"தீமையின் தரப்பைத் தேர்வு செய்தல் - சபரிநாதன்

"தீமையின் தரப்பைத் தேர்வு செய்தல் (அ ) ஓடும் பேருந்தை நோக்கிக் குரைத்தல்"
- சபரிநாதன்
[என்னுடைய கவிதைகளுக்கும்,படைப்புகளுக்கும் கட்டுரைகளாக வந்திருப்பவை கவிஞர் ஸ்ரீநேசன்,சபரிநாதன் இருவரும் எழுதியிருப்பவை மட்டுமே.இருவருமே தமிழில் குறிப்பிடும்படியான முக்கியமான கவிஞர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.கட்டுரைகள் பற்றி ராமாநுஜம் எழுதியிருக்கிறார்.ஸ்ரீநேசன்,சபரிநாதன் இருவர் எழுதியவையும் கல்குதிரை இதழில் வந்தவை . கல்குதிரை இதழில் சபரிநாதனின் "தீமையின் தரப்பைத் தேர்வு செய்தல் 
(அ ) ஓடும் பேருந்தை நோக்கிக் குரைத்தல்" கட்டுரை வெளிவந்தது ]
*
கவிதை எப்போதும் ஒரு உபகலாச்சாரமாகவே இருந்துவந்துள்ளது.பாணர்கள் கள்ளருந்தி முழவிசைத்து பாடித்திரிந்த காலந்தொட்டு இன்றுவரை.மையக்கலாச்சாரத்தில் கரையவியலாத ஒரு உள்ளார்ந்த இழுவிசை ஒன்று அதனுள்ளே என்றுமே இயங்கிவந்துள்ளது.உபகலாச்சாரம் என்பதற்கான அடையாளமாக தமக்குள்ளே மட்டுமே செலவாணியாகும் தனிமொழியிலிருந்து அதில் இடம்பெறும் ஆட்களின் உடல்மொழி உடைபாங்கு வரை கூட நீட்டிச்சொல்லலாம்.ஒன்றுமில்லை,கவிதை ஒரு காகிதத்தில் படுத்திருக்கும் விதத்தை,அது காகிதவெளியை தாந்தோன்றித் தனமாகக் பயன்படுத்துவதை கவனியுங்கள்.எவ்வளவு இடம் வீணாகிறது.ஒரு விளம்பரச்செய்தி போன்றோ,அறிவிப்பு போன்றோ வடிவொழுங்குக்கு ஆட்படுத்த முடிவதில்லை.சொல்லத்தகுந்த காரணமற்ற வகையில் கைகால்களை பரப்பிக்கொள்கிறது.ஒரு வரி நீண்டு ,ஒரு வார்த்தை தனியாக சில வார்த்தைகள் உடைந்து ஒட்டியுருகி,வாசிப்புப் பழக்கம் மிகுந்த ஒரு பண்டிதனின் மனச்சாந்தியைக் கூட கலைக்கத் தலைப்படுகிறது.பேச்சுமொழியையும் அது நிம்மதியாக இருக்கவிடவில்லை.அதன் பயன் என்ன என்ன சொல்லவருகிறது போன்ற கேள்விகளுக்கு எழுதியவனிடமே கூட பதில் இருப்பதில்லை.உபயோகம் இல்லாத ஒன்று இருப்பதற்கான நியாயங்கள் பொதுப்புத்திக்கு எட்டாது.’உட்கார்ந்திருப்பவர்கள் பாக்கியவான்கள்’ என்ற வரி எளிய மனமொன்றை எரிச்சலடையச் செய்து என்ன இழவு இது என் கத்த்த் தூண்டும்.அதனாலேயே என்றும் கவிஞர்கள் அரைபத்தியம் என்றும் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொதுச்சமூகத்தால் முத்திரையிடப்படுகிறார்கள்.அவன் வேற்றுலகவாசியாக,ஜெயிலில் இருந்து திரும்பி வந்தவனாக தன்னை எண்ணிக்கொள்ளாத நாட்கள் மிகக்குறைவு.பிளேட்டோ புத்திசாலிதான்.அவர் கவிஞர்களை நாடுகடத்தச் சொன்னார்.அவர்கள் மக்களின் உணர்ச்சியைத் தூண்டுகிறார்கள்.கற்பனையில் வாழச்செய்கிறார்கள்.பொய் சொல்கிறார்கிறார்கள்.முழுவுண்மையில் இருந்து இரண்டு படி தள்ளியிருப்பதால் அவர்களை நாடு கடத்தச்சொன்னார்.பின் இன்று வரை அது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
கவிதை ஏன் மையக்கலாச்சரத்தில் இணையமுடியாது? எனில் அதன் சாராம்சத்தில் ஒரு பகுதி அக்கலாச்சாரத்தை விமர்சிப்பதையே தன் பிரதானப்பணியாகக் கொண்டிருப்பதால் தான் என நினைக்கிறேன்.அவ்விமர்சன நோக்கை இழந்துவிடின் அது பொதுநீரோட்டத்தில் மிக எளிதாக்க் கலந்துவிடமுடியும்.அப்போது அதன் உடலின் ஒரு பகுதி மரத்துப்போனதாகிவிடும்.அவ்வளவுதான்.ஆகவே தான் எழுதுவது தன்னியல்பாகவே ஒரு எதிர்ச்செயல்படாகக் கருதப்படுகிறது.தார்க்கோவ்ஸ்கி ஒரு நேர்காணலில் சொல்கிறார்:பூரணமான ஒரு சமூகத்தில் கலைஞனின் இடம் அவசியமற்றதாகிவிடும்.உராய்வுகளுக்கு வழியிருக்கும் வரை மட்டுமே அவன் வாய் திறந்து பேசமுடியும்.ஆம்,கலை சமூகத்தின் விளிம்புநிலை நடவடிக்கையாகவே ஜீவிக்கமுடியும்.சில வரலாற்றுத் திருப்பங்களில் தன்னை ஒரு முழு உயிராகவே அரசியல் பாய்ச்சல்களில் ஈடுபடுத்திக்கொண்டு அது பணியாற்றக்கூடும்.பணியற்றவும் செய்திருக்கிறது.அப்போதும் அது தன் உணவான உளச்சுதந்திரத்தை முறையிட்டோ கெஞ்சியோ பெறத்துடிக்கிறது.அப்படி ஆகாத சமயங்களில் வழக்கம்போல் நாடுகடத்தல் தான்.அப்போதும் கூட அரசியல் தற்கால நிலவரத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளாது,மாற்றத்தின் பாற்பட்டே அது செயலாற்றமுடியும்.அதிலும் தன் குழம்பிய கோட்பபாட்டு நிலைப்பாடுகள் மற்றும் உள்ளுர்வின் இழுபறிகளால் ஓரங்களிலிருந்தே பங்கேற்கமுடியும்.பொதுத்திரள் வெளியிலிருந்து தன் நம்பிக்கைகளாலும் நோக்கங்களாலும் விலகநேர்ந்த மக்களின் போராட்டங்களில் வேண்டுமானால் அது முழு ஈடுபாட்டோடு தன்னை முடிச்சிட்டக்கொள்ள இயலும்.மிகச்சமீபத்திய உதாரணம் கூடங்குள அணுவுலை எதிர்ப்பியக்கம்.மற்றபடி,
ஊருக்கு வெளியே ஒரு சிறிய குடில் ஊரெழும்பும் முன்னான உதயத்தையும் ஊரடங்கிய பிறகான கும்மிருட்டையும் காண்பதற்கென்று.
இப்படிக்கூறும் பொழுது கலை தன்னை முழுக்கத் துறவுக்குட்படுத்திக்கொண்டு தன் குகைச்சுவர்களை மூடிக்கொள்ளவேண்டும் என்பது அல்ல எண்ணம்.சொல்லவருவது ஒரு இடம் சம்பந்தப்பட்டதன்று மனநிலை மற்றும் அணுகுமுறை தொடர்புடையது.இதில் விநோதம் என்னவென்றால்,இத்தகைய படைப்பியக்கத்தின் ஆய்விடமாக பேசுபொருளாக இருப்பது அதே பெருங்கலாச்சாரமும் அதை இத்தனை காலம் உருட்டி வந்த வரலாறும் தாம்.கோமாளிகளாகவும் பிழைக்கத்தெரியாதவனாகவும் கருதிய மகாமக்கட்குழாமுக்காத்தான் இந்த வெளிநடப்பு செய்த ஒட்டுமொத்த படைப்பியக்கமும் அதனுள் வார்க்கப்படுகிற உழைப்பும்.எழுத்தாளனின் சமூக பண்பாட்டு விமர்சனங்கள் யாவுமே விளிம்பில் இருந்து வரும் குரல்கள் தான் என்பது எனது.அவை நிகழ்காத்தை விட எதிர்காலத்திற்கே பொருந்திப் போகக்கூடியவை.கலைஞர்கள்,பெருங்கலாச்சாரத்தினுள் நுழையும் பொது கூட அதனுள்ளே ஓரெல்லையை வகுத்துக்கொண்டு ஒரு மாற்றுத்தரப்பாகவே தன்னை முன்னிறுத்திக்கொள்ள இயலும்.நடுவட்ட்த்திற்கெள்ளேயே ஒரு விளிம்பை வரைந்துகொண்டு. மட்டுமே செயல்பட இயலும்.அதனோடு அமர்ந்து விருந்துண்ணமுடியாது விவாதிக்க மட்டுமே முடியும்.ஏனெனில் அடிப்படையில் கலை ஒரு மாற்றாக மட்டுமே வாழமுடியும் கழுதைகள் பாலூட்டிகளாக வாழ்வதைப் போல.புழங்குமொழிக்கு தட்டை எதார்த்த்திற்கான மாற்றாகவே அது வளர்ந்துவந்தது.நிகழ்கால விழுமியங்களுக்கு மாற்றாக,பொதுப்புத்திக்கு மாற்றாக.தான் முன்வைக்கும் மாற்றுத்தரப்பு ஏற்றக்கொள்ளபடும் வாய்ப்பு ஏற்படின் பின்னர் அதனுள்ளும் ஒரு மாற்றைக் கண்டடையவே முனையும்.
ஜனரஞ்சகப் பண்பாடோ மந்தைக்கு ஏதுவான வேலைப்பிரிவினைகளையும்,கலைவடிவங்களையும் உற்பத்திக்கவே செய்யும்(இதை மக்கள் கலாச்சாரத்தோடு போட்டுக் குழப்பவேண்டாம் என நினைக்கிறேன்.உண்மையான நாட்டார் கலைவடிவஙகளின் நிலை நம் சந்தைக் கலாச்சாரத்தில் என்னவாக உள்ளது என்பதை நாம் நன்கறிவோம்.குறைந்தபட்சம் அவற்றைக் குறித்த உளப்பூர்வமான அக்கறையுடன் சிந்தித்தது தீவிர இலக்கியவெளிதான்).அவை சில அகத்தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடும்.ஆயினும் வரலாற்றுத்தேவைகளையும் ஆன்மிகத் தேவைகளையும் திருப்திசெய்ய எல்லையில் ஒரு தோதிடம்() அவசியம் என்றே கருதவேண்டியுள்ளது.அங்கிருந்து சமூகத்தை முழுதாகப் பார்க்கவியலும்.அது கையளிக்கும் வறட்டு விசுவாசத்தையும் முன்னணுமான்ங்களையும் தாண்டி அதை அணுகமுடியும்.மீண்டும் சொல்கிறேன் அது மனத்தகவமைப்பே அன்றி புற எதார்த்தமில்லை.ஏனெனில் கலைஞன் தெருவில் நடந்தாகத் தான் வேண்டும்.வாழ்வின் ரேகைகளில் பயணித்தாகவேண்டும்.இருத்தலியல் காரணகர்த்தாவாக இருந்தால் கூட சந்துபொந்துகளில் ஊர்ந்தாகவேண்டியிருந்தது இல்லையா ஒருவருக்கு.லக்ஷ்மி மணிவண்ணன் தன் கவிதையொன்றில் சொல்கிறார்:
இந்தக் கவிதை எழுதுகிறவன்
தனது கதவுகளையெல்லாம்
பாதங்களில் அணிந்திருக்கிறான்
என்று.எப்படித்திறப்பது அக்கதவுகளை?வேறெப்படி நடந்து நடந்து தான்.
தொண்ணுறுகளில் எழுத வந்த கவிஞர்களுள் ஒருசாராரை விமர்சனவசதி கருதி நிறுவன எதிர்ப்புக் கவிதைகள் என வகைப்படுத்த முயலலாம்.பொதுவாக தொண்ணுறுகளின் தமிழ்க்கவிதைகள் மீதான ஒட்டுமொத்த பார்வை காணக் கிடைப்பதில்லை.அதைக் குறித்த ஊகக்கருத்துகளும்,பாரம்பரியமாகச் சொல்லப்படுவரும் ஒற்றைவரி மதிப்பீடுகளுமே தென்படுகிறது.இத்தனைக்கும் கோட்பாடுகளும் கருத்தியல்களும் பரவலாக உரையாடப்பட்டு வந்த காலத்தில் கூட இவற்றைக் குறித்த போதுமான மதிப்பீட்டு திறனாய்வு முயற்சிகள் நடக்கவில்லை என்பது தெரிகிறது.பிரச்சனை என்னவென்றால் ஒரு பிரதி மீதான அக்காலத்திய கூட்டுவாசிப்பை அறியமுடிவதில்லை.இளம் வாசகன் முற்றிலும் புதியதாக தொடங்கவேண்டியுள்ளது.இப்படிச் சொல்லும் போது அது நல்ல விஷயம் போல் தான் தொனிக்கிறது.அது ஆரோக்கியமானது கூட்த்தான்.இருந்தபோதும் ஒரு பிரதி அது எழுந்துவந்த சமகாலம் குறித்தும் அதனோடான அதன் பரஸ்பரத் தாக்கம் குறித்தும் அறிந்துவைத்திருப்பது அப்படைப்பை சற்று கூடுதலாக நெருங்கிச் செல்ல வழிவகுக்கும் எனப்படுகிறது.வாசகனான எனக்குத் தேவையில்லை தான்.விமர்சகனான ஒருவருக்கு அது பெருத்த உதவி செய்யும்.ஒருவேளை,தமிழிலக்கியத்தின் மற்றும் இதழ்களின் கவனம அரசியல் மற்றும் புனைவெழுத்துக்களை நோக்கி நகரத்துவங்கியிருக்கலாம்.கவிதை என்ற ஒன்று அல்லாது கவிதை என்ற வகைமையே பலவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் இயல்பாகவே கவிதைக்களம் சிதறுபட ஆரம்பித்திருந்தது கூட காரணமாக இருந்திருக்கலாம். தமிழ்க்கவிதைகளில் பன்மைத்துவம் வேரூன்ற ஆரம்பித்த,சமூகவியல் அணுகுமுறை அநேகக் கவிஞர்களின் போக்கை வலுவாகப் பாதித்த நேரம் என்றும் கூறலாம்.இப்பன்மைத்துவத்தை தக்கவைத்தபடியே,தொன்னூறுகளின் அரசியல் பொருளாதார துரித மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு விரிவான முழுச்சித்திரம் எழுதிப்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது.இக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.
#
தொண்ணுறுகளில் வந்த கவிஞர்களுல் சிலர், அதிகாரத்தின் நுண்ணிருப்பை கண்டறிவது மற்றும் எதிர்ப்பது ஆகியவற்றையே தம் கவிச்செயல்பாட்டிற்கான பிரதான நோக்கமாக்கினர் எனலாம்.சர்வாதிகரமோ அடக்குமுறைகளோ அப்பட்டமாக கட்டவிழ்க்கப்படாத காலமாக இருந்தாலும் கூட, மனித வாழ்வின் மைய இயங்குவிசையாக மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூக மற்றும் கலாச்சார கட்டுமானத்தையுமே, அதிகாரத்தை நோக்கி இழுத்துக்கட்டப்பட்ட இரும்புக் கோபுரமாக உருவகிக்கும் பார்வை, கோட்பாட்டு அறிமுகங்கள் மற்றும் விவாதங்களால் வலுப்பெற்றது.இது நுட்பமானது.எனில் இது அடக்குமுறைக்கு எதிரான தட்டையான உரத்த குரல்கள் கொண்ட கவிதைகளாக முடிவுறவில்லை.மாறாக,ஒவ்வொரு கவிஞரும் தத்தமக்கே உரிய இயல்புணர்வுகளாலும் பின்னணியாலும் கலைநம்பிக்கையாலும் தனிவழியில் கொண்டு செலுத்தினர்.குழந்தைகளின் மீதான பெரியவர்களின் அதிகாரம் முதல் சின்ன தெய்வங்கள் மீதான் பெரிய தெயவங்களின் அதிகாரம் வரை சகல ரூபங்களிலான அதிகராங்களும் கவிதைவெளிக்குள் இழுத்துவரப்பட்டன.இவ்வெதிர்ப்புணர்ச்சியை பெரும்பாலானோரிடம் அங்கங்கே காண்முடிந்தாலும் பிரதானமாக ரமேஷ்-பிரேம்,யவனிகாஸ்ரீராம்,பாலைநிலவன்,என்.டி.ராஜ்குமார் மற்றும் கரிகாலன் ஆகியோரிடம் இந்தப் போக்கை காணலாம்.பெண்கவிஞர்கள் உடல் மற்றும் புழங்குவெளி மீதான அதிகாரத்தையும்,தலித் கவிஞர்கள் பண்பாடு மற்றும் இருப்பின் மீதான அதிகாரத்தையும் நோக்கிப் பேசினர்.
சட்டென்று என் நினைவிற்கு வருவது,அமெரிக்காவில் ஐம்பது அறுபதுகளில் நிலவிவந்த பீட் (beat lierature) எனப்படும் எதிர்கலாச்சார இயக்கம் சார்ந்து உந்துதல் பெற்று எழுதப்பட்ட படைப்புகள்.அவையும் பொதுவாக எதிர்-நிறுவன படைப்புகளாக மதிப்பிடப்பட்டவை.அக்கால அமெரிக்க பொதுக்கலாச்சாரத்திற்கு எதிராக குரலெழுப்ப முயன்ற அக்கவிதைகள் இயல்பிலேயே அராஜியவாதத்தன்மை(anarchistic) கொண்டிருந்தன.அரசியல் ஈடுபாட்டை வலியுறுத்தின.இங்கைப் போலவே அங்கும் மீப்பெரும் விழுமியமாகச் சுதந்தரம் கொண்டாடப்பட்டது.ஒரு முக்கியமான வித்தியாசம் இங்கு நடைமுறைத் தளத்தில் எந்த தாக்கமும் நிகழவில்லை.அங்கு அதுவொரு கலாச்சார இயக்கத்திற்கே சக்திகொடுத்தது.தொன்னூறுகளில், இந்தியா வல்லரசாக ஒன்று இந்தியர்கள் professionals ஆக ஒன்று என இரண்டு ஏவுகணைகளை விண்ணில் செலுத்தியது கூட காரணமாயிருக்கலாம்.எப்படியிருந்தாலும் அத்தனை கூத்துகளுக்குப் பின்னரும் அமெரிக்காவே கூட அதையொரு கெட்டகனவாக மறந்துவிட்டு வாடிக்கையாளர்களின் நாடாகிவிட்டது.உலகமே அமெரிக்காவாக மாறமுயற்சிக்கும் இந்நிலையில் இன்று வளர்ந்துவரும் இந்த் professional வாழ்வியலும் அணுகுமுறையும்(வேலையைச் சொல்லவில்லை) கலைக்கு குறிப்பாகக் கவிதைக்கு பாதகமான விளைவுகளையே உண்டாக்கும் என்று தோன்றுகிறது.அதனோடு சந்தை ஊடக அழுத்தங்களும் சேர்ந்துகொண்டால்,அந்த தட்பவெப்பம் விளைச்சலுக்கும் விதைப்பைகளும் உகந்ததாய் இராது.
லக்ஷ்மி மணிவண்ணனும் மேற்சொன்ன எதிர்-நிறுவன வரிசையில் எளிதாக இணைந்துகொள்ளும் வலுவானதொரு குரல்.லக்ஷ்மியின் கவிதைசொல்லி அநேகமாக எல்லா விஷயங்களிலும் பொதுப்புத்தியுடன் முரண்பட்டு நிற்கும், கருத்தியல் தெளிவை ஏற்கமறுக்கும் ஒரு உதிரி மனோபாவம் உடையது.அது எதையும் பிரதிநிதித்துவப்படுத்துவததில்லை.உதிரிகளைக் கூட.சமயங்களில் அதில் செவிப்படும் எதிர்க்குரல் யாரை நோக்கியது என்பது கூட புலப்படுவதில்லை.அவரது கவிதை உலகம் சமூகம் ஜோடித்துக் கையளிக்கும் ’சமூகத்தின்’ விளிம்பில் அமையப்பெற்றது.சுவாதீனத்திற்கும் மனநோய்க்கும் வேறுபாடு அறியாதது.இது காமம் இது பிறழ்வு என்பது போன்ற தெளிவற்றது.அதனாலேயே வாசகனை தெளிவின்மைக்குள்ளும் தோற்றமயக்கத்துக்குள்ளும் ஆழ்த்திவிட வல்லது.
$
நன்மை தீமைக்கிடையேயான போராட்டம் இலக்கியத்தின் ஆதாரப் பிரச்சனைப்பாடாக செவ்வியல் காலந்தொட்டே இருந்துவந்துள்ளது.அதற்கு முன்னமிருந்தே கூட இந்த கேள்வி, மனித கற்பனையில் தீராத போர்களை நிகழ்த்திவந்திருக்கும்.நவீனத்துவத்திற்கு முன்னம் வரை அவை மிகவியல்பாக எந்தக் குழப்பமும் இன்றி நன்மையின் தரப்பில் தன்னை இணைத்துகொண்டன.(இவ்வளவு கருப்பு வெள்ளையாக் இல்லை தான்).நவீனத்துவத்திற்கு பிறகு இந்தக் கருத்துருக்கள், எல்லா மனிதப்பிராந்தியத்திலும் (ஆண்டான்*அடிமை,அழகு*அசிங்கம்) மறுபரிசீலனைக்கு ஆட்பட்டு ,இந்த இருமையைக் கடந்துபோவதே வழியாக பெரும்பாலான படைப்புகளில் முன்வைக்கப்பட்டது.நன்மை தீமைக்கு அப்பாற்ப்பட்ட ஒரு வழி பல இலக்கியங்களில் நுண்மையாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பெரும்பாலான உறுதிமிக்க நவீனத்துவர்களின் நிலைப்பாடும் இதே.மிகச் சுவார்ஸ்யமூட்டும் விதமாக லக்ஷ்மி மணிவண்ணன் தன்னார்வத்துடன் தீமையின் பக்கம் சென்று சேர்கிறார்.கடைசியாக இக்கவிதைசொல்லி ஒருவரிடத்தில் சமாதானமடைகிறார்.இது இவர் கவிதைகளுக்கே உரிய தனித்த நிலைப்பாடு.அவை சாத்தான் தரப்பில் மட்டும் நின்று விவாதிக்கவில்லை.அவற்றுக்கு நல்லபிள்ளையாகவும் நடக்கமுயல்கின்றன என்பது தான் முக்கியம்.
போதை குற்றம் வன்மம் காமம் பாலியல் பிறழ்வு உன்மத்தம்.இவையே மணிவண்ணன் கவிதைகள் கையாளும் நிறங்கள்.தீமையின் கரையிலிருந்து மிதந்தெழும்பும் புகையோவியங்கள் எனலாம் இக்கவிதைகளை.அவரே இப்படிச் சொல்கிறர் ஒரு கவிதையில்: ”நான் தீமையின் தரப்பைத் தேர்வு செய்தேன்/.தேர்வல்ல அது நிகழ்ந்தது”,தாஸ்தேயவஸ்கி ஓரிடத்தில் சொல்கிறர்:சாத்தான் இருப்பை மறுப்பதை விட எளிதானது எதுவுமில்லை.அவனைப் புரிந்துகொள்வதை விட கடினமானது ஏதுமில்லை.
முதலில் இக்கவிதைகள் சாத்தானின் இருப்பை ஏற்றுக்கொள்கின்றன.அடிப்படையில் இது ஒரு கிறித்தவ நிலைப்பாடு.கிறிஸ்துவின் பிம்பத்தை புழுதியில் போட்டு புரட்டி எடுத்தாலும்,நான் நினைக்கிறேன்,கவிஞருக்குள்ளே கிறித்துவம் கோமா நிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதாக.ஏனெனில் இக்கவிதைகள் பலவற்றில் குற்றவுணர்ச்சியின் கீறல்கள் சிதறிக்கலந்து கிடக்கின்றன.ஒரு கவிதையில் இப்படி வருகிறது
குற்ற உணர்ச்சிகள் குத்துச்செடிகளாய்
வளர்கின்றன
நம்மால் குத்துச்செடிகளைக் கொண்டே
தோட்டம் அமைத்துவிட முடியும்
அதை நன்றாகப் பராமரிக்கவும் முடியும்
லக்ஷ்மியின் கவிதைகளில் சாத்தான் வெகு சாவகாசமாய் உலவுகிறான் ஏதோ ரூம்மேட் போல.அது போலவே கடவுளும் குலசாமிகளும் பேய்களும் சர்வ சாதரணமாக நடமாடுகின்றன.ஆயினும் லக்ஷ்மி தன் முன்னுரையில் சொல்வதைப் போல அவரது ஓட்டு சாத்தானுக்கே.அதற்கான அர்த்தமாக பிரபஞ்சகாமத்தின் இயல்பு நிலையின் சார்பாக தான் அப்படிச் செய்வதாகக் கூறுகிறார்.காமம் என்பதை உயிர்களின் செயலூக்கவிசையாக (ரஜஸ்)
அடையாளம் காணுகிறார் என்று படுகிறது.இந்தப் பாடபேதத்தில் எந்த விவிலியச் சாயையும் இல்லை என்பது சுவாரஸ்யமானது.
காமம் மற்றும் உடல் சார்ந்த கவிதைகளின் கவனம் குவிவது சிருங்காரத்திலோ புலனின்பத்திலோ அல்லாது அதற்கடியில் ஊடிப்பிரிந்து இயங்கிவரும் சிதைந்த ஆழ்மனப்படிமங்களையும் ஒழுக்கம் அல்லது மீறல், உடல் அல்லது பொருள் போன்ற முரண்களுக்குக்கிடையேயான மோதல்களையும் மையப்படுத்துவதையுமே நடக்கிறது.இதுவும் ஒருவித எதிர்ச்செயல்பாடகப் புரிந்துகொள்ளமுடியும்.என்பதால் கலவி அல்லது உடல் சார்ந்த சித்தரிப்புகள் சிலிர்ப்பை உண்டுசெய்வதாக இருப்பதில்லை.மாறாக அவை ஏகதேசம் தற்காலச் சந்தை நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் அல்லது பதுங்கியிருக்கும் பாலியல் தரப்பை பிரதிபலிப்பு செய்வதாகவே அமைகிறது.நுகர் கலாச்சாரம் பாலியல் பிறழ்வை ஊதிப்பெருக்கும் என்பது ஒர் அறிந்த உண்மை.ஆக,இக்கவிதைகளில் இருப்பவை தூய உடல்கள் அல்ல, கன்வேயர் பெல்டில் நகர்ந்துவரும் லேபிள் ஒட்டப்பட்ட உடல்கள்.சக்தி மசால் ஸ்டோர் எனும் கவிதையில்
’முலைதிறந்த பெண்களின்
நடனத்தில் விறைத்த குறிநீட்டி
தராசுத் தட்டில் சொப்பனத்துடன்
படுத்துறங்குகிறான்
பின்மதிய
மளிகைக் கடைக்காரன்.’
இன்னொரு கவிதையில்
”பெரிய கேன்வாஸ்களில் விளம்பரத்தட்டிகளால்
எனது ஆண்குறி சுற்றப்பட்டுள்ளது”
என்கிறார்.தவிர கழிவறையும் கழிவறைச் சொற்களும் நிரம்பவே கவனத்திற்குள்ளாகின்றன.’ஆண்குறி மரித்த கழிவறை’’மலங்கழிக்கும் நடிகை’போன்ற வரிகள் உடல் மீது கவிந்திருக்கும் அர்த்த மேகங்களைக் கலைத்து நவீன விளம்பர உடலை புதிர்நீக்கம் (demystify) செய்கின்றன எனலாம்.அதேபோல் இக்கவிதைகளில் வன்ம்ம் உள்ள அளவிற்கு தன்னிறக்கம் உண்டு.உக்கிரமான எதிர்ப்பிற்கு இணையாக சுயவெறுப்பிற்கும்,சுயவதைக்கும் இடமுண்டு.இதில் பதிவாகியுள்ளவை ஒரு தனிமனிதனாக,குடும்ப உறுப்பினாக,குடிமகனாக என அனைத்து முகங்களினூடே உணரநேரிடக்கூடிய தன்னிறக்கமும் சுயவதையும்.
#
மனநோய்விடுதி குறித்த ஒரு நாவல்,நம் அன்றாட அரசியல் சிக்கலுக்கான விடையைக் கொண்டிருக்கலாம்,விலைமாது ஒருவரின் கனவு பற்றிய கவிதை நம் ஆழ்மனங்களின் நுட்பமான முடிச்சொன்றை அவிழ்த்துவிடலாம்.ஏனெனில் பைத்தியநிலையோ சிகப்பு விளக்குப் பகுதிகளோ எவையாக இருப்பினும் அவை சமூகத்தின் பங்களிப்பையும் சேர்த்தே தோற்றம் கொள்கின்றன.ஒரு கூரிய ஒளிவிலகளில் நம் ஒட்டுமொத்த பண்பாட்டின் பிரதிபிம்பமாக அவை மாறிவிடக்கூடும்.ஒரு நாகரிகத்தின் கதை தண்டிதண்டிப் புத்தகங்களில் மட்டுமல்ல பொதுக்கழிப்பறைச் சுவர்களிலும்,மதுச்சாலை மேஜைகளிலும் கூடவே எழுதப்படுகிறது.சாதாரண வெப்பநிலையில், ஒளியில் வெளித்தெரியாத ஒரு உட்சுருக்கம் முற்றிலும் வேறொரு வானிலையில் தன்னை பிரிக்கத்தொடங்கலாம்.மனித உடற்கூறியல் பிணங்களை அறுவை செய்துதானே திருப்பம் பெற்றது.இன்றும் கூட உளவியலான(psychology) அறிவுத்துறை,உளச்சிகிச்சையான (psychiatry) மூலமே தனது பிரதான திசைவழிகளை கண்டுகொண்டது.மனித மனம் பற்றிய புரிதலே பைத்தியம் எனப்படுவோர் நமக்களித்த கொடை தானே(மேலை அடிப்படையில் மட்டும்).என்பதால் தான் தாஸ்தேயவ்ஸ்கி பூர்ஷ்வாக்களிடம் பிரபுக்களிடம் அன்றி சிறைகளிலும் கொட்ட்டியிலுமே தன் கதாநாயகர்களைச் சந்தித்தார் போலும்.
லக்ஷ்மி சிறையமைப்பைப் பற்றியொரு அபாரமான கவிதை எழுதியுள்ளார் ‘புலன்களுக்கு அப்பால் நழுவிய கட்டடம்’ எனும் தலைப்பில்.சிறைச்சாலையின் பராமரிப்பு பணியை, முன்னிட்டு கைதிகளை குறைந்த காற்ற்றைகளில் அடைத்துவிட்டு சிறைக் கதவுகளைத் திறந்து வைத்து சுத்தம் செய்கின்றனர்.புதியவண்ணம் பூசுகின்றனர்.இந்த விநோத புனைவுத்தருணத்தில் கவிதை நிகழ்த்தப்படுகிறது.
கைதிகள் அதிகாரிகள் நோயாளிகள்
சிப்பந்திகள் பயணிகள் உளவாளிகள்
எல்லோரும் ஒன்றுதான் என்றாயிற்று
எனச் செல்லும் கவிதை ஒர் அற்புதமான மிகையதார்த்த படிமத்துடன் முடிகிறது
சிறுபறவையின் பறத்தலில்
மேலொடிந்து விழுவோமோவென பயந்துநடுங்கியபடி
உயர்ந்து நிற்கிறது கட்டிடம்
குறிப்பாக நாம் ஏற்படுத்தியுள்ள அமைப்புகளின் குணாம்சம் என்ன விதி என்ன உண்மையான் எதிரி யார் என்பதெல்லாம் அறிவதற்கு மந்தமான புறச்சூழலில்,எழுத்தின் பணி இவற்றையெல்லாம் காணப்படச்செய்யவேண்டியதாகிறது.காணவியலாததை காணும்படி ஆக்க வேண்டியுள்ளது.சமூகத்தின் நேர் மற்றும் எதிர் சக்திக்ளென அறியப்பட்டவைகளுக்கு இடையேயான முரணியக்கத்தை முன்வைத்துப் பேசும் ஒரு தலைப்புக்கவிதையான, எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் இந்த இடத்தில் முக்கியமான ஒன்றாகிறது.ஒடுக்குமுறையையும் ஒடுங்குதலையும் பாவனைகளைகாகக் காட்டி பின சம்பிரதாயங்களாக மாற்றி சமூக அசைவியக்கத்தையே ஒரு நாடகமாக ஓட்டிக்காட்டுகிறது இக்கவிதை.அதே போல கருத்துக்களின் நாடகமும் சில கவிதைகளில் உண்டு.இருட்டுக்குள் சட்டென நுழைந்ததைப் போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவை ஒரு கட்டத்திற்கு மேல் பழகிவிடுகின்றன.இதைத் தவிர பலகவிதைகளிலும் இந்த நாடகச் சாயல் இருப்பதைக் காணமுடிகிறது.அதாவது சில பாத்திரங்கள் அவற்றுக்கிடையேயான ஊடாட்டம்,விசித்திரமான இடையீடுகள்,விநோதமான முடிவு.இப்படியான கவிதைகளாக ’கன்னியுவதியின் கண்கள்’ ’கோழிவிளையாட்டு’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
*
இரண்டாயிரத்தில் வெளிவந்த அவரது முதல் தொகுதியான சங்கருக்குக் கதவற்ற வீடு தொகுதியில், இதுவரை சொல்லிவந்த எதனோடும் தொடர்புடைய கவிதைகளை காணமுடியாது.மாறாக வேறுபட்ட இரண்டு விதமான கவிதைகள் நிறைந்துள்ளன. ஒன்று:முரண்களற்ற காதல் கவிதைகள்.இன்னொன்று:அந்நியமாதல் குறித்த அனுபவக் கவிதைகள்.விரக்தி மூண்டிருக்கும் இக்குரலில் அவரது இயல்பான எதிர்க்குரலையோ,அதிகாரம் பற்றிய விழிப்புணர்வோ காணக்கிடைப்பதில்லை.
விடுதியறையிலோ கழிப்பறையிலோ சிக்கித்தவிக்கும் ஒரு மனிதனின் சித்திரம் நிரைய கவிதைகளில் அடையாளம் தெரிவது.”என் அருகாமையே தோல்வி நெடியை பரப்புகிறது”என்று பாதியிலேயே உடையும் வரிகள்.சங்கருக்கு கதவற்ற வீடு கூட இந்த அந்நியமான நிலையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு குறுக்குவழியாகவே படுகிறது.இக்கவிதையில் வருகிற உடமையளர்கள், உறுப்பினர்கள், தள்ளி நிற்க வீடு தானே தனித்தவொரு உயிர்கொண்ட பொருளாக நடந்துகொள்கிறது.
லக்ஷ்மி மணிவண்ணன் எப்போதுமே காதல் கவிதைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர் அவை காலப்போக்கில் முற்றிலும் மாறிப்போய்விட்டன என்றபோதும்.ஒரு கவிதையில் “காதல் கடிதங்கள் எழுதவேண்டிய என் பேனா தொலைந்துவிட்டது”என விசனப்பட்டாலும் அவரது மிகச்சிறந்த காதல்கவிதைகள் சில இதில் உள்ளன.ஆச்சர்யமூட்டும் வகையில் அவை பிளேட்டோனியக் காதல் கவிதைகள்.
“அவளைத் தேடி சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே படுகிறது” போல.
இத்தகைய கவிதைகளில் சிலைடங்களில் உணர்வெழுச்சியை கச்சிதமாக படிமமொழியில் வடித்துவிடுகிறார்.
அரூபமான சிலையாய்
தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது
என் அறைகளுக்குள்
உன்னைப் பற்றிய
கனவு
திடிரென முற்றிலும் வேறொரு குரலில் பேசிச்செல்லும் சலனம் எனும் தொடர்கவிதை எளிமையும் குழந்தைத்தனமும் கூடிய அழகியவொரு காதல் கவிதை.இத்தொகுப்பில் விதி என்றொரு கவிதை உள்ளது.இதிலிருந்து தான் அடுத்தகட்டத்தில் நாம் காணும் லக்ஷ்மி மணிவண்ணனை கற்பனை செய்து பார்க்கமுடிகிறது.
எனக்குத் தெரிந்த
நான்கைந்த தெருநாய்கள்
எப்பொது கண்டாலும்
பேருந்துக்ளை அலற
விரட்டிக் களைத்து
வாயில் நீர் ஒழுக்கும்
எனக்கும் அதுபோலவே
ஒருநாளேனும் திவங்க திவங்க
ஒரு பேருந்தையேனும்
விரட்டிக் குரைக்கனும்
என் விதியோ
நான் பேருந்துக்குள்
போகவேண்டியிருக்கிறது
&
லக்ஷ்மி மணிவண்ணனது கவிதைகளில் ஆழமான தன்னிலை இருப்பு உண்டு.தட்டையாகச் சொல்வதெனில் அவரது எல்லாக் கவிதைகளிலும் லக்ஷ்மி மணிவண்ணன் இருக்கிறார்.மையமாகவோ பராக்குப் பார்த்தபடியோ தன் சுய இருப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார்.அவரது கவிதையாக்க முறையில் கருத்துக்களுக்கு, நுட்பமான அவதானங்களுக்கு முக்கிய இடம் உண்டென்பதால் அவரது அநேக கவிதைகள் அவருக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாதாடுபவையாக உள்ளன.மதுச்சாலைக்களில் வாடிக்கையாளராகவோ மோசமான தகப்பனாகவோ நகரத்தில் அலைச்சுலுறுபவனாகவோ,எதிரியாகவோ,கொல்லத் துடிப்பவராகவோ கொலை செய்யவேண்டியவராகவோ பல முகங்கள் பூண்டு அவர் நடமாடுகிறார்.இயல்பான ஒருங்கமைதியற்ற, பெரிய அளவிற்கு இசையொழுங்கற்ற உணர்ச்சிவெளிப்பாடுகளின் கலைக்கப்பட்ட நீரோவியங்களாக அமைகின்றன இக்கவிதைகள்.அதே வேளை லக்ஷ்மி மணிவண்ணன் பிரத்யேகமான தர்க்கப்புத்தி கொண்டவர் என்பது என் அபிப்பிராயம்.அவரது கட்டுரைகளில் இதைப் பிரதானமாகக் காணலாம்.அவை கட்டுறுதி வாய்ந்த தர்க்கம் அல்ல.ஒருவிதமான கவித்துவ தர்க்கம் எனலாம்.பெரிய வரலாற்றுத்தரவுகளோடோ புள்ளிவிவரத்தகவல்கள் மீதோ நிற்பதில்லை.கலாச்சார நுண்ணுணர்வுடன் காத்திரமான மாறுபட்ட பார்வைக் கோணங்களும் கொண்டவை அவை.முக்கியமாக சுவாரசியமானவை.நூறுசதவீதத் தர்க்கத்தின் முன்னே அவை திடகாத்திரம் அற்றைவையாகத் தெரியக்கூடும்.ஆயினும் அதன் அடியில் உறையும் உள்ளுணர்வுத் தாவல்களாலும் வெளிப்பாட்டு வேகத்தாலுமே வாசகனைத் தீண்டவல்லவை அவை.(.இந்த இடத்தில் ஆச்சர்யமூட்டும் விஷயமாக நான் கருதுவது,கவிதைகளில் இசைமைக்கு பெரிதும் மெனக்கடாத லக்ஷ்மி மணிவண்ணனின் உரைநடை, ஓசையொழுங்கு கூடி ஒரு ஓட்டத்திற்கான முறுக்கேறியுள்ளது என்பதைத் தான்.)இந்த விதத்தில் சுந்தரராமசாமி பிரமிள் சுகுமாரன் இவர்களுக்குப் பிறகு தமிழில் நல்ல உரைநடை கொண்ட கவிஞராகிறார் மணிவண்ணன்.வெகுசில கவிஞர்களைப் போலவே வெகுசில உரைநடையாளர்கள் மட்டுமே தனக்கென்று தனித்த நடை கொண்டுள்ளனர்.மணிவண்ணன் அவர்களுள் ஒருவர்.
இதே விதமான தர்க்கம் மறைமுகமாகவும்,மிகச்சிறிய அளவிலும் அவரது கவிதைகளில் பயின்றுவருவதாக நம்புகிறேன்.குறிப்பாக சற்று பெரிய கவிதைகளில் அவை கண்ணிகளாக,தொடர் ஓட்ட கைக்கோலாக செயலாற்றுகின்றது.இதனோடு கண்காணிப்பற்ற பித்துநிலையும் கூடிக்கொள்ளும்போது கவிதைகள் புகைமூட்டமாயும் எதிர்பாரதவைகளாகவும் தோன்றத் தொடங்குகின்றன.அவற்றையே தான் கவிஞரும் எதிர்பாப்பதாகவும் தெரிகிறது.
காட்சிப்புலத்தைச் சித்தரிப்பதிலும் ஒரு திரைச்சீலையை தொங்கவிடுவதிலும் மிகுந்த ஆர்வமுடையவர் மணிவண்ணன்.சிக்கல் என்னவெனில் ஒன்றை வாங்கக் கிளம்பிச் செல்லும் குழந்தை வழியெல்லாம் எல்லாக் கடைகளையும் நின்று கவனித்துச் செல்வதைப் போல நகர்கிறது சில கவிதைகள்.தன் முதல் தொகுப்பின் முன்னுரையில் எழுதப்படாத வாக்கியங்களை வாசிக்க வாகாக தன் கவிதைகள் அமையவேண்டும் என விருப்பம் தெரிவிக்கும் கவிஞர் பிரக்ஞைபூர்வமாகவே இதைத் தன் கவிதையாக்க முறைமையாக கொண்டிருக்கலாம்.இது சிலநேரம் கவிதைகளை வழிதவறச்செய்துவிடுகிறது சில நேரம் இது போன்ற தெறிக்கும் வரிகளுக்கு கொண்டு வந்து விடுகிறது:
எலக்ட்ரிக் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருந்தன
மனிதர்களின் அசைவுகளோடு
கான்க்ரீட் வீடுகள்
பொதுவாகவே இக்கவிதைகள் ஒருமையைக் குறிவைப்பதில்லை.கேரம் விளையாட்டில் ஸ்ட்ரைக்கர் சுண்டியடிக்கப்பட்டவுடன் காணக்கிடைக்கும் ஒரு காட்சி போல ஒழுங்கின்றி தாந்தோன்றித்தனமாய் நிற்கின்றன கவிதையின் தனித்தனிப்பத்திகள்.வித்தியாசம் என்னவெனில் அவை தானாகவே நகர்கின்றன என்பதுதான்.நுட்பமான கண்டுபிடிப்புகளும் அவதானிப்புகளாலும் முடையப்பெற்ற கவியாக்க முறைக்கு ஏற்றாற் போல, தட்டையான உலர்ந்த, உரைநடையை நெருங்கும் மொழி லஷ்மி மணிவண்ணனுடையது(சிலகவிதைகள் சில இடங்களில் உருவகமொழியில் நகர்ந்து அலுப்பூட்டவும் செய்கின்றன).
சில கவிதைகள் முதல்வரைவைப் போல் நிற்கின்றன.இன்னும் கொஞ்சம் பொறுமை கொண்டு அவற்றை செப்பனிடலாம் என்று தோன்றுகிறது.இதனால் பிரமாதமாக வந்திருக்கவேண்டிய சில கவிதைகள் சரிந்துவிடுவதைப் பார்க்கமுடிகிறது.(உதாரணம்:உற்சாகமற்ற பியட் கார்).கவிஞரின் அசிரத்தை கூட ஒரு காரணமாக இருக்கலாம்.இன்னும் கொஞ்சம் உழைப்பைச் செலுத்தியிருக்கலாம் என எண்ணச்செய்யும் படியான கவிதைகளை இத்தொகுப்பில் அவ்வப்போது சந்திக்க நேரிடகிறது ஒரு வாசகன்.ஆயினும் ஒரு முன்னுரையில் தோல்வியுற்ற கவிதைகளின் பக்கமே தன் கண்கள் சாயும் என்கிறார் மணிவண்ணன்.மேலும், இப்போது எழுதும் யாவரும் தரமான கவிதைகளை எழுதுவதாகவும் தான் தரமற்ற கவிதைகளையே எழுதவிரும்புவதாகவும் குறிப்பிட்டிருப்பார்.அவருக்கே உரிய பாணியில் முன்வைக்கப்பட்ட இது சமகால கவிதை மீதான நுட்பமான விமர்சனமாகக் கொள்ளலாம் எனினும் ஒரு கவிஞர் இவ்வளவு தெளிவற்ற முன்வைப்பை தன் இலக்காகக் ஏற்பது என்பது ஆபத்தானதாகவே படுகிறது.இதே போல இன்னொரு இடத்தில் தான் ஆழமான கவிதைகளை அல்ல மேலோட்டமான கவிதைகளையே எழுதவிரும்புவதாகச் சொல்கிறார்.தான் விரும்பும் வேறுமாதிரியான கவிதைகளை எழுதுவதற்கு இவ்வளவு வேறுமாதிரியான கொள்கைமுடிவுகளை எடுத்தாகத்தான் வேண்டுமா என்ன?தெரியவில்லை.
*
வீடு எனும் படிமம் தமிழ்க்கவிதையின் தொல்படிமங்களுள் ஒன்று.இது தமிழின் தொல்படிமங்களுள் ஒன்றான வீடு தொண்ணுறுகளில் தலைகீழாக்கப்பட்டது.வீடுபேற்றை,விடுதலையைச் சுட்டும் இப்படிமம் கிட்டத்தட்ட அடிமைத்தனத்தை நுண்ணதிகாரத்தை சுட்டுவதாக மாற்றம் அடைந்த்து.முக்கியமான காரணம் பெண்கவிதைகளின் வருகை.ஆண்கவிஞர்களும் சளைக்காது வீட்டை இடித்துத் தள்ள முயன்றனர் என்றே சொல்ல வேண்டும்.ஒவ்வொரு கவிஞரும் வீட்டை தம் கவிதைக்குள் அனுமதிக்கும் வகை சுவாரஸ்யமானதுஇந்தக் காலக்கவிதைகளில் வீட்டைத்தாண்டி அறை ஒரு புதிய படிமமாக அறிமுகமானதைக் குறித்தும் யோசிக்கலாம்.
லக்ஷ்மியின் கவிதைகளில் வீடு பெரும்பாலும் லக்ஷ்மி மணிவண்ணனின் வீடாகவே வியாபிக்கிறது.ஒரு கவிதையில்
“அண்டைவீட்டுக்காரர்கள்
வெறுமையின் சிவந்த கண்களை பார்த்துவிட்டு
வாஸ்து சரியில்லை என்கின்றனர்”
.இவ்வீடு உண்மையில் ஒரு பேய்வீடாகவே காட்டப்பெறுகிறது.அது மனித உறவுகளின் எல்லைகளையும் சாத்தியங்களையும் சோதித்துப்பார்க்கும் சாவடியாகவும் பயன்படுகிறது.இது தொடர்பான இரண்டு அபாரமான கவிதைகளைக் கூறியாக வேண்டும்.ஒன்று ‘வனவிலங்கு குலைத்துச் சென்ற வீடு’ இன்னொன்று ‘அப்பாவைப் புனிதப்படுத்துதல்’ இரண்டுமே எளிய நேரடியான கவிதைகள்.இதிலுள்ள மென்சோகம் விரவிய ஒலிகுறைந்த உணர்ச்சிகரம் சட்டென நெகிழ்ச்சி கவியச் செய்வது.ஒரு வீட்டில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் போது,குழந்தைகள் மிட்டாய்களைக் கொடுத்து ஏமாற்றப்படுகின்றனர்.எனினும் இந்தக் கவிதைகளிலும் கூட குற்றவுணர்ச்சி ஊர்ந்து நகர்வதைக் காணமுடிகிறது.வனவிலங்கு குலைத்துச் சென்ற வீடு வனவிலங்கையும் துரத்துகிறது போல.
அமெரிக்க பீட்(beat)கவிஞர்களில் பெரும்பாலானோர் ஒரு கட்டத்திற்கு மேல் பற்றுதலுக்காக ஏதேனும் ஆன்மிக மார்க்கத்தில் நுழையத்தொடங்கினர்.பெரும்பாலும் கீழைத்தேய மதங்களில்,சிலர் செவ்விந்திய பழங்குடி சடங்கியலில் சிலர் இயற்கை வழிபாட்டில் என நிறுவனப்படாத மதங்களில் ஆர்வங்காட்டினர்.எவருமே கத்தோலிக்க விசுவாசிகளாகவில்லை.ஒரு தொலை தூர ஒப்புமையாக இருப்பினும் இக்கவிஞர்களின் ஆன்மிக ஆற்றுப்படுதலைக் குறித்து தனியாக யோசித்துப் பார்க்கலாம் என்றே படுகிறது.
லக்ஷ்மி மணிவண்ணன் ஒரு கட்டுரையில்,சிறுதெயவங்கள் மீதான தனது உறவு அறிவார்த்த நிகழ்வாகத் தொடங்கவில்லை என்றும் இளங்காலங்களில் அடக்கி மறுக்கப்பட்ட அவை பின்னர் தன்னறியாமல் முளைத்தெழும்பியதாகவும் கூறுகிறார். பெருந்தெய்வங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமில்லை இச்சாமிகளுக்கு.அவை எளிய மனிதர்களுடன் சகஜ பாவனையில் உறவாடுகின்றன அதட்டுக்கின்றன மறக்கின்றன.அதனால் இக்கவிதைகளில் கவிஞரின் கூட்டாளிகளாகவே அவை நடமாடுகின்றன.சேர்ந்து மதுவருந்த,சிரிக்க(எப்போதும் சிரிப்பாணி தான்/ குலசாமிகளுக்கு),அலுவலகப் புணர்ச்சி முடிந்து காத்திருக்கும் நடுவயது காதலனுக்கு வெளியே காவல் நிற்க என சகல மானுடப்பணிகளிலும் துணையிருக்கின்றன.இன்னொரு விஷயம், அதிகாரத்திற்கெதிரான குறியீடாக பல இடங்களில் புத்தர்த்தம் பெறுகின்றன இவை.ஏர்வாடியில் கருகிச்செத்த மனநிலை தவறியவர்கள் சங்கிலிபூதத்தான்களாகவும்,யோனி தைக்கப்பட்ட ஆப்பிரிக்கச் சிறுமிகள் வீரலட்சுமியாகவும் உருமாற்றங்கொள்கின்றன.கிரிக்கெட் ஆட்டத்தை உள்ளூர் விளையாட்டுகளுடன் சேர்ந்தமர்ந்து வேடிக்கை பார்க்கின்றன.கவிஞனின் கருத்தியல் சார் நோக்கங்களையும் தனிப்பட்ட உறவுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் இவை உலகை உண்டாக்கியவை அல்ல மோட்சத்திற்கு வழியறிந்தவைகளும் அல்ல.ஆயினும் இம்மூதாதைகள் தான் கவிஞரை வழிநடத்துகின்றனர்.
விடியற்காலையில் திறக்கப்படும்
தேநீர்க்கடையை எதிர்நோக்கி
விரைந்து நடக்கிறான்
பேய்கள் அவனை வழி நடத்திச் செல்கின்றன.
ஜெர்மானியக் கவிஞர் ஹோல்டர்லினை முன்வைத்து ஹைடெக்கர் எழுதிய கட்டுரையில் ஓர் உவமை வருகிறது,ஒரு பெரும் மக்கள் திரள் முன்னர் நடந்து செல்லும் ஒருவன்.அவன் செய்யவேண்டியது எதிர்வரும் ஆபத்தை முன்கூட்டியே கணிப்பது.அக்கூட்டத்திற்கு அதைத் தெரியப்படுத்துவது.ஒரு பெரும்பள்ளதாக்கு இருக்கிறது என்றாலும் அதனுள்ளே உருண்டு விழுந்து சிராய்ப்புற்று மீண்டு ஏறி வந்து அக்கூட்டத்திற்குச் சொல்ல வேண்டும் எதிரே ஒரு பள்ளத்தாக்கு இருப்பதை.இது ஒருவிதத்தில் கவிஞனின் பணியே தான் என்கிறார் ஹைட்டெக்கர்.அவ்விதம் போராடி ரணமுற்று எழுந்து வந்த அவன் கொண்டு வந்த செய்தி என்னவாக இருக்கும் காயங்களும் ரத்தமும் அன்றி.ஆனால் அதிலிருந்து தான் நாம் அறிந்துகொள்ளமுடியும் அப்பள்ளத்தாக்கின் ஆழத்தையும் இருட்டையும் அங்கு வசிக்கும் மிருகங்களையும்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"