சிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவரா நீங்கள் ?

சிறைச்சாலைகள் வதைக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பவரா நீங்கள் ?

சசிகலா இருக்கும் கர்நாடகா சிறையில் வழக்கமாக நோயுற்ற ,வயதான கைதிகளுக்கு வழங்கப்படுகிற சலுகைகள்தான் சசிகலாவுக்கு வழங்கப்பட்டவை என்று இன்று வெளியாகும் தகவல்கள் பேசுகின்றன.பார்ப்பன அக்ரகாரச் சிறை மேனுவல் சிறை அதிகாரிகளின் அனுமதியோடு நோயுற்றவர்களுக்கும்  ,வயோதிகர்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் வழங்கலாம் என்று சொல்கிறது.தனியே அடுப்பு வைத்து சமைத்துக் கொள்வது,ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது ,மேஜை செய்தித்தாள்களுக்கான அனுமதி,புத்தகங்களை வருவித்துப் படிப்பதற்கான அனுமதி ஆகியவை சிறை மேனுவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.சசிகலா பெற்று வந்த சலுகைகள் சிறை மேனுவலுக்கு உட்பட்டவையே தவிர சட்ட திட்டங்களுக்குப் புறம்பானவை அல்ல.நமக்கு பொதுவாகவே அதிக பட்ச புனித பிம்பங்கள் தேவைப்படுவது போலவே அதிக பட்ச வில்லன் கதா பாத்திரங்களுக்கும் தேவையாக இருக்கின்றன.இந்த  இரண்டிற்கும் இடைப்பட்ட  வாழ்வை நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை.நோயுற்ற குரங்கை மனநோயாளி பாதுகாப்பது போல இந்த நிலவரத்தை மனக் கோணல் அதிகாரிகள், ஊடகங்கள் சமமாக பங்கிட்டுக் கொள்கின்றன.

சிறைகள் பற்றிய நமது பொதுமனச் சித்திரம் அறுநூறு ஆண்டுகளுக்குப் பழமையானது.சாதாரணமான மனிதர்களுக்குரிய அத்தனை உரிமைகளும் கைதிகளுக்கும் பொதுவானவைதான்.பொதுச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதால் மட்டும்தான் அவர்கள் தனித்து வைக்கப்படுகிறார்களே அன்றி அவர்களின் மனித உரிமைகள் எதையும் அப்புறப்படுத்துவதற்கான நியாயங்கள் கொண்ட அமைப்புகள் உலகில் எங்குமே கிடையாது.இந்திய சிறைகள் இன்னும் பலவிதங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பவை.சிறைகள் கடினமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் எதிரிகள் வதை   செய்யப்பட வேண்டியவர்கள் என்னும் எண்ணத்திலிருந்து கருக்கொள்ளக் கூடியது.

1998  வாக்கில் என நினைக்கிறேன் சிறைகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கத் தொடங்கியிருந்த காலம்.தினமலர் நாளிதழில்  ஒரு தலையங்கம் எழுதியிருந்தார்கள்."சிறை என்பதே தண்டனையை அனுபவிக்கத் தானே ? இவர்களுக்கு இரவு பனிரெண்டு மணிவரையில் தொலைக்காட்சி பார்க்க வேண்டுமாம் "என்று .இது மன்னர்கால மனோபாவத்தை பிரதிபலிக்கின்ற கண்ணோட்டம் .தொடர்ந்து தினமலர் போன்ற இதழ்களை வாசிப்பவர்களுக்கென்றே சில உடல் உபாதைகளும் மன உபாதைகளும் உண்டு.ஒருவர் பேசுகின்ற இரண்டு முதல் வாக்கியங்களைக் கொண்டே அறிமுகமற்ற ஒருவரைக் கூட   தினமலர் வாசகரா என அறிந்து கொள்ள முடியும்.அந்த அளவிற்கு அருதப் பழைய காலத்தின் மனோபாவங்கள் இவை.ஒருவர் கைதியாக அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே அவருக்கான மனித உரிமைகள் கூர்மையடைய வேண்டும் ஒரு நல்ல சமூகத்தில்.குற்றங்கள் பிற்காலங்களில் நியாயங்களாக   மாறிவிடுதலுக்கான அனைத்துவிதமான சந்தர்பங்களையையும் கொண்டவை.

சசிகலாவை ஒரு சராசரியான கைதியாகக் கொண்டே ஒரு கேள்வியைக் கேட்கிறேன்.சசிகலாவை பற்றிய பத்து நொடிக் குறும்படங்கள் கூட சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது.இரண்டு லட்சம் தொடங்கி ,பத்து லட்சங்கள் வரையில் .இதற்கென குற்றப் பின்னணி கொண்ட கும்பல்கள் ,ஊடகங்கள் தொழில்படுகின்றனர் .இதனைப்பற்றிய செய்தி ; நேற்றைய தமிழ் இந்து நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.அவர்களும் ஒருவர் பின்னால் இவ்வாறாக சூதுபடுகிற இழிவில் புகார் ஏதுமில்லாமல்தான் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இவையெதுவுமே அரசியல் பின்னணியிலாதவை ,வெள்ளந்தியானவை என நம்புகிறீர்களா ? சசிகலா ஒருவருக்கும் ஆகாதவர் என்றே வைத்துக் கொள்வோம் .ஒரு சிறைக் கைதி சட்டவிரோதமாக குற்றப் பின்னணி கொண்ட கும்பல்களாலும் , ஊடகங்களாலும் இவ்வண்ணம் துரத்தப்படுவது நியாயமானது என்றுதான் நினைக்கிறீர்களா ? சிறைக்குள் இதற்கெல்லாம் எப்படி சட்டபூர்வமான அனுமதிகள் கிடைக்கின்றன ?

இப்போதுதான் இந்திய சிறைகளில் அவலங்கள் தெரியும் என்பது போல இவ்விஷயத்தில் உரக்க குரல் எழுப்புகிற அதிகாரிகளுக்கு வேறு நோக்கங்கள் உண்டு .அவர்கள் புனித பிம்பங்களை முன்வைக்க பயன்படுத்துகிற பிரதி பிம்பங்கள் மிகவும் பயங்கரமானவை.பிசியோதெரபி சிகிழ்ச்சை மருத்துவ உதவி பெறுகிற கைதிகளின் குறும்படங்களை வெளியிட்டு அவர்கள் பரபரப்பு ஏற்படுத்துவதற்கும் பின்னால் அவர்கள் திட்டங்களின் ஆயிரம் கால்கள் கொண்ட சிலந்திப் பூச்சிகள் ஒளிந்திருக்கின்றன.முதல் தகவல் அறிக்கைகளையே உண்மையென்று நம்புகிற மக்கள் மனோபாவமே அவர்கள் ஏறி விளையாட பயன்படுத்துகிற காலிமைதானம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"