கேட்பவரே" கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர் ராஜன் ஆத்தியப்பன்

"கேட்பவரே" கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர் ராஜன் ஆத்தியப்பன்

[ கேட்பவரே என்னுடைய நான்கு கவிதை நூல்களின் தொகுப்பு  .படிகம் வெளியீடு.பக்கம் 320  விலை - 320 .இந்த கவிதை நூல் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் .மதிப்புரைக்காக கவிஞர் ராஜன் ஆத்தியப்பனுக்கு நன்றி

கேட்பவரே
ஆசிரியர் - லக்ஷ்மி மணிவண்ணன்
படிகம் வெளியீடு 4 -184  தெற்கு தெரு ,மாடத்தட்டு விளை,வில்லுக்குறி அஞ்சல் ,கன்னியாகுமரி மாவட்டம் ,தமிழ்நாடு - 629  180   தொலைபேசி எண் - 98408  48681 ] 

அங்கீகரிக்கப்படாத கனவின் வலி நிறைந்த இடமாக படைப்பாளி இருக்கிறான்.
- சி.மோகன்

இசைப் பாடல்களுக்கு ஒரு மாய வல்லமையுண்டு. சொற்களை அதன் அர்த்தத்திலிருந்து வெளியேற்றுகிறது அது என்பதே . எனது பால்யம் இசையை பிரதான சுகஉணர்ச்சியாய் ஏற்றிருந்தது. அதிகாலையில் எங்கள் வீட்டில் ஒலிக்கும் கொழும்பு சர்வதேச வானொலியின் பாடல்களில் அய்யா பல் துலக்கும்போது அல்லது சுய சவரம் செய்யும்போது ஏதேனுமொரு பாடலின் வரியில் எனது விழிப்பு நிகழும்.விழிப்பின் சற்று முன்பிருந்தே பாடல் எனக்குள் துலங்கத் துவங்கியிருக்கும்.

நான் மனதிலெண்ணிய பாடல்தான் வெளியிலும் ஒலிக்கிறது என்று பிள்ளை மனதில் கொண்டாடியிருக்கிறேன். பாடல்களின் பொருள் தேவைப்படுவதில்லை. காலையில் கேட்கும் கானம் அன்றைய நாளில் : நாளகற்றும் சக்கரமாய் மாறும். அனிச்சையில் முட்டித்ததும்பும் அப்பாடல் என்னை வித்தைக்காரனைப்போல் வளைத்துப்பிடிக்க ஓயாமல் பாடிக்கொண்டேயிருப்பேன். பல பாடல்கள் ஒன்றிரண்டு நாட்களும் நீள்வதுண்டு.
என் அய்யா(தந்தை) இறப்பதற்கு இரண்டொரு நாளைக்குமுன் மருத்துவமனையின் அருகிலிருந்த தேநீர் கடையில் மண்வாசனைப் படத்தில் வரும்
'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' என்ற பாடலைக்கேட்டேன். இசைச்சுழிக்குள் மனமிழந்து ஓய்ந்த பாடலை இனி எங்கேயாவது கேட்கமுடியுமா எனத் தவிப்பாகிவிட்டது.

அந்த சபிக்கப்பட்ட நாளில் பூவும் பத்தியும் ஒப்பாரிகளினூடே கசங்கிய வாசனையில் பரவ : அழத்தெரியாது நின்ற எனது பத்து வயதிற்குள் மரக்கிளையிலிருந்து அவிழ்ந்து வரும் நாகமென அந்தப்பாடல் தீண்டத் தொடங்கியது.இரண்டொருமுறை லேசாக முனகவும் செய்தேன். இப்போது அப்பாடலைக் கேட்கும்போதும் எனது தந்தையின் சலனமற்ற உடல்தான் தோன்றுகிறது. சட்டென எனது இளமையைச் சுருக்கிய பாண்ட்ஸ் பௌடர் நாற்றம் சூழலில் வியாபிக்கிறது.

பாருங்கள் ! அர்த்தம் தலைகீழாகிவிட்டது. இரண்டும் வேறுவேறு பக்கங்கள்.எனக்கென்றில்லை சிலருக்கு அது குழந்தைப்பேறொன்றை நினைவூட்டலாம்.சிலருக்கு ஒரு நம்பிக்கைத் துரோகமாயிருக்கலாம். பெருந்தோல்வியில் அப்பாடல் இசையுறலாம். நேரடித் தன்மையிலும் கேட்கப்பெறலாம்.இசையின் தன்மை வேறோர் சுவையில்  வாழ்வியலாவதுபோல் கவிதையின் கலைஉச்சமும் வேறுவேறு ஞாபகங்களில் மேலெழக்கூடியதுதான்.அத்தகைய கவிதைகளில் இசையாலான வனநதியொன்று ஓடுகிறது. நாம் கரையிலிருந்து பார்க்கும் நதி உள்ளே
குதித்து குடைந்தாடுகையில் இன்னொன்றாய் பரிணமிக்கிறது. அது வேகம் உந்தி நம்மை அடித்துச் செல்லலாம்.இரக்கப்பட்டு விட்டுவிடலாம்
அல்லது அழகிய மீன்களைக் காட்டித் தரலாம்.பெரிய மீன்கள் விழுங்கும் சிறிய மீன்களை அனுதாபமுறலாம்.அடியாழத்தின் கூழாங்கற்களில் தனது புராதனத்தை விளக்கலாம்.மூழ்கி எழுகையில் பிரேதமொன்றை முட்டச் செய்யலாம்.கரையேறுவதற்குமுன் ஒருவேளை நதியே இல்லாமலாகலாம்.

விளிச் சொல்லான 'கேட்பவரே' என்ற
லக்ஷ்மி  மணிவண்ணனின் இதுவரையிலான கவிதைகளின் மொத்தத் தொகுப்பு மேற்சொன்ன பல்வேறு மனத்தீண்டலைச் சாத்தியமாக்கும் தன்மையிலானது.

லக்ஷ்மி  மணிவண்ணனின் பல கவிதைகளின் தொடக்க வாசிப்பின் போது எனக்குள் கவர்ச்சிகரமான தோல்வி ஆச்சரியத்தோடும் அவஸ்த்தையோடும் தன்னைப் பதிவு செய்து திசைகளின் எல்லாப் பக்கங்களிலும் முட்டித் தவிப்பதுவாய் உணர்ந்தேன். கவிதைகளில் ஆசிரியன் நிகழ்த்தும் பல்வேறு சாத்தியங்களை அறியமுடியாத ரூபவடிவிலான அவ்வாசிப்பில் மழைமூண்ட வெளியின் அப்பால் அசையும் பூடக வடிவங்களைக் காண்பது போலிருந்தது. எனினும் ஒரு வினோத ஜந்துவையோ தழும்பேறி அருவருப்பூட்டும் முகத்தையோ நேரிடும் கணம் முகஞ்சுழித்தாலும் ஆர்வம் உந்த மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்ப்பதுபோல் குறிப்பிட்ட கவிதைகளை நோக்கி ஒருக்களித்துக்கிடக்கும் மனம்.
அருவருப்பு என்பது பழக்கத்திற்கு முந்தய நிலை. உபயோகத்திற்கான தோற்ற ஒழுங்கை தனது தேவைசார்ந்து மனம் படைத்துப் பழகுகிறது. ஒரு தோற்ற ஒழுங்கு இன்னொரு தோற்ற ஒழுங்கின்  கலைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. லக்ஷ்மி  மணிவண்ணனின் கவிதைகளில்
இவை ஆதாரப் பிரச்சினைகளாகின்றன.

நிறுவப்பட்ட முடிவுகளைக் கீறித் துளைப்பதுவாகவும் , முடிவுகளிலிருந்து குருக்கும் இழைகள் முடிவுகளைப் பராமரிக்க முடியாதிருப்பதாகவும் முடிவற்ற தன்மையிலிருந்து கிளைக்கும் ராட்சத விருட்சங்களாகவும் பல கவிதைகள்.

நெஞ்சை உலைக்கும் விபத்தோ இயற்கைப் பேரிடரோ நிகழ்ந்துவிட்டால் சட்டென அம்பது அறுபது கவிஞர்கள் உபரியாகத் தோன்றிவிடுகிறார்கள். ஆளுக்கொரு ஸ்பிரே பெயின்ட் டப்பாவைக் கையிலெடுத்துக் கொண்டு ஒரே மாதிரி நிறங்களைப் பீய்ச்சியடித்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்.மணிவண்ணனும் கும்பகோணத் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்காக
'காட்சிக்கான தலை' என்றொரு கவிதை எழுதியிருக்கிறார்.முன்னவை ஒப்பாரிகள். ஒப்பாரிகள் துக்கம் குறைப்பதற்கானவை. ஆறுதல் படுபவை.
ஆனால் இவர் பெருந்துக்கத்தை ஞாபகமூட்டிய படியேயிருக்கிறார். குற்றத்தில் அரசியலை , சமூகத்தை , தனி மனிதனை என எல்லாரையும் பிரதிகளாக்குகிறார். ஒரு கலைஞனோ கவிஞனோ செய்யவேண்டியது இதுதான்.

அதனால்தான் சுனாமியின் போது ஆளாளுக்கு காளான் நடவு செய்து கொண்டிருந்தபோது இவர் கவிதை முயலாமலிருந்திருக்கலாம்.
நண்பனொருவன் கேட்டான் "எதற்காக கவிதை எழுதப்பட வேண்டும். கவிதைக்கான சமூக தேவை என்ன? கவிதை எழுதப்படவில்லையென்றால்
பூமியின் சுற்றுவட்ட பாதையில் ஏதேனும் பிரச்சினை வருமா?" என்று. என்ன பதில் சொல்வது? 'இசை நடனம் ஓவியம் சிற்பம் போல் கவிதையும் ஒரு கலை.மேலும் கவிதை என்பது மொழியின் கூருணர்வு.

வேறு இலக்கிய வடிவங்களெல்லாம் கவிதையின் கைக்குழந்தைகள்தான். கவிதை இல்லையென்றால் மொழி மூளியாகிவிடும்.சமூக வாழ்வியலின் அகத்தை அழகுபடுத்துவது கவிதை.அழகு ஓர் முடிவிலி.அழகுபடுத்தும் செயல் தனது இறுதிக்கட்டத்தை எட்டுவதேயில்லை. அதிலிருந்துதான் கவிதைக்கான தேவையும் கவிதையின் நகர்வும் உறுதிபடுகிறது.'என்றெல்லாம் யோசித்து முடிப்பதற்குள் "என்னவோ கவிதை இல்லையென்றால் பூமியில்   காதலே இல்லையெனச் சொல்வாய் என்று நினைத்தேன்"என்று திகைக்கவைத்து அகன்றான்.லக்ஷ்மி  மணிவண்ணனின் கவிதைச் செயல்பாடு தீராத காதல்.காதலின் அர்த்தம் உலகளாவியது.

சுதந்திரம் என்ற எண்ணம் தடித்த பிம்பத்தைக் காட்டும் நோய் பீடித்த மெலிந்த குழந்தை. உருவாக்கப்படும் எல்லாவித
சுதந்திரமும் இறுகிய சிறைக் கம்பிகளினூடேதான் தலையெடுத்து தழைக்கிறது. நான் சுதந்திரமாக இருக்கிறேனெனச் சொல்வதுகூட உள்ளார்ந்த அச்சத்தோடு கூடிய வார்த்தைதான்.சுதந்திரம் சமூக இந்திரியங்களை நசுக்கிக் கொண்டு நிற்கும் ராட்சத மிருகம். ஒரே  சமயத்தில் சில இந்திரியத்தின்மீது அதிக பாரத்தையும் சிலவற்றின்மேல் மலர்போன்ற மென்மையோடும் நிற்கும் லாவகம் நிறைந்த மிருகம்.உருப்படுத்தும் போதே சுதந்திரம் தனது சரிவைத் தொடங்கிவிடுகிறது.ஒட்டு மொத்தமாய் பெறப்படுவதன் பெயர் சுதந்திரமன்று.அது அடையாளத்திற்கான உரிமை மட்டுமே. அடையாளத்திற்கான உரிமையைப் பெறுவதற்கும் சுதந்திரத்திற்குமான இடைவெளி பெரிது

லக்ஷ்மி  மணிவண்ணனின் பல கவிதைகள் சிருஷ்டிக்கப்பட்ட பூதாகரமான சுதந்திரம் தனிமனித வாழ்வில் சிறு குழுக்களில் நிகழ்த்தும்
பலவந்தங்கள் பற்றியது.விதவிதமான ஆயிரந் தலைகளுக்கப்பாலும் பல்கிப் பெருகும் தன்மையுடையவை காளியின் தலைகள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான புனைவும் குணமுங் கொண்டவை.ஒன்று மற்றொன்றிலிருந்து முரணானது.இசக்கி என்பதும் குறியீடேதவிர ஒவ்வொரு இடத்திலும் தனித்துவமும் தன்னைச் சூழ்ந்துள்ள பிரத்யேக கதைகளிலுமானது. பெண்மையையும் ஆண்மையையும் இதுபோலத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. புலன்வழி பெறப்பட்ட தகவல் முடிவாக பெண்ணை ஆண் வரைவதும் சட்டகமிடுவதும் ஆணைப் பெண் வரைந்து நிறமூட்டுவதும் தோல்வியில் தான் முடிகின்றன.

ஒப்பீடுகளின் வழியே சபிக்கப்பட்டிருக்கும் நம் சமூகம் வானத்தைப் பிடிப்பதென்றாலும் நீலமெனும் வர்ணத்தை வீசி அதில் குறுகுறுக்கிறது. வானமோ வர்ணங்களுக்கப்பால் நகர்வதாயிருக்கிறது.ஒப்பீடு என்பதே மிதக்கும் கற்களின் கட்டிடம்தான். 'இசக்கி'எனும் கவிதையின் இறுதி வரிகள் இவை

'புலியூர் குறிச்சிக் கிழவன்
இசக்கியின் உருவமும் வர்ணமும் கொணர/படாதபாடு படுகிறான் ஒரு
கவியைப் போல.'
'தமிழ் பெண்கவிஞர்கள் கணவன்மார்களை
பராதி சொல்லி கவிதை எழுதுகிறார்கள்'

லக்ஷ்மி  மணிவண்ணன் கவிதைகளில்  யோனி ஆண்குறி மலம் மாதவிடாய் நாப்கின் கழிவறை போன்ற சொற்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதை புதிய வாசகன் முகச்சுழிப்போடும் , மூச்சுத் திணறலோடும்தான் கடக்கவேண்டியிருக்கும்.சுத்தபத்தமான சில கலைஞர்களுக்கூட அதுநிமித்தம் ஒவ்வாமை தோன்றலாம்.குறிப்பிட்ட அதுபோன்ற சொற்களின் சமூக ஏற்பு நிலை என்பது அந்த சொற்களுக்கானவை மட்டுமன்று.அவை ஒடுங்கிய கனவுகளுக்குள் திணிக்கப்பட்டவைகள்.வரலாற்றின் சமகால நிகழ்வின் துயரார்ந்த கதைகள்
அந்த சொற்களின் மீது நெளிகின்றன.குற்ற உணர்வால் அவற்றை மூடி வைத்துவிட்டு நாகரீகமாய்(?) உரையாடத்
தொடங்குகிறோம்.சாதரணமாய் உச்சரிக்கும் நமது மொழிகூட மெல்லியத் திரையோடுதான் நாவில் புரள்கிறது. 'பின்புறம்' என்கிறோம் உட்காருமிடமென்று சொல்லிப் பார்க்கிறோம். குண்டி என்றால் முடிந்தது.ஆனால் குண்டி என்றால் அருகிலிருப்பவரின் கண்கள் ஆடைக்குள்
நுழைந்து நமது குண்டியைப் பார்த்துவிட்டதுபோல் பதற்றமுண்டாகிறது. காரணம் அச்சொல்லை குற்ற உணர்வில் சமாதி வைத்து பலகாலமாகிறது.

ஒருசில உறுப்புகளை ஔிவுகளிலும் நிலையங்களி்ன் கழிப்பிட மறைவுகளிலும் எழுதிப் புல்லரிப்பதற்கு காரணம் அந்த சொற்கள் நம்மில் குற்ற உணர்வைத் தூண்டிவிடுவதால்தான்.இன்னும் எத்தனையோ போலியான அபாயகரமான மௌனங்கள் நம்மிடையே உடல்களை ரகசியத்தில் பூட்டுகின்றன.பூட்டுகள் எப்போதும் குற்றத்தையேத் திறக்கின்றன.பெண்ணின் உடலையோ ஆணின் உடலையோ கடந்து செல்ல முடியாமல் சமூகத்தின் ஒருபகுதி தேங்கிக் கிடக்கிறது. உடல்குறித்த புதிர்மண்டிய கற்பனைகள் வேறு வேறு வன்தொடுகைகளை நிகழ்த்துகின்றன.

'நீயோ எனக்குத் தொட்டுப் புணரும் எண்ணமற்று உனது கோட்டைக்குள் நுழையும் மனம் தரவேண்டும்' கன்னி யுவதியின் கண்கள் என்ற கவிதையில் வரும் இப்பகுதி பால்பேதமற்ற புழங்கு தன்மை நோக்கி நகரும் ஆவலைக் கொண்டிருக்கிறது.

படித்த மாத்திரத்தில் விளங்க முடிகிற (அறிதலின் சாகசமற்ற) பல கவிதைகள்
கவிஞர் எழுதியிருக்கிறார். வீடு, தெரு ,சாலைகள், பயணங்கள், நண்பர்கள் ,சக கவிகள், எதிரிகள், நொய்மை என எத்தனையோ வகையாலானவை. அவை எளிமையாக வெளியேக் காட்டிக் கொண்டாலும் முன்பின்னாக ஏராளம் சம்பவங்களில் ததும்பி நிறைந்திருப்பதை உணர முடியும்.கனவிற்கான முன்நிகழ்வைப் போல.அந்த கவிதைகளை உதாசீனப்படுத்திக் கடந்து போனால் அவரது சிறந்த கவிதைகளிலொன்றை அடையாளங் காண முடியாமல் போகலாம் என்றே தோன்றுகிறது.

லக்ஷ்மி  மணிவண்ணனின் குறைந்த எண்ணிக்கையிலான கவிதைகளில் மட்டுமே காலம் நிகழ்கிறது.(சதாம்,கவிகள்,மூக்குப்பீறிப் பாட்டா,அப்பாவி முதியவருக்கு என்ன நடந்தது இன்னும் சில) அநேக கவிதைகளின் காலத்தை அகாலத்தில் விசிறி விடுகிறார். மீண்டும் அவை வாசிக்கப்படும் வேறுவேறு காலங்களின் மீது துகள்துகளாய் உதிர்ந்து வாழ்வின் மீதெழும் நனவிலியில் மெல்ல நினைவடைகின்றன.காலத்தை சிறுசிறு இருட்கிரகங்களாக்கி ஒரு சுற்றுவட்டப் பாதையில் சுழற்றி வீசும் கலை நிகழ்விது.ஔிரும் விழிகளில் கிரகங்களும் ஔியூறிப் பிரகாசிக்கத் தொடங்குகிறது.அது அதனுள்ளே அமிழ்ந்து பூடகமாயிருந்த வெளிச்சம்தான்.வாசிப்பவர் அதனை தனது மேஜை இழுப்பறைக்குள் வைப்பதோ அறை மூலைகளின் நிழல் இருட்டில் வைப்பதோ,கிரகத்தை சாபகிரகமாக ஒதுக்கவோ ,பரிபூரண உரிமையை அவரது கவிதை மொழியே வழங்கிவிடுகிறது.

தொகுப்பிலிருக்கும் பல கவிதைகளில் கடவுள் வருகிறார்.ஒற்றைச் சொல்லல்லாத கடவுள் என்ற புனைவு பல்வேறு பரிணாமங்கள் கொண்டது.அது அதிகாரத்தோடும் அரசுத்தனத்தோடும் நிறுவப்பட்ட ஒழுங்குகளை செங்கோலாய் பிடித்திருப்பதாகவும் எதிர்தளம் குறித்த ஞாபகமின்மையோடு இயங்குவதாகவும் உள்ளது.

'கடவுளின் தண்டனையாகக் கிடக்கிறது
நொய்மையோடும் பிசாசுகளோடும் கதவற்ற எனது திறந்த வீடு'என்கிறது

'கடவுளுடன் சில பொழுதுகள்'என்ற கவிதை.

ஊருடன் ஒத்துவாழ் என்ற பழஞ்சொல் இன்றைக்கு அவசியமில்லாதது.அதிகார பலாத்காரத்தின் அடர்த்தியை அதிகரிப்பதற்கான வார்த்தை அது.விலகுதலுக்கும் நிராகரிப்பதற்குமான ஊக்கம் சாதாரணமானதன்று.அதிகாரம் உருவத்தோடுதான் இருக்க வேண்டுமென்பதில்லை மாயக் கருவிகளாகவும் நம்மை நெருக்குகிறது.

மணிவண்ணனின் கவிதைகள் தொடர்ந்து கடவுளின் நிறத்தைச் சுரண்டி உதிர்க்கின்றன.நிறமிழந்த கடவுளோ தனது நிறம் பற்றிய கனவுகளோடு சாபங்களை வீசியெறிந்தவாறு சுரண்டப்பட்ட நிறமற்றப் பகுதியைப் பொத்திக் கொண்டே நிறமூட்டுபவர்களிடம் ஓடுகிறார்.
கவிதைகளின் இடையிடையே சில தலைகீழ் நிகழ்வுகள் நடக்கின்றன.

'தூங்கிக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்ணின் கருப்பையில் கடவுள்
அமர்ந்த நிலையில் தலைகீழாய்
கனவு காண்கிறார்.'

'ஐஸ் பெட்டியில் தலைகீழாய் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருந்தேன்.'

'பிசாசு ஒன்று கடிகார பெண்டுலமாய்
ஆடிக்கொண்டிருக்கிறது தலைகீழாக'

ஒரு கவிதையில் சிகரெட் தலைகீழாகத்
தொங்குகிறது.

இந்த தலைகீழ் என்பதை மணிவண்ணனின் அக்கவிதைகளைத் திறக்கும் சாவி என்றுதான் கொள்ளவேண்டும்.ஒரு பெரிய மரத்தைப் பார்ப்பது எப்படி? இலை கிளை பூ பழம் காய் பிஞ்சு .இப்படி மரத்தைப் பார்ப்பதுதான் சுலபமானது.ஆனால் கவிஞனின் முன்பு மரம் தலைகீழான தனது பிம்பத்தின் கரிந்த நிழலில் நிற்கிறது. வேர்களெல்லாம் வெட்டவெளியில் வியாபிக்கிறது. பொசுங்கிய பூக்களையும் நஞ்சில் முட்டி நிற்கும் வேர்தும்பினையும் சுருள் கோடுகளால் அவன் இணைக்கிறான். துளிர்ச்சருகுகளை ரசாயனம் வழித்த  மொட்டைத் தரையில் பிச்சைக் காசுகளாய் குலுக்கியெறிகிறான்.கவிதைகளில் இதன் வெளிப்பாட்டு மொழியை சாதாரணத்தன்மையால் எதிர்கொள்வதென்பது முழுக் கவனத்தை வேண்டிநிற்பது.

லக்ஷ்மி  மணிவண்ணனின் சில கவிதைகள் அறிவிக்கப்படுகின்றனவாகவும் அபூர்வ உரையாடலின் ஒரு பகுதியாகவும் உருப்பெறுகின்றன.செப்பலோசையிலே பல கவிதைகள் பிறக்கின்றன.இன்னும் சில பண்டைய கனவில் சிந்திய ரத்தத் துளியை பிரதேசங்களின் மௌன வெளியிலும் பெருங்கட்டிடங்களின் அருகிலியங்கும் சிறு முடுக்குகளில் தேடுவதாகவும், இன்னொரு கனவில் பதட்டமுற்று உற்றுநோக்கித் திரிவதாகவும் அமைகி்ன்றன.கவிதைகளின் சமகாலப் பிரக்ஞை முன்னுடலிகளின் நினைவு வழியே மீண்டெழுவதாய் அமைந்துள்ளது.ஒருசில கவிதைகள் மறுவாசிப்பில் சோர்வைத் தருபவையாக உள்ளன.நிகழ்ந்துவிட்ட அக்கவிதைகள் மீண்டும் மீண்டும் தங்களைத் தாங்களே  விளக்க முயற்சித்த படியிருக்கின்றன.விளையாட்டில் உடைந்த பலூனின் சிறு துண்டுகளில் விரல்பிதுக்கியுறிஞ்சி குமிழெடுத்து உடலில் உரசி விளையாடும் ஒரே பலூனின் ஏக்கம் நிறைந்த எல்லைஅது.அதுவும் விளையாட்டின் ஒரு பகுதியென்றாலும் சற்று அலுப்பூட்டக்கூடியது.தொகுப்பில்
சங்கருக்குக் கதவற்ற வீடு என்ற பகுதியில் (அவரது முதல் தொகுப்பு) வரும்'இருப்பின் காலம்'என்ற கவிதையின் சாறு இந்த மொத்தத் தொகுப்பில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஓடிக்கொண்டேயிருக்கிறது.அம்மாதிரி கவிதைகளின் முன் நிற்கையில் வாசிப்பவன் லேசாக நெளியத்தான் வேண்டியிருக்கிறது.

உறக்கத்திற்குப்பின் உறக்கத்தை ஞாபகப்படுத்த முடியாதது போன்ற வெற்றுணர்வைத் தருகின்றன சில கவிதைகள்.
லக்ஷ்மி  மணிவண்ணன் கவிதைகள் உரைநடையின் சூட்சும விளிம்பின் வழியேக் கடந்துசெல்பவை.அவரது பாணியை நகலெடுப்பது என்பது உரைநடையில் கரையொதுங்கும் கவிதைத் தற்கொலை.கவிஞனுக்கான  தனித்தன்மை இதுவாகத்தான் இருக்க முடியும். அநேகமாய் கவிதைகளை எழுதுவது என்பதைவிட நிகழ்த்துவதுதான் மணிவண்ணனின் நோக்கமாக இருக்கவேண்டும்.ஒரு காட்சியின்மீது வேறுவேறு காட்சிகளைச் சொருகிச்சொருகி வேஷந்தரிக்கும் சொற்களை நடிக்கவிடுகிறார்.நடித்து நடித்து மயங்கிய சொற்கள் சொல்லற்ற வெளியில் அரூபக் காட்சியொன்றில் குவிகிறது.மொத்தக் குவியலையும் சேர்த்தும் கலைத்தும் நடன நிலைக்கு மாற்றுகிறார் நடனத்தைப் பித்துநிலைக்கு கடத்துகிறார். வாசகன் அடையவேண்டிய பித்துநிலை அது.பித்து என்பது  போதமற்ற நிலையல்ல. பூர்வ ஞாபகம் நிறைந்து மூளும் அறிவு நிரம்பியது.

மணிவண்ணன் கவிதைகள் ஓரிடத்தில் உட்காருவதில்லை.சுட்டிக் குழந்தைபோல் அது அங்குமிங்கும் ஓடிக்கொண்டேயிருக்கிறது.சொற்களை அணிவிக்க அணிவிக்க உரித்தெறிந்துவிட்டு நிர்வாணமாகத் திரியும் சுட்டிக்குழந்தை. இவர் கவிதைகள் சட்டென்று யாரையும் வசீகரித்து கிளர்ச்சியூட்ட வல்லவையல்ல.இவரது உலர்ந்த மொழியில் யாரும் மெய்சிலிர்ப்பதற்கு தயாராவதில்லை.மேல் தோலுரிந்த அருவருப்பான கவிதைகள் இவருடையவை.

கடலிலிருக்கும் நீலம் கையிலள்ள வெளுத்திருக்கிறது


[2016 ஜூலை 18 அன்று மதுரையில் தென்திசை இலக்கிய வட்டம் நடத்திய நிகழ்வில் லக்ஷ்மி  மணிவண்ணனின் 'கேட்பவரே' கவிதைத் தொகுப்பு குறித்து  எழுதி வாசித்தது.]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"