திருக்காதல் செய்வோருக்கு வழித்துணைக் கவிதைகள்

காதல் அந்தாதி -
திருக்காதல் செய்வோருக்கு வழித்துணைக் கவிதைகள்

1

நீ வந்து சேருவது வரையில்
ஜடமாக இருந்தேன்
இப்போது கொழுந்து விட்டு எரிகிறது
திருமேனியெங்கும்
உயிர்த்தீ

பருகக் கொஞ்சம்
நீர் கொடு
அந்நீரில் மட்டுமே
தணியும்
பற்றியிருக்கும்
நெருப்பு

2

இந்த பிரபஞ்சம் ஏன் இத்தனை
அழகாய் இருக்கிறது
என்பது
உன்னைச் சந்தித்த பின்னரே
விளங்குகிறது

ஜோதி பிரகாச ஓசைகள்,காட்சிகள்
மெல்லிய ஓடையிலிருந்து நிலத்தில்
கசிந்து விழுவது போல
எனக்குள்
விழுந்து கொண்டிருக்கின்றன

இத்தனை நாட்களாய்
படாத சலனங்கள்
மூச்சிரைக்க உன்னை நோக்கி ஓடி வந்து
இடைப்பட்ட நாட்களை
தினசரி காலண்டரிலிருந்து
கரைத்துக்
கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு நாளும் குறையக் குறைய
என் உயிரிலிருந்து
வளர்ந்து கொண்டிருக்கிறது ஒளியின்
பிறை நிலவு

3

நம்மைப் பார்த்து
எல்லாமே அதிசயிக்க வேண்டும்
காடுகள்
மலைகள்
மேகங்கள்
நதிகள்
கடற்கரைகள்
நட்சத்திரங்கள் எல்லாமே

கைகள் இறுக கோர்த்து
ஓரேயுயிராக
பயணிப்போம்

நமது குழந்தைகளின்
மீது நட்சத்திரங்கள் ஜொலிக்க
வேண்டும்

4

உன்னைத் தொடுவது போலே
தொட்டென்னை குளித்துக் கொண்டிருக்கிறேன்

பூவாளியில் நிறைந்த நீர்
உச்சியிலிறங்கி
நெற்றில் துளைக்கிறது

மூக்கைத் தொட்டு
பின் கழுத்துகிறங்கி
மார்பில் கைதடவி

இறங்கும் நீர்
இறங்குகிறது
உன் சுனை நோக்கி

கையேந்தியுன்னை அகட்டிக்
கைகளில் தாங்கி
வில்போலும் வளைந்த என்னுடல்
சீறியுன் மேல் சரிய

குளித்தது குளிர் நெருப்பிலா
எரிகின்ற நீரிலா
சொல்

5

இன்றைய பௌர்ணமியிடம்
நானொன்று கேட்பேன்

நீ இதுவரையில் என்னவளை
எத்தனை முறை பார்த்திருப்பாய் ?
அவள் உன்னை எத்தனை முறை பார்த்திருப்பாள் ?

என்னை எத்தனை முறை பார்த்திருப்பாய் ?
நான் உன்னை எத்தனை முறை பார்த்திருப்பேன் ?

அது என்ன பதில் வேண்டுமாயினும்
சொல்லட்டும்
பௌர்ணமியிடம் நான் சொல்லவிருக்கிற
பதில் இதுதான்

" பொறுத்திருந்து பார்
அடுத்த இரண்டாவது சுற்றில் நீ வரும்போது
நானும் அவளும் ஒரே காட்சியில்
உன்னை பார்ப்போம்
நீ
எங்களையும்தான்

6


என் பயணப் பையில்
புத்தகங்கள் ,உடைகள்
எல்லாவற்றையும்
எடுத்து வைத்துக் கொண்டேன்

நீ இருந்து நினைவுபடுத்த வேண்டிய
ஏதேனும் பொருட்கள்
மறந்திருக்கலாம்

இதயத்தில் உன்னை எடுத்துக்
கொண்டதும்
பயணம்
தயாராகிவிட்டது

7

என்னிடம் ஒரு  ராக்ஷஸன் இருந்தான்
எனது தேவதை  வரும் நேரமாகிவிட்டது
கிளம்பிச் சென்று விடு என்று சொல்லிவிட்டேன்

ஐந்து வண்ணங்களை பட்டாம்பூச்சிகளிடம்
வானவில்லில் சேகரித்துத் தர கேட்டிருக்கிறேன்

ஒரு இதமான மழைச் சாரல்
எப்போதும் வேண்டும்
ஒரு குடைக்குள்
நாமிணைந்து
நனைந்து
செல்ல

நனைந்த படி
நாம் நுழைந்து விடவேண்டும்
சேர்ந்து
நமது காதலின்
வனத்திற்குள்

8

மழை சாரல்
நனைந்தபடி பயணிக்கும்
எனது வாகனத்தில்
நீயும் உடனிருப்பது போல மாயை

திடுக்கிட்டு விழிக்கும்
தூக்கம்
நீ முன்னமர்ந்து
அமைதியாகத் தூங்கு
என்கிறாய்
எனக்குள்ளிருந்து உடனெழும்பிய
அத்தனை பேய்களும்
அமைதியடைந்து
அமைதியாகத் தூங்குகின்றன
கட்டிலில்

கனவுகளில்
உனது நடமாட்டம்

9

நாம் சேர்ந்து நனையும் முதல் மழை
என்னவாக இருக்கும் ?
நமது மழையாக
இருக்கும்

நமது முதல் வெயில்
நமது முதல் பனி
முதல் கடல்
முதல் கூடல்
எல்லாம் நம்முடையவை

முதல் கூடலில்
நாம் இவற்றை
நட்சத்திரங்களுக்கு
சமர்பிப்போம்

10

ஏன்
மரங்கள் இப்போதெல்லாம் நான் வெளியேறிச் செல்கையில்
கைகாட்டிப் பேசுகின்றன ?

உனக்குத் தெரியுமா
பார்க்கும் காட்சிகள்
அத்தனையிலும்
உன் முகம்

பறவைகள் என்னைக் காதலிக்கின்றன
கிளிகளின் பாஷை எனக்கு புரிகிறது
உனக்கு புரிகிறதா ?

என்னை நீ எடுத்துக் கொண்டுவிட்டதை
அவை தெரிந்திருக்குமா என்ன ?

உன் பிம்பம் எல்லாவற்றிலும்
எதிரொளிக்கிறது

எனக்குள்ளும் பறவைகள்
பறந்து கொண்டிருக்கின்றன
மீன்கள் நீந்துகின்றன
கடவுள் உள்ளே அடியெடுத்து வைக்கிறார்.

என்ன தவம் செய்தேனோ
உன் மடியில் நான் அமர்ந்து
கனவு
காண

11

நேற்று போல இன்றும் விடிகிறது
என்றான் நண்பன் ஒருவன்

இல்லையென்றேன்
அவள் பேசாத நாட்களில்
எனக்கு மேகங்கள் நகருவதில்லை
சாரல் மழை இனிப்பதில்லை
உலகம் எனக்குத் திறப்பதில்லை

எனக்குள் இரண்டு நாட்கள்
இருக்கின்றன
ஒன்று அவள் பேசித் துவங்கிற நாட்கள்

மற்றொன்று அவள் பேசாது கடக்கும்
கசப்பின் சுவை பருகத் தரும்
வலி நாட்கள்

எனது தினசரிக்கு
வேறேதும் ஏழு நாட்கள்
இல்லை நண்பா

12

என்னையொரு சர்ப்பம் தீண்டி
கிடக்கிறேன்
உன் காதல் எனும் சர்ப்பம்
உடலெங்கும் நீலம் பாரித்து விட்டது

நீலம் பாரித்த உடலோடு
செய்யும் தவத்தில்
நெற்றியில்
நின்றாடுகிறது
விஷம்

தவம் நின்றாடும்
சிவன்
ஒருபாதியை உனக்குத் தந்து விட்டு
மீதியுடலுடன்
தரையில் கிடந்து
துடித்துக் கொண்டிருக்கிறான்

நீ வந்து
அமுதூட்டு
நீல கண்டத்தில்
நின்றுவிடும்
நீலம்

13

ஒரு நாளை எப்படி தொடங்க வேண்டும் ?
உனக்குத் தருகிற முத்தத்திலிருந்து

ஒவ்வொரு கணத்தையும்
உன் நியாபகத்தால்
அர்த்தம்
செய்ய வேண்டும்

கசிந்துருகி
உன்னில் கரைந்து
சொட்டுச் சொட்டாக
சிந்தி
ஒருநாள் மீது
வணக்கம் சொல்ல வேண்டும்

முடிவடையாமல்
தொடங்குவோம்
நாளையின்
முத்தத்தை
இன்றின் விளிம்பில்

இடைவெளியின் வெப்பச் சூடு
கனல் தீ
மூட்டுகிறது அன்பே பேரன்பே

14

கூட்டத்தில் இருக்கிறேன்
ஆனால் தனியாக

மஞ்சள் விளக்குகளைக்
கடந்து சாலைக்குள் நுழைகிறேன்
ஆனால் தனியாக

சாப்பிடுகிறேன்
குளிக்கிறேன்
துயில்கிறேன்
எல்லாம் சரிதான்
எல்லாமே தனியாக

உன்னைப் பிரிந்திருப்பதைப்
போன்று
கடுந்துயர்
வேறில்லை

15

சமவெளியும் மேடும் கடந்து வந்து
சேர்ந்தேன்
இந்த ரயில் பயணத்தை

மேய்ச்சலில் இருந்த ஆடுகள் காட்சிகளின்
பின்பாக திரும்பிக் கொண்டிருக்கும் போது
சுடர் அந்தி

பின்னர் நிலாவுடன்
பல வண்ண விளக்குகள் ஒளிர
சிறிய நகரங்கள்

ரயில் எல்லா காட்சிகளையும்
இழுத்துக் கொண்டு
ஓடுவது போலிருந்தது

நானும் நீயும் இணைந்தே
பார்த்துக் கொண்டிருந்தோம்

மஞ்சள் ஒளியுனுள்
நிலையத்தில் இறங்கி நடக்கிறேன்
தனிமையின் மாயை
இதயத்தில் தீயாய்
 சுடுகிறது
 நீ இல்லாத இந்த இரவு

16

உன்னை சந்தித்த பொழுதிலிருந்து
என் மீது பரவத் தொடங்கின
வண்ணங்கள்

உன்னை பருகத் தொடங்கியதிலிருந்து
உருகத் தொடங்கியது
இந்த பனிப்பாறை

உன்னை ஏற்கத் தொடங்கியதிலிருந்து
எனது படுக்கையறையில் பூத்து விரிகின்றன
கனவுகள்

நான் உன் உயிரின்
சாறு

17

எனது அகம் முழுதும்
உனது மடியில் சிதறிக் கிடக்கும்
பன்னீர் புஷ்பங்கள்
இப்போது

அது மெல்ல மெல்ல கட்டியெழும்பியது
யாருக்கும் பணியாதது
உதிர்ந்து
கிடக்கிறது
உனக்காக மட்டுமே
உதிர்ந்தவை போன்று

அவை உன்னிடத்தில் பேசும் ரகசியம் உனக்கு கேட்கிறதா என்ன?

​உன் காதல் அவற்றின் மீது பெய்திருக்கும் வானவில் வண்ணங்கள்

மெல்ல மெல்ல நீ சேர்த்தெடுத்துக் கோர்த்தால்
மீண்டும் எழும்பி
ஒன்று சேரும்
உன்னை வாசனையால் சூழும்
பன்னீர் மரமாக

அப்படியே இருக்கட்டும் என்றால்
உன் இஷ்டம் சகியே
அப்படியே கிடக்கட்டும்
உன் மடி மீதில்

18

காற்று இடைவெளிகள் ஏதுமற்று
உன்னை இறுக பற்றிக் கொண்டிருக்கிறேன்
என் கைகளின் சிறு நடுக்கம் உன் இதயத்திற்கு மட்டுமே
கேட்டுக் கொண்டிருக்கிறது
உனக்கு மட்டுமே இது என்ன என்பதும்
விளங்கும்

அது வேறொன்றுமில்லை
இனி பிறக்கவிருக்கிற புதிய
இசைக்கான குறிப்பு
என்னுயிர் உன்னில்
எவ்வாறு இறங்கிக் கொண்டிருக்கிறது
என்பதையுணர்த்தும்
எனது நரம்பியல்
தடயம்

உனதணைப்பில் அல்லாது
எனது நடுக்கம் அடங்கும் நிலம் வேறெங்கே உள்ளது
என் தீப்பெருஞ்சோதியே ?

19

உன்  கைகளை இறுக  பற்றிப் பிடித்து கொண்டுதான்
நடக்கிறேன்
சாப்பிடுகிறேன்
தூங்குகிறேன்
பயணிக்கிறேன்

அருகில் இல்லாத போதும்
எப்போதும் உடனிருந்து கொண்டேயிருக்கிறாயே
என் மாய பெண்ணே !

உன் கைகளை இறுக பற்றி கொண்டு  நிலா பார்க்கிறேன்
நிலாவில் நீ இருப்பது போல தோன்றும் போது
சற்றைக்கு
பதற்றம் வந்து
தணிகிறது.

நீர் பார்க்கிறேன்
அதில் உன்  முகம் தெரிகிறது
எனக்கு

என்னில் நிறைந்து நீராயிருப்பவள்
நீயல்லவோ ?

20

முதல் ஆதாம் ஏவாளும் நாம் தான்
உலகின் கடைசி ஆதாம் ஏவாளும் நாம் தான்


நீயொரு முடிவிலி
நான் உன்னுடைய  முடிவிலி

நமது காமத்திற்கும் காதலுக்கும்
முடிவில்லை

நான் உனக்குள்  
சொட்டு சொட்டாய்
இறங்கவிருக்கும்
வெண் துளி
நீ அது காக்கும்
நிலம்

நாம்தான் பிரபஞ்சமெங்கும்
நிறைந்திருக்கிறோம்
நீர் நிலம் காற்றாய்

21

ரத்தம் முழுதும் நெருப்பாக
பாரஸ்ட் பிளேம்  பூக்கள் மலர்ந்திருக்கின்றன
நீ உள்ளீடாய் அமர்ந்திருக்கிறாய்

சட்டைப் பொத்தானை நான்  மாற்றிச் சொருகியிருப்பதாகச்
சொன்ன நண்பர் அறிவாரா இதனை ?

நேற்றைய சிறு தூறல் மழையில்
நனைந்து திரிந்தவை

​சிறு மழையாய் சொரிந்தவள்
நீதானே என் பேரன்பே ...

22

எப்போதும் மலராகவே இருக்கும் தேவ மலர்
சரணடைந்தவனின் கால்களின் விலங்குகள்
உடைந்து நொறுங்குகின்றன

தேவபிரகாசம் கண்டு ஓடிச் சென்ற நதி
கடலில் கலக்கும் சமீபத்தில்

எல்லைகள் ஏதுமில்லை
சிறகுகள் விரியத் தொடங்கி விட்டன
இந்த தனிமை பூத்த இரண்டு
பறவைகளுக்கு

23

உள்ளமெல்லாம் கோடை சரக்கொன்றையாகச் செய்தாளை
உடலெங்கும் மஞ்சள் நிறம் எழும்பிப் பூத்தாளை
நெய் நெய்யாய்யுருகி
மனம் அறியப் பணித்தாளை

பூவரசம் பூவின் மேனி பொங்கும் நிறத்தாளை
அம்மன் என்றேன்
ஆருயிர் என்றேன்

சரண் புகுந்து கலந்தேன்

துளித்துளியாக நான் கரைந்து
விழுந்ததெல்லாம்
உன்னிடம் தானேயென்
அபிராமி ?

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"