தவறு செய்யாத மனிதர்

தவறு செய்யாத மனிதர்

ஒரு குறிப்பிட்ட  குழுவினருடன் அல்லது சாதியுடன்,மதத்துடன் ,சங்கத்துடன் மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்கள் ,அவர்களை அறியாமலேயே அவர்களை மட்டுமே நம்புபவர்களாக மாற்றமடைந்து விடுகிறார்கள்.வெளியிலுள்ளவை அனைத்தும் வெறுப்பிற்குரியவையாக மெல்ல மெல்ல உரு மாறிவிடுகின்றன.எப்போதிலிருந்து வெளியிலுள்ளவை அனைத்தும்  வெறுப்பிற்குரியவையாக உங்கள் மனத்தால் உணரப்படுகிறதோ அந்த நிமிடத்திலிருந்து சுதாரித்துக் கொள்ளவேண்டும்.பிறவற்றில் வெறுப்பு உண்டாகும் கணத்திலிருந்து உங்கள் அகம் அழுக தொடங்குகிறது என்று அர்த்தம்.நீங்கள் சரியில்லை என்று பொருள் .நானாயிருந்தாலும் இதுவே. பிறவற்றிற்கும் நமக்கும் இடையில் அகத்தில் எப்போதும் ஒரு பாலம் உண்டு.தொங்கு பாலம் அது. தொங்கு பாலத்தில் இருக்கப் பழகிக் கொள்ளுமேயாயின் அகம் மாசுபடுவதில்லை.

நான் தவறே செய்வதில்லை என்பவர்களைக் கண்டாலே  எப்போதும் எனக்கு பெருத்த அச்சம் உண்டாவதுண்டு.ஓடியொழிந்து கொள்ள முயற்சிப்பேன். இவர்களுடன் இருக்கவே கூடாது என்று மனம் உடனடியாக முடிவு செய்யும்.அவர்கள் பாற்கடலில் நேரடியாகச் சென்று கடைந்தெடுத்த கொண்டு வந்த அமுதத்தை கையில் வைத்து அழைத்தாலும் எனக்கு வேறு வேலையிருக்கிறது என முடிவு செய்து விடுவேன்.நமக்கா வேலை வராது ? கடல் பார்க்கும் ,நதி காணும் ,கனி போற்றும் ,மலை உணரும் வேலைகள் !

அப்படியொருவரை சந்தித்தேன்.தவறே செய்யாத மனிதர்.நல்ல சித்தாந்தி.அவர் சார்ந்த சித்தாந்தம் எனக்கும் அமுதுதான்.அதில் குறையில்லை.

"நான் எவரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை .ஏனென்றால் நான் தவறே செய்ததில்லை" என்று பேச்சைத் தொடங்கினார்.

சரிதான் ஆனால் "நீங்கள் சரியென்று நினைத்து வைத்திருக்கிற அத்தனை விஷயங்களும் தவறாக இருப்பதற்கு வாய்ப்புண்டு தெரியுமா ?" என்று கேட்டேன்.

துரதிர்டவசமாக நான் அவருடைய வாகனத்தில் பயணிக்கும் நிலை.எத்தனை பெரிய வள்ளலார் என்ன பாவம் செய்தேனோ ? என இறைஞ்சுகிறான்.நாயிற்கடையேன் என்பது மாணிக்க வாசகன்.எதில் மசிவான் தவறே செய்யாத மனிதன் ? .வள்ளலாரிலும் மாணிக்கவாசகரிலும் மசிந்து விடுவானா தவறே செய்யாத மனிதன் ? அவர்கள் செய்திருக்கலாம்,நான் செய்வதில்லை என்றான் தவறே  செய்யாத மனிதன்.இனி இவனுடன் பயணித்தால் இந்த ஜென்மம் பாழ் என முடிவெடுத்து

"நீங்கள் தவறே செய்ய வில்லையெனில் எதற்காக வேலை மெனக்கெட்டு வாழ்கிறீர்கள் ?" எனக் கேட்டேன்.தவறு செய்பவர்களை, அதிலும் மீண்டும் மீண்டும் தவறை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செய்பவர்களை நம்பி ; அவர்கள் வாழ்பவர்களுக்காகத் தானே கடவுள் இந்த பிரபஞ்சத்தை தவறால் சிருஷ்டித்திருக்கிறான் ? நீங்கள் எதற்காக இங்கிருந்து வேலை மெனக்கெடுகிறீர்கள் ?

தவறு செய்யும் அனைவரையும் அழிப்பதற்காகத் தான் வாழ்வதாகச் சொன்னார்.கூடுமானவரையில் அவர் ஏற்றிச் சென்ற வாகனத்தில் இருந்து இடைவழியில்  இறங்குகிற சூழ்நிலை ஏற்படக்கூடாது என்கிற எனது மனமுயற்சிகள் படுதோல்வியடைந்தன ."நீயொரு விபரக்கேடு தவறு செய்யாத மனிதனோடு வழிப்பயணம் கிளம்பும் போதே நீ யோசித்திருக்க வேண்டாமா ? கோபத்தில் வெடிக்கும்  ஆதிசிவன் சப்தம் கேட்டதும் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டேன்..தவறு செய்யாத மனிதர்களோடு பத்து மைல்  சொகுசுப் பயணம்  செல்வதைக் காட்டிலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு வண்டியோடும் ரெயில் தண்டவாளத்தில் படுத்துத் துயிலலாம்.

"நான் எப்போதுமே தவறுகளின் பக்கமாக நின்று கொண்டிருப்பவன் ஐயா .முடிந்தால் எங்கேனும் முட்டுச் சந்தில் கொண்டு போய் உங்கள் வண்டியை மோதுங்கள்.நான் இறங்கிக் கொள்கிறேன் " என்றவண்ணம் தவறு செய்யாத மனிதரிடமிருந்து என்னை இறக்கிக் கொண்டேன்.

இதில் தவறு செய்யாத மனிதர் தவறு என்று எதனைக் கருதுகிறார் தெரியுமா ?.அவருக்கு அப்பாலுள்ள அத்தனையும் தவறு என்கிறார் தவறே செய்யாத மனிதர்.  பரிகாரமாக தவறு செய்யாத மனிதருக்காக "கேட்பவரே " எனது கவிதை தொகுப்பில் வெளிவந்திருக்கும் கைப்பிசகு.

கேட்பவரே - கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன் - வெளியீடு : படிகம், நவீன கவிதைக்கான இதழ், 4-184 தெற்குத் தெரு மாடத்தட்டுவிளை, வில்லுக்குறி 629 180 - விலை : ரூ320 - Cell No. 9840848681

  பிசகு

நான் ஒரு பிசகு
பின்னர் சரி செய்தேன் அதனினும் பிசகு
சரி செய்யச்செய்ய பிசகு
பெரும் பிசகாயிற்று.

நானா சரி செய்கிறேன்?
முன்னிருந்து நீங்களல்லோ சரி செய்கிறீர்கள் !
பிசகை சரிசெய்ய பிசகு தோன்றும்

பிசகுருண்டையை உருட்டிக்கொண்டே
செல்வேன்
ஒரு நாய்போல
பிசகுருண்டையைத் தின்னத் தருவேன்
பிடிமாவாக.

பிசகுருண்டையைச் சுட்டிக் காட்டுவேன்
நீங்கள் பெருந்துயரில் கண்டு வியந்த
உங்களுக்கேயுரிய
கசந்த ஒரு பௌர்ணமியாக...

பிசகுருண்டயை
சந்தியில் மாட்டுவேன்
பிசகுருண்டையை
சிபாரிசும் செய்வேன்
சுவைக்கவும் தருவேன்.

பிசகுருண்டை என்னிடம் வந்து சேர்ந்தது.
ஒரு வழியில்
உங்களிடம் வந்து சேர்வதோ
பிறிதொரு மார்க்கத்தில்...

எல்லா பிசகும் ஒன்றல்ல
ஒவ்வொரு பிசகும் ஒவ்வொரு கிரகம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"