"எனது பூர்வீகம் இங்கில்லை" சமீபத்திய கவிதைகள்

"எனது பூர்வீகம் இங்கில்லை" சமீபத்திய கவிதைகள்

1

பத்து முகங்களில் ஒன்றை பதுங்கு குழிக்குள்
ஒளித்து வைத்தேன்.
வெண்ணை திருடிய முகத்தை அது வேவு பார்த்தது

பையில் வைத்திருந்த முகம்
கையில் வைத்திருந்த முகம் இரண்டும்
நான் சொல்லிக் கொண்டு திரிந்த என் முகம் பார்த்து சிரித்தது

பழிவாங்கலில் சிரிக்கும் முகம் அதற்கு
காரணங்கள் பேசிய முகத்துக்கு களபம் பூச
சந்தனத்தைத் தோலுரித்துக் கொண்டு வெளியேறியது பூதமுகம்

கண்ணாடி போட்டுக் கொண்டு காட்சி தருகிற
என் முகத்துக்குத் தெரியும்
கண்களே இல்லாதது பத்தாவது முகம் என்று

ஆகமொத்தம்
பத்து முகம்
பத்து முகம் மறைக்க இப்போது பதினொன்றாவது
ஒரு முகமூடி
என் சட்டை பொக்கட்டில் இருக்கிறது

சரட்டுத் திரி காட்டாமல்
போ.. போயிருந்தது
விளக்கெண்ணெய் பூசிக்கொள்
பொலிவானாலும் ஆகலாம்
உந்தன் திருமுகங்கள்.

2

நான்கு வழிச் சாலையில்
எனது மோட்டார் சைக்கிளில் கைநடுங்குவது
எனது தவறில்லை அய்யாவே

அந்த சாலையில் கீறி உள்ளே உள்ளே பாருங்கள் திறந்து ,
அங்கேயிருக்கிறது நான் செல்ல வேண்டிய சொகுசுப் பாதை ,
சுற்றிலும் செந்தெங்கிளநீர் கண்டீரோ
பூவரசில் பீப்பீயொலி கேட்டீரோ
கள்பதநீர் சுவைத்தீரோ

திருயோனித் தடம் தெரிகிறதா ?
உண்மைதான் மலர்வளைப் பாதை யோனி கொண்டு
கட்டப்பட்டவன் நான் .

இளநொங்கின் கரங்களில்
நீவிர் கண்ட கைநடுக்கம் என்னுடையதில்லை அய்யாவே
ஆங்கே பாரும்
இருமாட்டு வண்டியில் அடித்தோட்டி வேகம் கடந்து செல்கிறானே
அந்த ராஜகுமாரன்
அவனுடையதுதான்

அவனைச் சென்று கைது செய்யுங்கள்

3

இருக்கும் போதே இறந்தவன்
இறந்து போனான்
உதிர்ந்த மாலைகள் கொண்டு அவனுடைய தேர் அலங்கரிக்கப்படுகிறது.

புதிய புதிய மாலைகள்தாம் ஏனிப்படி
உடனுக்குடன் உதிர்கின்றன ?
விழாக்களுக்கு அவன் வந்து செல்லும் போது
பொது மண்டபங்கள் அவனைப் புகைப்படம் எடுப்பதில்லை

ஒருமுறை வாயிற்காவலன் ஏற்கனவே இறந்து போனவர்தானே?
எனக் கேட்டே விட்டான்.
சுய செல்பியை நிராகரித்த தெரு நிர்வாகிகள்
நீங்கள் வாழுங்காலத்தில் சுய செல்பி
கிடையாது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்
என்று அறிவுரை சொன்னார்கள்.

பந்தி பரிமாறியவன்
இவன் இலையை கடந்து சென்றதை
இவனும் ஏனென்று கேட்கவில்லை
அவனும் ஏனென்று சொல்லவில்லை

இவன் ஏன் இங்கு வந்து நிற்கிறான் ?
யாராவது விளக்குங்களேன் என்று கும்பிடப் போன சாமி
கேள்வி கேட்டதை விளங்காத இவன்
இறந்து கிடக்கிறான்.

எல்லாம் நடைபெறுகின்றன
ஆனால் எதுவோ நடைபெறவில்லை

இறந்தவனின் ஊர்வலம்போல இந்த ஊர்வலம் செல்லவில்லை.

எனக்கோ அவன் இன்னும் இருக்கிறானோ ?
என்னும் சந்தேகம்
வீதி வலம் வந்து கொள்ளிக்குடமுடைத்து
என்னென்னமோ என்னய்யோ சப்தமிட்டு
எரியூட்டித் திரும்பிய பின்னும்
முதலில் இருந்தே மீண்டும் வாசித்துப் பார்
என்கிறது

4

எனது பூர்வீகம் இங்கில்லை
கொன்று விடுவீர்களோ
ஒதுக்கி வைப்பீர்களோ
சேர்த்துக் கொள்ளமாட்டீர்களோ ?

வந்த இடம்தானிங்கே
செல்லுமிடம் வேறே

நாடில்லை வீடில்லை
தாய் மொழியில்லை
தந்தை வழியில்லை

பிணக்கும் இல்லை நட்பும் இல்லை
நான் சாமியும் இல்லை சைத்தானும் இல்லை

நிறமில்லை ஆனால் என் வாலில் வானவில் தோன்றும்
சில நேரம்

நிலம் எனதில்லை ஆகாயம் என்னுடையது
நீர் எனதில்லை மழை என்னுடையது

எந்த சுடுகாடும் என்னுடையதில்லை
ஆனால்
எல்லா சுடுகாடும் என்னுடையவை

சுடுகாடு என்னைப் பற்றிய எந்த அடையாளத்தையும் உங்களிடம்
கோராது

எந்த சுடுகாட்டிலும் எரியூட்டலாம்
முதலில்
கொல்ல வேண்டும் என்னை

அது இயலாது என்றெல்லாம் சொல்லமாட்டேன்
என்னிலும் பெரியோன் நீங்கள்
உங்களிலும் மேலோன் நான்

இனம் தெரியாத ஒருவனுக்கு
அருந்தத் தருகிற அமுதில்
திரும்பி பார்க்கவே இயலாத வழிப்போக்கனுக்கு
விட்டுக் கடக்கிற புன்னகையில்
தப்பிச் செல்ல முயலும் கொலையாளிக்கு
காட்டுகிற திக்கில்
ஒளிந்து
மினுமினுங்கி கிடப்பேன்
அதனால்தான்

நான் யாரென்று அவசியம் தெரிந்தாக வேண்டுமா ?
வழிநடையில் கிடக்கும் ஒருவனுக்கு பீடியை எடுத்துக் பற்ற வைத்துக்
கொடுத்துப் பார்

[ வைகுண்ட சாமிக்கு ]

5

இன்று பார்த்த மலை
இதன்முன்னம் பார்த்த மலை அன்று

இதன் முன்னம் பார்த்ததெல்லாம் இதன் முன்னம்
பார்த்தவை

பிரசவத்தின் பின்பான அடிவயிறு கோடுகளாக எழுந்து
சுனைநீரில் முடிகிறது ஒரு பக்கம்

புகைக்கம்பங்களின் உள்ளே தங்கக் கோடுகள்
நிறைந்த பின்மதியம்

தொடர்ச்சியின் பின்பக்கம் நிழல் காட்டும்
நீலம்

இவ்வளவு தெளிவாக அகத்திற்குள் இறங்குகிறது
மலையின் சுடு சாறு

ஏரியும் மலையும் நேருக்கு நேராக ஒருவரையொருவர்
நோக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்

எந்தக் கவலையும் புரண்டு வந்து
இந்தக் காட்சியை தின்னத் தகாது என்று

6

கிளைச்சாலையில் ஒதுங்கிய கிராமத்தில் வசிக்கும்
விளையாட்டு வீரன் நான்

கோலிக்குண்டுகளை எடுத்துக் கொண்டு
நாளையும் இன்று போலவே விளையாடச் செல்லவே யோசித்திருக்கிறேன்.

எனது முதுகில் நீயிட்ட லத்தியின் கோடுகள்
தீப்பட்டத் தடங்கள்
விளையாடுமிடங்களில் கரி மூட்டம்

என்னிடம் துப்பாக்கியில்லை,லத்தியில்லை
என்னிடம் ராணுவம் இல்லை போலீஸ் இல்லை
சக சில விளையாட்டு வீரர்களைத் தவிர எனக்கு வேறு எவரையும் தெரியாது

விளையாடும்போது உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் கிருஷ்ண பருந்து
முதுகில் என்ன காயம் என்று கேட்கும்
உன்பெயரை அவற்றுக்குச் சொல்லட்டுமா ?

கரிந்தது எப்படியென என் கடல் விசாரிக்கும்
பூவரசு இப்போதே கேட்டுக் கொண்டிருக்கிறது
தென்னைகளிடம் சோகப்படாதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன்

குழந்தைப் பையன் கண்ணோரம் கொண்ட காயத்துடன்
ஓடி வந்து கொண்டிருக்கிறான்
வலி பொருட்டில்லை இன்னும் சிறிது நேரத்தில்
அவனும் சேர்வான்
விளையாட்டைத் தொடர்வோம்

நீ யார் என்பது எனக்குத் தெரியும்
மிக நன்றாகத் தெரியும்
இன்று நேற்றல்ல பலகாலமாக
எனினும் பரவாயில்லை
விளையாட வருகிறாயா ?

நம்பி நீயும் வந்து இணையலாம் எங்கள் விளையாட்டில்
நிச்சயமாக நம்பு உன்னிடமிருப்பது போல
போலீஸ் இல்லை,ராணுவம் இல்லை.

உன்னிடமிருக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு வந்தேனும்
விளையாடிப்பார்.
விளையாட்டில் வீரன் எப்போதும் நான் தான்
நீ என்ன வேண்டுமானாலும் செய்து பார்
விளையாட்டில்
நானே ராஜா மகாராஜா

7

உன்னுடைய மூன்று சட்டைகளோடு
இதுவரையில் நான் பேசியிருக்கிறேன்

நேற்று நீயணிந்திருந்தது துள்ளல் லினன்
நேற்று அது நல்ல நம்பிக்கையுடனும் ,உற்சாகத்துடனும் இருந்தது?
ஏன் மெலிந்து போனாயென்று
துள்ளிக் கொண்டே என்னை கேட்டது ...
நெடுநாளாய் நீ இப்படி கேட்க நினைத்ததைத் தான்
அது கேட்டது என்று நினைக்கிறேன்

உன்னுடைய காட்டன் சட்டைக்கு ஒரு மீசையுண்டு
"உன்னைக் கொன்று விடுவேன்"
என என்னைச் சொல்லி உடனடியாக அது முகம் திருப்பிக் கொண்ட
நாளில்
நானோ தேவகுமாரனாயிருந்தேன்
கொலை செய்யத் தோன்றும் பேரழகு

உனது ஓட்டோ சட்டையை கொஞ்சம்
அதிக கவனம் எடுத்து கவனி
தலைகுனிந்து
தாழ்வுணர்ச்சி பெருகி அருவருப்பாக இருக்கிறேனா ?
என்று போவோர் வருவோர் அத்தனை பேரிடமும்
கேட்டுத் திரிகிறது அது

சட்டைகளோடு பேசிக்கொண்டிருப்பதில்
எனக்கு சிரமம் ஏதுமில்லை என்றாலும்
சட்டைக்குள்ளிருக்கும் உன்னோடு பேசத் தானே
எனக்கு அதிகம் விருப்பம் உண்டாகிறது
சட்டைக்குள்ளிருக்கும்
நண்பா

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"