மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான்

மத மாற்றங்களும் இந்தியாவில் பெருமரபுதான்

மத மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இந்து  அடிப்படைவாதிகளிடம் சகிப்பற்ற கண்ணோட்டம் நிலவுகிறது.மத மாற்றங்களையும் அவர்கள் ஏற்கவில்லை.அதேசமயத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் அவர்கள் பழைய முறைப்படி பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதிசயமான முரண் இது.இந்த குரலை முன்னெடுப்பு செய்கிறவர்கள் இன்னும் பெருவாரியான மக்களை ஏற்கவும் முன்வரவில்லை.மத மாற்றங்களை பொறுத்தவரையில் இரண்டு மூன்று தலைமுறைகள் வரையில் மதம் மாறுகிறவர்கள்தான் நெருக்கடிக்குள்ளாகிறார்கள்.எனவே இது மாறுகிறவர்களின் பிரச்சனையே அன்றி பிறருடைய ஆதங்கங்கள் பொறுத்தமற்றவை.ஆதாயத்திற்காக மாறுகிறார்கள் ,திருமணத்திற்காக மாறுகிறார்கள்,ஏற்ற தாழ்வுகளை சகிக்க இயலாமல் மாறுகிறார்கள் எப்படியிருந்தாலும் அதில் எந்தவிதமான பிரச்சனைகளும் கிடையாது.ஆதாயத்திற்காகத் தான் மாறுவார்கள் .ஒரு விஷயத்தில் ஒரு ஆதாயமும் கிடையாது ; அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது என்றால் மாறுவதுதானே சிறந்த விஷயம் ?.மாறாமல் இருந்து இருந்த இடத்திலேயே புழுத்து சாவதற்கா மனித வாழ்க்கை ? ஒரு கலாச்சாரம் ஒத்துவரவில்லை என நினைத்தால் பிறிதொன்றைத் தேர்வு செய்வதுதான் சிறந்த செயல்.

இந்துக்கள் இஸ்லாமியராக,கிறிஸ்தவர்களாக  மாறுவதும்,சைவர்கள் வைணவர்களாக ,வைணவர்கள் சைவர்களாக ,சமணர்கள் சைவர்களாக மாறியதும் இந்தியாவில் நெடிய மரபு.எல்லோரும் சேர்ந்து இந்துக்களாக மாறியதும் உண்டு.தமிழ் சமணர்களில்  பெரும்பாலோர் இன்று இந்துக்களாக இருக்கிறார்கள்.அவர்களின் வழிபாட்டுப் பள்ளிகள் இந்து மத கோயில்களாக உள்ளன.  கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மாறியதும் உண்டு.நான் ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் எல்லோருமே அதன்படிதான் ஒழுக வேண்டும் என நிர்பந்திப்பதற்கு எந்த தரப்பிற்கும் உரிமையில்லை.மூளைச்சலவை செய்கிறார்கள் பிறர் என்பதனை ஒரு வாதத்திற்காக ஒத்துக் கொள்வதாகவே கருதுவோம்.ஏன் உங்களுக்கு அதனைச் செய்ய இயலாமற் போயிற்று ? மகான்கள் பற்றாக்குறையா ? உங்களால் பிறருக்கு பலன் கிடையாது என்று ஆகிவிட்டீர்களா ? பலன் இல்லை ,பற்றாக்குறையென்றால் பின்னர் கிடந்தது புலம்பி என்ன பலன் ?

ரஜனீஷ் ஒருமுறை லண்டனில் தரையிறங்க பிரிட்டீஷ் அரசு அனுமதி மறுத்த போது , சாமானியன் ஒருவன் உங்கள் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படுவதால் நீங்கள் பல நூற்றாண்டுகளாக போற்றி பாதுகாத்த கலாச்சாரம் அழிந்து விடுமாயின் ; உண்மையாகவே அது அழிய வேண்டியதுதானே ? எனக் கேட்பார்.மதம் போன்ற பெருமக்கள் நிறுவனங்கள் மக்களின் ஆதரவை இழக்காமலிருக்க தங்கள் சமகாலத்து தன்மையை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.பறிபோயிற்று என்று அரசியல்வாதிகளை போன்று கதறியழக் கூடாது.

இந்துமதத்தில்  ஏற்ற தாழ்வுகள் இருக்கிறவரையில் அதற்கு தார்மீகம்  பேசும் சக்தி கிடையாது.பேசினால் பொருந்தாது. பிற மதங்களிடம் உள்ள ஏற்றத்தாழ்வும் இந்துமதம் கடைபிடிக்கிற ஏற்றத்தாழ்வும் ஒன்றல்ல. விவேகானந்தர் அதனால்தான் சாதிய ஏற்ற தாழ்வுகளை இந்துமதத்தின் தற்கொலை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நான் இந்துமதத்தின் பால் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவன்.ஏராளமான கோயில் குளங்களுக்கு செல்லக் கூடியவன்.ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே இந்து மதமல்ல என்பதனை நன்கு அறிந்தவன்.என்றாலும் இன்றும் ஏதேனும் கோயிலில் நின்று கொண்டிருக்கும் போது கையைப் பிடித்து பலவந்தமாக இழுக்கும் ஒருவனை எதிர்கொள்கிறேன்.சிலசமயங்களில் அவன் பிறழ்வில் சில சொற்களை பயன்படுத்திக் கத்துவதும் கூட உண்டு.இப்போதெல்லாம் என்னை அவனால் இனம் காண இயலாமற்போனாலும் கூட ,இனம் காண்பவனை கண்டு அவன் கத்தவோ ,பலாத்காரம் பண்ணவோ ஆயத்தமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறான்.சில நேரங்களில் இவர்களெல்லாம் ஏன் வருகிறார்கள் ?என வெளிப்படையாகப் பேசுவதும் கூட உண்டு.இவன் அப்புறுத்தப்பட இந்துமதம் இன்னும் நிறைய சிந்தனை செலவழிக்க வேண்டியுள்ளது.இல்லையெனில் இந்துமதம் இவனைக் காப்பாற்ற விளைகிறதா? என்கிற கேள்வி எழும் .ஹெச் .ராஜா ,நிர்மலா சீத்தாராமன் போன்றோரின் உடல்மொழியைக் கொண்டவன் இவன்.

எந்த சித்தாந்தமும் ,எந்த மதமும் சிறுபான்மையாக இருக்கும் போது தனது கூட்டத்தை அதிகப்படுத்தவோ ,பரப்பவோ தான் விரும்புகிறது.அமெரிக்காவில் போய் நீங்கள் ஒரு கிருஷ்ணன் கோயிலை கட்டி வைத்துக் கொண்டு பாரம்பரிய பெருமைகளை பேசிக் கொள்வதில்லையா என்ன ?

ஆதாயத்திற்காக மாறுகிறார்கள் என்றெல்லாம் கூவாதீர்கள்.ஆதாயத்திற்காகத் தான் மாறவேண்டும்.இல்லையெனில் வெற்றுத்  திமிர் என்றல்லவா ஆகும் ? அதுமட்டுமல்ல.எல்லாம் ஒன்றுபோலிருக்கக் கூடாது.பல கலாச்சாரம் என்பதுதான் தேசத்திற்கு பேரழகு.பிராந்தியத்திற்குப் பெருமை.

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"