உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்

உடலின் பாதி நோய்கள் மனம்தான் .மீதி வயோதிகம்

எனது உடலின் பாதி நோய்கள் மனம்தான் என்பதை மிகப்பெரிய தாமதத்திற்குப் பிறகுதான் கண்டு கொண்டேன்.சிறு வயது தொடங்கி ஏதேனும் மாத்திரைகளைத் தின்று கொண்டிருக்க வேண்டும்.இல்லையெனில் எல்லாம் சரியாக இருக்காது என்றோர் எண்ணம்.இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஒருவேளைக்கு 100  கிராம் அளவிற்கு மிச்சர் தின்பதை போல மாத்திரைகள் பெருகி விட்டன.

தூக்கப் பிரச்சனை எனக்கு இருபதாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது.அதுவரையில் அளவற்ற தூக்கம்.தூக்கப் பிரச்னையை இதுகாலம் வரையில் மாத்திரைகளைக் கொண்டே இழுத்து வந்தேன்.கழிந்த  ரமலான் தினத்தன்று எனக்கு முக்கியமாக தேவைப்படக் கூடிய தூக்க மாத்திரை கிடைக்கவில்லை.அது வழக்கமாக நான் மருந்துகள் வாங்கிற இஸ்லாமியரின் கடையில் மட்டுமே கிடைக்கும்.நகரம் முழுக்க தேடியலைந்தும் வேறு எங்குமே கிடைக்கவில்லை.தூக்கம் ஒருநாள் கெட்டால் சரியாக உணவு உண்ண முடியாது,இரண்டு நாட்கள் கெட்டால் வலிப்பு உண்டாகி விடும் என்பதே மனப்பதிவு.அப்படித்தான் நடக்கவும் செய்யும்."அப்பாவை புனிதப்படுத்துதல் "கவிதை நூலை வாசித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.பலர் அப்பாவை தாமதமாக கொலை செய்யத் தொடங்கியிருந்த காலத்தில் அப்பாவை புனிதப்படுத்த தொடங்கிய கவிதைத் தொகுப்பு அது. அந்த நூலை ஏராளமான தூக்க குளிகைகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருப்பேன்.

ரமலான் அன்று வழியின்றி தூக்க மாத்திரையின்றி இருபதாண்டுகளுக்குப் பின்னர்  படுத்தேன்.ஆனால் என்ன விஷயம் ! நன்றாகத் தூங்கி விட்டேன் .காலையில் விழிக்கும் போது தாங்கவே முடியாத ஆச்சரியம்.மறுநாளிலிருந்து மாத்திரைகளை நான் தேடவில்லை.எல்லாம் சரியாகாது தான் போய் கொண்டிருக்கிறது.நமது மனபதிவுகள் எல்லாவற்றையும் , எல்லா மாயைகளையும் உண்மை என்றே நம்பும் இடத்திற்கு கொண்டு வந்து விடுகின்றன.

மிகவும் முக்கியமான மருந்துகளை நீங்கள் எடுக்கத் தொடங்கிய பின்னர் படிப்படியாக அதன் அளவை குறைத்து வந்தாலும் கூட ; ஒரு குறிப்பிட்ட படிக்கும் கீழே குறைக்க முடியாது என்கிற விதமாகவே பெரும்பாலான ஆங்கில மருந்துகளின் மில்லி கிராம் அமைக்கபட்டிருக்கும் .தேவைப்படாத போதும் கூட பழக்கத்தை நீங்கள் அந்த மில்லி கிராமிற்கு கீழே இறக்கவே முடியாது.ஆனால் அந்த சந்தர்ப்பத்திற்கு கீழே விழுந்து தப்பிப்பதை ஒரு இலக்காக வைத்துக் கொள்வதே நல்லது.

எனக்குத் தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் நிபுணர்.தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயர்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது அப்பா என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்.தொடர்ந்து தீராத தலைவலியில் ஆங்கில மருந்துகள் பலனளிக்காதது மட்டுமல்ல,எதிர்விளைவுகளை என்னிடம் தொடங்கியிருந்த காலம் அது.இப்போது இருப்பவரின் தகப்பனார்தான் அப்போது வைத்தியர்.மூன்று மாதங்களில் எனக்கு குணமாயிற்று .அதன் பின்னர் இதுவரையில் எனக்கு அந்த இடர்பாடு   ஏற்பட்டதே இல்லை.மகாதேவ ஐயரிடம் ஒரு விஷேசம் என்னவெனில் மனதிற்கும் நோய்க்கும் இடைப்பட்ட தொடர்பை ஆச்சரியப்படும் விதத்தில் சொல்லிக் கொண்டே போவார்.சமீபத்தில் ஒரு நண்பரை அழைத்துச் சென்றிருந்தேன். மனைவியோடு முரண்பாடு ,வயிற்றில் ஜீரணக் கோளாறு ,நரம்பியல் உஷ்ணம் என்று சொல்லிக் கொண்டே போனார்.அதனைத் தொடர்ந்து என்னென்ன மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்புகள் வாய்ப்பாடமாக   அவரிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.

முரண்பாட்டைப்  போக்க வழியில்லையெனில் மருந்தை உணவாக்கிக் கொள்ள வேண்டியதுதான்.வேறு என்ன செய்ய முடியும் ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"