அப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார்

அப்பைய்யா இந்திரா காந்தியை காட்டித் தந்தார்

நான் சொல்வது எழுபத்தைந்து அல்லது எழுபத்தாறாக இருக்கலாம்.கடைசி தம்பி பிறந்து நாகர்கோவில் கோபால பிள்ளை மருத்துவமனையில் இருந்தான்.எங்கள் ஊருக்கும் நாகர்கோவிலுக்கும் ஒன்பது கிலோமீட்டர் தூரம்தான் இடைவெளி .அப்பைய்யா அப்பம்மையுடன் சென்று காண்பதற்காக நாங்கள் குழந்தைகள் கிளம்பிக் கொண்டிருந்தோம்.அப்பைய்யா வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமெனில் ஏகதேசம் வெளிநாடுகளுக்குச் செல்வது போல கிளம்புவார்.அப்போதெல்லாம் நாகர்கோவிலுக்குச் செல்வது கூட தொலைதூரத்திற்குச் செல்வதை போன்றதுதான்.அப்பைய்யா குளிப்பது வரையில் சாதாரணமாக இருப்பார்.குளித்து முடித்து விட்டார் எனில் மிகவும் துருசமாக நடந்து கொள்வார்.அப்பைய்யா என்று நான் குறிப்பிடுவது என்னுடைய அப்பாவின் தகப்பனாரை .அதாவது தாத்தா .அவர் பெயர் ஆதி நாராயணன் நாடார்.அப்பம்மை என சொல்வது பாட்டி சீதா லட்சுமியை .
தாத்தா , பாட்டியை எங்கள் குடும்பத்தில் அப்பைய்யா ,அப்பம்மை என பேரக் குழந்தைகள் அழைப்பதே வழக்கம்.

சிறுவயது சிற்றூருக்கு என் வயதில் மிகப் பெரிய நிதானம் இருந்தது.பர பிரம்மம் சதா நிறைந்திருந்த ஊர் .சாலை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் .தெற்குப் பக்கம் கிழக்கு நோக்கி வீடு. வேலியை தாண்டியதும் சில செந்தெங்குகள் ,அழகிய கிணறு தாண்டிச் செல்ல விரிந்த களம்.இசைக் கோலம் நிரம்பிய பகுதி இது.தூரத்தில்  கடலடி சத்தமும் கேட்கலாம். இந்த ஊருக்கென்றே இருந்த நிதானம் அப்பைய்யாவின் உடலிலும் இருந்தது.அவர் படுத்துறங்கும் நார் கட்டில்  தலை வைக்கும் இடம் சற்று வளைந்து உயர்ந்தது .சிறுவயதில் குழந்தைகள் அந்த கட்டிலில் புரள்வோம்.போர்வைகளில் அப்பைய்யாவின் நறுமணம் இருக்கும்.அது விஷேசமானதொரு நறுமணம் .அந்த சிற்றூரின் காட்டு நறுமணம் அது.அவர் கட்டில் மிகவும் தண்மையானது .

அப்பைய்யா அன்று சட்டையும் அணிந்தார்.பொதுவாக அவர் சட்டை அணிவதில்லை.வேட்டி ,தலை முண்டு ,முனை வளைந்த நீளமான  குடை இவைதான் அவர் ஆடைகள் .அவர் சட்டை அணிவது மிகவும் விஷேசம்.அவர் அன்றிருந்த பரவசத்தைக் குறிக்கிற விஷயம் அது.அப்பம்மையும் விஷேசமாகத்தான் கிளம்பியிருந்தாள்.

நாங்கள் நெடுநேரம் பேரூந்துக்காகக் காத்திருந்தது நினைவிருக்கிறது.எங்கள் ஊருக்கு ஒரு  பென்ஸ் பேருந்து மட்டுமே அப்போது உண்டு.ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வரும்.வந்து திரும்பும்.

நாங்கள் கிளம்பிச் சென்ற அன்றுதான் இந்திராகாந்தியும் நாகர்கோவிலுக்கு வருகிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.வேப்பமூடு சந்திப்பில் இறங்கி எஸ்.எல்.பி மைதானம் கடந்து கோபால பிள்ளை மருத்துவமனைக்கு நாங்கள் செல்ல வேண்டும்.ஜனக் கூட்டம்.இவ்வளவு பேர் இங்கே இருக்கிறார்கள் என்பதை எனது அப்பைய்யா அன்றுதான் பார்த்திருப்பார்.வேப்பமூடு சந்திப்பிலிருந்தே வரிசை .மெல்ல மெல்ல நகர்ந்து எஸ்.எல்.பி வாயிலை வந்தடையும் போது திறந்த ஜீப்பில்  இந்திராகாந்தி வெளியே வந்து கொண்டிருந்தார் .ஒரு மலர் மாலையை எடுத்து அவர் கூட்டத்தின் நடுவில் வீசினார் .மக்கள் பரப்பிரம்ம லகரியில் லயித்து நின்றார்கள்.உண்மையில் தாத்தாவிற்கு அவர்தான் இந்திராகாந்தி என்பது  தெரிந்திருக்கவே இல்லை .தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் அவருக்கு அன்று இல்லை.பக்கத்தில் இருந்த ஒருவர் எனது கையை பற்றி இந்திராகாந்தி என்று பரவசப்படுத்தினார் .நானந்த  பேரழகிக்கு டாட்டா காட்டினேன் .

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"