இறந்த காலத்தைப் பேசுதல் அல்லது புணர்தல்

இறந்த காலத்தைப் பேசுதல் அல்லது புணர்தல்


நம்மில் பலருடைய பிரச்சனையே சதா நாம் இறந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான்.அப்படியொரு காலம் நாம் கருதுகிற அளவிற்கு சச்ரூபமாகக்  கிடையாது.இறந்த காலத்தை பற்றி பேசுவதில் மிகைக்கு அளவே கிடையாது.அது ஒரு கற்பனை காலவெளி.புனைவு வெளியும் கூட. அதிலிருந்து நிகழ் காலத்திற்குள் பிரவேசிக்கும் தரிசனங்களும் ,கண்ணோட்டங்களும் இருக்குமேயானால் அதுவே படைப்பூக்கம்  நிறைந்தது.நான் காணும் மனிதர்களில் பெரும்பாலோர் கடந்த காலத்தைப் பேசுபவர்கள்.அதனாலேயே புலன்கள் ,அறிவு,உடல் அவர்களிடம் செயலற்றுப் போகிறது. மன அழுத்தம் மித மிஞ்சுகிறது."முன்பு சரியாக இருந்தது இப்போது எல்லாமே கெட்டு விட்டது" ,என்கிற வாக்கியம் இத்தைகைய பலர் உபயோகிக்கும் பொது வாக்கியம்.இப்போது தின்ற இனிப்பு தித்திக்கவில்லையா ? இல்லை அது முன்னர் இருந்தது போல இல்லை.இந்த முன்பு என்பது ஒருவித மயக்கநிலை.கடந்த காலம் பயங்கரம் என்போரும் , கடந்த காலம் சுவர்க்கம் என்போரும் அடிப்படையில் ஒரே நபர்கள்தான் . குரல்கள்தான் வேறுபடுகின்றன.மயக்கத்தைத் தாண்டி செயலில் முன்னேற இயலாத அனைவருமே இத்தகைய தரப்புகளையே எடுக்கிறார்கள்.

இன்று உங்களுக்கு என்னவெல்லாம் நடந்தது ? என்பது ஒரு எளிமையான கேள்விதானே ! பலரால் பதில் சொல்லவே இயலாத கேள்வி இது.உங்களிடமே கூட இந்த கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.இன்று ஒரு சூரியோதயம் இருந்தது,இன்று பல்லிடுக்கில் ஒரு வலி இருந்தது.இன்று மதியம் நல்ல பசி .இப்படியான பதில்கள் உங்களிடம் இருக்குமேயானால் நீங்கள் இறந்த காலத்திடம் இருந்து முழுமையாகத் தப்பித்துக் கொண்டவர் என்று அர்த்தம்.சிலர் கடந்த காலத்தின் வலியை எல்லாக்காலத்திற்கும் சேர்த்திழுத்துக் கொண்டே வருவார்கள்.வலியிராது ஆனால் வலியுணர்வு இருந்து கொண்டே இருக்கும் .இது கடந்த காலத்தில் வாழ்வது.நீங்கள் அழுகிற போது கவனித்துப் பாருங்கள் .நீங்கள் இப்பொழுதில் நின்று அழுகிறீர்களா ? கடந்த காலத்தில் நின்று அழுகிறீர்களா ? என்பது விளங்கும்.பேய்ம்மையை நம்மிடமிருந்து நாமேயகற்ற வேண்டுமாயின் இப்பொழுதிற்கு நமதுடலை சமர்ப்பிக்கக் கற்க வேண்டும்.

நண்பர் ஒருவருக்குத் திருமணமாகி சில மாதங்கள் கழிந்திருந்தது.இருவருமே எல்லாமே உள்ள குடும்பம்.இருவருமே நல்லவர்கள்.ஆனால் கணக்கில் அடங்கா பிரச்சனைகள்.உளவியல் நிபுணர்களை கலந்தாலோசிக்க வேண்டிய அளவிற்கு.எங்கள் பகுதியில் மிகச் சிறந்த ஆற்றுப்படுத்துனர்களிடம் அழைத்துச் சென்றேன்.பல்வேறு விஷயங்களை பேசிப் பேசி கடைசியில் உறவில் வந்து நின்றது அனைத்து பிரச்சனைகளும்.பொதுவாக திருமண மனச்சோர்வு என்று ஒன்று உண்டு.அதற்கு ஆலோசனைகள் ஏதும் தேவைப்படாமலேயே பலர் எதிர் கொண்டு விடுவார்கள்.அப்படி இயலாதவர்களுக்கு வாழ்க்கையில் முதல் முட்டுச் சந்து தென்படும்.அவர்களுக்கு சில எளிய ஆலோசனைகள் தேவைப்படும்.பாலியல் , உறவு பற்றியெல்லாம் மித மிஞ்சிய கற்பனைகள் நம்மிடம் உண்டு.சிலருக்கு உறவு கொள்ளும் போது பனியாறு உருகியோட வேண்டும்.மலர்கள் சுற்றிலும் உதித்து விழுந்து கொண்டேயிருக்க வேண்டும்.அப்படியெல்லாம் உறவின் போது நீங்கள் வணங்குகிற தெய்வங்கள் உட்பட யாருக்குமே நடைபெறுவதில்லை என்பதை சொல்லியுணர்த்துதல்தான் ஆற்றுப்படுத்துனரின் வேலை இவ்விஷயத்தில். நான் இப்பொது இதனை ஒரு வாக்கியத்தில் சொல்லி முடித்து விட்டேன்.சில ஆற்றுப்படுத்துனர்கள் இதனை உணர்த்துவதற்கு தங்கள் இன்னுயிரையே விட வேண்டியிருக்கும்.அவ்வளவு கடினமான பணியிது.

சிலர் எதிர்பாலின் உடல் மணம் இப்படியிருக்கும் கசந்து... என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.உறவில் பல்வேறு நறுமணங்களை எதிர்பார்த்திருப்பார்கள்.முத்திரக் குழியின்  வாசனை இதுதான் என்பதில் அஞ்சி நடுக்கிப் போயிருப்பார்கள்.அவர்களை நிலைக்கு கொண்டு வர வேண்டும் .இவையெல்லாம் வழக்கமான பிரச்சனைகள்.

ஆனால் இவர்களின் பிரச்சனை வேறுவிதமானது.நண்பரின் மனைவி உறவே எங்களுக்குள் இல்லை என்கிறார்.நண்பரோ சராசரியாக மூன்று முறை ,சில நாட்களில் நான்கு என்கிறார்.அப்படித்தானா ?  என்றால் அந்த பெண்ணும் ஒத்துக் கொள்கிறார்.ஆம் உண்மைதான் என்று .இந்த உறவில் அவருக்கு கிளர்ச்சி இல்லையோ என்று சந்தேகத்தில் ஆற்றுப்படுத்துனர்கள்,அந்த பெண்ணிடம் கேட்டால் மூன்று தடவைகளில் இரண்டு முறை அவர் உடல் துவண்டு நேரடியாக துக்கத்திற்கு சென்று விடுவதையும் ஒத்துக் கொள்கிறார்.பிரச்சனை அவர் உடல் தற்காலத்தில் இருப்பதை ஒத்துக்கொள்ள ; அவருடைய மனம் பூரணமாக மறுத்து விடுகிறது என்பதில் அடங்கியிருந்தது.பின்னர் அவர் குணப்படுவதற்கும் மிக நீண்ட நாட்கள் தேவைப்பட்டன.

நமது கருத்தியல் தளங்களில் இருக்கும் பலருக்கும் இதேவகையான நோய்தான்.நீங்கள் எதை வேண்டுமாயினும் சொல்லுங்கள்.அவர்கள் பதிலாக வரலாற்றுப் பார்வையிலிருந்துதான் தொடங்குவார்கள்.இரண்டு தரப்புகள் என்று கருதுகிற இருவருமே  இரண்டு  விதமான வரலாற்றுப் பார்வைகளை முன்வைப்பார்கள்.இவர்களிடம் நீங்கள் பேசவே இயலாது.இவர்கள் இருவேறு தரப்புகள் என தோன்றுவதும் ஒரு வித மயக்கமே.இவர்கள் ஒரே வகையினர்தான்.வரலாற்றின் இடத்தில் அன்றாடத்தில் வைத்துப் பேசுகிறவர்கள் இங்கே மிக மிக சொற்பம்.வரலாற்றுப் பார்வைகளின் கீழ் இயங்குகிற அனைத்து விதமான அதிகார அமைப்புகளும் மிகவும் ஆபத்து நிறைந்தவை.ஏனென்றால் வரலாறு என்பது பெரும் புனைவு .அதனை யார் வேண்டுமாயினும் எப்படி வேண்டுமாயினும் வளைக்க முடியும்.அன்றாடத்திற்கு அந்த வசதி கிடையாது.

நாம் வாழ்க்கை ,அரசியல்,அதிகாரம் அனைத்தையுமே வரலாறு என்கிற தின் பண்டத்தின் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.அது தித்தித்து திரண்டோடுகிறது மாயநதி போல  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"