புயலுக்கும் மழைக்கும் வேற்றுமையில்லை

புயலுக்கும் மழைக்கும் வேற்றுமையில்லை

மனித துயரங்களிலும் வேற்றுமையில்லை.
துயரங்களை முன்வைத்து பேத அரசியலை முன்னெடுப்பது நல்ல நெறியல்ல.பேதங்களையும் பிளவுகளையும் பொதுமக்கள் ஒருபோதும் முன்னெடுப்பதில்லை.அவர்கள் தங்கள் அன்றாடம் சகஜ நிலைக்குத் திரும்புவதையே காத்திருக்கிறார்கள்.விஷமிகளுக்கு  வேறுவகையான உணவுகள் தேவைப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  ஏற்பட்ட ஓகி  புயல் பாதிப்புகள் மீனவ சொந்தங்களுக்கு ஏற்படுத்திய துயர் ,உயிரிழப்புகளையும் உள்ளடக்கியது.பொருட்சேதங்களைக் காட்டிலும்  உயிர் சேதமும்,இழப்பும் கொடியது. அத்துடன் அவர்கள் கோடிக்கணக்கான மதிப்புகள் கொண்ட படகுகள் ,வலைகள் ,பிற உபகரணங்கள் என சகலத்தையும் இழந்திருக்கிறார்கள்.பல்முனைப் போராட்டங்களுக்குப்  பிறகு அரசு எந்திரம் அவர்களை முன்னிட்டு லேசாக அசையத் தொடங்கி இருக்கிறது.சற்றே ஆறுதல் தருகிற காரியம் இது.

இதுபோலவே நிலப்பகுதியில் ஏற்பட்ட உயிர் சேதமும் ,பொருட்சேதமும் கேலி செய்வதற்கு உரியன அல்ல.நிலமுள்ள விவசாயிகளுக்கு ஏதேனும் ஆறுதலுக்கான நிவாரணங்களேனும் கிடைக்க வாய்ப்புண்டு.இவர்கள் பொருளாதார நிலையில் படகில் மீன்பிடிக்கும் கோடீஸ்வரர்களுடன் ஒப்பு நோக்கத் தகுந்தவர்கள்.ஆனால் நிலமற்ற விவசாயிகள் ,அன்றாடம் மீன் விற்கச் செல்லுகிற ஏழை மீனவ தாய்மார்களை போன்ற ஏழைகள்.இவர்கள் இழந்தது இழந்ததுதான்.அதற்கு புள்ளிவிபரங்களோ ,கணக்குகளோ கிடையாது.அரசாங்க அறிவிப்புகள் இரண்டு தரப்பிலும் பணக்காரர்களின் பக்கமாகவே நிற்கிறதே அன்றி ஏழைகள் இரண்டு  தரப்பிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.மரச்சீனி பயிரிட்டவன் ,அடுத்தவனின் நிலத்தில் பாட்டத்திற்கு வாழை பயிரிட்டவர்கள் எல்லோரும் வட்டிக்கு கடன் வாங்கியிருப்பார்கள் ,நகைகளை அடமானம் செய்திருப்பார்கள்.இவர்களுக்கு ஒரு பதிலும் கிடையாது.விவசாய நகைக் கடன்களை  தள்ளுபடி செய்தால் மட்டுமே இவர்களுக்கு சிறிய ஆறுதல் உண்டாகும்.இவற்றை இன்னும் யவரும் பேசவே தொடங்கவில்லை.மொத்தத்தில் இவையெல்லாமே தானாகவே ஒரு நாகரீக சமூகத்தில் நடக்க வேண்டியவை.ஆனால் ஒவ்வொன்றிற்கும் போராட வேண்டியிருப்பது துயரத்திலும் பெருந்துயரம்.

புறக்கணிப்பிற்குள்ளாபவர்களுக்கு தங்கள் புறக்கணிப்பின் நிமித்தம் போராடுவதற்கான உரிமை உண்டு. கரையிலுள்ளவர்கள் தங்கள் குடிநீர் , மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக ஆங்காங்கே குட்டிக் குட்டியாக ஏராளமான சாலை மறியல்கள் செய்ய வேண்டியிருந்தது. இடரின் போது சாய்ந்த  மரங்களை வெட்டியகற்றவும், தெருக்களை சுத்தம் செய்யவும் வந்த  வழிப்பறி கும்பல்களிடம் சரணடைய வேண்டியிருந்தது.ஒவ்வொரு பொது இடரின் போதும் இவ்வண்ணமான வழிபறியாளர்களும்  உதிக்கிறார்கள்.மரங்களை வெட்டியக்கற்ற கணக்கற்ற கூலியை அவர்கள் பொது மக்களிடமிருந்து பறித்து எடுத்தார்கள்.இழப்பு ஒரு பக்கமெனில் இதுபோன்ற அத்யாவசியமான செலவீனங்கள் மறுபக்கம்.ஊடகங்களின் கண்கள் இவற்றின் பேரில் திரளவில்லை.இவற்றில் செய்திக்குண்டான கவர்ச்சி ஏதும் கிடையாது என்பதும் காரணம்.

இன்று இந்த மக்கள் சார்பான போராட்டங்கள் பந்த் ஆக உருவெடுத்திருக்கிறது.இது அனைத்து கட்சி பந்த் கூட .பா.ஜ .கவின் தமிழக கிளை ஆட்சியினர் தவிர்த்து பிற கட்சிகள் அனைவருமே இந்த போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள்.  ஒருவேளை மீனவ நண்பர்களில் ஒருசிலர் ஆதங்கப்படுவதை போல பா.ஜ.கவே கூட இந்த பந்தின் பின்னணியில் இருப்பதாகவே கருதுவோம்.பாதிக்கப்பட்ட மக்களுக்காக யார் பின்னணியின் இருந்தால் என்ன ? மீனவ போராட்டங்கள் நடைபெற்ற போது ஏளனம் செய்த பா.ஜ.கவினரின் சில அருவருக்கத் தக்க செயல்களை எல்லோரும்தான் பார்த்துக் கொண்டிருந்தோம்.நிலப்பகுதியில் போராடுபவர்களை பற்றிய உங்களுடைய தற்போதைய ஏளனமும் அதனைப் போன்றே உள்ளன.போராட்டங்கள் எவ்வாறு நடைபெற வேண்டும் ? என்ற பேராலோசனைகளை தற்சமயம் யாரும் புகட்டாமலிருப்பதே சிறந்தது.மீனவ எதிர்ப்பு மனோபாவம் சரியானதில்லை .அது போலவே நாடார் எதிர்ப்பு மனோபாவமும் நேர்மையானதில்லை.இருவருமே சேர்ந்திருக்க வேண்டியவர்கள்.சார்ந்திருக்கவும் வேண்டியவர்கள்.

இறப்பிலும் ,நிவாரணத்திலும் ஒரே ஊரில் இருவேறு வகை என்பதனை மக்கள் கேட்க மாட்டார்களா  என்ன ? நான் என்னுடைய உரிமையை கேட்ட வரையில் சரி.பிறர் கேட்கக் கூடாது என்பது என்ன நியாயம் ?

நீதிக் கதை ஒன்றுண்டு.அய்யா தன் கண்களில் ஒன்றை எதிரி குத்திக் கெடுத்து விட்டான்.எதிரிக்குத் தண்டனை வழங்குங்கள் என கேட்டு நீதிபதியிடம் ஒருவன் வந்தான்.எல்லோரும் அவசரமாக அனுதாபத்தில் தண்டனையை அறிவியுங்கள் என்றார்கள்.சற்றே பொறுத்திருங்கள் என்ற நீதிபதி "  இவனால் இரண்டு கண்களையும் இழந்தவனாக எதிரி இருக்கவும் வாய்ப்புண்டு என்றார்.இது கதையென்றாலும் தன் தரப்பு மட்டுமே சிறப்பானது ,பிற எல்லாமே குறைபாடுடையது எனும் நோக்கு மிகவும் ஆபத்தானது.

நோக்கம் கொண்டு இயங்குபவர்கள் துயரங்களையும் மக்களை  பிளவு படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்துவது மிகவும் சங்கடம் .அனைத்து தரப்பிலும்  இருதய சுத்தியே அடிப்படை  தேவை.

foto - Remesh Kumar 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"