மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம்

மீண்டும் பிம்ப அரசியலின் தொடக்கம்


ஆன்மீக அரசியல் என்கிற ரஜினியின் முதல் பன்ச் டயலாக்கே நன்றாகத்தான் இருக்கிறது.தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் இருபது வருடங்களுக்கு பன்ச் டயலாக்கிற்கும் குறைவில்லை.செய்தித்தாள்களில் கேளிக்கைக்கும் குறைவில்லை.தமிழர்கள் பொதுவெளியரசியலிலும் கேளிக்கை குன்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ரஜினிக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்
தமிழர்கள் கொள்கை அரசியலை ஏற்று கொள்ளவில்லை என்பது ரஜினியின் அரசியல் பிரவேசம் மூலம் வரலாற்று ரீதியாக மீண்டும் நிரூபணம் ஆகிறது.கொள்கை அரசியல் பேசுவோர் தனிநபர் அரசியலை முன்வைப்பவர்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மக்களின் நம்பகத்தன்மையை பெறுவது கடினமாக இருக்கிறது.கொள்கை அரசியல் தங்களை முற்றிலுமாக ஏமாற்றிவிடுகிற அதிகாரம் என்றே மக்கள் கருதுகிறார்கள் . இதற்கான உளவியல்,சமூகவியல் காரணங்கள் எளிமையாக கடந்துவிடக் கூடியவை அல்ல.அதிலிருக்கும் உண்மையின் மூர்க்கத்தன்மை பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது.ரஜினியின் அரசியல் பிரவேசம் அடுத்த காலகட்டத்திற்குள் எம்.ஜி.ஆர்.நுழைவதனை ஒத்த நிகழ்வு.இது தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில், அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில் பலத்த அதிர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.
தமிழ்நாட்டில் தேசிய அரசியல் முடிவிற்கு வந்த பின்னர் தி.மு.கவின் கொள்கை அரசியலில் விடுபட்டு எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொண்டதிலிருந்து பிம்ப ,தனிநபர் அரசியல் உதயமாகிறது.அது தேய்ந்து தேய்ந்து தந்து இருப்பை முற்றிலுமாக இழக்க ஏறத்தாழ நாற்பது வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன.அது தேய்ந்து அழிந்த பின்னர் எவ்வாறு இருக்கும் என்பதனைத் தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அதன் வெற்றிடத்தில் இப்போது ரஜினி என்கிற புதிய அரசியல் பிம்பம் உருவாகிறது.
இது மீண்டும் எவ்வளவு காலத்தை எடுத்துக் கொள்ளும் ? இவ்வாறான பிம்ப அரசியல் முன்வைக்கப்படுகிற போது சீமான் போன்ற எதிர்நிலை அரசியலாளர்கள் தான் மக்களுக்கு கிடைப்பார்கள் .பிம்ப அரசியலின் பாதகத்தை அதற்கு கிடைக்கிற எதிர்நிலைகளே உணர்த்திவிடக் கூடியவை.இவ்வாறான பிம்ப அரசியலுக்கு மாற்றான அரசியல் போக்குகளை ஏன் தமிழ்நாட்டில் உருவாக்க இயலாமற் போகிறது ? இங்கே மக்களிடம் நம்பகத் தன்மையை உருவாக்கக் கூடிய அரசியல் தரப்புகளே தமிழ்நாட்டில் கடந்த முப்பதாண்டு காலத்தில் உருவாகவில்லை என்பதே உண்மையான காரணம்.மார்க்சியம் ,காந்தியம் எல்லாமே தமிழ்நாட்டில் படுதோல்வியடைந்திருக்கின்றன.அதனை முன்வைத்த அரசியல் தரப்பினர் புரிதல் இல்லாதவர்களாக , கோமாளிகளாக உண்மையில் அதன் பொருளுக்குத் தொடர்பற்றவர்களாக மாறியிருக்கிறார்கள்.
பொதுவாக சிறிய தேசிய இனங்களுக்கும்,நெடிய தேசிய இனங்களுக்கும் இடையில் பண்பாட்டு ரீதியில் பெருத்த வேறுபாடுகள் உண்டு.கேரளாவில் எளிமை செல்லுபடியாகிறது என்றால் இங்கே எளிமை கேலிப்பொருள்.தன்னை ஆளுகிறவன் இங்கே அதிமனிதனாக இருந்தாக வேண்டும்.தன்னை போல அவன் இருப்பது ஒருபோதும் தன்னை ஆளுவதற்கு தகுதி படைத்ததல்ல என்றே மக்கள் கருதுகிறார்கள்.
விரும்பும் நாயகர்களும் கூட தங்களை போன்று சாதாரணமாகத் திகழும் இடங்களில் மெச்சவோ , கவலை கொள்ளவோ செய்கிறார் மக்கள் .மெச்சும் போது அவர் எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார் பாருங்கள் என்றும் கவலை கொள்ளும் போது அவர் அப்படியிருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்வார்கள்.இதனையெல்லாம் கருத்திற் கொண்டு தனிநபர் அரசியல் பாதகத்தையே உருவாக்கும் என்றும் எடுத்துக் கொள்ளயியலாது.கேரளாவைக் காட்டிலும் தமிழ்நாட்டின் அரசியல் சிறந்தது என்பதே யதார்த்த உண்மை.அதிகப்படியான சுற்றுப்புற சீர்கேடுகள் ஏற்படாமல் , மக்களுக்கு அதிகமாக வெளியேறிச் சென்று வாழும் நிலையை ஏற்படுத்தாமல் வளர்ச்சி பெற்றிருக்கும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.நெடிய தேசிய இனங்களில் ஆந்திராவில் என்.டி.ஆர் என்றால் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர்.இவற்றின் உளவியல் பிரத்யேகமானது .
இத்தகைய தனிநபர் பிம்ப அரசியலுக்கு தமிழ்நாட்டின் சாதி மனோபாவமும் முக்கியமான காரணம் .சாதி மனோபாவம் எல்லா மாநிலங்களிலும் இருப்பதுதான் என்றாலும் கேரளத்தில் ஒரு ஈழவரையோ , நாயரையோ ,நம்பூதிரியையோ தலைவர்களாக இருக்கும் போது சாதியை காரணமாக வைத்து மக்கள் ஏற்க மறுப்பதில்லை.தமிழ்நாட்டில் எந்த தலைவராக இருந்தாலும் அவர் பிற சாதியென்றே பிற சாதி மக்கள் கருதுகிறார்கள் .தமிழன் ஆளவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் குறிப்பிடுகிறபோது , தன் சொந்த சாதிக்காரன் ஆளவேண்டும் என்கிற குறிப்பே மறைமுகமாக அதில் ஒளிந்திருக்கிறது . சாதி அடையாளங்களுக்கு வெளியே இருக்கும் அதிமனித பிம்பங்களே இங்கே ஏற்பதற்கு சாதகமாக உள்ளன.இது எம்.ஜி.ஆர் பெற்றிருந்த சாதகமான விஷயம் எனில் அதே தன்மை ரஜினி காந்திற்கும் பொருந்தும்.
பிம்ப அரசியலில் சாதகமான விஷயம் என்னவெனில் அதிமனித ரூபங்களை உருவாக்க பயன்பாட்டிற்கும் பிம்பத்தின் சாராம்சங்களை ,இந்த தனிநபர்கள் முற்றிலுமாகக் கடக்க இயலாது என்பது ஒன்றுதான்.மக்கள் செல்வாக்கு பெற்றே இந்த பிம்பம் எழும்புகிறது.அதன் ஒவ்வொரு கண்ணியிலும் மக்களின் உளவியல் பயன்பட்டிருக்கிறது.அதனை மீற முயலும் இடங்களில் தனி நபர்களின் பிம்பமும் கீறத் தொடங்கும்.எனவே ஒருபோதும் பிம்பத்திற்கு முரணாக முற்றிலும் முரணாக செயற்பட இயலாது.இதற்கு மேல் நீ செல்ல முடியாது என்பதனை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து இந்த பிம்பத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.மக்களை பொறுத்தவரையில் இந்த மீமனித தனிமனித பிம்பங்கள் தாங்கள் பிரார்த்தனை செய்து உருவாக்கிய தெய்வம். தங்களை காவல் செய்வதற்கும் காப்பதற்கும் உரியது என்கிற அர்த்தம் தரக் கூடியது.
அப்படியாயின் ரஜினி என்ற வெகுமக்கள் பிம்பம் சாதகமானது தானா ? என்றால் சாதகமானதுதாம் என்றே சொல்ல வேண்டும்.அது ஒரு போதும் அனாதைகளைக் கைவிடாது.கஷ்டப்படுகிறவர்களைக் காக்கும் .அனாத ரட்சக பிம்பம் ரஜினியிடம் மறைந்திருக்கிறது.அதுவொரு சாதகமான விஷயம்.
மேலும் தமிழ் தேசியம் பேசுகிற பொய்யான தமிழ் உணர்வாளர்களைக் காட்டிலும் நேர்மையான ,ஏற்கத்தக்க தமிழ் உணர்வு இதற்கு உண்டு.இது எம்.ஜி.ஆர்.பின்னர் ஜெயலலிதா போன்றோரிடமும் காணப்பட்ட தமிழ் உணர்வு .காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்யவும் ,தலை நகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றிவிடுவேன் என்று நெருக்கடி ஏற்பட்ட போது பேசிய தைரியமும்.தீவிரவாத தடுப்பு மையத்தை அனுமதிக்க மாட்டேன் என்ற ஞானமும் கைகூடிய தமிழ் சுயாட்சி உணர்வு இது.இது ரஜினியிடமும் குறைவுபடாது.குறைவு பட முடியாது.
இது செந்தாமரை அல்ல.வெண் தாமரை .வேறொன்று

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"