அருவி நல்லதொரு முயற்சி


அருண் பிரபு புருஷோத்தமனுக்கு வாழ்த்துகள்

சமூக ஒப்புதலுக்கு வெளியே நழுவும் பெண்ணை  சமகாலத்தன்மையில்  வைத்து அரசியல் பேசுகிற படமாக அருவி அமைத்திருக்கிறது.விறுவிறென்று நகரும் திரைக்கதை.பொதுச் சமூகத்தின் முன் சில கேள்விகளையும் ஆழமான பாதிப்பையும் ஏற்படுத்துகிற வணிகப்படமாக அருவி வெற்றி பெற்றிருக்கிறது எனலாம்.ஊடகங்களின் விந்தைகளை அது பகடியும் செய்திருக்கிறது.ஊடகங்கள் இன்று அடைந்திருக்கும் அபத்தத்தை கண்முன்னால் கொண்டு வருகிறது.இவையனைத்துமே இந்த சினிமாவின் நேர்மறை அம்சங்கள் . .

மரபான தமிழ் சினிமாவின் வடிவ ரீதியிலான ஓட்டம் சற்றும் பிசகாதிருப்பதே இப்படத்தின் வணிகத்தன்மைக்கு பேருதவி செய்திருக்கிறது.விதிவசமாக சமூக ஒப்புதலுக்கு வெளியில் தள்ளப்படும் ஒரு பெண் அடைகிற வஞ்சகங்கள் ,அதனை அவள் எதிர்த்துப் போரிடும் முறை ,பழிவாங்குதல்கள்,சமூகத்திற்கான ஏக்கங்கள் என வணிகச்சமன்  குலையாத படம்  அருவி.கதாபாத்திர களங்கள் புதியவை.சமகால வாழ்வுடன் தொடர்புடையவை .மற்றபடி அவள் கண்ணகியையும் ,நீலியையும் நினைவுபடுத்துகிறாள். மரபார்ந்த தொன்மக்கதைகளின் சாராம்சமும் குலையாதவளாக இருக்கிறாள்.இது மரபான ஒரு தமிழ் சினிமா என்கிற விதத்தில் சந்தேகமில்லை.

அருவி புதிய உரையாடல்கள் சிலவற்றை இந்த திரைப்படம் மூலம் பேச முயன்றிருக்கிறது.ஊடகங்கள் பற்றிய பார்வையில் இருக்கும் மாயத்தை உடைக்க முயன்றிருக்கிறது.சமூக ஒப்புதலுக்கு வெளியே துப்பப்படுபவர்களுக்கான சமூக ஒப்புதலை வேண்டி நிற்கிறது.இந்த விஷயங்கள் முக்கியமானவை.

அருவி எங்கே குணாதிசயத்தில் மாறுபடுகிறாள் என்பதற்கு சிறுவயதில் தனது அப்பாவிடம் இடம் மாறிச் செல்கிற புதிய இடம் பிடிக்கவில்லை என்று சொல்வதனைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் மற்றெல்லாம் மேலோட்டமான மிகைகளால் எளிமைப்பட்டிருக்கின்றன.அது ஒரு படம் வெற்றியடைவதற்கான வழியாக இருக்கலாம்.ஒரு படத்தை திரும்பவும் பார்க்க இயலாமல்  செய்கிற தடைகளும் இந்த மேலோட்டமான எளிமைகளிலிருந்தே உருவாகின்றன.இந்த படத்தில் அருவி பைபோலாராக குணாம்சத்தில் உருவாகி எழுத்திருந்தால் இந்த படம் தனது தட்டையான எளிமையில் இருந்து கலாபூர்வமாக உருக்கொண்டிருக்கும்.திரைக்கதையில் அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாலேயே இதனைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.இந்த தட்டைத்தனமே இந்த திரைப்படத்தில் நாடகத்தன்மை உருவாக காரணமாக அமைந்திருக்கிறது.உருவாகும் நாடகத்தன்மை புதுமையாக இருப்பதால் பார்வையாளனுக்கு ஈர்ப்பு குன்றவில்லை.அருவியின்  பழிவாங்குதலில் உள்ள விளையாட்டு அதன் பொருட்டே சுவாரஸ்யமாகிறது.

ஊடகங்கள் இன்று அடைந்திருக்கும் அவதாரத்தன்மை மக்கள் பிரச்சனைகளில் இருந்து தனிமனிதப் பிரச்சனைகள் வரையில் அனைத்தையும் வாரியுண்டு அவற்றை வணிகத்தின் புதிர் வளையில் கொண்டு சேர்ப்பிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.மறைமுகமாக அவை அரசாங்கத்தின் மடியிலும் கொண்டு சேர்க்கும். அந்த புதிர்வளை பேராசையாலும் தற்காலிக காமத்தாலும் நிறைந்தது.தனது மேலோட்டங்களை இந்த திரைப்படம் துறந்திருக்குமெனில் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்து சென்றிருக்க முடியும்.

மற்றபடி இந்த படத்தில் நடித்திருக்கும் பங்காற்றியிருக்கும் அனைவரின் வெளிப்பாடுகளும் மிகவும் சிறப்பானவை.உடல் மொழியின் மூலமாகவே சில அரசியல் திறப்புகளை கொண்டிருப்பதுவும் பாராட்டுதலுக்குரிய அம்சம். வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்