அது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் ?

அது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் ?

1

நானொரு பொறிக்குள் வசிக்கிறேன்
அதன் கண்ணிகளை வாயிற் கதவுகளாக ஆக்கிக் கொண்டேன்
சரளமாக அதனுள் செல்வதும் வருவதும் என
எனக்கது இப்போது பொறியெனப் படவில்லை
அதற்கும் எனக்கான பொறியது என்பது
மறந்து போயிற்று

இன்று பொறிக்குள்ளிருந்து வெளியே வந்து
பொறிக்கான பொறியொன்றை வாங்கி
பொறிக்குள் திரும்பினேன்
அதனை மேஜையாக்கி அதன் மீது சில வார்த்தைகளை வைத்தேன்

வெளியில் நின்றொருவன் மதுக்குவளையுடன்
பொறிக்குள்ளிருக்கிறாய் தெரியவில்லையா உனக்கு என
கத்திக் கொண்டிருந்தான்

மேஜையிலிருந்த வார்த்தைகள் இதுவொரு கனவென்பது உனக்கு விளங்கவில்லையா?
என்று கேள்வி கேட்கின்றன
அவனை நோக்கி

2

அந்தக் குழந்தை
நான்கு வழிச் சாலையில்
ரத்தத் தடயங்களுடன்
முகத்தை வானுக்கு உயர்த்திய வண்ணம்
நிலைகுத்திக் கிடக்கிறது

சுற்றி இருபக்கமும் வாகனங்கள்
சிதறிய வாகனத்தில் பேச்சுமூச்சில்லை

தன்மடியில் குழந்தையை
கை கொண்டு
அரவணைத்து உடல் திருப்பிய
பெருஞ்சாலை கேட்கிறது
இதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறீர்கள் ?

குழந்தையின் கண்கள்
கடைசியாகக் கண்ட காட்சி
அப்படியே
அந்த இடத்தில்
படிந்து நிற்பதை
உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்
அனைவரும்

அந்த குழந்தையின் கண்களிலிருந்து
சற்றைக்கு முன்
வெளிவந்த காட்சிதான் அது
சந்தேகமேயில்லை

3

நானொரு முட்டாள்
அதற்கு குறைவில்லாத முட்டாளாக நீ இருக்கவேண்டும்
என்பதென் எதிர்பார்ப்பு

நானொரு அடிமுட்டாள்
அதற்கிணையான அடிமுட்டாளாக நீ இருந்தால்
உன்மீது ஆசை கொள்வேன்

நீ ஞானத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தால்
அந்த ஞானத்தைக் கொண்டேயுன்
கபாலம் உடைப்பேன்

எனது பிச்சைப்பாத்திரத்தை நான்
வேதாளத்தின் கைகளில் கொடுத்து வைத்திருப்பதும்
குற்றங்களில் தெய்வங்களுக்கு அணிகலன்கள் செய்து வைத்திருப்பதும் நீ
அறியாதவை

நீ சபிக்க உச்சரிக்கிற வார்த்தைகளையெடுத்து
அருள்மழை பொழிபவள்
எப்போதுமென்
காவல் தேவதை

4

எதிரியைப் பற்றி கேட்டதும்
வாந்திவருகிற மாதிரியான சித்திரத்தை
முதலில் ஏற்படுத்த வேண்டும்
நமது சித்திரமும் அவ்வாறானதுதான் என்பதை
முற்றிலுமாக
மறந்து விடவேண்டும்

சித்திரத்தை ஏற்படுத்தும் போது
நினைக்கும் போதே அது ஏற்படுவது வரையில்
நமக்கு பணி அதிகம் உண்டு
யாருமே கேட்க வரக்கூடாது
தப்பி
வருபவர்களுக்கு
வாந்தி வருவது போல
தோன்ற வேண்டும்

அப்படி தோன்றவில்லையெனில்
நீங்கள் செய்த சித்திரம்
சரியில்லை
என்றாகும்

நான் சொல்லிக் கொண்டிருப்பது
ஒரு போர் யுக்தி
விளையாடத் தொடங்கி விட்டால்
இது நல்ல விளையாட்டும் கூட

சுழற்சி மறுபக்கம் திரும்பி
சித்திரம் நமக்குண்டாகும் போதும்
அலுப்பு ஏற்படுவதே இல்லை

இப்போதே போரை அல்லது விளையாட்டை
எப்படி பாவித்தாலும் சரிதான்
தொடங்கிப் பாருங்கள்
உங்களுக்கே விளங்கும்
பின்
தித்திக்கும்
தித்திக்கும்

5

அது என்ன செத்துத் தொலைத்தால் வீர வணக்கம் ?

அது என்ன சாராயம் விற்ற காசில்
பள்ளிக்கூடம் திறந்தால்
கல்வித் தந்தை ?
பாடல் எழுதினால் எப்படி
கவியரசு
கவிதை கை வரவில்லையெனில்
எப்படி
கவிக்கோ

ஒன்றுக்கும் உதவாதவன்
தமிழ்நாட்டிற்கு முதல்வர்
ஊர் சண்டி
வார்டு கவுன்சிலர்
மணல்வியாபாரி நடத்துகிறான்
மக்கள் டீவி
விவாதம் நடத்துகிறார்கள்
கத்திக் கொண்டேயிருக்கிறார்கள்
அறம் போதிக்கிறார்கள்
சல்லிப்பயல்கள்
மதபோதகர்கள்

சாமி சரணம்
சாமி சரணம்
சாமியே சரணம்
கைவிடப்பட்டவன்
வீட்டிலமர்ந்து
பழங்கஞ்சி குடிக்கிறாள்
அம்மை உமை

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்