்திருப்பதையே உணர முடிகிறது.என் இந்த வறட்சி
நிலை ? அரசியல் பார்வைகளை சுயமாக ஏன் உருவாக்க இயலவில்லை ? அனைத்து அரசியல் பிரிவினர்களும் தமிழ்நாட்டில் பொய்மையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள்.அதிகாரத்தை தவிர்த்து இவர்களில் ஒருவருக்கு கூட ,அதாவது ஒரு பிரிவினருக்கு கூட உண்மையின் பேரில் நம்பிக்கையில்லை.அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒருவகையான தீய அரசியலுக்கு தமிழ்நாட்டில் பழக்கம் ஏற்பட்டு விட்டது.இதனை எளிதில் உடைத்து வெளியேறுவது உடனடியாக சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிந்ததுதான்.எதிர்காலத்திலேனும் சாத்தியமாகுமா ?

மக்களின் பிரச்சனைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒருபோதும் உண்மையான தொடர்பே தமிழ் நாட்டில் இருப்பதில்லை.இந்த கட்சி ,அந்த கட்சி என்றெல்லாம் இதில் விலக்கு இல்லை.மக்களை கவருவதற்கான பொய்யான இலக்குகளே அரசியல் கட்சிகளிடத்தில் உள்ளன.அதிகாரம் மட்டுமே பொது இலக்காக உள்ளது. அதிகாரம் மட்டுமே இலக்கு என்னும் போது ஏராளமான பாவனைகள் அனைவரிடமும் ஏற்பட்டு விடுகின்றன.பொதுவில் முன்வைக்கப்படுகிற அரசியல் கோஷங்களுக்கும் மக்களுக்கும்  இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது.

இந்த பொய்யான இலக்கு அரசியல் கட்சிகளிடம் என்றில்லை.ஊடகங்களிடமும் ஏற்பட்டிருக்கிற தொற்று நோய்.அதிகாரம் உட்பட அனைத்தையுமே கேளிக்கையாக ,பொழுதுபோக்காக தமிழ்நாட்டில் புரிந்து கொள்கிறார்கள்.அதிகாரத்தை மட்டுமே ஏற்கும் பண்பு இதற்கு அடிப்படை.இதனை அற வீழ்ச்சி என்றே கொள்ள வேண்டும்.

புதிதாக தமிழ்நாட்டில் உருவாகிற ஊடகங்களை கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கலாம்.முதலில் அவை போலியாக உண்மைத் தன்மைக்கு மிக அருகில் உள்ள ஏதேனும் மக்கள் பிரச்னையை கையில் எடுக்கின்றன.அதன் மூலம் அடைகிற கவனத்தை பின்பு கேளிக்கையின் வணிகமாக்கிக் கொள்கின்றன.இது ஒரு மாதிரி இலக்கணம்.மக்கள் பிரச்சனைகளை பொய்யாக அணுகி ,பொய்யாக முன்வைத்து அதிகாரத்தைப் பெறும் முறை இது.இதுவே அரசியல் கட்சிகளுக்கும் இலக்கணமாக அமைந்து விட்டது.கூடங்குளம் ,ஜல்லிக்கட்டு ,மீனவர் பிரச்சனைகள் எல்லாமே இப்படி ஊடகங்களால் நம்மில் பொய்யான நடிப்பை ஏற்படுத்தியவைதாம்.இவை ஒவ்வொன்றிற்கு பின்பும் ஒரு ஊடகம் வளர்ந்த கதையும் மறைந்திருக்கிறது."தோழர் அந்த பிரச்னையை கையில் எடுக்க வேண்டும் தோழர்" என்றே அனைத்து கட்சியினரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.பிரச்சனைகளை பேசுவது அதிகாரத்திற்கான நடிப்பு என்றாகி விட்டது.இதனைத் திரையில் நடிகர்கள் மிகச் சிறப்பாக செய்துவிட முடியும் எனும் போதும் ,அவர்களின் அதிகார ஆசையும் பதவி மோகமும் நியாயம் பெற்று விடுகின்றன.

ஆனாலோ மக்கள் பிரச்சனைகளும் ,மக்களின் வாதைகளும் சிறு சிறு விஷயங்களில் தமிழ்நாட்டில் நிரம்பி வழிகின்றன.அவர்கள் மீது பெரிய பிரச்சனைகளை அரசியல் தரப்பினர் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் தலைவர்களுமே மக்கள் பிரச்னைகளின்  தலைசிறந்த நடிகர்கள். மக்களுக்கு நடிகர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது.அவர்கள் அரசியல் கட்சிகளில் இருந்து உருவாகிற நடிகர்களா அல்லது திரையிலிருந்து வருகிற  நடிகர்களா  என்பதொன்றே வேறுபாடு.ஊடகங்கள் பொய்யான மக்கள் பிரச்சனைகளை உருவாக்குகின்றன.அரசியல் நடிகர்கள் அதில் நின்று நடனமாடுகிறார்கள்.மக்களின் நிஜ வாழ்வின் பிரச்சனைகள் ஒதுங்கி நின்று அனைத்தையும் வேடிக்கை  பார்க்க மட்டுமே முடிகிறது. பொதுவில் அனைத்து அரசியல் தரப்பினரும் ஒன்றே என்பதை மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

எனக்கு சில காலத்திற்கு முன்பு சாமியார் ஒருவர் நண்பராக இருந்தார்.நல்ல மனிதர் .யார்தான் இங்கே நல்ல மனிதராக இல்லை ? ஆசை.பேராசை.சாமி வந்தது போல நடிப்பார்.குறி சொல்லுவார்.நான் ஒரு சமயம் அவரிடம் சாமி வந்து இறங்கினால் மட்டும் ஆடுங்கள்.போலியாக சாமியாக பாவனை செய்யாதிருங்கள் என்று சொன்னேன்.உண்மையாகவே இங்கே சாமி வந்து விட்டதென்று வைத்துக் கொள்ளுங்கள் ; உங்கள் நிலைமை என்னவாகும் ? எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா ? இல்லை உண்மையாக சாமி வராது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா என்பதே அவரிடம் நான் முன்வைத்த கேள்விகள்.அவர் பரிசீலிக்க வில்லை.அவர் பொய்யாக நிமிர்ந்து நின்று ஆடிக் காட்டுவதோ மிச்சமே வைக்காமல் கழுத்தை அறுத்தெறியும் கருப்பசாமி.பின்னாள் ஒன்றில் நான் சொன்னது பலித்தது.நிஜ கருப்பசாமி வந்தார்.ஆடிய நடிப்பை அந்த வளாகத்திலேயே  அவர் அறுத்துக் கொன்று போட்டு விட்டு விடைபெற்றுச் சென்றார்.இது கதையில்லை.நடந்தது.

இவர்கள் எல்லோரும் கருப்பசாமி வரப்போவதில்லை,என்று நின்று ஆடிக் காட்டுகிறார்கள்.ஆனால் அவர் வராமல் இருக்க வழியே கிடையாது.காலம் கொஞ்சம் கூடுதல் தாமதம் ஆகுந்தோறும் ஆவேசமும் அதிகமாகும் என்பது பொருள்.புயலைப் போலே,பெரு மழையைப் போலே .மக்களால் அப்போதும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

அறம் ஒருபோதும் திரும்பாமலோ,திருப்பியடிக்காமலோ இருக்கப் போவதே இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஆடுங்கள். அப்படியான பாடங்களை தமிழ் நாட்டில் பாடத்தில் வைக்கவில்லையே என்றால் வைக்காத பாடத்தைக் காலம் உங்களுக்கெல்லாம் ஒருநாள் கற்றுத் தரப்போவது உறுதி.மாற்றமில்லை.நல்ல கல்வியை அப்போது அனைவரும் படிக்க வேண்டி வரும்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"