கேட்பவரே

கேட்பவரே

ஒரு கவிஞனோடு ,எழுத்தாளனோடு அறிமுகம் கிடைத்த மாத்திரத்திலேயே என்ன தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்காதீர்கள் .நீங்கள் புதிதாக அறிமுகம் ஆகிற ஒரு நபரின் பிறந்த சாதியை அறிய எந்த ஊர் ? என கேட்பதைப் போன்ற அநாகரீகம் இது.நான் ஒரு நடிகன் என வைத்துக் கொள்வோம் ,நீங்கள் எடுத்த மாத்திரத்திலேயே என்ன தொழில் செய்கிறீர்கள் என கேட்பீர்களா ? ஓவியன்,இசைக் கலைஞன் ,நடனக் கலைஞன் என்றால் இந்த கேள்வியைக் கேட்பீர்களா ? ஒரு விஞ்ஞானியை இந்த கேள்வியால் எதிர் கொண்டிருக்கிறீர்களா ? எழுதுகிறவனை என்ன தொழில் செய்கிறீர்கள் ? என கேட்கிற சமூகம் ,இனம் கேடு தெளிய இன்னும் வெகுகாலம் ஆகும்.இதில் என்ன விளக்கெண்ணெய் தமிழ் தேசியம் வேண்டிக் கிடக்கிறது ? .கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் தமிழில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறியத் தெரியாத  ஒருவன் , தான் ராஜராஜ சோழனின் தந்தை ,கொள்ளு பேரன் என்றெல்லாம் கூவித் திரிதல் மனகுரங்கின் சிரங்கை சொரிந்து திரிதல் போல.

அறிமுகம் தொடங்கிய மாத்திரத்திலேயே உளவறியத் தொடங்குவது ஆகாத மனநிலை.கொஞ்சம் பழக்கம் கூடிய பின்னர் உளவறியத் தொடங்குதல் அதனினும் ஆகாத மனநிலை.தமிழர்கள் பொதுவாக பெரும்பாலும் துப்பு சுல்தான்கள். நான் படித்த ,பின்பற்றிய ,பழகிய  தமிழின் எந்த முக்கிய எழுத்தாளனின் சொத்து மதிப்பும் எனக்குத் தெரியாது.சமூக மதிப்பும் எனக்கு அவசியப்பட்டதில்லை.பிரான்சிஸ் சாக்கடையில் இருந்து எழுந்து வந்தாலும் முத்தமிடுவேன்.பாலை நிலவன் மதுக்கடையை பொத்துக் கொண்டு வந்தாலும் முத்தமிடுவேன்.

பொதுவாக தரகர்களிடம்தான் தனிமனிதர்களிடம் உளவறியும் தன்மை அதிகம்.இங்கே தமிழ் சமூகம் மொத்தமுமே தரகர் மனநிலையில் இந்த கேள்விகளைக் கேட்டுத் திரிதல் பச்சை ஆபாசம். பெண்தரகர்களுக்கென்று தனித்த மனோபாவம் உண்டு.உங்களுக்குத் பெண்குழந்தை இருக்கிறதா ? என்கிற கேள்விக்கு அவனிடம் பதில் சொல்லி விட்டீர்கள் எனில் உடனேயே திருமணமாகி விட்டதா ? என்று கேட்பான்.அது தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும் கூட.திருமணமாகி விட்டது இரண்டு நாட்கள் ஆகின்றன , என்றால் எத்தனை குழந்தைகள் ? என்பான்.அவனுக்கு கேள்விதான் முக்கியம் பதில் முக்கியமில்லை.இதுபோலத்தான் மொத்த சமூகமும் பலசமயங்களில் உள்ளது.

என்னிடம் ஊர் கேட்பவர்களை உடனேயே புரிந்து கொள்வேன்.பச்சென்று முகத்தில் அடித்தவாறு எனது சாதியைச் சொல்லிவிடுவேன்.இல்லையில்லை,இதற்காகக் கேட்கவில்லை என்று நவுசுவார்கள்.இல்லையில்லை இந்த பதிலை நான் சொல்லவில்லையானால் இன்னும் இதன் தொடர்ச்சியில் நீங்கள் கேட்கும் நான்கைந்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,என் இருப்பிடத்தை வைத்து உங்கள் கேள்விக்கு  விடையறிதலும் கடினம்.உங்களுக்கு திருப்தி ஏற்படாது. எதற்கிந்த பொருள் விரயம் ? அதிலும் என்னுடைய சாதியை பற்றி பலவாறு யூகங்கள் உண்டு.என்னை இன்னார் இன்னார் இன்னார் என்றே  நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அது நல்லதுதான்.இதையெல்லாம் அறிந்து எனக்குப் புதிதாக பெண் பார்க்கவா போகிறீர்கள் ? இல்லை எனக்கேதும் நீங்கள் நினைப்பது போன்ற தொழிலில்லையென்றால் ஏதேனும் நீங்கள் உத்தேசித்து போன்ற  தொழில் தரப் போகிறீர்களா ? எதற்கு உங்களுக்கு இந்த வீண் வேலை ?

ஏராளமான தொழில்கள் செய்திருக்கிறேன்.வேலைகள் பார்த்திருக்கிறேன்.எந்த சந்தர்ப்பத்திலும் இந்த கேள்வி எனக்கு இடையூறான கேள்வியாக இருக்கிறது.சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.அறிமுகம் ஆனவுடன் என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் ?என்று கேட்டால் கூட அதில் நியாயம் இருக்கிறது.துரத்தித் துரத்திக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் தமிழில் இந்த கேட்பவர்கள்.

என்னுடைய " கேட்பவரே " கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையின் தலைப்பு இந்த கேட்பவரே ...

கேட்பவரே
------------------

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
என எப்போதும் என்னை நோக்கிக் கேட்பவரே

ஆடு மேய்கிறேன்
உரியும் வெயிலில்
உங்கள் வீட்டின் புதிய கட்டிடப்பணியில்
கையாளாயிருந்தேன்
சுவர் வலிக்கக் கையுடைத்து
உங்கள் வீட்டு மின்வெளிச்சம்
நான் சரிப்படுத்தியது நான்தான்  
மேலாக

உங்கள் மேல்நாட்டுக் கழிப்பறை
உடைந்து ரத்தம் சிந்திய போது
உங்களுடைய
" ஆண்கள் பெண்கள் குழந்தைகளின் "
மல ஓட்டத்தைக்
கையுறையின் மனபாரம் ஏதுமற்று
கையாண்டு
எனது சுதந்திரத்தைப் பிரகடனப்
படுத்தியவனும்
நானே

பிச்சையும் எடுக்கிறேன்
அதில் பாதியை தானமும் செய்கிறேன்
கொள்ளளவு தெரியாமல் குடிக்கிறேன்
இதை ஒப்ப ஒரு செயலாகத் தான்
கவிதைகளையும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

உங்களால் இயலாததையெல்லாம்
சதா செய்து கொண்டேயிருக்கும் எனை நோக்கி
கேட்டுக் கொண்டேயிராதீர்
கேட்பவரே


Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"