நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்

நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்
-கவிதைகள்


1

பாதி ஆயுள்
முடிந்தது
மூன்று கழுதை வயதும்
ஆகிறது

நீ கொல்லப்படுவதற்கான
எத்தனை தகுதியை
வளர்த்து வைத்திருக்கிறாய்
இதுகாறும் ?

நான் கொல்லப்படுவதற்கான
அனைத்து தகுதிகளையும்
கைக்கருகிலேயே
வளர்த்து வைத்திருக்கிறேன்

உனது தகுதியைச் சொல்லி
விரைந்து வந்து எனது
அறைக் கதவைத் தட்டு
தேவைப்படும் ஆயுதங்கள் அனைத்தையும்
உனக்கு நானே பரிசளிக்கிறேன்

2

படித்துறையில்
சாயங்காலம் இறங்கிக் குளிக்கும் செல்ல மகளை
இடுப்பில் எடுத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறது இந்த புனிதக்குளம்
அவள் மூழ்க
ஆடைகள் எழும்பி
தாமரை வட்டம்
குதூகலம்

பக்கத்து படித்துறையில்
இறங்கி கொண்டிருக்கும் பையனை
ஏனென்று கூட
கேட்க தயாராயில்லை

3

தள்ளாடி ஆட்டோவில்
வந்திறங்கும் தந்தையின் கையில்
பால் பாக்கட்
கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல
செல்கிறான்
தள்ளாடுகிறது குழந்தை

அத்தனைத் தள்ளாட்டத்திலும்
அவன் கை
குழந்தையை
கைவிடவில்லை
பால்பாக்கட் முனையை
சுருட்டிப் பிடித்திருக்கிறான்

பால்பாக்கட்டை எடுத்து
கொண்டு தருகிறேன்
என்று சொன்னவனை சீறி கொண்டே
உள்ளே
நுழைகிறது
பால் பாக்கட்

அனாதையில்லை செல்லமே நீ
குழந்தை ஏசு

4

எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரியும்
நீங்கள் என்னிடம் வேறு எதையோ எதிர்பார்க்கிறீர்கள்

டியூப் லைட் முதுகில் கட்டி
தலைகீழாகவும்
சைக்கிள் ஓட்டுவேன்

விண்ணில் கட்டியிருக்கும் அந்தரக்கயிற்றில்
இந்த துருவத்தில் இருந்து அந்த துருவத்திற்கு
சைக்கிள் ஓட்டுவது எனக்கு
தண்ணீரில் நீந்துவது போல

முன்சக்கரத்தில் நிறுத்தி பின்சக்கரத்தை
மேலுயர்த்தும் போது
மேளதாளங்கள்
முழங்கட்டும்

ஆனால் நீங்கள் வேறென்னவோ
கேட்கிறீர்கள்
கரகரக்கும் குரலில்
தகரத்தில் ஒலி கேட்கிறதா உங்களுக்கு
பதிலாக

அதனை உங்களுக்கு கேட்பதற்காகத் தான்
வைத்திருக்கிறேன்
வித்தை காண்பவனுக்கு
அக்குரல்
கேளாது


5

என்னோடு எப்போதும்
உள்ளமர்ந்து வரும் வேட்டை நாயோடு
இன்றைய மாலை நடைப்பயிற்சி
அதன் தடம் ஒவ்வொன்றிலும் காலடியெடுத்து வைத்து
இருவரும்
சென்று கொண்டிருந்தோம்

குன்றின் தொடர்ச்சி
சென்றமர்ந்த மலையடிவாரம்
தெளிந்த சுனையின் மேல்
பறந்து கொண்டிருக்கிறது
பஞ்ச வர்ணக் குருவி

நெடுநேரம்
வண்ணங்கள் நீர் ஆழத்தில் பிரதிபலிக்க
சிறுமீன்கள் மேலெழும்பிக்
கொத்துகின்றன வண்ணங்களை

குருவியின்
பறத்தலில் அசைகிறது பார் இந்தக் குளம் என்று
வேட்டைநாயிடம்
திரும்பிச் சொன்னேன்

எனதன்புதான் அதிகம் என்று பதில் சொன்ன
வேட்டை நாயின் காலடித் தடங்கள்
கரையிலிருந்து ஒவ்வொன்றாக குளத்திற்குள்
இறங்கிக் கொண்டிருந்தன
மீனுக்கிரையாக

இரவில் இச்சுனை இப்போதின்னும் கூடுதல்
வெப்பமாயிற்றே


6

ஒரு திரியை எப்படியேனும்
பற்ற வைத்து விடு
உனக்குள் எல்லா பிம்பங்களிலும்
விளக்கெரியும்

ஒரு அம்மன் துலங்கினால்
போதும்
அரசின் அத்தனைக் கொளுந்தும்
துரியம் உயரும்

துரியம் உயர
ஒரு நடராஜர்
உனக்குள் எழும்பி நடனமாடட்டும்

கண் காண
காட்சியுண்டாக
அம்பிகை என்ன
வராமலா
போய்விட முடியும் ?

நீ செய்ய வேண்டியது
இதுதான்
மலை மேலேறி
உன்னைக் காண வேண்டும்

காட்சியெல்லாம் நீயென்றானால்
பிம்பமெல்லாம் நீயென்றாவாய்
பின்னே ஏனிந்தப் புலப்பம் ?
தணிந்திரு
வேகம் குறைத்திரு

சும்மாவேயிரு
என்
சிவமே
செல்லமே

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"