தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது


  • தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது
NEET -
தமிழ்நாட்டு மாணவர்கள் பேரில் நீதிமன்றம் போர் தொடுக்கிறது
இப்போதைய கெடுபிடிகள் கல்வியில் நீடித்தால்; இப்போது நடைபெற்று வருகிற காரியங்களின் எதிர்விளைவு அறியப்படுவதற்கு இன்னும் ஐந்தாறு வருடங்கள் ஆகும் . தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் வெளி மாநில மாணவர்கள் ஆக்ரமித்து இங்குள்ள மாணவர்கள் விறுதே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அப்போதுதான் இப்போதைய கெடுபிடிகள் என்ன ,வேதனை என்ன ? என்பது விளங்கும்.குஜராத் போன்ற மாநிலங்களில் ஆறோ,ஏழோ மருத்துவக் கல்லூரிகளே உள்ளன.மொத்தமாகப் பார்த்தால் 600 இடங்கள் வரும்.ஆனால் தமிழ் நாட்டின் நிலை அதுவல்ல.சுமார் 4000 இடங்களை இழக்கும்.
அகில இந்திய தேர்வுகள் என்பவை எளிமையாகச் சொன்னால் பணக்காரர்களுக்குரியவை.ஆறேழு ஆண்டுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான பணம் செலவழித்து பயிற்சி மையங்களில் எட்டாம் வகுப்பு நிலையில் இருந்தே பயிற்சியை தொடங்குபவர்களுக்குரியது.அவை அனைத்துமே நகரங்கள்,பெரு நகரங்கள் சார்ந்த பயிற்சி மையங்கள்.நேரடியாக பயிற்சி மையங்களின் துணையின்றி இந்த தேர்வுகளில் பங்கேற்கிற திறன் வாய்ந்த மாணவர்களால் அகில இந்திய தேர்வுகளில் எழுபது சதமானம் தொடங்கி எண்பது சதமானம் வரையிலே மதிப்பெண்கள் பெற முடியும்.உண்மையில் இந்த மாணவர்களே திறன் வாய்ந்தவர்கள்.ஆனால் இந்த தேர்வுகளின் வழியே இவர்கள் நிராகரிக்கப்பட்டு விடுவார்கள்.பதிலாக பயிற்சி மையங்களில் பணம் செலவு செய்கிற மாணவர்களுக்கு அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டிருக்கும்.அவர்கள் இந்த வழியிலும் செல்லலாம் இல்லையெனில் அவர்களுக்கு தனியார் கல்லூரிகளிலும் இடம் திறந்தே இருக்கும்.இத்தகைய தேர்வுகள் மூலம் அரசாங்கம் திறன் வாய்ந்த ஏழை மாணவர்களை நிராகரிக்கும்.இது முழுக்க முழுக்க வர்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை.ஏழை மாணவர்களை எங்கும் அண்ட விடக்கூடாது என்பதன் சூழ்ச்சிகளே இந்த தேர்வுகள்.இந்த தேர்வுகளின் பலன் தெரிந்தோருக்கு இதனை விளங்குவதில் சிரமம் இருக்காது.
உதாரணமாக ஜிப்மர் அகில இந்திய தேர்வை எடுத்துக் கொள்ளுங்கள்.99 சதமானம் அதற்கும் மேல் மதிப்பெண் பெற்றுத் தேறுகிறவர்களே 3000 த்துக்கும் அதிகமாக வருகிறார்கள். இவர்கள் அனைவருமே பயிற்சி மையங்களில் இருந்து வருகிறவர்கள்.ஜிப்மரில் உள்ள இடங்கள் மொத்தம் 200 .இந்த மூவாயிரத்தில் பிறப்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட ,தலித் மாணவர்களும் அடக்கம்.நேரடியாக இந்த தேர்வுகளில் கலந்து கொள்கிற திறன் வாய்ந்த மாணவர்களால் இங்கும் எழுபது சதமானத்திலிருந்து, எண்பது சதமானம் வரையில் மட்டுமே மதிப்பெண் பெறமுடியும்.அப்படியானால் இந்த தேர்வுகள் அப்பட்டமாக ஏழை மாணவர்களுக்கு எதிரானவை என்பது விளங்குகிறதா ? ஏழைகளை வடிகட்டி விடுவதுதான் அரசாங்கத்தின் தற்போதைய நோக்கம்.இது மீண்டும் நம்மை பழைய கால முறைகளை நோக்கி நகர்த்த துடிப்பவை.
இத்தகைய தேர்வுச் சூழல்கள் ஏற்படாதவரையில் ஒரு கிராமத்தில் இருக்கும் ஏழை மாணவனுக்கும் உயர் தொழிநுட்ப படிப்புகளிலும்,மருத்துவம் போன்ற படிப்புகளிலும் பயின்று சமநிலை நோக்கி முன்னேறி விட முடியும் வாய்ப்பு இருந்தது.அந்த வாய்ப்பை பலவந்தமாக அவனிடமிருந்து பறிப்பதற்கு இப்போதைய அராசாங்கங்கள் முயல்கின்றன.இந்த சதி இன்னும் பலருக்கும் விளங்கவில்லை .பல உயர் படிப்புகள் ஏழை மாணவர்கள் எட்டித் தொடவே முடியாத விலைகளில் தனியார் நிறுவனங்களின் வசம் நேரடியாக மத்திய அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.இதற்கு தகுதி என்ற மேலங்கி போட்டு மறைத்து விட முடியும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது .அதற்கு நீதி மன்றங்கள் உதவி செய்கின்றன.இனி வருங்காலங்களில் ஒரு மாணவன் எந்த கிராமத்தில் எந்த இடத்தில் படிக்கிறான் என்பதை வைத்து அவன் தலைவிதி எப்படியிருக்கும் ? என்பதை என்னைப் போன்ற ஒரு சாதாரணனால் கூட சொல்லிவிட முடியும் என்கிற நிலை நோக்கி நாம் முன்னகர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஏறக்குறைய ஐம்பதினாயிரம் மாணவர்கள் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை நம்பி மருத்துவப் படிப்பிற்கு 85 % சதமானம் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர முடியும் என்கிற ஆசையில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.ஆனால் இந்த மாணவர்கள் அத்தனை பேரின் தார்மீக நியாங்களுக்கும் செவி சாய்க்காது ,உரிமைகள் பற்றிய கவலை இன்றி ஒரு சி.பி.எஸ்.ஈ மாணவனின் மனுவின் அடிப்படையில் நீதிமன்றத்தால் மாநில அரசாங்கத்தின் அரசாணையை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க முடிகிறதென்றால் நீதிபதிகள் ,நீதி மன்றங்கள் தற்போது அடைந்து வருகிற மேட்டிமை மனோபாவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.மாநில அரசாங்கம் இந்த விஷயத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் தரப்பு என்கிற நினைவே நீதி மன்றத்திற்கு துளியும் இல்லை
கல்வியை மாநிலங்களின் கையில் இருந்து மத்திய அரசாங்கம் பிடுங்குவதே இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்.அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் ஒழுகி வருகிறார்கள் என்கிற பிரச்சனை அல்ல.இது.யார் ஒழுகி வந்தாலும்,பழகி வந்தாலும் கல்வியை ,உரிமைகளை வீட்டுக் கொடுக்க வேண்டிய அவசியங்கள் கிடையாது.மத்திய தீவிரவாத தடுப்பு மையத்தை ஜெயலலிதா போன்ற ஒரு சிலர்தான் எதிர்த்தார்கள் .எல்லோரும் ஏற்றுக் கொண்டுவிட்டால் விஷத்தை அப்படியே தின்று விடுவீர்களா என்னா ? கல்வியை முழுவதுமாக மாநில அரசாங்கங்கள் தங்கள் பிடிக்குள் கொண்டுவர வேண்டும்.இந்தியை எதிர்ப்பதெல்லாம் சுலபம்.இவற்றை சாதிப்பதுதான் கடினம்.தமிழ் நாட்டின் சட்ட வல்லுநர்கள் மீண்டும் ஒரு புரட்சி போல முன்னின்று இந்த உரிமைகளை மீட்காவிட்டால் மிகவும் பின்னகர்ந்து போவோம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஏழைகளின் கரத்தில் இருந்து கல்வி பறிக்கப்படுகிறது.அதற்கு எதிரான போர் ஏழைகளிடமிருந்து தொடங்கபடுதல் காலத்தின் முன் நிற்கும் தேவை.அனைத்தையும் மத்தியில் கொண்டு போய் குவிப்பதற்கு இங்கே தேவையில்லாமல் ஒரு மாநில அரசாங்கம் எதற்கு ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"