அ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.

அ .தி .மு.க என்னும் பேரியக்கம் உடைவது நல்லதல்ல.

அப்படி உடைந்தால் அது தி.மு.கவிற்கும் கூட நல்லதல்ல.இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதிக வயசும் ,அலுப்பும் ஆகிவிட்டது என்பது உண்மைதான்.இவை இரண்டுமே நல்ல கட்சிகள் என்கிற எண்ணமும் எனக்கு இல்லை.ஆனால் நமது ஏற்பட்ட அல்லது ஏற்பாட்டுக்கு கொண்டிருக்கும் சமூக உளவியலின் அடிப்படையிலேயே இவை உள்ளன.சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்  ?  ஒப்பீட்டளவில் வேறு வாய்ப்புகள் நமக்கு இல்லை என்பதே நிதர்சனம்.தவிர உள்ள கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகளை தவிர்த்து பொருட்படுத்தத் தகுந்த கட்சிகளும் இல்லை.திருமாவளவன் நல்லதொரு தலைமைக்கு ஏற்றவர்தான் ஆனால் அவர் இன்று அனைத்து தரப்பினராலும் ஏற்கப்படக்கூடிய தலைவர் இல்லை.அவர் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து ஒரு அணியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் தற்போது இல்லை.இடதுசாரிகள் அதற்கு இணங்கவோ , முயலவோ மாட்டார்கள்.காரணம் எளிமையானதுதான்.இடதுசாரிகள் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தில் எடுபிடிகளாக இருந்தே பழகி விட்டார்கள்.புதிய பழக்கங்களுக்கு அவர்கள் வந்து சேர இன்னும் ஐம்பதாண்டு காலங்கள் ஆகும் .அதற்குள் நமது பிள்ளைகள் பேரன்பேத்தி கண்டு விடுவார்கள்.மற்றபடி தி.மு.கவில் எனில் ஸ்டாலின் இருக்கிறார்.அதற்கு வெளியே யோசித்துப் பார்த்தால் தலைமைகளே இல்லை என்பது விளங்கும்.இருப்பது போல தோன்றுபவை வெறும் மாயைகளே .அ .தி.மு.க ; தி.மு.க என்கிற இந்த இரண்டு கட்சிகளையும் விமர்சிக்கும் போதும் சரி ,இவற்றின் குறைகளை பேசும் போதும் சரி ; இவற்றைக் காட்டிலும் மோசமான சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடாது என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.இந்த இரண்டு இயக்கங்கள் பேரிலும் ,இதன் தலைமைகள் பேரிலும் எப்போதும் எனக்கிருப்பது ஒவ்வாமைதான் .ஆனால் மேற்சொன்ன நினைவு எனக்குண்டு.அகில இந்தியக் கட்சிகளின் தமிழ்நாட்டு பிரதிநிதிகள் இவர்களைக் காட்டிலும் பல மடங்கு கேவலமானவர்கள் என்பது மட்டுமல்ல.தங்களிடம் அதிகாரம் ஏதுமற்றவர்கள் அவர்கள்.

சிறிய தேசிய இன வரலாறு கொண்ட மாநிலங்களுக்கு தேசியக் கட்சிகளின் தொந்தி உதவும்.கேரளா ,கர்னாடகா போல.அவை எப்போதும் தேசியக் கட்சிகளைத்தான் நம்பவும் செய்யும் .தமிழ்நாட்டின் அல்லது ஆந்திரா போன்ற மாநிலங்களின் கதிநிலை அவ்வாறானதல்ல  .தேசியக் கட்சிகளின் தொந்திகளையும் மீறிய அரசியல் தேவைகளைக் கொண்டவை இத்தகைய மாநிலங்கள்.பல குணங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதற்குமே சமூக உளவியல் ரீதியிலான காரணங்கள் உண்டு.பெரிய தேசிய இனங்களில் எளிமை செல்லுபடியாகாது.சிறிய தேசிய இனங்களிடம் எளிமை மட்டுமே செல்லுபடியாகும்.அதனால்தான் நமக்கு எம்.ஜி.ஆர் போன்ற பெரிய ஆடம்பரம் வாய்த்தது.ஆந்திராவில் இதற்கு இணையான என்.டி.ஆர். என்னும் ஆடம்பரம்.கேரளாவில் தமிழ்நாட்டு நிலவரங்களை ஒருபோதும் அரசியல் தலைவர்களிலிருந்து சாதாரண குடியானவர்கள் வரையில் விளங்கி கொள்ள இயலாமைக்கு இது பிரதான காரணம் .அவர்களுக்கு இவையெல்லாம் மேஜிக் போல இருக்கிறது.ஆனால் நமது சமூக முன்னேற்றம் மற்றும் நாம் அடைந்துள்ள ஜனநாயகத்தன்மை ஆகியவற்றை அடைய அவர்களுக்கு இன்னும் நெடுங்காலம் ஆகும். அவர்களின் சமூக நீதியுணர்வு நம்மைவிடவும் பலமடங்கு பின்தங்கியிருப்பது.

நாம் அரசியலில் கீழிறங்கிப் போய்விட்டது  போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.உண்மையில் அது வெறும் தோற்றம் மட்டுமே ஆகும்.நலவாழ்வு அரசின் பணி எம்.ஜி.ஆர் காலத்திலேயே முக்கால் பாகம் நிறைவடைந்து விட்டது.நலவாழ்வு அரசின் நமது கடைசி பிரதிநிதி எம்.ஜி.ஆர் தான்.அடுத்து உடனடியாகவே அரசியலும் தொழில் துறையாக மாற்றமடைந்த இடத்திற்குள் நகர்ந்தோம்.இவையெல்லாமே பாதைகள் .வண்டியோட்டுனர்களிடம் மற்றும் குற்றம் காண்பதற்கில்லை .இந்த பாதை  அல்லது நாம் முன்னகர   நினைக்கிற  பாதை இவ்வாறுதான் நம்மை வழிநடத்திச் செல்லும் .இவை நாம் அமைத்துக் கொண்ட ஏற்பாடுகள்தான்.இப்போது தொழித்துறை அரசியல் அலுப்புண்டாக்கியிருக்கும் இடத்தில் வந்து நிற்கிறோம்.இனி அரசியலையும் ஒரு தொழில்துறையாகக் கருதுகிற அனைத்து கட்சிகளும் சுயபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.மக்கள் அடுத்த கட்டத்திற்குள் செல்லும் மனோபாவத்திற்குள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.இது ஒரு சமூகத்தின்  இயக்கம் .சமூகம் எடுத்து வைக்கிற அடுத்தபடியான அடி.அரசியல் தன்மையில்  மாற்றம் ஏற்பட வேண்டிய காலகட்டம் இது.இரண்டு நீண்ட காலகட்டங்களைத் தாண்டி அடுத்த காலகட்டத்தின் வாயிலில் நிற்கிறோம்.அதனாலேயே நாம் கடந்து வந்த பாதைகள் அத்தனையும் தவறென்று ஆகாது.அந்த பாதைகள் வழியாகத் தான் இந்த இடத்தில் இப்போது வந்து நிற்கிறோம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதிலிருந்தே ஏராளமான சூதாட்ட காய்கள் நகரத் தொடங்கி விட்டன.குறுக்குவழிகளில் அதிகாரத்தை அடைய விரும்புகிற எண்ணற்ற சதுரங்கக் காய்கள். இவை தவிர்க்க இயலாதவை.ஆனால் இதுவரையில் அ.தி.மு.க உடையக் கூடாது என்கிற எண்ணத்தில் சசிகலா வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கருதுகிறேன்.இது பெரிய சாதுர்யம்தாம்.நாம் இன்னும் அ.தி.மு.க என்னும் உருவத்தைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.அதற்கு அவர் ஒருவரே காரணம்.அவர் தனது சாதுர்யத்தை இழந்திருப்பாரே ஆனால் இப்போதுவரையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிற அ.தி.மு.கவின் உருவம் எப்போதோ சிதைந்திருக்கும்.அ.தி.மு.க வும் அரசியலைத் தொழில் துறையாக்கிய கட்சிதான்.அதில் உள்ளவர்களின் விருப்பங்களும் ஆசைகளும் அதற்கு அப்பாற்பட்டவை  அல்ல.இந்த நிலையில் கட்சியின் நிலைத்த தன்மை சசிகலாவையே சார்ந்திருந்தது.அவர் மட்டுமே அக்கட்சி உடைவதற்கு எதிரான மனநிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அதுவே தற்போது முக்கியமான விஷயம்.எண்ணற்ற நரித் தந்திரங்களைக் கடந்து அவர் இன்னும் கட்சியின் நிலையை காப்பதில் உறுதியுடன் இருக்கிறார்.எல்லாமே கைவிட்டுப் போனாலும் கூட அவர் இந்த நிலையில் உறுதியுடன் இருப்பார் என்றுதான் கருதுகிறேன்.மற்றபடி அவர் மீது  இப்போது தாமதமாக வைக்கப்படுகிற புகார்கள் அனைத்துமே ஆரம்பம் முதலாகவே அவரை தந்திரத்துடன் பின்தொடர்பவைதான்.அவற்றை நீர்க்க செய்வதில் இவ்விஷயத்தில் அவர் கடுமையாகப் போராடியிருக்கிறார்.அவற்றுக்கான அர்த்தங்கள் கட்சியைக் காப்பது என்கிற ஒற்றைக் குறிக்கோளை மட்டுமே கொண்டிருக்கின்றது . இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர்த்தும் போராடுவார் என்றுதான் நினைக்கிறேன்.ஏற்கனவே இவ்விஷயத்தில் அவர் கடந்த நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது இது சிறியது.அவர் உயிருக்கு வந்த நெருக்கடிகளையெல்லாம் எப்போதோ இவ்விஷயத்தில் தாண்டிவிட்டார்.இப்போதைய நெருக்கடியும் அவர் எதிர்பாராத ஒன்றாக இராது.இதே வகையில் எதிர்பாராமல் இருந்திருப்பாரேயானாலும் கூட வேறு வகையில் எதிர்பார்த்திருப்பார்.இத்தனையும் தாண்டினால் அவர் நிச்சயமாக அ.தி.மு.கவின் தலைமைக்கு முழுதகுதியும் படைத்தவராவார்.
 

இதில் ஒருவேளை அவர் தோல்வியுற்று  தந்திரங்கள் வெல்லுமாயின் கூட மக்கள் செல்வாக்குடன் மீண்டும்  அசுர பலத்துடன் வருவார் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை.அ.தி.மு.க என்னும் இயக்கம் அவ்வளவு எளிதில் இந்த தந்திரங்களால் அழியும் என்று நான் நம்பவில்லை.அதன் பின்னால்   கண்ணுக்குப் புலப்படாத பற்றுறுதி  உண்டு.  அ.தி.மு.க உடையக் கூடாது என்கிற எண்ணம் இப்போது சசிகலா  ஒருவரிடம் மட்டும்தான் தெளிவாகவும் தீவிரமாகவும் செயல்படுகிறது.தற்போது புகைமூட்டங்களும் குழப்பங்களும் இருந்தாலும் கூட கட்சியின்  பற்றுறுதிக்கு அதன் மனோபாவத்திற்கு இப்போது யார் துணை நிற்கிறார்கள்,எதிரில் இருக்கிறார்கள் என்பது விளங்காமல் இராது. மற்றவையெல்லாம்  இந்த நோக்கத்திற்குப் பிற்பாடுதான் .

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்