சுஜாதா பேரில் எனக்குப் பகையொன்றும் இல்லை

சுஜாதா பேரில் எனக்குப் பகையொன்றும் இல்லை

அது போலவே கிளியோ பாட்ரா பேரிலும் எனக்கு விரோதம் கிடையாது.ஒவ்வொரு காலத்திலும் எவ்வளவோ பிரபலங்கள் பிறக்கிறார்கள்.ஒரு காலத்தில் இருந்து மறு காலத்திற்குள் நுழைய முடியாத எவ்வளவோ பிரயாசைகள் இருக்கின்றன.அதனால் அவையெல்லாம் தவறென்றும் இல்லை.கோவி மணிசேகரனும் ,சாண்டில்யனும் ,ராஜேஷ் குமாரும் புதுமைப்பித்தனைக் காட்டிலும் ,மௌனியைக் காட்டிலும் ,சுந்தர ராமசாமியைக் காட்டிலும் தலை சிறந்தவர்களாகக் கூட இருக்கலாம்.ஆனால் இரண்டும் வேறு வேறே .அதுதான் முக்கியமானது.அமிதாப்பச்சன் பிரபலம்தான் அதனால் ரே க்கு என்ன வந்தது ? ஒரு காலத்தில் மஞ்சு வாரியார் மலையாளத்தில் பிரபலம் .அதன் பொருட்டு அரவிந்தனுக்கு என்ன ?

பாலகுமாரனின் ஒரு பத்தியின் அளவிற்கு கூட எழுத வக்கற்ற பலர் தமிழின் தீவிர எழுத்தில் கிடந்தது கத்துவது உண்டு.உண்மை.ஆனால் பாலகுமாரன் அடைய நினைக்கும் இடத்திற்கும்  ,இந்த எழுத முடியாதவன் கொண்டு நடக்கும் இடத்திற்கும் வேறுபாடு அதிகம். கனவும் ஒன்று அல்ல. ஒரே தரத்திலானதும் அல்ல.ஒருமுறை தொண்ணுறுகளில் என்று நினைக்கிறேன்.எதோ ஒரு விருதை நிராகரிக்கும் போது ஜெயமோகன் ஒரு விஷயத்தை வெகுஜனப்படுத்தியிருந்தார்.அந்த விருது கோவி மணிசேகரனுக்கும் ஜெயமோகனுக்கும் சேர்த்து கொடுக்கப்படவிருந்த விருது.ஒரே மொழியில் ,ஒரேவிதமான கருவிகளைக் கொண்டுதான் நானும் எழுதுகிறேன்,கோவி மணிசேகரனும் எழுதுகிறார்  என்பதால் நானும் கோவி மணிசேகரனும் ஒன்று அல்ல என்று கூறி ஜெயமோகன் அந்த விருதை  மறுத்தார்.சுஜாதா வெகுஜன எழுத்திற்கு நல்ல குறியீடு.அதில் பிழையில்லை.அதற்கு எதிரான மனோவிஞ்ஞானத்தையும் ,பயணத்தையும் உள்ளடக்கியது தீவிர எழுத்து.அடைப்படை மனோபாவங்களிலேயே இரண்டும் வேறுபடக் கூடியது.இதன் ஆசையும் அதன் ஆசையும் ஒன்றல்ல.இதன் கதியும் ஒன்றல்ல.

வெகுஜன எழுத்தாளர்களின் பலரது உரைநடைகளில் பிழைகள் குறைவு.மௌனிக்கு உரைநடை வராது.சரிப்படுத்த ஒரு இலக்கியம் தெரிந்தவரின் உதவியும் தேவைப்படுவது அந்த எழுத்து.தீவிர எழுத்தாளர்களின் பலருக்கு வாக்கிய அமைப்புகளை உருவாக்குவதில் ஏராளமான சிக்கல்கள்  .சந்திப் பிழைகளையும் ,எழுத்துப் பிழைகளையும் சரியாக பிரயோகிக்கத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்கள் கூட குறைவுதான்.ஒருமை பன்மை பிழைகளை வாழ்நாளில் வென்றெடுக்கத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்கள் கூட குறைவுதான்.பிழை திருத்துனர்களுக்கே கற்றுத் தருமளவிற்கு வித்தை தெரிந்தவர்கள் வெகுஜன எழுத்தாளர்கள்.வித்தகர்கள் எனலாம்.வெகுஜன எழுத்தாளர்களிடம் இருந்து கற்க ஒரு தீவிர எழுத்தாளனுக்கு எப்போதுமே பல விஷயங்கள் இருக்கும்.இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் ஒரு தீவிர எழுத்தாளனிடமிருந்து கற்க ஒரு வெகுஜன எழுத்தாளனுக்கு எப்போதுமே எதுவுமே இராது.இதுவும் முக்கியமானதொரு வேறுபாடே  .ஆனால் இவன் என்ன சொல்கிறான் என்பது குறித்த அங்கீகார பயம் மட்டுமே இருந்து கொண்டிருக்கும்.என்னைப் பற்றி ராகுல்காந்தி என்ன நினைக்கிறார் என்பது பற்றி எனக்கு ஒருபொருட்டும் கிடையாது.ஆனால் தன்னைப் பற்றி அருந்ததி ராய் என்ன நினைக்கிறார் என்பது ராகுல் காந்திக்கு மட்டுமல்ல.ஷோபா டேக்கும் பொருட்டாக இருக்கலாம்.

வைக்கம் முகம்மது பஷீரும் ,சுஜாதாவும் உண்ட உணவு கூட எதோ ஒரு வகையில் இந்திய தென்னிந்திய வகைபட்டதுதான் என்று முடிவு செய்யப்பட இயலலாம்.ஆனால் இருவரையும் ஒன்றென ஒருபோதும் முடிவு செய்ய இயலாது.ஒன்று ஏற்கனவே இருந்த அகம் உடைந்ததிலிருந்து கட்டியெழும்பியது .அது பெயரிடப்படாத கூட்டான் சோறேயாயினும் கூட .மற்றொன்று ஏற்கனவே இருந்த அகத்திலிருந்து எழுகிற பழஞ்சோறு.

நா.பார்த்தசாரதியின் கால்களின் பளபளப்பின் நளினம் கண்டு வியந்த ஒரு பெண் எழுத்தாளரை பற்றி சுந்தர ராமசாமி ஒருமுறை பேசும் போது அவர் சொல்லியவிதத்திலிருந்து அந்த கால்கள் எப்படியிருந்திருக்கும் என்ற யூகத்தை  சில நிமிடங்கள் வர்ணித்துக் கொண்டிருந்தார்.நா  .பா அவருடைய நண்பரும் கூடத்தான்.ஆனால் நா.பாவின் கால்களுக்கும் நாகராஜனின் கால்களுக்கும் இடைப்பட்ட வேறுபாட்டை துல்லியமாக அறியும் அவர் கண்கள். படைப்பின் கால்கள் அறியாத பாதையைத் துலக்குவதை அறிதலாகக் கொண்டவை என்பதை நா.பா வின் பொற்பாதம் அறியுமா ?

சுஜாதாவைச் சென்று  சேர உருவானதல்ல இந்த  அடியாற்றின் இழுவிசையும்  நவீன இலக்கிய இயக்கமும் .
கால்பாதம் ஒன்றுதான் பாதைகள் வேறு

சமுத்திரம் எவ்வளவு அழகான பெயர் ?
.இந்த பெயரை வைத்துக் கொண்டு ஏன் இவ்வளவு மோசமாக எழுதுகிறீர்கள் என்று சு.சமுத்திரத்தை நோக்கி க.நா.சு ஒருமுறை கேட்டதும் ,சுஜாதா இப்போது நவீன இலக்கியத்தின் பால் கொண்டாடப்படுவதற்கான என்னுடைய விசனமும் பொருளில் ஒன்றுதானே தவிர வேறுபட்டவை அல்ல.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"