இன்குலாப் மிகச் சிறந்த மனிதர் ஆனால் இலக்கிய மதிப்பற்றவர்

இன்குலாப் மிகச் சிறந்த மனிதர் ஆனால் இலக்கிய மதிப்பற்றவர்

உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்.மிக உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருந்தவர் .வாசகர்களிடமும் ,இலக்கியவாதிகளிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டிலும் அரசியல்வாதிகளிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கே அதிகம். மற்றபடி இன்குலாப்பின் எழுத்துக்கள் உயர்ந்தவொரு மனிதனின் உயரிய நல்லெண்ணங்களே அன்றி அவற்றிற்கு இலக்கிய மதிப்பு எதுவுமே கிடையாது.இலக்கியத்திற்கான விருதுகள் இலக்கியத்திற்காக ,எழுத்துக்களின் இலக்கிய மதிப்பிற்காக வழங்கப்படுதல் வேண்டுமே அல்லாது பிற காரணங்களுக்காக வழங்கப்படுதல் கூடாது.

நமது சூழலில் அரசியல்வாதிகளே அல்லது அரசியல் தரப்பினரே பெரும்பாலும் இலக்கியத்தின் பெறுமதியைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.இது நல்லதல்ல.அவர்களிடமிருந்து பறித்து சில நேரங்களின் பெறுமதிகள் இலக்கியத்தின் கரங்களை வந்தடைய போராட வேண்டியிருக்கிறது.இலக்கிய விருதுகளை இலக்கிய வாசகர்களும் , இலக்கியத்தின் தரப்புகளும் முடிவு செய்யவேண்டும்.அது முதற்கொண்டுதான் நாம் ஒரு நாகரீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகும்.நல்ல மனிதர் தாமே இருக்கட்டுமே என்றால் இலக்கியத்திற்கான விருது அது என்பதனை மாற்றி இவையெல்லாம்  நல்ல மனிதர்களுக்கானவை தலையிடாதீர்கள் என்றேனும் மாற்றிக் கொள்ளவேண்டும்.குழந்தைகளுக்கான புட்டிப் பாலையெடுத்து பெரியவர்கள் அருந்துவதற்கு ஒப்பானவை இத்தகைய செயல்கள் .விக்ரமாதித்யன் போன்ற பெருங்கவிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மொழியில் இது போன்று நடைபெறுவது சிறுபிள்ளைத்தனமானது.பாரதி இருக்கும் சபையில் சௌந்தர கைலாசத்தை முன்வைப்பதை விடவும் குன்றிய செயல் இது.

சாகித்ய அகாதமியின் தேர்வுக் குழுவினர் யார் என்பதில் வெளிப்படைத்தன்மை அவசியம்.அது இதுவரையில் அணுசக்தித் துறை போல மறைவாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறது. அவர்கள் பல்கலை தரப்பினரில் இருந்தும் கல்விப்புலத்தில் இருந்தும் விடுபடவேண்டும் .இல்லையெனில்  தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.நமது பல்கலைக் பின்னணி முழுதுமே அரசியல் காரணிகளால் அமைந்தது.அவர்களின் தலையீடு பண்பாட்டு அமைப்புகளிடம் இருக்கும் வரையில் தமிழ்நாட்டில் அது சரியாக நடைபெறும் என்பதற்கு உத்திரவாதங்களே கிடையாது. மற்றபடி எனக்கு இன்குலாப் மீது மதிப்புக் குறைபாடெல்லாம் ஏதுமில்லை.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்