அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம்

அளத்தங்கரை "கோயில் வீடு" இந்து நாடார் குடும்பம்
எட்டு தலைமுறைக் குடும்பம். எட்டாவது தலைமுறையில் பேரன் பேத்திகளுடன் மரகதம்மாள்.நிறைந்த தேஜஸ் .எட்டு தலைமுறை கடந்து செல்வதென்பது சாதாரணமான காரியமில்லை.மூன்றாவது தலைமுறையே பெரும்பாலும் கசந்து விடும்.நாலில் ஷீணம் உண்டாகும் .முரண்படும்.மன சஞ்சலங்கள் தோன்றும். அதனையெல்லாம் ஒரு குடும்பம் கடந்து செல்வதென்பது தெய்வ காரியமின்றி வேறில்லை.ஐந்து தலைமுறை கடந்தாலே அரசியல் அதிகாரம் ஏற்பட்டு விடும்.முதல் தலைமுறையிலேயே ஏற்படுகிற அரசியல் அதிகாரத்திற்கும் இதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டும்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த குடும்பத்தைச் சார்ந்தவர்.
எட்டு தலைமுறை என்பது கிளைகிளையாக மொத்த சமூகத்திலும் ஊடுருவி இருக்கக் கூடியது . அளத்தங்கரை குடும்பம் இதற்கு உதாரணம்.இந்த குடும்பத்திற்கு கிழக்கு வடக்காக ஏராளமான கிளைகள்.முகிலன் குடியிருப்பு,ஈச்சன் விளை,மணிகெட்டிப்பொட்டல் என்றும் அதிகமாகவும்.இன்று இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள்.உள்ளூரிலும் மருத்துவர்கள் , வழக்கறிஞர்கள் ,பொறியாளர்கள் என்று பலவாறாக.அளத்தங்கரை குடும்பம் என்றால் இன்றும் பெரியவர்களுக்கு அதன் பெருமிதம் தெரியும். மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள்.ராஜாங்கமங்கலம் உப்பளம் ஒரு காலத்தில் இவர்களுடையதாக இருந்தது.
நானறிய இது போன்ற இந்து நாடார் குடும்பங்கள் எங்கள் பகுதியைச் சுற்றியே பத்துக்கும் மேற்பட்டவை உண்டு.மகாராஜாக்களைப் போன்று வாழ்ந்தவர்கள்.ஆன்மீக நெறியும் வழுவாமல்.பொத்தையடி மாறச்சன் தாணுமாலயன் நாடார் குடும்பம் இது போன்ற ஒரு குடும்பம்தான்.மகாராஜா மார்த்தாண்ட வர்மா ஒன்றரையாண்டு காலம் மாறச்சன் தாணுமாலயன் குடும்பத்தில்தான் பப்புத் தம்பி ,ராமன் தம்பி பிரச்சனையின் போது அடைக்கலம் ஆகியிருந்தார்.மார்த்தாண்ட வர்மாவைப் பாதுகாத்தவர்களில் அவர்களும் உண்டு.மாறச்சன் என்கிற பெயரே மகாராஜாவின் வளர்ப்புத் தந்தை என்னும் பொருளில் வந்தது.எங்கள் குடும்பத்தை துரைபாண்டி நாடார் வம்சம் என்பார்கள்.இதில் பெருமை கொள்ளவெல்லாம் ஏதுமில்லை இப்போது.துரைபாண்டியின் கதை என்பது பெருங்கதை .அழிந்த கதை அது. அழிந்தடங்கிய குடும்பங்களில் துரைபாண்டியின் குடும்பமும் ஒன்று.கிளைகள் எங்கெங்கோ இருக்கிறார்கள்.அசல் கெடாமல் இருக்கும் குடும்பங்களில் ஒன்று இந்த கோயில் வீடு அளத்தங்கரை இந்து நாடார் குடும்பம்.
நான் இவற்றை நினைவுபடுத்துவதற்கு ஒரு காரியமுண்டு.இந்த வகையான இந்து நாடார் குடும்பங்கள் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து நிலை கொண்டிருக்கின்றன.நிலை கொண்டது பதினைந்தாம் நூற்றாண்டெனில் இதன் இயங்குதல் அதற்கும் ஒன்றிரெண்டு நூற்றாண்டுகளுக்கும் முன்னரே குறைந்த பட்சம் துவங்கியிருக்க வேண்டும்.குமரி மாவட்டம் முழுவதிலுமிருந்து இத்தகைய இந்து நாடார் குடும்பங்களில் குடும்ப வரலாற்றை சேகரிக்க முடியும் எனில் அது பின்னர் உருவாக்கப்பட்ட வரலாறு என்னும் கதையாடலை பகுதி உண்மைகளாக ஆக்கிவிடக் கூடும்.எனக்கு இவற்றில் ராஜாக்கமங்கலம் தொட்டு ஈத்தாமொழி முகிலன் குடியிருப்பு வரையில் கிழக்கு வடக்காக அரைகுறையாக தெரிவது போல ; இதன் தென்மேற்கு தொடங்கி அதன் வடபுலம் வரையில் ஜெயமோகன் நன்றாக அறிவார் என்றே நினைக்கிறேன்.
இன்று அதீதன் வீட்டிற்கு வந்திருந்தார்.ஆர்வத்துடன் கவிதையில் ஈடுபட்டு வருகிற இளைஞர்.பா.வெங்கடேசனின் அக்கா மகன் என்பது கூடுதல் தகவல்.இதனை சொல்லலாமா என்று தெரியவில்லை.நான் ஒரு முட்டாள்தானே அதனால் தைரியமாகச் சொல்லலாம்.அவர் மண்டைக்காடு பகவதியைப் பாத்ததில்லை என்றார்.அப்படியானால் பார்த்து வரலாம் என்று சென்றோம்.பார்த்துவிட்டு திரும்பும் வழியில் அளத்தங்கரை மரகத்தம்மாளிடமும் ஆசிபெற தூண்டியது அம்மை பகவதியின் அருளாகத்தானிருக்க வேண்டும்.
மரகதம்மாள் என்னுடைய நெருங்கிய நண்பன் சிவராமின் பெரியம்மாவும் கூட.சிவராம் அளத்தங்கரை குடும்பத்தைச் சார்ந்தவர்..இந்த குடும்பத்தின் இரண்டு கிளைகளில் ஒன்று ஞானியார் குடும்பம் .அதன் வழியில் வருபவர் மரகதம்மாள்.நாடாச்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.மரகதம்ம்மாளின் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றுத் திருப்பினேன்.எட்டு தலைமுறையின் எட்டாது சுடர்.ஞானியார் தவ யோகியும் கூட.அதன் நிமித்தம் ஞானியார் பஜனை மடமும் சிவன் வழிபாடு சார்ந்தது.அம்மன் வழிபாடும் இவர்கள் குடும்ப முறைமை.ரகசிய தெய்வம் மனோன்மணியம்மன்.இன்றைய நாள் மறைமுகமாக எங்களுக்கு மனோன்மணியம்மனின் ஆசியுடைத்த நாளாகவும் ஆனாது.
எட்டு தலைமுறை கடக்கும்போது இடிபாடுகள் இல்லாமல் கடக்க முடியுமா என்ன ? அந்த இடிபாடுகளுக்குள் நின்றவண்ணம் சுடராகி மனோன்மணி காத்துக் கொண்டிருக்கிறாள் .கலைச் செல்வங்களும் பெருகி இக்குடும்பம் பல்லாண்டுகள் தழைக்க இக்கவிஞனின் ஆசிகளும் மனோன்மணியின் பக்கத்தில் துணையாக ஆகட்டும்.
புகைப்படங்கள் - அதீதன்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்