இணக்கம் நம்பிக்கை அன்பு மாற்றுப்பண்புகள்

  இணக்கம் நம்பிக்கை அன்பு  மாற்றுப்பண்புகள்

மோதுதல்,சந்தேகித்தல் ,வெறுத்தல் ஆகிய பண்புகள் எண்பதுகளின் பிற்பகுதியில் கருத்தியல் ரீதியில் தமிழ்நாட்டில் அரசியல் தரப்பினரால் முன்வைக்கப் பட்டன.இந்த மூன்று பண்புகளையும் தங்கள் அரசியல் தன்னிலையில் கொண்டிருத்தலே தீவிர நிலை என்று நம்பப்பட்டது.அதற்கு முன்பு வரையில் இந்த பண்புகள் அடிப்படைவாதிகளின் பண்பாகவும் , பழமைவாதிகளின் பண்பாகவும் இருந்தவை.முற்போக்கு அரசியல் முகாம்களில் இந்த பண்புகள் அரசியல் குணங்களாக வரையறுக்கப் பட்டபோது ,பெரிய உள்ள கிளர்ச்சி ஏற்பட்டது.அனைத்தையும் சந்தேகி,அனைத்திலும் வேறுபட்டு வெறு .பின்னர் சந்தகித்தவற்றை மோது.தன்னிலையில் போர்க்குணம் பெருக இது உதவும் என்பதே இந்த குணங்களை அரசியல் குணங்களாக முன்வைத்த அரசியல் ஆசான்களின் உபதேசம்.இன்று அரசியல் அரங்குகள் அத்தனையிலும் கோலோச்சுகிற பண்புகளாக இவை ஒவ்வொரு அரசியல் தன்னிலையிலும் உறுதிப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று குணங்களையும் அடிப்படையாகக் கொண்டிராத நபர்களை ,நான் இப்போதெல்லாம் தீவிரமான  சூழலுக்குள் சந்திப்பதே இல்லை.இந்த மூன்றில் இரண்டு மட்டுமே இருக்கும் ஒருவரைப் பார்த்தால் நீங்கள் முகமன் செய்து சிரிக்கலாம்.ஒன்றுதான் இருக்கிறது என்றால் கொஞ்சம் உரையாட வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம்.மூன்றும் செவ்வனே ஒருவரிடம் பூர்த்தியாகியிருக்குமெனில் நீங்கள் ஒதுங்கி கொள்வதே நல்லது.

இந்த தீவிரமான சூழலுக்கு வெளியே பிரமாண்டமானதொரு உலகம் இருக்கிறது.அந்த உலகம் மிகவும் ஆபாசமாகக் கருதுகிற குணங்கள் இவை.தீவிர சுழலுக்குள் முழுநேரமும் வசிக்கும் பிரதான புரட்சியாளர்கள்,தீவிரத்தின் மோகிகள் கூட ,இந்த பிரமாண்டமான உலகத்திற்குள் பிரவேசிக்க நேர்கையில் ,அந்த நேரம் குறைவானதாக இருந்தாலும் கூட இந்த மூன்று குணங்களையும் அடக்கியே வாசிக்கிறார்கள்.பேருந்துகளில் பயணம் செய்யும் போது குழந்தைகளைக் கொஞ்சுகிற ,மடியில் சக பயணி தலை வைத்து உறங்குவதை அனுமதிக்கிற தீவிர மோகிகள் பலரை கண்ணால் கண்டிருக்கிறேன்.எனது நண்பர் ஒருவர்.பெருங்கவி.உட்கார்ந்து பேசினால் மிகவும் நன்றாகக் பேசிவிடுவார்.அவரை நின்று பேசச் சொன்னால் ரத்தக் கொதிப்பிற்கு உள்ளாகித்தான் பேசுவார்.நின்று பேசித்தான் அவர் உடல் ஆற்றல் அத்தனையும் கரைந்தது.ஆரம்பம் முதலே உட்கார்ந்தது பேசுவதை அவருக்குப் பழக்கியிருந்தால் வாழ்க்கையின் இருபது  வருடங்களை சேமித்திருக்கலாம்.

சரி இந்த குணங்கள் உண்மையாகவே அரசியல் குணங்கள் தானா? காலனிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகள் கைப்பற்ற கையாளுகின்ற போர் குணங்கள் இவை.அவர்கள் வெளியேறிய பின்னரும் உள்நாட்டு போரில் அவர்கள் தங்களின் மண்டையை உடைத்துக் கொள்வது இதனால்தான்.அப்படியானால் இந்த அரசியல் ஆசான்கள் உள்ளபடியே அப்பாவிகளாகக் கொண்டு இவற்றை கொட்டினார்கள் என்று கொள்ளலாமா ?

நமது தன்னிலையில் அரசியல் குணங்களாக மாற்றம் கொள்ள வேண்டிய குணங்கள்.முதலில் இணக்கம்   ,ஏற்பு ,நம்பிக்கை.அன்பு ஆகியவை.பிறரோடு இணங்குங்கள் முதலில் .அதனால் இடையூறுகள் ஏற்பட்டால் கூட பரவாயில்லை.பிறரை ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏற்றுக் கொள்ளுதல் என்பது வாழும் கலை.அது ஒரேயடியாக விளங்காது ,கொஞ்சம் கொஞ்சமாக விளங்கும்.நம்புங்கள்.நம்ப  மறுத்தால் உங்களை நம்புவதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள்.முடிவில் உங்களையும் சந்தேகிக்கத் தொடங்குவீர்கள்.தற்போது நமக்குத் தேவை இவைதான் உரையாடவும் மேன்மைப்படுத்திக் கொள்ளவும்.சந்தேகித்து நோக்கம் கற்பித்துக் கொண்டே வருகிற ஒரு தன்னிலையை என்ன செய்வது ? என மிகவும் நெருடலாக இருக்கிறது.

தெரசா வங்காள   வீதியினுள் ஒரு சமயம் இறங்கி தொழுநோயாளிகளுக்காக பிச்சையெடுக்கும் போது,அவரது கரங்களில் காறியுமிழ்ந்து கொடுப்பான் ஒருவன்.தெரசா கைகளை தன்னை நோக்கி இழுத்து "இது எனக்கு இருக்கட்டும்...அவர்களுக்கு ஏதேனும் கொடு" என்று வஞ்சகம் இல்லாமல் கேட்டு நிற்பார்.இது ஒரு புனிதரின் செயல் .அவ்வளவிற்கு யாருக்கும் இயலாது.ஆனால் அதில் ஒரு சிறுபருக்கை நம்மாலும் முடியும்.இன்றைய வாழ்விற்கும் அரசியலுக்கும் பற்றாக்குறையாக இருப்பதும் ,தேவைப்படுவதும் இதுவே.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"