தன் வேலை தள்ளிப் போகும் வேலை

தன் வேலை தள்ளிப் போகும் வேலை

என்னுடைய ஆறாவது கவிதை தொகுப்பு படிகம் வெளியீடாக வர உள்ளது.அதற்காக கவிதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய கவிதைகளைத் தான் சேகரிக்கிறேன் என்றாலும் இந்த பணி வேறொருவருடைய வேலை போன்று எனக்கு உள்ளது.இதுவரையிலான என்னுடைய கவிதைகள் கை கொண்டு காகிதங்களில் எழுதப்பட்டவை.இந்த தொகுப்பு முழுதுமே இணையத்தில் முகநூலில் என  எழுதியவை.

கவிதைகள், சிறு குறிப்புகள்,சிறிய நூல் மதிப்புரைகள் போன்றவற்றை இணையத்திலேயே எழுதிவிடுவதில் எனக்கு எந்த பிரச்சனைகளுமில்லை.உரைநடையை எழுதுவதற்கே தனியே ஒரு மனம் தேவைப்படுகிறது.அது தனிமையால் ஊறிய மனம். அதனை இணையத்தில் எழுதுவதில் எனக்கு பயிற்சி இன்னும் கூட வில்லை.கூடினால் நல்லதுதான் எளிதாக இருக்கும்.இல்லையெனில் உரைநடைகளுக்காக தனியே நேரத்தை ஒதுக்கி எழுத்தாணியை கையில் எடுக்க வேண்டும்.

என்னுடையவற்றைத் தொகுப்பது உண்மையாகவே சிரமமாக இருக்கிறது."வைத்தியன் பொண்டாட்டி புழுத்துச் செத்தாள்"என்பார்கள்.அது போலவே இதுவும்.நீங்கள் உங்கள் வீட்டு கல்யாணத்திற்கு சந்தைக்கு மரக்கறி வாங்கப் போகவேண்டும் வருகிறீர்களா ? என நள்ளிரவில் கூட அழைத்துப் பாருங்கள் .உடனடியாக உற்சாகத்துடன் ஓடி வந்து விடுவேன் .உண்மையாக நான் மாடுகளை மேய்க்க ,குளிப்பாட்ட ,கொல்லாம்பழம் பறிக்க என காட்டு வேலைகளுக்கே லாயக்கானவன்.விதி கொண்டுவந்திங்கு நிறுத்திற்று.என்னுடைய புத்தகங்கள் ,படைப்புகள் பிரசுரமாகும் இதழ்கள் போன்றவற்றைக் கூட சேகரித்து வைத்திருக்கும் பழக்கம் எனக்கில்லை.எப்போதேனும் தேவைப்படுகிற போது மிகுந்த  அவஸ்தையாக இருக்கும்.என்னுடைய புத்தகம் என்னிடமில்லை என்று சொன்னால் இப்போதெல்லாம் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.ஆனால் எழுதுகிறவன் என்னைப் போன்று தன்னில் அசிரத்தையாக இருக்கக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.

பொது வேலைகளில் எனக்குள்ள ஆர்வம் இது போல தொகுக்கும் போது இருப்பதில்லை.கூடுமானவரையில் மனம் அதனைத் தள்ளித் தள்ளி வைத்துக் கொண்டே போகும்.எனது சிறுகதைகளை முழுவதுமாக தொகுப்பதற்கு பதிப்பாளர் ஒத்துக்கொண்டு அவசரப்படுத்திய பின்னரும் கூட மூன்று ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.முதலில் தட்டச்சு செய்தவை கணினியில் பழுதடைந்தன.பின்னர் இரண்டாவது முறையாக தட்டச்சு நடைபெற்றது.இப்போது நான் அதனை முழுவதுமாக திருத்தம் செய்து முடித்தால் காரியம் வடிவுக்கு வந்து விடும்.ஒருமாத காலத்தை எடுத்துக் கொள்கிற பணி அது.அந்த ஒரு மாத காலத்தை என்னிலிருந்து பிடுங்கியெடுப்பது கடினமாக இருக்கிறது.அப்படி காலமே கிடைக்காத அளவிற்கு நான் பிடுங்குகிற வேலைகள் எதனையும் செய்து கொண்டும் இருக்கவில்லை.

வெகுகாலமாக அதாவது சிறு பிராயத்திலிருந்தே என்னை ஒரு பழக்கம் பற்றியிருந்தது.எங்கு புறப்பட்டாலும் அவசரமாகத் தான் கிளம்புவேன்.எனக்காக யாரும் செல்ல வேண்டிய இடத்தில் ஆராத்தியெடுத்துக் காத்திருக்கவில்லை.சரியான நேரத்திற்கு அங்கு சென்றாக வேண்டும் என எனக்கு எந்த நிர்பந்தங்களும் கிடையாது.ஆனால் கடலைக் குடித்து விட்டு வருகிற அவசரததோடுதான் போக்குவரத்து சிக்னல்களில் நின்று பரபரப்பேன்.இப்படியிருக்கிறேன் என்பதனை நெடுங்காலத்திற்குப் பிறகுதான் எனக்கு உணரமுடிந்தது.நமக்குத்தான் ஒரு வேலையும் கிடையாதே ஏன் இப்படி பறந்து கொண்டிருக்கிறோம் ?.ரயில் வண்டியைப் பிடிக்கப் போகிறவனை போல ? எப்போதோ பள்ளிக்கூடங்களில் உருவாக்கிய பழக்கம் நம்மையும் அறியாமல் நம்மில் புதைந்திருக்கும் .பள்ளிக் கூடங்களில் இருந்து நமது தலையில் ஏறி அமர்ந்திருப்பவை இதுபோல ,   இப்படி எத்தனையோ ! இப்போது புறப்படும் போது ரயில் வண்டியை பிடிப்பதற்கு கூட ரயில் வண்டியை பிடிக்கக் கிளம்புவது போல கிளம்புவதில்லை.

ஒரு மாதத்தை என்னுடைய நூலுக்கே தர இயலாத அளவிற்கு எனக்கு விஷேச பணியொன்றும் கிடையாது.எலிக்கு வேலையும் இல்லை இருந்து பிழைக்க நேரமும் இல்லை என்பதனை போன்றே என்னுடைய தன் காரியங்கள். என்றாலும் என்னை முன்னிட்டு  அந்த ஒரு மாத காலத்தைக் கோரி நிற்பது என்னுடைய தன்  வேலை என்பதுதான் காரணம்.எனது சோம்பலை மெச்ச இதில் ஒன்றுமே கிடையாது.இத்தகைய சோம்பல் மெச்சும் படியானதும் இல்லை.இயலாமை இது.கேட்பவரே கவிதைத் தொகுப்பில் இறுதி பிழை திருத்தத்தில் நான் கொண்டிருந்த சோம்பேறித்தனம் இப்போது தொகுப்பில் பிழைகளைக் காண வெட்கமாக இருக்கிறது

தொகுப்பும் ,பிழை திருத்துதலையும் போன்று சோர்வூட்டும் பணி எனக்கு வேறில்லை.

இந்த தொகுப்பிற்கான கவிதைகள் அனைத்துமே முகநூலிலும் ,என்னுடைய பிளாக்கிலும் உள்ளன .இப்பணியை சோர்வூட்டாததாகக் கருதும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் இந்த தொகுக்கும் வேலையில் எனக்கு உதவ முடியும்.கேட்பவரே தொகுப்பில் நான்கோ ஐந்தோ கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன .போக மீதி அனைத்துமே இந்த தொகுப்பிற்கானவை தான்.அத்தனையும் சேர்த்தே தொகுப்பவர் எனக்கு  அனுப்பி விடலாம்.முதலில் கவிதை தொகுப்பு வேலையே அவசரம். கவிதைகள்  போக   முகநூலில் நான் எழுதியிருப்பவற்றை தொகுத்துக் கேட்கிறார்கள்.அதனையும் எவரேனும் செய்து தர முடிந்தால் கோடி நமஸ்காரம் 

அனுப்புவோருக்கான முகவரி
slatepublications@gmail .com

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"