கொலைகளில்,தற்கொலைகளில் உற்சாகம் அடையாதிருங்கள்

கொலைகளில்,தற்கொலைகளில் உற்சாகம் அடையாதிருங்கள்

கொலைகள் ,விபத்துகள் ,தற்கொலைகள் ஆகியவற்றின் போது உற்சாகம் அடைவதைப் போன்றதொரு தீமை வேறில்லை.கையில் வைத்திருக்கிற அரசியலை நிரூபிக்க கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்பது போல நடந்து கொள்வது அபத்தம் .மனித உயிர் பெயரில் மதிப்பற்ற செயல் இது .இங்கே கொலைகள் நடைபெறும் போது தங்கள் அரசியல் திராணியை நிரூபிப்பதற்கான கடைசி வாய்ப்பு இதுவென ; கொலையை அரசியல் ஆகாரமாகப் பார்ப்பவர்கள் மிகவும் சிக்கலானவர்.இந்த நாடு கொலைகார நாடு ,கற்பழிப்பு நாடு என்றெல்லாம் வேகமெடுப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.பல சமயங்களில் இவர்களே பிரச்சனையின் கொதிநிலையை வாட வைத்து நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.ஒரு பிரச்சனை ஏற்படும் போது மொத்த அதிருப்தியையும் கொண்டு எல்லாருடைய தலையிலும் கொண்டு கொட்டுவதற்கு தயாராக இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.ஒதுங்கி கொள்ளுதல் மேலானது.சகல பிரச்சனைகளிலும் அதிருப்தியின் அத்தனை சாறையும் கொண்டு இறக்குகிற அரசியல் குரல்களுக்கு கண்ணில் புலப்பட மறுக்கும் வேறுபல முகங்கள் உண்டு.

பிரச்சனைகள் தனித்து கையாளப்பட வேண்டுமே அல்லாமல் அதற்கு தொடர்பற்ற அரசியல்  பிரயாசைகளுடன் இணைக்கப்படுவது பிரச்சனைகளின் உண்மைப்பண்பிற்கு இழைக்கப்படுகிற துரோகமாக அமையும் .

ஒரு சமயம் இடிந்தகரை போராட்டம் நடந்து கொண்டிருந்த போது,பிரான்சிஸ் சகாயம் படுகாயமுற்று அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.கடல் முற்றுகை போராட்டத்தின் போது என்று நினைக்கிறேன் ,கடற்படையின் அத்துமீறிய மிரட்டல் ,தாழ்ந்து பறந்த விமானத்தின் பேரிரைச்சலில் பிரான்சிஸின் மூளை நரம்புகள் வெடித்து சிதறி விட்டன.நாகர்கோயிலில் முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்."தகவல் எதுவுமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்,இங்கே ஆட்களும் யாரும் இல்லை ,உடனடியாக வாருங்கள்" என்று வழக்கறிஞர் நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.நான் மருத்துவமனைக்குச் செல்லும் போது சகாயத்தின் சில உறவினர்களை தவிர்த்து வேறு யாரும் இல்லை.மேலும் சில வழக்கறிஞர் நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.எனக்கு அப்போது வலிப்பு ஏற்பட்டு  ஒரு சில நாட்கள் கடந்திருந்தன.இப்படி உடல்நலிவுறும் காலங்களில் கடவுள் அழைத்தாலும் கூட எனக்கு உடன் செல்லும் பழக்கம் கிடையாது.மருத்துவமனையில்  பிரான்சிஸ் சகாயம் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று அவருக்கு என்ன நடந்திருக்கிறது ,நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் ? எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன்.பொதுவாக நான் இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரிய உரிமைக் குரலிலோ ,அரசியல் குரலிலோ சென்று விசாரிப்பதில்லை.அதனால் ஒருபலனும் கிடையாது  மட்டுமல்ல,அது அத்தகைய சந்தர்ப்பங்களில் இடையூறும் கூட.சாதுர்யமாக காரியத்தை நகர்த்தும் விவேகம் இது போன்ற சந்தர்பங்களுக்கு அவசியம்.சிறிய தகவலைக் கூட அவர்களிடம் இருந்து பெற இயலவில்லை.அன்றைய நாள் இரவில் அந்த மருத்துவமனைக்கு வெளியே ஆறு நண்பர்கள் படுத்திருந்தோம்.அதில் நான்குபேர் வழக்கறிஞர்கள்.இன்னும் இருவர் உண்டு அவர்கள் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள்.

பின்னர் மறுநாள் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு பிணவறையில் மூன்று நாட்கள் காவலிருக்க வேண்டியதாயிற்று.நமது அரசு அமைப்பும் ,அதிகாரமும் எவ்வளவிற்கு குரூரமாக உருமாறியிருக்கின்றன என்பதனை எனக்கு கண்ணால் காட்டித் தந்த நாட்கள் அவை.பிரேத  பரிசோதனையை உரிய முறையில் செய்யும்படி அரசாங்கத்தை வலியுறுத்த மருத்துவமனையில்  நான்கு முறைகளுக்கு மேல் போராட வேண்டியிருந்தது .கலகம் செய்ய வேண்டியிருந்தது.அதனை மிகவும் நிதானமாகவும் விபரத்தோடும் கையாண்டவர்களில் ஒருவர் வழக்கறிஞர் நண்பர் ஜெரால்டு .அரசு மருத்துவமனைக்கு அவர் உடல் மாற்றப்பட்டதிலிருந்து அரசியல்வாதிகளும் நூற்றுக்கும் அதிகம் வந்து சேர்ந்தார்கள்.

மருத்துவமனை டீன் ஒரு பேச்சுவார்த்தையின் போது "நீங்கள் தான் அந்த போராளிகளா ? உங்களை பார்ப்பதில் சந்தோசம் , என்று இளகாரமாகவும், நமட்டுச் சிரிப்புடனும் எங்களுடன் பேசத் தொடங்கினார்."ஐயா நான் இப்படி இளக்காரம் பேசுவதில் பெரிய மன்னன்,இது போன்று நானும் பதில் பேசத் தொடங்கினால் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு கூட வலிப்பு ஏற்படுமளவு சிரிப்பு வந்துவிடும்.காலத்தை கருத்திற்கொண்டு காரியத்தை மட்டுமே நாம் இருவரின் தரப்பும் பேசுவதே நல்லது.அதற்காகத் தான் நம்முடைய தரப்புகள் இங்கே கூடியிருக்கிறார்கள்  என்று கருதுகிறேன்" என்று பதில் சொன்னேன்.நரம்பியல் நிபுணர் விடுப்பில் இருப்பதால் மேலுமொரு நாள் தாமதமாகும் என்றார் அவர்.

இறுதிநாளில் ஊருக்குத் திரும்ப வேண்டும் பிரான்சிஸின் இறுதி யாத்திரைச் சடங்குகளுக்காக .நாங்கள் சொல்லும் பாதையில் செல்ல முடியாது என மறுத்தது அரசாங்கத்தின் தரப்பு.பேசிப் பேசி பொதுவான ஒரு முடிவை எட்டினோம்.

வெளியில் நின்று கொண்டிருந்த கருப்பு கால்ச்சட்டை  அங்கி அணிந்த அரசியல்வாதி   ஒருவர் " தோழர் இந்த பிணம்தான் நமக்கு ,அரசியல் நடத்தவும் ,போராடவும் கிடைத்த அரிய வாய்ப்பு .நாம் நினைக்கும் பாதையில்தான் கொண்டு செல்லவேண்டும் ,சமரசத்திற்கு உடன்படாதீர்கள்  " என்றார் பாருங்கள் .இதனை அவர் ரகசியமாகவோ,நாசுக்காகவோ கூட சொல்லவில்லை. எனக்கு ஒரு எருமையின் பிணம் எழும்பி வந்து சென்னியில் அடித்தது போன்று வலித்தது.இறந்த பிரான்சிஸின் உறவினர்கள் சிலர் உடன் நிற்கிறார்கள்.இந்த குரல் அரசாங்கத்தின் குரலைக் காட்டிலும் எனக்கு அச்சுறுத்தும் குரலாக செவியில் துளைத்தது.அரசாங்கம் குரூரமாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது அதில் சந்தேகமில்லை.தன்னை நிரூபிக்கும் அத்தனை வழிமுறைகளையும் முறைகேடாக உருவாக்க முடியும் என்று சமீப காலங்களின் அரசு அமைப்பிற்கு நம்பிக்கை ஏற்பட்டிருப்பதும் பட்ட வர்தனமாகத் தெரிகிறது.புலப்படுகிறது.என்றாலும்  அதனை காட்டிலும் அச்சம் தர கூடியதிந்த இறந்த எருமைமாட்டின் அரசியற்குரல்  

பல சந்தர்ப்பங்களில் கள நிலவரமும் ,வழக்கின் தன்மையும் பொது அபிப்பிராயமும் ஒன்றுபோலிருப்பதில்லை.

தலித்துகள் மீதான நெருக்குதல்கள் ,தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் எல்லோரும் இணைந்து அதனை எதிர்ப்பதும் ,அதனைக் களைய அடிப்படையில் இருந்தே தேவையான முயற்சிகள் அத்தனையும் எடுக்க வேண்டியதும்  மட்டுமே தார்மீகம்.தர்மம்.இதனை மிஞ்சும் தர்மம் ஏதும் கிடையாது.பழைய தர்மங்கள் எதனை வேண்டுமாயினும் இதன் பொருட்டு மீறலாம்.இதன் பொருட்டு மீறப்படும் அத்தனையும் இணைந்து தர்மமாகும்.

ஆனால் பிரச்சனைகள் ஏற்படும் போது இந்தியா சீரழிந்து விட்டது கொலைகார நாடாகிவிட்டது ,கற்பழிப்பு தேசமாகி விட்டது என்று கணக்கு வைத்து அலறுகிற குரலிடம் எச்சரிக்கையாயிருங்கள்.சகல பிரச்சனைகளையும் நீர்த்துப் போகச் செய்கிற தீமையின் குரல் அது.ஏனெனின் பிரச்சனைகளில் தொடர்பு பெறாத வேறு வகை அரசியலை இக்குரல்கள் உட்புகுத்துவதன் மூலமாக பிரச்சனைகளின் சுய ரூபம் சிதைந்து காணாமல் போய்விடுகிறது.

தேவை பிரச்சனைகளுக்கான தீர்வே அன்றி எல்லோருக்குமான தற்கொலைகள் அல்ல.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"