பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே வற்புறுத்தக் கூடாது

பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே  வற்புறுத்தக் கூடாது

சமத்துவம்,சம உரிமை போன்ற பொது நியதிகளும் மனிதனின் நீண்ட தீவிரமான பயணங்களின் மூலம் கண்டடைந்தவைதாம்.பொது நியதிகளைக் கடைப்பிடிப்பதில் உள்ள நெருக்கடிகளை பிரச்சனைகளை  திறந்த மனதோடும்,நேர்மையுடனும்  விவாதிக்கவேண்டும் .விவாதிப்பது கண்டடைந்த பொது நியதிகளை நோக்கி சில அடிகளை எடுத்து வைக்க உதவ வேண்டுமே அல்லாது பொது நியதிகளை பின்னோக்கி இழுக்கும் நோக்கத்தை அடைப்படையாகக் கொண்டிருத்தல் கூடாது .ஏற்பில் முன்னகர வேண்டும் .அய்யன் அய்யப்பனின் சன்னிதானம் பெண்களும் கலந்து கொள்ளும் வண்ணம் மாற்றம் கொள்ள வேண்டியது காலத்தின் முன் அவசியம்.தவிர்க்கவே இயலாதது.

அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில் உள்ள நடைமுறை சிரமங்கள் சிலவற்றை தொடர்ந்து அய்யனின் சன்னிதானத்திற்கு சென்று வருகிறவன் என்கிற வகையில் நெருக்கமாக அறிவேன்.பல்லாண்டுகளாக ஆண்கள் மட்டுமே சென்று கொண்டிப்பதன் காரணமாக ,ஆண்கள் செல்ல மட்டுமே உகந்ததாக அதன் வசதிகள் பழக்கமாகியிருக்கின்றன.சன்னிதானத்தைச் சுற்றியுள்ள வரிசைகள் தற்போது ஆண்கள் செல்வதற்கு மட்டுமே உகந்தவையாக உள்ளன.இதுபோலவே பெண்கள் மட்டுமே செல்லத் தகுந்த கோவில்களும் கேரளாவில் உள்ளன.எப்போது பொது நியதியை முன்னிட்டு நான் ஏன்  செல்லக் கூடாது ? என்று ஒரு கேள்வி உருவாகி  எழும்பி விடுகிறதோ அப்போதே பழைய நியதிகள் நொறுங்கிவிடுகின்றன.புதிய நியதி என்பது புதிய தர்மம்.அதனைக் காப்பாற்றுவதன் பொருட்டு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டே ஆகவேண்டும்.பழைய முறையைப் பின்பற்றி வருகிறோம் ,பழைய நியதிகளைப் பின்பற்றி வருகிறோம் ,பெண்ணை ஏற்றுக் கொள்ள இயலாது என்று பதில் சொல்லவே இயலாது.அப்படி பதில் சொல்லுவது அதர்மம்.

சாதி இங்குள்ள எல்லாசாதிகளுக்குமே ,தலித்துகள் உட்பட மிகப்பெரிய வசதியாக இருந்து வருகிறது.அதற்குப் பல்வேறு நுண்ணிய காரணங்கள் உள்ளன.இங்குள்ள யாருக்குமே சாதி அகலுவதில் விருப்பமும் இல்லை.ஏன் என்பதை நாம் ஒருபோதும் வெளிப்படையாக விவாதிக்கவும் இல்லை.அதன் ஒருபகுதியை வசதிக்கு  ஏற்ப எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோமே அன்றி ஏன் சாதி இங்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது என்று விவாதித்துப் பார்க்கவே இல்லை.வெளிப்படையாக விவாதித்துப் பார்த்தால் மட்டுமே அதனைக் கடக்கும் வழிகளும் தோன்றும்.சாதி என்பது அதனாலேயே தொடர்ந்து இருப்பு பூண்டிருக்கிறது.அதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதனை முன்வைத்து சாதியை நியாயம் செய்ய முடியாது.ஏராளமான மக்கள் அதன் பொருட்டு நீக்கம் செய்யப்பட்டதை அல்லது வசதியானவகையில்  ஏற்பு செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது .அதனைப் போலத்தான் வழிபாடுகளில் ஆன்மீகத்தில்,பக்தியில் ,யோகத்தில் பெண்கள் ஈடுபடுவதை   தடைசெய்ய முடியாது.கூடாது.யோகத்தில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்கள்.சமூக  நீக்கம் செய்யப்பட்டிருந்த பெருவாரியான மக்கள் ஈடுபடுகிறார்கள்.யோகத்தில் ஈடுபடலாம் பக்தியில் ஈடுபட மறுப்போம் என்பது நீதியில்லை.தர்மமும் இல்லை.

ஈடுபடுபவர்கள் கேட்கவில்லை என்றோர் பராது சொல்லித் திரிகிறார்கள்.பொது நியதிகளை ஈடுபடுபவர்கள் மட்டும்தான் கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பது சுத்த மடத்தனம்.பொது நியதிகளை , பொது தர்மங்களை தர்மத்திற்கு எதிரானவர்கள் கூட கேட்கலாம் என்பதுதான் பொது நியதிகளின் சாராம்சம்.இது விளங்கவில்லையெனில் நீ யாராக இருந்தாலும் பேசுவது பழமைவாதம் தான்.

எங்கள் பகுதிகளில் உள்ள சிலர் அய்யப்பன் சந்நிதானத்திற்கு பெண்கள் வரக் கூடாது என்றோர் கையெழுத்தியக்கம் நடத்தினார்கள் .அதில் தி.மு.க காரர்கள் வரையில் இருந்தார்கள்.நமது அகமுரண் இது.என்னிடம் கையெழுத்து கேட்டவர் ஒரு தி.மு.க காரர்.இந்த அக முரண்கள் எனக்கு புதிதொன்றும் கிடையாது.ஏன் போகக் கூடாது ? என்று கேட்டேன்.வந்தவை வழக்கமான பதில்கள் .உங்கள் அன்னையும் ,உங்கள் மகளும் தீட்டென்று கருதியிருக்கிறீர்களா ? என்று கேட்டேன்.அப்படி ஒருவேளை கருதுவாயாயின் நீ வாழ்வதற்கே லாயக்கற்றவன்.நீ தான்  அந்த சந்நிதானத்திற்குப் போகத் தகுதியற்றவன்  .அங்கே அய்யப்பனுக்குத் துணையாக மஞ்சமாதா இருக்கிறாள் .பெண்குழந்தைகளை அவள் ஏற்றுக் கொள்ளாமலா போய்விடுவாள் ? எல்லா பெண்களும் யாரோ ஒருவனுக்கு மகள்.யாரோ ஒருவனுக்கு அன்னை.பகவதி.பகவதியை தீட்டென்று கருதும் தகுதி பெற்ற மகான் இங்கே யாரேனும் இருக்கிறார்களா ?

ஒரு குரல் எதிர்த்துக் கேட்பது வரையில்தான் பழக்கத்தின் வலிமை பேசலாம்.பழக்கத்தின் முன்பாக உரிமையின் குரல் எழுத்துவிடுமாயின் பழக்கத்தைப் புறந்தள்ளி விட வேண்டும்.அதுவே தர்மத்திற்குத் துணையிருத்தல்.

வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார்

வழிமறிக்காதீர்கள் போலீஸ்கார்

எங்கள்  ஊர் பகுதிகளை  ஒட்டித்தான் வெகுகாலமாக வசித்து வருகிறேன்.அங்கே இங்கே போய் வந்ததெல்லாம் மிகவும் சொற்ப காலங்கள்தாம்.எவ்வளவோ மகாராஜாக்கள் ஆண்டிருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர்.,கருணாநிதி ,ஜெயலலிதா இப்படி.தமிழ்நாட்டில் ஆளுவோரை மகாராஜாக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.மக்கள் வாக்கிலிருந்து வருகிற மகாராஜாக்கள் .இந்த பகுதிகளை சுற்றி லட்சம் மைல்களுக்கும் அதிகமாக பயணித்திருப்பேன்.வாகனங்களில் வண்டிகளில் என்று பல விதங்களில் .ஏன் கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்திற்காக கேரளா எல்லையில் கடற்கரையில் தொடங்கி திருநெல்வேலி எல்லை வரையில் நடந்தும் வந்திருக்கிறோம்.ஆனால் திருடர்களை போன்று போலீஸ்கார்  பொறி வைத்துப் பிடிப்பதை இப்போதுதான் காண்கிறேன்.எல்லோருமே எடப்பாடியை ஒத்த ,பன்னீரை ஒத்த சம வயது தோற்றங்காட்டும் போலீஸ்கார்.முதல் முறையாக மகாராஜா தோரணை அற்ற நடுவயது போலீஸ்கார் தோரணை கொண்ட ஆட்சியாளர்கள் இவர்கள்தாம்.பணிவின் பயங்கரவாதிகள்.

கேரளத்தின் நிலை வேறு .அதனால் தமிழ்நாட்டின் அரசியல் குறைபாடுடையது என்னும் எண்ணம் எனக்கில்லை.இங்குள்ள சுபாவம் இப்படி.மக்கள் மகாராஜா தோரணை இருந்தால் மட்டுமே ஏற்கிறார்கள்.ஆந்திரத்திலும் இவ்வாறே .இங்கெல்லாம் அரசாள ஒரு மீமனித பாவனை அவசியம்.கேரளத்தில் உண்மையில் பழைய மகாராஜாக்களே கூட மக்களை போன்றுதான் இருந்திருக்கிறார்கள்.திருவிதாங்கூரின் புகழ் பெற்ற ஆட்சியாளர் மார்த்தாண்ட வர்மா.அவருடைய புகைப்படங்களை நம் மக்களிடம் காண்பித்தால் பஞ்சாயத்துத் தலைவர் என்று கூட ஏற்க மாட்டார்கள் .இவை எள்ளி நகையாடுதற்கு உரியவை அல்ல .அருகில் அருகில் இருந்தாலும் அவர்கள் உருவாகி வந்த கூறுகளும் நம்முடைய கூறுகளும் வேறுபட்டவை.

கழிந்த வாரத்தில் மண்டைக்காடு   அம்மையைப் பார்ப்பதற்காக சென்று வந்தேன்.மூன்று இடங்களில் நிறுத்தி போலீஸ்கார் சோதனை நடத்தினார்கள்.சுசீந்திரம் எல்லையைத் தாண்டி ஈத்தாமொழி ,போலீஸ்கார் சரகம் தாண்டி ராஜாக்கமங்கலம்.ராஜாக்கமங்கலம் போலீஸ்கார் இருட்டுக்குள்  நரிகளைப்  போன்று நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் நின்ற இடம் அவர்களுக்கே பாதுகாப்பற்ற இடம்.ஏராளம் சுடலைகளும் பழைய அறுபத்தியேழு தலைப்பாகை கட்டிகளும் ஒடுக்கம் கொண்டிருக்கும் களம்.

ஆவணங்கள் அத்தனையும் சரியாக இருக்குமேயாயின் போலீஸ்கார் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னர் நேசமணி நகர் போலீஸ்காரிடம் மாட்டிக் கொண்டேன்.ஹெல்மட் அணிந்திருந்தேன்.அனைத்து ஆவணங்களும் வாகனத்தில் உண்டு.கால்களை  அகட்டி ஒரு போலீஸ்கார் நடுரோட்டில் வண்டியை நிறுத்தினார் .என்ன விஷயம் என்று கேட்டேன்.சில கணங்கள் என்ன விஷயம் என்று அவருக்கும் சொல்லத் தெரியவில்லை.எனக்கும் நிலை விளங்கவில்லை.தலைவிளக்கில் ஒரு கறுப்புப் புள்ளி வைக்க வேண்டும் என்றார்.அப்படியா ? என்று கேட்டேன்.அப்படித்தான் என்று சாலையில் ஒதுங்கி கொண்டார்.பின்னால் அமர்ந்திருந்த என்னுடைய மகளுக்கு எதுமே விளங்கவில்லை.

நேற்று எங்கள் வீதியில் வாகன சோதனை .வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்குள் வரும் வாகனங்களை ஹெல்மட்  சோதனை  இடக்கூடாது, செய்யக் கூடாது என்றுதான் சட்ட புத்தகத்தில் இருப்பதாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.சட்ட புத்தகத்தில் இருக்கட்டும்.இவர்களுக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது ? அரசாங்கம் டார்கெட் கொடுத்து வேலைவாங்குகிறது என்கிறார்கள் சிலர் .அரசாங்கத்திற்கு டாஸ்மாக்கையும் ,இப்படியான வழிப்பறி வசூலையும் விட்டால் வேறு வழியில்லை என்பது புரிகிறது.என்றாலும் எல்லாவிதமான வழிப்பறி யுக்திகளையும் சாதாரண ஜனங்களிடம்தான் காட்ட வேண்டுமா என்ன ? உண்மையில் வருமானப் பிரச்சனை அரசாங்கத்திற்கு என்றால் முறைப்படி மக்களிடம் தானம் கோரலாமே ? மக்கள் தரமாட்டேன் என்றா சொல்லப்போகிறார்கள் ? தானம் கேட்பது குற்றமொன்றுமில்லை தமிழ்மரபில். நான் அந்த ஆய்வாளரிடம்   அய்யா நீங்கள் நின்று கொண்டிருப்பது ஒரு வீட்டின் முற்றம்.இந்த வீதியின் பெயர் சித்திரை வீதி என்று சொன்னேன்.வீதியா வீதியா என்று ஈகோ முறிந்து புலம்பிக் கொண்டு நின்றவரிடம் "மாக்கோலம் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்" என்று காட்டிக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.

ராகு கேது பெயர்ச்சி வரையில் இப்படித்தான் இருக்கும் என்று அண்ணாச்சி விக்ரமாதித்யன் சொன்னார்.எனக்கு சரி .ஊருக்கெல்லாமே ராகு கேது சிக்கலா என்ன ? ராகுவும் கேதுவும் எப்போது பெயரும் ?

"சிலேட் " விக்ரமாதித்யன்-70 சிறப்பிதழ்

சிலேட்
சிலேட் இந்த இதழ் "விக்ரமாதித்யன் - 70 " சிறப்பிதழாக தயாராகிக் கொண்டிருக்கிறது.விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரைகள் மற்றும் வழக்கம் போல கதைகள்,கவிதைகள்,மொழிபெயர்ப்புகள் என இதழ் அமையும் .படைப்புகளை அனுப்பலாம்.slatepublications @gmail .com .மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்புங்கள்.
ஒவ்வொரு முறையும் இதழுக்கு செலவாகும் முதலீடுகளை திரும்பப் பெற இயலுவதில்லை.வழக்கமாக சிற்றிதழ்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பிரச்சனைதான் இது.மீண்டும் மீண்டும் இதனை மிகைப்படுத்த விரும்பவில்லை. இதனையும் கடந்தே ஒவ்வொரு இதழையும் கொண்டுவர வேண்டியிருக்கிறது .சிற்றிதழ் இயக்கம் என்பது இதனையும் உள்ளடக்கியதுதான் .கால தாமதங்களுக்கு வேறு எதுவும் காரணங்கள் இல்லை. சிலேட் இந்த இதழ் உருவாக்கத்திற்கு உதவி செய்ய விரும்புவோர்
உங்கள் பங்களிப்பினை செலுத்த விரும்புவோர் கீழ்கண்ட கணக்கில் செலுத்தி விட்டு ,எங்களுக்கு தகவல் தெரியப்படுத்துங்கள்.நன்றி.
LAKSHMI MANIVANNAN.A
SB AC NO - 183100050300648
TAMILNAD MERCANTILE BANK LTD
IFSC CODE -TMBL0000183
தொடர்பு எண் - 8220386795

கவிதைகள் - 16

கவிதைகள் - 16

ஏரியைக் கடந்து செல்லும் போது
ஏரியை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லமாட்டேன்
சிறுவயதில் மாடுகளுடன் சேர்ந்து குளித்த
ஊருணியை
அதில்
விட்டுச் செல்கிறேன்
என்பது
ஏரிக்குத் தெரியும்

ஏரி தன்னில் நீந்தத்
தொடங்குவதை அப்போது
அறியும் அந்த
பால்ய வயதின்
ஊருணி

பிறகு
இரண்டுபேரும் முங்கிக் குளிக்கத் தொடங்குகிறார்கள்
என்னுடைய
நீலத்தில்
சின்னஞ்சிறிய குளம்
சமுத்திரமாக

2

வழக்கமாக போகும் தெருவில்
நான் எதையும் காண்பதில்லை
வழக்கமாகப் போகும் தெருவிலிருந்து
படியிறங்கி
அல்லது
படியேறி
வழக்கமற்ற தெருவுக்குள்
காலடி எடுத்து வைக்க
வழக்கமாக போகும் தெருவின்
அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுகிறேன்

அப்போதும் வழக்கமற்ற தெருவின் காட்சிகளைப்
பார்க்கிறேனா ?

வழக்கமற்ற பெண்
சுட்டிக் காட்டிச் செல்கிறாள்
எனக்குள் எப்போதும்
கனன்று கொண்டிருக்கும்
காதலை

அக்கரையில் இருந்து
ஊர் பார்க்கப் பிடிக்கிறது

எப்போதும் விளிம்பிலிருந்து
பார்த்து கொண்டிருக்கிறேன்
மையத்தை

வழக்கமான பேருந்தில்
நான் தூங்கிய வண்ணம் பயணிப்பது
ஏன் என்பது
இப்போது
உங்களுக்கு
விளங்கியிருக்கக் கூடும்

குழந்தை வைத்து உடைத்த
பொம்மையில்
இருக்கிறதென்
பொருள்

3

இரும்பு மனுஷியைக் காண
கூட்டிச் சென்றான் நண்பன்

இரும்பு மனிதனைப் போல
அவள் இரும்பு மனுஷி
என்ற அறிமுகத்தோடு

இரும்பு மனுஷி இரும்புக்
கோட்டைக்குள் இருந்தாள்
இரும்பு நகைகள் அணிந்திருந்தாள்
இரும்பு
மட்டுமே அவளின் உபயோகம்
இரும்பு மனிதர்களின்
ராணுவத்தில்
ஐந்தாறு இரும்புக் கோழைகள்

டாய்லெட் எப்படி போவீர்கள்
என்று இரும்பு மனுஷியைப்
பார்த்துக் கேட்டேன்
வெஸ்ட்ரன் டைப் இரும்பு டாய்லெட்
உபயோகிக்கும்
இரும்பு மனுஷி
மலம்
துரு துருவாய் போகிறதென
சொல்கிறாள்

இரும்பைச் சாப்பிட்டால்
வேறு எப்படித்தான்
அது போகும் ?

சரியாகத்தான் நடக்கிறது எல்லாம்
இரும்பு மனுஷியின்
இரும்பு வீட்டில்

பாவம் இரும்பு மனுஷி வீட்டில்
வளரும் இரும்பு நாய்க்குட்டி
இருமுவது போலும்
குரைக்கிறது

4

உத்திரம் இடிந்து நொறுங்கிய கொட்டாரம்
நா நூறு வருட புளியமரம் பேய்க் கோலம் பூண்டு 
தின்று ஜீரணிக்கும் கோட்டை மதிற் சுவர்
நீ பெரிதா நான் பெரிதா என வானெழும்பி
கேட்கிறது

பூசையற்றுப் போன பின்வாசல் பகவதி
பிறழ்வுற்றுக் கிடக்கிறாள்

மாதவிடாய் கழுவி நாறிய
ராஜகுமாரிகளின் பின் கொல்லையில்
செழித்து நிற்கும் புற்களில்
அறுத்த கடாவின் ரத்த மணம்
கொழுப்புக் கவிச்சி

காலம் பகிரங்கமாக கீறப்பட்ட
உடலாய் வெயிலடிக்கும்
கொட்டாரத்தின்
முற்றத்தில்
கோலமிட்டு
மலரிட்டுச் சென்றிருப்பவள்
கொட்டாரத்திற்கு
வெளியில் வசிப்பவளாக
இருக்கலாம்
நான் அவளை கொட்டாரத்தினுள்
இருப்பவளாக
விரும்புகிறேன்
வயததிக
பால்ச் சிறுமியாக

அவள் வாள் வைத்து வரைந்த
கோலம்போலும் இருக்கிறது
அது

[ வேலுத்தம்பி தளவாய்க்கு ]

5

நான் அந்த ஊருக்குப் போய் வந்தான்
நான்
இந்த ஊருக்குப் போய் வந்தான்
எந்த ஊருக்குப் போய் வந்தாலும்
தன் சொந்த ஊரில்தான்
இருந்து கொண்டிருக்கிறான்
இந்த
நான்

அவருடன் செல்கையில்
அவர் காட்டித் தந்தார்
இவருடன் செல்கையில்
இவர் காட்டித் தந்தார்
எல்லோருடன் செல்கையில்
புயல்வேகத்தில் படிவிட்டிறங்கி
எல்லோருடனும் சேர்த்தேறி
அமர்ந்து கொண்டது
அவருக்கும் தெரியவில்லை
இவருக்கும் புரியவில்லை

இந்த நானை எடுத்துக் கொண்டுதான்
பெருமழையில்
ரயில் பயணத்திலும் போய்க் கொண்டிருந்தான்
தன் மாயவுலகை
தானே தாண்டித் தாண்டி செல்கிறது
இந்த நான் பயணிக்கும்
சொந்த ரயில்

6

ஒரு கவிஞன் பலசமயங்களில் கவிஞன் அல்லாதவனாகவும் இருக்கிறான்
ஒருகவிஞன் பலசமயங்களில் கவிஞனாகவும் இருக்கிறான்
ஒருகவிஞன் பலசமயங்களில் காட்டுப்பூச்சியாகவும் இருக்கிறான்
எப்போதோ
சிலசமயங்களில்
எப்போதோ
தவறவிட்ட
இலந்தைப் பழமாகவும் இருக்கிறான்
ஒருபெரும்
விபத்துக்கு நிகராக
ஒரு முதுபெரும் பேருந்து
ஏறி மிதித்துச் சென்ற
ஒரு நாய் போல

அது குரைக்கும் சப்தம்
எழும்பும் காட்சியை
புதுவேலை செய்பவனாகவும் இருக்கிறான்
ஒரு பிரம்ம முகூர்த்தத்தில்

7

எனக்கு ஸ்தல புராணம் கிடையாது
வரலாறும் இல்லை
உளவியலுக்கு வேலை இல்லை
பாரம்பரியம் கிடையாது

நியாபகத்தை
வெட்டி விட்டு விட்டேன்

நித்தத்தில் வலித்து
விரிந்த மலர்
எனதுடல்
சரித்திரம் தேடாதே
வந்து பார்
ஆனால்
தொடாதே

நீ தொட்டு எடுத்துக் கொள்ள
என்னிடம்
ஏதும் கிடையாதுஉள்ளும் புறமுமாக
வந்து செல்கிறது அலை
உள்ளும் புறமுமாக
அசைகிறது கடல்

உள்ளத்தில் கடல் வந்து நிரம்ப
புறத்தில்
கிடந்தது புரள்கிறது
இந்த மாலை

நினைவுகளில்
மணல் ஊரல்

கடலுக்கும் எனக்கும் இடையில்
எழும்பி நிற்கும் பாலத்தில்
அமர்ந்து
இருவருமே பேசிக் கொள்ளவில்லை

கடல் வெளியிலிருக்கிறதென்று
தோன்றும் 
மாயைபச்சை பக்கட்
சிவப்புக் குடம்
நீல தூக்குவாளி
ஆரஞ்சு நிறத்தில்
பிளாஸ்டிக் வாரியல்
நடுவில் உயர்ந்து நிற்கிறது

சைக்கிளின் பின்புறத்தில்
வண்ணமயமாக கட்டியிழுத்து
வந்து கொண்டிருக்கிறான்
இன்றைய நாளின்
வீதி வியாபாரி
மனமெல்லாம் நிறைந்து நிற்கிறாள்
இளைய மகள்
கனவில் வலித்து
மிதிபட்டு வந்து கொண்டிருக்கிறது
சைக்கிள்

அம்மன் வாகனத்தில் வருகிறாளென்று
எழுந்து நின்று
கும்பிட்டு விட்டேன்

10 

ஆட்டம் தொடங்க
இன்னும் அரைநாள்
அவகாசம்

இப்படி பல்வேறு தாடிக்காரர்கள்
வந்த வண்ணமும் சென்ற வண்ணமும்
இருக்கிறார்கள்

செவலை தாடிக்காரர் இருவர்
அரைகுறையாகப் புரிந்தும் புரியாமலும்
லோடு ஆட்டோவில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சாலைப்பழுதில் ஏறி இறங்குகையில்
சரிந்து மோதிக் கொள்கின்றன
கொம்புகள்

ஊருக்குப் புறத்தே
தற்காலிக பிளக்ஸ் பேனருக்கு
இந்த பக்கம் சவுக்கில்
வெள்ளை தாடிக்காரர்
உரசிக் கொண்டு நிற்கிறார்
கருப்பு தாடிக்காரர்
குறி விறைக்க எழுச்சியடைகிறார்
செவலை தாடிக்காரர்
சிறுநீர் ஒழுகல்

நாளை விடியுமென்று
பல கணக்குகள் வைத்திருக்கும்
கருப்ப சாமி
சுற்றிச் சுற்றி வருகிறான்

நான்குபேருக்கும்
பதற்றம் ஒன்றே

மூன்றுபேர் தப்பப் போவதில்லை
என்பது எல்லோரும் அறிந்ததுதான்
கருப்பசாமி
தப்பித்து விடுவாரா ?
இந்த கருணை
விளையாட்டில்

11

எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும்
இந்த ஊரில் என்னதான் செய்யமுடியும் சொல்லுங்கள்

பயிர் விளைவதில்லை
தொழில் நடப்பதில்லை
தோட்டம் செழிப்பதில்லை
அலுப்பின் ஆபாச
மேகமூட்டம்

வினோதம் இல்லை
விளையாட்டும் இல்லை
எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும்
இந்த ஊர் எப்படி விளங்கும் சொல்லுங்கள் ?

முதலில் எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும்
ஊரை விட்டு
எல்லோரும் கிரிமினல்களாக இருக்கும்
ஊருக்கு சென்று விட வேண்டும்
அது குழந்தையின் ஊராக
இருக்கக்
கடவது

சந்தோசம் ,நிம்மதி இரண்டையும்
கற்றுத் தேர்ந்தால்
மடையனின் ஊர் வாசல் கதவு
திறக்கும்

அங்கு சென்றால்
அறிவாளிகளின் ஊரைத்
தலை முழுகிவிடலாம்

பின்னர் இந்த அறிவாளிகளின்
ஊருக்குத் திரும்பும் போது
நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது
புல்லாங்குழலால்
கண்ணன் வீட்டில் தேநீர்
அருந்தலாம்
இயேசுவின் காட்டில்
செவலை ஆட்டுடன்
தீயை மேயலாம்

தர்க்கத்தை வெட்டி விறகெரிக்க
சூபி
வந்துதிப்பான்
நமக்குள்ளிருக்கும் நண்பன்
நமக்காக

எல்லோரும் அறிவாளிகளாக இருக்கும் ஊரில்
டெங்கி
வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது
எச்சரிக்கை

12 

முதலில் இரண்டு டீ போடுங்கள்
இல்லை மூன்றாகப் போடுங்கள்
மற்றொருவர் வருகிறார்

ஐந்து டீ பின் ஆறானது
ஏழானது எட்டாவது
எட்டு பத்தானது
அந்தோன் சேகவ் தொடங்கி
கோணங்கி
ஜெயமோகன்
ஷோபா சக்தி
பினராய் விஜயன்
எடப்பாடி
தெருவெல்லாம் துள்ளிக் குத்தித்த டீ
மோடி

யாரும் டீ க்கு பணம் தர வேண்டாம்
என்று கூறி
கடைக்காரருக்கு குறிப்பால் உணர்த்தும்
நண்பன்
ஓங்கிய குரலில்

அனைவர் வாயிலும் தேநீர் சுவையை
எடுத்தகன்று பைக்கில் கடந்து
செல்கிறான்

வென்னீராயிற்றுச்
சுவை
தெருவில் மரித்த டீயின்
அமைதி

13

அன்னபூர்ணா கபே
கோமதியம்மாள் நடத்தியது
நெய் தோசை
பால் ஆப்பம்
என இருந்த போது
அவளை இளவரசியென்றுதான் சொல்வார்கள்
அவள் கை காப்பி சாமி பிரசாதம்

அன்னபூர்ணாவில்
புரோட்டா கறி கிடைத்தபோது
கோமதியம்மாள் கண்களை சுற்றி
கருவளையம் வந்தது

எதிர்த்த பால்பாண்டி கடையில்
புரோட்டாவை நிறுத்திவிட்டு
நெய் தோசைக்கும்
பால் ஆப்பத்திற்கும்
மாற்றினாள்
பால்பாண்டி மனைவி
வரலெட்சுமி

வரலெட்சுமி போட்டுத் தருகிற காப்பியில்
கோமதியம்மாளின் முகம் தெரிகிறது என்கிறார்கள்
கஸ்டமர்கள்

நேருக்கு நேராக
வரலட்சுமியை பார்த்த கோமதியம்மாள்
பார்த்தாயா...
உன்னை போல நானிருக்கிறேன்
என்னைப் போல நீயிருக்கிறாய்
தோற்றம்தான் வேறே என்று
செல்லம் கிள்ளிச் சென்றாள்

கிள்ளிய இடத்தில்
பூத்துக் குலுங்கிற்று
மல்லிச்சரம்

14 

குற்றத்தின் பெயர் காரணம்

நீங்கள் அவர் மீதுதான்
குற்றம் சொல்கிறீர்கள்
நீங்கள் தண்டிக்க நினைப்பதும்
அவரைத்தான்
குற்றத்தில் என் பங்கு ஏதுமில்லை
இனிமேலும் கூட எனக்கு அதனைச் செய்யும்
உத்தேசமுமில்லை

அவர் இல்லாமற் போனால்
நீங்கள் நிம்மதியடைவீர்கள் என்பதும்
விளங்குகிறது

உங்கள் பராது முழுதும்
அவர் மீதுதான்
என்மீதில்லை

நீங்கள் அவர் மீதுதான்
குற்றம் சொல்கிறீர்கள்
ஆனால் பாருங்கள்
எனது உடல் முழுவதும்
பதற்றத்தில்
நடுங்குகிறது

என் மீது சொல்லப்படாத புகாரை
என் மீது வைக்கப்பட்ட புகார் போல
நீங்கள்
சொல்லிக் கொண்டே
இருக்கிறீர்கள்
எதிரே நின்று

உங்கள் உடல் நடுங்கும்
நீங்கள் செய்யாத குற்றத்திற்கு
என்ன பெயர்
சுட்டுவீர்களோ
அதுதானே
நீங்கள் சுட்டும் குற்றத்திற்கும்
பெயராக இருக்க முடியும் !

எனக்கு உங்கள் குற்றச்சாட்டு
நட்சத்திரத்தை பற்றியதென
ஒருநாள்
வரக்கூடும்

அப்போதும் நீங்கள்
குற்றம் சொல்வீர்கள்
எனதுடல் நடுங்காத
குற்றத்தை

15

விதைக்குள்ளிருந்து வெளியேறிய விருட்சமாக
நீங்கள் வெளியேறியதையும்
பின்னே
விதைக்குள் நுழைந்தடங்கிய
விருட்சமாக
நீங்கள்
உருமாறியதையும்
சாட்சியாக உடனிருந்து
சந்தர்ப்பத்தில்
பார்த்துவிட்டேன்
காட்சிகளே

உடலை உதறினால்
எத்தனையெத்தனை காட்சிகள்
உதிர்கின்றன
இந்த மரத்தில் ?

16

நினைவும் உடலும்
தனித்தனியே பிளவுண்ட போது
நினைவு என்ன நினைத்திருக்கும் ?
நான் கண்ட காட்சிகள் என்று பேணப்பட்ட
காட்சிகள் உடலின்றி
தனித்திருந்திருக்கும்

உடலை உதறிய காட்சிகள் அவை
காட்சிகளை உதறிய உடல் இது

நினைவை நோக்கி உடலும்
உடலை நோக்கி நினைவும்
காட்சிகளில் பற்றியெரிய
நானெழும்பி
சுடரானேன்
உதறிய உடலை எட்டிப்பிடித்த
நான் என்பது நான்தானா
இல்லை வலியில் இணைந்து
முகம் காட்டும்
திருநீற்றுக் காட்சிகளா ?

இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள்

இரணியல் அரண்மனையை எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான இல்லமாக மாற்றுங்கள்.

சில தினங்களுக்கு முன்பு நானும் சூர்யாவும் மண்டைக்காடு பகவதியைப் பார்த்து விட்டு இரணியல் அரண்மனைக்குச் சென்றோம்.மழைச் சாரல். அரண்மனையின் சிதிலம் பேயாக முகத்தில் அறைந்தது.எவ்வளவோ பேர் இது குறித்து பேசியிருக்கிறார்கள்.இவ்வளவு சிதைவடைவதற்கு முன்னரே இதழ்கள் இது பற்றி எழுதியிருக்கின்றன.

சுமார் நான்கு கோடி ரூபாய் புனரமைப்பதற்காக ஜெயலலிதா 2014  ல்  நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.இதுவரையில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.மட்டுமல்ல இப்போதைய நிலையில் அதனைப் புனரமைப்பது இயலாது .எல்லாமே முடிந்து கிடக்கிறது இரணியல் அரண்மனை.சிதிலத்தை அகற்றி எழுத்தாளர்கள்,கலைஞர்களுக்கான ஒரு இல்லமாக அதனை மாற்றலாம்.இந்த அரண்மனைக்கு இதுவரையில் எல்லோரும் கூட்டு சேர்ந்து செய்துள்ள  அநீதிக்கு அது பரிகாரமாக அமையும்.ஆனால் யார் செய்வார்கள் இதனை ?

கேரளா அரசுக்கு இந்த அரண்மனையின் பேரிலும் ஆரம்பத்தில் ஆர்வம் இருந்தது.இப்போதைய நிலையை காணும்போது தமிழ்நாடு அவர்களுக்கு இதனை விட்டுத் தந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.அவர்கள் நிச்சயமாக பொலிவு படுத்தியிருப்பார்கள்.அந்த அரண்மனையின் சிதைவு நம் மனம் அடைந்துள்ள சிதைவோடு ஒப்பிடும் படியானதுதான்.நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி பட்டினி போட்டு கொல்வதற்கு   நிகரானது ,இந்த அரண்மனைக்கு தமிழ்நாடு செய்திருக்கும் துரோகம்.

கோடிக்கணக்கில் மதிப்புள்ள தேக்கு உத்திரங்கள் விறகுக் கட்டைகளை போன்று எலும்பு தள்ளி நிற்கின்றன.

எனக்கு உள்ளே செல்லவே பயமாக இருந்தது.காலத்தின் பேரில் நமக்குள்ள இளக்காரம் ஒரு மமதை என்பதனின்றி வேறில்லை.கால பைரவன் மீதான  அலட்சியம் அது .துயரம்.

தற்போது   இந்த பழுது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில் உள்ளது.என்னைக் குற்றுயிருடன் வதைத்துக் கொல்வதற்காகத் தான் ,என்னை பொறுப்பில் வைத்துக் கொண்டிருந்தீர்களா ? என்று இந்த அரண்மனை கேட்பது போலிருக்கிறது இப்போது.கேள்வி யாருடைய செவியேனும் சென்றடையுமா ?

ஊழ்  .மீண்டு வரும் ஊழ்

கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது

கந்துவட்டி பலரோடும் தொடர்புடையது

கந்து வட்டி என்பது பணத்தைக் கொடுத்து வசூலிப்பவரோடு  மட்டும் தொடர்புடைய ஒன்று அல்ல. பணத்தைக் கொடுத்து வாங்குகிறவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் என்கிற வட்டியில் கல்லூரிப் பேராசிரியர்கள்,வங்கி மேலாளர்கள் ஆகியோரிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள்.இவர்கள் மட்டும் என்றில்லை இவர்கள் எங்கள் ஊரில் அதிகம்.மேலும் பல தரப்பினரும் உண்டு. வசூலித்தாலும் இல்லையென்றாலும் ,வசூலிக்க இயலவில்லை என்றாலும் ஐம்பது ரூபாய் வட்டியை இவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்.இல்லையெனில் இவர்கள் தொழிலே செய்ய முடியாது.இரண்டாவது காரியம் சமூகத்தின் உள்ள பண தேவையின் இடத்தை கந்து வட்டி பிடித்து வைத்திருக்கிறது.நமது அனைத்து வங்கிகளும் ஏழைகள் விஷயத்தில் அடைந்துள்ள படுதோல்வியின் இடத்திலேயே இது வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு கல்லூரிப் பேராசிரியர் கந்து வட்டியில் பத்து லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.மாதம் அவர் அதன் மூலம் ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார் என்று பொருள்.யோசித்துப் பார்த்தால் வசூலிப்பவன் இவ்விஷயத்தில் வெறும் கூலியாள் மட்டுமே என்பது புலப்படும்

இன்று கந்து வட்டிக்கு நிகரான தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் வந்து விட்டன.உதாரணமாக பஜாஜ் பைனான்ஸ் போல .இருப்பினும் அன்றாடம் பணம் தேவைப்படுகிற ,அன்றாடம் இந்த கடனை அடைக்கிற ஏழைகளுக்கும் சற்று மேல்மட்டத்திலேயே இந்த நிறுவனங்கள் பணிபுரிகின்றன.கந்து வட்டி ஒருவரை கிளர்ச்சியடையச் செய்து நுகர்வோர் ஆக்குவதில்லை.நெருக்கடியான விதியை மீறிய துன்பங்களில் இருந்து விடுபடும் மார்க்கமாக ஏழைகள் இதனைத் தேர்வு செய்கிறார்கள்.நிறுவனங்கள் முப்பதினாயிரத்திற்கும் மேல் நீ துணி மேலும் பல தரப்பினரும் உண்டு.  இன்ன கடையில் உனக்கு கடன் தருகிறோம் என்பது வரையில் கிளர்த்துகின்றன.இந்த நிறுவனங்களின் முன்பாக தீக்குளிக்கும் வைபவங்கள் நடப்பதற்கும் அதிக கால அவகாசங்கள் ஏதும் இருக்கப்போவதில்லை.கந்து வட்டி நேரடியாக கண்களில் தெரிகிறது . நிறுவனங்கள் மறைந்திருக்கிறார்கள்.இவை அனைத்து காரியங்களும் நமது வங்கிகள் ஏழைகளிடமிருந்து அந்நியமாகியிருப்பதன் அடையாளங்கள்தான்.

காலையில் சந்தைக்கு ஐந்து மணிக்கு கிளம்பி  காய்கனிகள் வாங்கி தெருவில் விற்று அன்றாடத்தில் போரிடும் ஒரு பாட்டிக்கு தினமும் காலையில் கொஞ்சம் பொருள் தேவைப்படுகிறது.ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்காரர்களிடம் பெறுகிறாள் .900  ரூபாய் கையில் கொடுப்பார்கள் .மாலையில் ஆயிரமாக தரவேண்டும்.மதியத்திற்குள் அவளுக்கு இதனையும் கொடுத்து போக அவளிடம் 200  ரூபாய் மிஞ்சும்.கடன் இருக்கும் ஏழைகள் எப்போதும் கலங்கி கொண்டே இருப்பார்கள்.பணம் இருப்பவர்கள்தான் கடனுக்குக்  கலங்குவதில்லை.அதனை அடைத்தால்தான் நிம்மதி பெறுவார்கள். 

இதனை ஏன் சொல்கிறேன் எனில் ,இவர்களை வங்கிகள் இதுகாறும் திருப்பி செலுத்தமாட்டார்கள் என்கிற நோக்கிலேயே அணுகுகின்றன.இது உண்மையில்லை.இந்த அவசர கடன் தேவையை தினமும் அவர்கள் பைசல் செய்யவில்லை எனில் அவர்களுக்கு வாழ்வும்  இல்லை .தொழிலும் இல்லை என்பதே உண்மை .ஏழைகள் கடனைத் திருப்பித் தரமாட்டார்கள் என்பது ஒரு மேல்தட்டுப் பார்வை.கண்ணோட்டம்.இதில் துளியும் உண்மை கிடையாது.  இப்படி பெறுகிற பெற்று தினம் தோறும் பைசல் செய்கிற ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதனை ஈடுகட்டுவதற்கென்று நமது வங்கிகளிடம் இதுகாறும் ஒரு அமைப்பு கூட கிடையாது.இது முதல் வகை .

லாரி தொழிலாளிகள் வெளியூருக்குக்  கிளம்பும் போது பணம் தேவைப்படும் .டீசல் ,சுங்க வரி, போலீஸ் மாமூல் இத்யாதி விஷயங்கள். ஊருக்குத் திரும்ப ஒருவார காலம் ஆகும் .வந்ததும் முதல் வேலையாக பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் கீழே இறங்குவார்கள்.வீட்டில் நடையெடுத்து வைப்பது பிற்பாடுதான்.இது ட்ரிப் வட்டி.இப்படி வாங்க வேண்டுமா ? என்று மத்தியதர வர்க்கத்து சிலிபிரட்டிகளுக்கு தோன்றலாம்.இந்த தொழில் செய்பவனுக்குத் தெரியும் .இப்படியில்லாமல் தொழிலே செய்ய முடியாது என்பது.பத்தாயிரம் வாங்கிச் சென்றால் இரண்டாயிரம் சேர்த்து தரவேண்டியிருக்கும்.இந்த வட்டித் தொழில் செய்து பெரியாளாகி அமைச்சர் ஆனவர்கள் வரையில் உண்டு.சகல காட்சிகளிலும் ஜெயிக்கும் தரப்பில் இருப்பவரும் இவர்தான்.ம .தி.மு.க ; தி.மு.க ; அ .தி.மு.க என்று ஒரு வேறுபாடும் இங்கே வேலை செய்வதில்லை.எனவே இந்த கட்சிக்காரர்கள் கந்து வட்டிக்கு எதிராகக் குதிப்பது இருதயத்திற்கு நல்லதல்ல.பிற கட்சி காரர்கள் சொக்கத் தங்கம் என்பதல்ல இதற்கு அர்த்தம் .அவர்களுக்கு வேறுவிதமான நாலாந்தர வேலைகள் பணிகள் நிறைய இருக்கின்றன.இந்த வகை  கந்து வட்டியில் இரண்டாவது வகை .இதனை ஈடு செய்வதற்கும் நம்மிடம் கூட்டுறவு அமைப்புகள் உட்பட எதுவுமே கிடையாது.

தின வட்டி சிறு வியாபாரிகளிடம் மொத்தமாகக் கொடுத்து விட்டு தினமும் வசூலிக்கும் வகை.சிறு வியாபாரிகள் சேமிப்பிற்காக இதனை வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.வியாபார முதலீடுகளுக்கு பயன்படுத்த வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள்.இதனைத் தவிர்த்து சந்தையில் கோடிக்கணக்கில் சிலநாள் தேவைகளுக்கு கைமாற்றம் செய்யப்படுகிற பணத் தேவைகளுக்கு என வட்டிக்கு விடுகிறவர்கள் உண்டு.இவர்களில் பலரும் அரசியல் பிரமுகர்களே

தவிர சொத்து வாங்குதல் விற்றல் தொடர்பாக ,வாகனங்கள் வாங்க விற்க , திருமண அவசர தேவைகள் இவை எல்லாவற்றையுமே ஏழைகள் மட்டத்தில் ஈடுசெய்யும் அமைப்பாக வங்கிகள் எதுமே நமக்கு கிடையாது.

ஏழைகளிடம் வங்கி அமைப்புகள்   இது போன்ற விஷயங்களில் உதவிகரமாக இருக்க வேண்டுமெனில் முதலில் அவை எளிமையாக இருத்தல் வேண்டும்.ஆனால் நமது வங்கி அமைப்புகள் அனைத்துமே சிக்கலானவை.வாரா கடன்களிடம் பக்குவமாகவும் ,ஒழுங்காக திரும்பிச் செலுத்தும் தரப்புகளிடம் சிக்கலாகவும் முகத்தை திருக்கிக் காண்பிப்பவை.ஏழைகள் தேவையில் முன் நின்று கொண்டிருக்கும் போது காத்திருக்கவே இயலாது.நமது வங்கி அமைப்பிடம் உதவி பெற்று பாட்டி சந்தைக்குச் செல்ல வேண்டுமெனில் நடக்குமா ?

எந்த தீமை நிறைந்த அமைப்பாக இருந்தாலும் சரி ,அது தேவையை முன்னிட்டு மட்டுமே மக்களிடம் செல்வாக்கு பெறுகிறது.அந்த தேவையை வேறொன்று ஈடுகட்டாதவரையில் அந்த தீமை ஒழியப்போவதில்லை என்பதே நிஜம்.இன்று கந்து வட்டியால் வாங்கியவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்.கந்து வட்டி கொடுத்ததாலேயே தூக்கில் தொங்கிய பலரும் உண்டு.அழிந்தோர் அநேகம் பேர்.

இங்கே வாங்குகிறவன் ,வசூலிப்பவன் இருவருமே தற்கொலைப் பாவைகள்தாம்.மறைந்திருப்போர் அல்ல.

அபத்தம் என்பது ...

அபத்தம் என்பது ...

அகம் எவ்வாறு கம்போஸ் பண்ணப்பட்டு மெருகு பெறுகிறதோ ,அது உருகுலையும் போது ஏற்படுவது அபத்தம்.அது ஒரு நிலை. ஒன்றில் ஒன்று முற்றுப்பெறுகிற, முடிவடைந்த ஒரு நிலை. .

படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் இத்தகைய நிலை பல முறை தங்களில் ஏற்படுவதை உணர்ந்திருப்பார்கள்.உடல் கட்டுமானம் உருவாவதைப் போன்றுதான் இதுவும் அகக்கட்டுமானம்.உடல் கட்டுமானம் ஒவ்வொருவருக்கும் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது .ஆனால் இந்த அகக் கட்டுமானம் அவ்வாறானதல்ல.ஒன்று உருக்குலைந்து சரிந்து வீழ ,அபத்தம் தொற்றி மற்றொன்று எழுகிறது.அகக்  கட்டுமானத்தில் சரிவே நிகழாதவனை அல்லது சரிவு ஏற்படும் வாய்ப்பே இல்லாதவனை அல்லது அதற்கான வாய்ப்பே ஏற்படாதவனை சராசரி மனிதன் எனலாம்.அவனிடத்தில் படைப்பு செயல்பாடுகள் ஏதுமில்லை.இவன் தனக்கு வெளியில் எதுவுமே கிடையாது என்னும் நம்பிக்கை தரப்பைச் சார்ந்தவன்.தனது நம்பிக்கையை இரும்பு உலக்கையாக பற்றிக் கொள்ள நினைப்பவன் .

இருப்பதிலேயே சுலபமான அகக் கட்டுமானம் என்பது அரசியல் கருத்துக்களால் அதனைக் கட்டி நிரப்புவதுதான்.விடலைகள் ,பெரும்பாலான அவசர பெண்கள் ,இரும்பு ஆண்கள் அதிகம் செலாவணி ஆவது இதன் பால்தான்.காரணம் அரசியல் பொருட்களால் அகக் கட்டுமானம் பெறும் போது ஒரு கூட்டு பலம் கிடைக்கிறது.கூட்டு அதிகாரம் கிடைக்கிறது.இது  போலவே தகவல்களால் உண்டாகிற அகம் ,அறிவுப் பொருட்களால் நிரப்பப்பட்ட அகம் என பலதும் உண்டு.இவற்றை அகச் செயல்பாட்டின்  ஆரம்ப நிலை என எடுத்துக் கொண்டால் ஒவ்வொன்றிலும் தொடர்ந்து பின் வருகிற அபத்தத்தை கண்டுணர்ந்து அடுத்த அடுத்த நிலைகளுக்குள் நகர்ப்பவனே சுய ஓர்மை அடைகிறான்.

எவ்வண்ணம் கட்டப்பட்டுள்ள அகமாக இருப்பினும் சரி அது அபத்தத்தை  எட்டும் போது படைப்பு ரீதியில் எதிர்கொள்ளும் போது கலையாகிறது.அழகு பெறுகிறது.அகம் கட்டப்பட்டுள்ள விதம் இரும்பு நம்பிக்கையாக மாறிவிடும் எனில் அது அபத்தத்தை எதிர்கொள்ள நேர்கையில் கடுமையான மனச் சோர்வையும் எடுத்துக் கொண்டு உடன் வரும்.ஆன்மிகம் நல்ல வாய்ப்புதான்.ஆனால் படைப்பின் அளவிற்கு சிறப்பான வாய்ப்பு அது என்று சொல்வதற்கில்லை.ஏனெனில் ஆன்மீக ரீதியில் கட்டப்படுகிற அகம் உடனடியாக இரும்பு நம்பிக்கைகளுக்குள் புகுந்து விடுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டது.அரசியலைப் போன்றே இங்கும் கூட்டம் அதிகம்.அதிகார பலம் அதிகம்.எங்கு கூட்டத்தின் அதிகார பலம் எதுவுமின்றி தனித்து வாழும் விதத்தில் உனக்கொரு அகம் வாய்கிறதோ ,அதுவரையில் உனக்கு பயணப்படுத்தலுக்கான தூரம் அதிகமாக இருப்பதாகவே பொருள்.

சரி.படைப்பு ரீதியில் எதிர்கொண்டால் அபத்தம் நீங்குமா ? என்றால் உறுதியில்லை.சகலத்தையும் பரிசீலிக்கும்  போது இதில்  கொஞ்சம் கூடுதல் சிறப்பிருக்கிறது  அவ்வளவுதான்.

வரலாற்றால் ,வன்முறைகளால் ,அரசியல் அறிவால்,மதங்களால் நிகழ்ந்தவற்றை ஒப்பிடும் போது படைப்பு மேலானது.அவ்வளவுதான் 

ஆத்மாநாம் விருதென்னும் மதிப்பீட்டின் பாவனை

ஆத்மாநாம் விருதென்னும் மதிப்பீட்டின் பாவனை

இலக்கிய மதிப்பீடுகளை உள்ளடக்கமாகக் கொண்டிராத விருதுகள் உண்டு.ரோட்டரி பிரமுகர்களாகும் லட்சியத்தை உள்ளடக்கமாகக் கொண்டவை அவை.உலகத்திற்கு உலகம் ஊருக்கு ஊர் என்று காலங்காலமாக இருப்பவை அவை.அவற்றிற்கும்  மதிப்பீடுகளுக்கும் தொடர்புகள் கிடையாது.அதனாலேயே அவற்றால் பெரும் ஆபத்துக்கள் இருப்பதில்லை.ஆத்மாநாம் போன்ற விருதுகளுக்கும் இலக்கிய மதிப்பீடுகள் அடிப்படை இல்லையென்றாலும் கூட நிறுவன அதிகாரங்களிலிருந்தும் , அதன் அடிமைகளிடமிருந்தும் ஊதி பெருத்து வருகிற இத்தகைய விருதுகள் பின்னாட்களில் ஏராளமான நிறுவன அடிமைகளை உருவாக்கித் தருபவை என்கிற அடிப்படையில் மாசு உண்டாக்குபவை.

அனார் ,சச்சுதானந்தன் ,ஏன் ஆத்மா நாம் என்கிற பெயர் உட்பட அனைத்தும் இத்தகைய நிறுவனங்களுக்கு துருப்புச் சீட்டுகள்தாம் .நோக்கம் வேறு வகையானது.இலக்கிய விருதுகளில் நோக்கம் பிறிதொன்றாக இலக்கியத்திற்குத் தொடர்பற்றதாக இருக்குமெனில் அவை தீங்கின் கரங்களில் தவள்பவை என்று அர்த்தம்.இத்தகைய விருதுகள் உருவாக்கித் தருகிற நிறுவன அங்கீகாரங்கள் சூழலின் மீது பயத்தினை ஏற்படுத்துபவை.சூழலின் மீது இவை ஏற்றுகிற பய உணர்வு ஏராளமான இலக்கிய நிறுவன  அடிமைகளை பிரசவிக்கும் வல்லமை பொருந்தியது.

அதன் காரணமாகவே இத்தகைய விளையாட்டுகளில் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பவர்கள் விடுபட்டு விடுகிறார்கள்.கலா ப்ரியா ,சுகுமாரன் போன்ற எண்பதுகளின் நடிகர்கள் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.இமையம் அதிகார மடங்களின் குறியீட்டுப் பெயர்.சுகுமாரன் தனது வாழ்நாள் முழுவதையுமே அதிகார நிறுவனங்களின் வாயிற்காவலனாக ஒப்படைப்பு செய்திருப்பவர்.கலா ப்ரியா  நிறுவன அதிகாரங்களின் அடிப்பொறுக்கி.இது அவர்கள் விதி.சமகால கவிதையின் இயங்கு தளத்தில் உள்ளவர்களும் அல்லர்.பின்னர் ஏன் இது போன்ற இடங்களில் இவர்கள்   முதன்மை பெறுகிறார்கள் ?

மதிப்பீடுகளுக்கு புறம்பான காரியங்களை எதன் பொருட்டும் துணியக் கூடியவர்கள் இவர்கள் என்பதுதான் இவர்களின் அடிப்படை தகுதி.இந்த துணிச்சலை காரணமாக வைத்துதான் நிறுவனங்கள் இவர்களுடைய அடிமை விசுவாசத்தை ஆராதனை செய்கின்றன.இதுவே முதல் படி.என்னைப் போன்ற கவிஞர்கள் பத்துப் பதினைந்து பேர் இந்த சூழலில் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறார்கள் .இவர்கள் ஒருவரின் தடயம் கூட இல்லாத வண்ணம் , ஏற்பற்ற வண்ணம் சம காலத்தில் ஒரு இலக்கிய மதிப்பீடு இருக்க முடியுமா என்ன ? என்னைப் பொறுத்தவரையில் கலா ப்ரியா ,சுகுமாரன் என்ற இரண்டு விஷ பயிர்களுக்கு மாற்றாக அந்த இடத்தில் விக்ரமாதித்யன் இடம்பெறுவாரேயாயினும் கூட பொறுத்துக் கொள்வேன்.காரணம் அவரால் கவிதையை பொறுத்த மட்டில் வஞ்சனைகள் செய்ய இயலாது.

அப்படியானால் அனார் விருதுக்கு பொருத்தமற்றவரா ? என்று  விசயங்கள் விளங்காதது போல பாவனை செய்து எவரேனும் கேட்பாரேயாயின் , அனார் நிச்சயம் விருதுக்கு பொருத்தமானவர் என்றுதான் சொல்வேன்.மிகச் சிறிய உலகத்தை கைகளில் வைத்து உருட்டிப் பார்க்கத் தெரிந்த ஒரு சாதாரண கவி அவர்.ஆனால் அதுவல்ல அவர் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்   பட்டிருப்பதற்கான பிரதானமான காரணம்.கவிதையில் உள்ள தேர்ச்சியை காட்டிலும் அவருக்கு நிறுவனங்களுடன் அதிகாரத்திற்கு இடர்பாடு ஏற்படுத்தாதவாறு பொருத்துவதன் தொழில் நுட்பம் தெரியும்.அது கச்சிதமாக கைவரப்பெற்றவர் அவர் என்பதுதான் மகா சூட்சுமம்.

பத்து அனாரை நிறுவனங்கள் கண்டடைந்து விடுமானால் நூறு நிறுவன அடிமைகள் கிடைப்பார்கள் என்பது இவர்கள் அறியாததா என்ன ? 

பெருந்தேவியின் இரண்டாம் தரிசனம்

பெருந்தேவியின்  இரண்டாம் தரிசனம் 

வாழ்வின் மீது அபத்தத்தின் ரசம் எந்த பதுங்கு குழியிலிருந்து  வந்து தெறிக்கிறது  என்பதை கணிக்க முடியவில்லை.அபத்தத்தின் கசந்த ருசியை அல்லது வெளிறிய அதன் தோற்றத்தை  கவிஞன் கண்டடையும் விதம் ஒரு பொது நெருக்கடியாக மாறும் தன்மை கொண்டிருக்கிறது.பெருந்தேவியின் "பெண் மனசு ஆழம்  என   99 .99  சதவிகித ஆண்கள்  கருதுகிறார்கள் "என்னும் புதிய கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அபத்தத்தின் நிறம் கொண்டவையாக இருக்கின்றன.

மொத்த வாழ்வும் அபத்தமாக மாறியிருப்பதை அதன் நுண் தளத்தில் வைத்து பெருந்தேவி இந்த  கவிதைகள் மூலம் கண்டடைந்துள்ளார்.அபத்தத்தின் நடனத்தில் பெண் உடலும் சக்கையாகி வெளிறி  மிதப்பதை  இந்த கவிதைகளில் காண்கிறோம்.காமம் அனைத்து பொருட்களிலிருந்து தன்னை நீங்க எத்தனிக்கும்  கவிதைகளாக இத்தொகுப்பின்  கவிதைகள் உள்ளன.கடைசி கையறு நிலையாக அது வாழ்வின் மீது ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய விமர்சனத்தில் இருந்தும்   தன்னை விலக்கிக்  கொள்கிறது ."இறந்து விட்ட என் பெற்றோர் நானும் இறந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் ,என் காதலன் என்னை மாதாந்திர பாக்கட் நாவலென நினைக்கிறான் " ,மயில் என்ற பெயரில் ஒரு சீர்காழிப் பேருந்து நிற்கிறது ; ஆடி  முடித்து ஓய்ந்த என இருக்க  வேண்டும், பெண் பாவனைகளைத் துவைத்துக் கொடியில் காயப் போட்டிருக்கிறேன்   போன்ற வரிகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு ஆல்பர் காம்யு கண்டடைந்த  அபத்ததிற்கு நிகர்  எனலாம் .

தமிழில் நகுலனும் ,விக்ரமாதித்யனும் இந்த அபத்தத்தைக் கண்டடைந்தவர்கள்தாம் .பண்பும் நலன்கள் ஒன்றாவதில் ஏற்படுகிற கடுமையான நெருக்கடியை குழம்பியவை விக்ரமாதித்யனின் கவிதைகள்.நகுலன்  தனதகம்  விட்டு வெளியேறும்  பிரயாசையையே கொண்டிருக்கவில்லை .   ஆனால் அவர்கள் கண்டடைந்த அபத்தம் சமகாலத்திற்கு முந்தையது என ஆறுதல் கொள்ளலாம்.ஆனால் பெருந்தேவி எழுப்பும் அபத்தம் நாம் இன்று சிரசில் வைத்து கூத்தாடுகிற அனைத்து நவரசங்களின் மீதும் தன் வெம்மையை பரப்புகிறது. அவற்றை  ஒரு நிறை மாத கர்ப்பிணியின் சிரத்தையும் எடுத்து கசப்புடன் பகடி செய்கிறது.அனைத்து உச்சங்கள் மீதும் நிகழ்கிறது

சும்மா சொல்லக்கூடாது 

வாழ்க்கைக்கு உருவகம் நன்றாகவே  கைவருகிறது
இல்லாத அப்பத்தைப்
பிரித்துத் தரப்போவதாக
உறுதியளித்து
என் முன் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறது
ஒரே சமயத்தில்
நான் நானாகவும் இரண்டு பூனைகளாகவும்
இருப்பதையும் தெரிந்து வைத்திருக்கிறது

குளிர் போய்விட்டது

வாஷிங்டனில் அடுத்த வாரம்
செர்ரிப்  பூக்களின் வசந்தோத்சவம்
ஆனால்
நான் போகப் போவதில்லை
அவற்றைப் பார்க்க ஆன்மா வேண்டும்
என்னிடம் ஸ்மார்ட் போன்தான்
இருக்கிறது

இந்த இரு கவிதைகளையும் உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் மிகவும் எளிமையாக  இருப்பதை போன்ற கசந்த பாவனையை இவை நிகழ்த்துகின்றன என்று சொல்லலாம்.இந்த கவிதைத் தொகுப்பின் சாராம்சம் இந்த கவிதைகள் .

த்சோ    த்சோ,பேராசிரியர் சிடி,விமானத்தை விட்டிறங்கிய இந்து வயதுச் சிறுவன் ,தபால் தலைகளை போல் காதல்கள் சேகரிப்பவர்கள் ,கவித்துவம் சொட்டச்  சொட்ட கவிதை எழுத எனக்கு மட்டும் தோன்றாமலா இருக்கும் ?,நள்ளிரவில் கும்பகோணப் பேருந்து  நிலையம் , உயிர்த்தெழுந்ததன்    ஒரு வகை ,அங்கீகாரம் ,என்றார் மூத்த கவிஞர்  ,  இவருக்கு  நல்லா வேண்டியதுதான் ,சில பொழுது போக்குகள் ,கணபதி ஹோமம் பேக்கேஜ் ,சாரங்க  பாணி  கோயிலில்  ஸ்ரீசூரண மாமியின் ஆற்றுப்படுத்துதல் ,நம்பிக்கை வேண்டும் மக்களே ,சராசரிகள், அத்தைகள் ,வேஷக் கரப்பான் என மிகச்  சிறந்த   கவிதைகள் நிரம்பப்  பெற்ற கவிதைத் தொகுப்பு இது.நேர்த்தியுடன் புத்தக அச்சாக்கம்  கண்டிருந்தால்  அது  சிறந்த புத்தகமாக இருக்கும் என்ற நிலை மாறி உருக்குலைந்த நிலையில் விளைந்திருக்கும் மனோசிருஷ்டி இந்த கவிதை நூல்.சம காலத்தில்  இரண்டு கவிஞர்கள் என்னுடைய அபோதத்தை சமீப காலத்தில் கலைத்தவர்கள் என்று சொல்ல முடியுமெனில் ஒருவர் திருச்சாழல் வழியே கண்டராதித்தனும்  ,இந்த கவிதைத் தொகுப்பின் மூலமாக பெருந்தேவியும் என்பேன் .

தேர்வு : இடம் பொருள் காலம்

முலையில் வாய் வைத்த ரோபாட் நான்கு எண்களில் 
ஒன்றை அழுத்தச் சொன்னது
முலையோடு  விளையாட  சப்ப எண் ஒன்றை அழுத்து
மேற்சொன்னதை பேசிக்கொண்டே விரைவாகச் செய்ய
எண் இரண்டை அழுத்து
மேற்சொன்னதை  வசவுச் சொற்களோடு விரைவாகச் செய்ய
எண் மூன்றை அழுத்து
இதுவரை அனுபவிக்காத பரவசத்தில்  நீ கண்ணீரைச்
சிந்தும்போது அதை நான் துடைத்து விட எண்
நான்கைச் சேர்த்து அழுத்து 

பெருந்தேவி  இந்த கவிதைகளின் மூலம்  நிகழ்த்தியிருப்பது என்ன என்பதனை நம்மால் அறிந்து கொள்ள முடியுமாயின்  ஒருவேளை  நிகழ்கால வாழ்வையும் அறிந்து கொள்ள இயலலாம்  .அவர் மொழியில்  ஏற்றிவைத்திருக்கும் ரத்தத்திருநீற்றிற்கு காலத்தின் முன்பாக எனது நல்வணக்கம் 

கலைஞனுடன் பயணித்தல்

கலைஞனுடன் பயணித்தல்

சமீபத்தில் படித்த நூல்களில் மனம் அலாதியான  உற்சாகத்தை அடைந்த நூல் ஜெயமோகனின் முகங்களின் தேசம் .ஜெயமோகன் ஒரு இடத்தையோ , பொருளையோ எட்டுவதற்கும் சற்று முன்னதாகவே அந்த இடத்தின் அல்லது பொருளின் சகல பரிமாணங்களையும் மனம் கொண்டு அறிந்து விடுகிறார்.அவர் அறிந்த பரிமாணங்களை அப்படியே அவரால் கூடுமானவரையில் சேதாரமில்லாமல் வாசகனிடத்திலும் சேர்ப்பித்து விட முடிகிறது.இப்படி வாசகன் அடைகிற அனுபவங்களை வெறும் பயண அனுபவங்கள் என்று மட்டுமே சொல்வதற்கில்லை.ஜெயமோகனின் பயண அனுபவங்கள் படைப்பனுபவங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவையாக உள்ளன.

முகங்களின் தேசம் நூல் வழியாக ஜெயமோகனுடன் அவர் பிரயாணித்த இடங்களுக்கெல்லாம் வாசகனாக நாமும் இணைந்து செல்கிறோம் என்று சொல்லலாம்.ஆனால் நேரில் உடன் சென்றாலுங் கூட அடைய இயலாத அனுபவங்களை வாசிப்பில் அடைகிறோம். ஏராளமான நிலப்பகுதிகள் , ஏரிகளை கடக்கிறோம்.அவை நம்மிடம் படைப்பு வஸ்துக்களாக உருமாறிவிடுதலே இந்த நூலின் சிறப்பு .அவர் ஒட்டகத்தின் மீது ஏறி இடுப்பு இணைப்புகள் களறுவதை நம்மிடத்திலும் உணரச் செய்கிறார்.ஏரிகளின் நீலம் நம்மிடம் படிகிறது அவ்வாறே.இவையெல்லாம்  ஒரு வழக்கமான பயண நூலில் பெறுபவைதானே என்றால் பயண அனுபவங்களுக்கு அப்பால் பெறுகிற படைப்பனுபவங்கள் நிறைய பெற்றிருக்கிறது இந்த நூல்.படைப்பனுபவங்களை ஏற்படுத்துகிற பயண நூல் இது என்று சொல்வதே சரியானது.

வானை நிறைத்து விழுதுகளாக இறங்கி நின்ற மஞ்சள் வெயில் ,பெரிய உருத்திராட்ச மாலை போல நீரில் வளைந்து சென்றன நீர்க்காகங்கள் ,மனித உடலளவுக்குப் பெரிய மீன்கள் ,உறை விட்டு உருவப்படும் வாள் என எழுந்து ஒளிவிட்டு அமையும் .இந்த வாக்கியங்கள் ஒரு அத்தியாயத்தில் வருகிற விவரணைகள்.ஒவ்வொரு பகுதியும், அத்தியாயமும் இவற்றைப் போன்ற விவரணைகளால் மெருகடைந்துள்ளன.ஒவ்வொரு பகுதியும் புதிய தகவல்கள் ,அதிலிருந்து புதிய கண்ணோட்டங்கள் ,பார்வைகள் என மேலெழும்பிக் கொண்டேயிருக்கின்றன.வாசிப்பில் ஈர்ப்பு குன்றாமல் நகருவதற்கு இவை ஒவ்வொன்றுமே உதவுகின்றன.

குளியலைப் பற்றி சொல்கிற இடங்களில் நீரின் தன்மை ,மென்மை அனைத்தும் நமக்கு ஸ்ப்ரிசமாகிறது.மகா கவி பாரதி ஸ்நானத்தைப் போற்றும்  இடம் ஒன்று அவருடைய எழுத்தில் வரும்.துறவையும் குளியலையும் இணைத்து அவன் பேசியிருப்பான்.இந்த பயண நூலில் இடம் பெற்றுள்ள குளியல் அனுபவங்களை மட்டும் கொண்டு ஒருவர் மிக முக்கியமான கட்டுரையொன்றினை எழுதிவிட முடியும்.

ராம கிருஷ்ணா மடம் பற்றிய கூரிய விமர்சனம் ஒரு அத்தியாயத்தில் வருகிறது."எனக்கு அவமதிப்பும் கூட பெரிய விஷயமல்ல.அது அவமதிப்பவனின் மனநிலையைக் காட்டுகிறது அவ்வளவுதான் " என்கிற வாக்கியம் இடம்பெற்றிருக்கும் அத்தியாயம் அது.இது போன்ற பல வாக்கியங்கள் மிக சாதாரணமாக நாம் கடந்து செல்லும் வண்ணம் உள்ளன.

நாம் உண்ணும் உணவு அனைத்துமே நம் பரபரப்பிற்கு எரிபொருளாக மாறுகிறது.உடலை விட நம் உள்ளத்திற்கு அதிக உணவு தேவைப்படுகிறது.அந்த குழந்தை நூறாண்டு வாழ பயிற்சியெடுக்கிறது என நினைத்துக் கொண்டேன் ஆகிய வாக்கியங்கள் இடம்பெற்றுள்ள அத்தியாயம் ஒரு வாசகனுக்கு வாழும் கலையை சொல்லித் தருவதாக அமைந்தால் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.

பயணங்களில் ,காத்திருக்குமிடங்களில் என மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த பயண நூலில் நிறைய காத்திரமான முகங்களும்,இடங்களும் நம்மைக் கடந்து செல்கின்றன. "சிற்பங்களைக் கூர்ந்து பார்க்கும் போது சிற்பங்கள் நம்மைப் பார்க்க ஆரம்பிக்கும் கணம் ஒன்று வரும் " என்கிற வரி ஒரு அத்தியாயத்தில் எனக்கு  திகைப்பூட்டுவதாக இருந்தது.இந்த திகைப்பு இந்த நூல் முழுவதிலும் ஏற்படுகிற அனுபவமென்றால் அது மிகையில்லை.

ஜெயமோகன் தனது தரிசனங்களை மிகவும் வெளிப்படையாக திறந்து கொண்டே இருக்கிறார்.அவை எளிமையாக இருப்பதை போல கோலம் காட்டும் போது அவை அவ்வளவு கடுமையாகவும்  இருக்கிறது என்பதையும் காண்கிறோம்.

காலத்தின் பெருங்கலைஞன் ஜெயமோகன் என்பதற்கு இந்த எளிய நூலும் ஒரு நிரூபணமே

முகங்களின் தேசம்
ஆசிரியர் - ஜெயமோகன்
சூரியன் பதிப்பகம்
229 ,கச்சேரி ரோடு ,மயிலாப்பூர் ,
சென்னை - 4
தொடர்பு எண் - 7299027361

 பக்கம் - 360
விலை - 225 
முதற் பதிப்பு : ஜூலை 2017   

இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்

முத்தாரம்மன் கோவில்கள் என்பது இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம்


இந்து நாடார்களின் ஊர் நிர்வாகம் என்னும் மக்கள் அமைப்பு முத்தாரம்மன் கோவில்களை முன்வைத்தே கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றியது . நானூறு, ஐநூறு ஆண்டுகாலப் பழமை கொண்டது இந்த அமைப்பு.பின்னர் தோன்றிய பல சமூக அமைப்புகளிடமும் இந்த அமைப்பின் தாக்கம் உண்டு எனினும் இதைப் போன்று அவற்றிடம் கச்சிதம் குறைவே.இந்து நாடார்கள் சமூகம்,அரசியல் ,பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பட இந்த அமைப்பு பெரிதும் உதவிற்று.

முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு தோன்றுவது வரையில் கிராம தெய்வங்கள் ,வாதைகள் வழிபாடு,இசக்கி வழிபாடு போன்றவை தனிக் குடும்பங்களின் செல்வாக்கில் இருந்தவை.பெரும்பாலும் அவை இன்றும் கூட சில விதிவிலக்குகளைத் தவிர்த்து தனிக்குடும்பங்களைச் சார்ந்தே உள்ளன.

முதன்முதலாக நாடார்கள் தங்கள் சமூகத்திற்குள் கண்டடைந்த ஜனநாயக பூர்வமான அமைப்பு இந்த முத்தாரம்மன் கோவில்கள்தான்.தனிக்குடும்பங்களின் அதிகார ஆதிக்கம்,நிலச்சுவான்தார்களின் தான்தோன்றித்தனம் ,திருவிதாங்கூர் மகாராஜாக்களின்  வரி  முகவர்களின் அத்துமீறல்கள் போன்ற தீமைகள் முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு மூலமாகவே நீங்கிற்று.


இந்த அமைப்பு தோன்றுவது வரையில் இந்து நாடார் ஊர்கள் என்னும் அமைப்பு உருவாகவில்லை.மக்கள் பல்வேறு தோட்டங்களில் குடியிருந்தார்கள்.இந்த தோட்டங்கள் விளைகள் என்று அறியப்பட்டன.உதாரணமாக பன விளை,மங்கா விளை , பிலாவிளை இவ்வாறாக . தொழிலின் நிமித்தம் இடம்பெயர்வதும் மீண்டும் திரும்புவதும் இவ்வாறாக .நிலசுவான்தார்கள் மட்டுமே நிரந்தர வீடுகளில் குடியிருந்தார்கள் .

முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகமுறை உருவானதும் இரண்டு முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன .முதலில் அது தனிமனித செல்வாக்கை ,ஆதிக்கத்தை சமூகத்திற்குள் குறைத்தது.நிலசுவான்தார்களின் ,
வரி  முகவர்களின் நிகரற்ற அதிகாரத்தை பணிய வைத்து ; அதிகாரத்தை மக்களின் பக்கமாகத் திருப்பியது.இரண்டாவதாக இந்த அமைப்பு சமூகத்திற்குள் இருந்த உபசாதிகள் அனைவரையும் ஊரென்னும் அமைப்பிற்குள் திரட்டி இணைத்தது.பல உபசாதிகளாகப் பிரிந்திருந்த நாடார்கள் இந்த அமைப்பின் மூலம் இணைந்தார்கள்.சாணார்களுக்கும் , புழுக்கைச் சாணார்களுக்கும் மற்றும் நாடார்களுக்கும் இடையில் இருந்த மாயக்கோட்டை இந்த அமைப்பே அகற்றியது.

இந்த அமைப்பின் சிறப்பம்சமே இது யாரோ சிலரால் திட்டமிட்டு உருவாக்கியதல்ல என்பதில் அடங்கியிருக்கிறது,மக்கள் தங்களின் தேவையை முன்னிட்டு இந்த அமைப்பை சாதித்தார்கள்.ஊருக்கு ஊர் மக்களாகவே முன்னின்று உருவாக்கிக் கொண்டார்கள்.இதுபோல எனது அறிதலுக்கு எட்டியவரையில் ; மக்கள் தங்கள் தாழ்வுணர்ச்சியிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவும் ,தங்கள் உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை சமூகம்,அரசியல் , பொருளாதாரம் போன்றவற்றில் உந்திக் கொள்ளவும் தாங்களாகவே கண்டடைந்த பிற அமைப்புகள் எதுவும் தமிழ்நாட்டில் கிடையாது.

தங்களுக்கு உரிமையற்ற உயர் பொருட்கள் எதுவாக இருந்தாலும் ,அது தங்களுக்குத் தேவையற்றது என்கிற குணத்தை நாடார்கள் கண்டடைய இந்த அமைப்பே உதவியது.உயர் பொருட்கள் தங்களுக்குத் தேவை என கருதுமிடங்களிலும் கூட நாடார்கள் , அதிகாரத்தை அந்த உயர்பொருளுடன் தொடர்புடைய தனிநபர்களிடமோ,சமூகத்திடமோ விட்டுத் தருவதில்லை.அதனை விலைக்கு பணம் கொடுத்து வாங்கிவிட முடியுமா என்று யோசிப்பார்கள்.அல்லது அதுபோன்ற ஒன்றை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்வார்கள்.

அதுபோலவே தங்களைத் தாழ்வானவர்களாகக் கருதும் , கணக்கிடும் மத அமைப்புகளிடம் அதிகார நிறுவனங்களிடம் தொழில் நிமித்தமாக அன்றி பிற விதங்களுக்காக போய் நிற்பதில்லை.தங்களுக்கு உரிமையை,பங்களிப்பை மறுக்கும் ஏதுவும் தங்களுக்கு அவசியமற்றது என்பதை முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம்தான் கற்றுத் தந்தது.பிற அதிகாரத் தரப்பிடம் சென்று சரணடைவதில்லை.

பிற அதிகார நிறுவனத்தில் தொழிலின் நிமித்தம் கடைசியாளாக வேலை செய்யும் ஒரு இந்துநாடார்: ஊர் நிர்வாகத்தின் தலைவராகக் கூட பல சமயங்களில் இருக்கும் வாய்ப்புண்டு.அவரது அதிகாரத்தை நிறுவனத்தால் சுருக்க முடிவதே இல்லை.

உரிமையற்ற இடங்கள் அவை சொர்க்கத்தையே பரிசளிக்கிறோம் என்னும் உத்திரவாதத்தைத் தருபவையாக இருப்பினும் கூட, அவற்றை நாடார்கள் புறக்கணித்து விடுவதைப் போல ,அல்லது அதிலிருந்து விலகிச் சென்று விடுவதைப் போல உரிமையிருக்குமேயானால் விழுந்து கிடந்து வேலையும் செய்வார்கள்.உதாரணமாக இன்றும் முத்தாரம்மன் கோவில்களில் அய்யர்களை வைத்து பூஜை செய்கிற ஊர்கள் உண்டு.ஆனால் அய்யர்கள் அங்கு ஒரு மேல்நிலையை பிரதிநிதித்துவம் செய்கிறவராகவோ,மக்களிலிருந்து ஒரு படி மேலே எனவோ கணக்கிடப் படுவதில்லை.மக்கள்தான் பெரியவர்கள்.பின்னர்தாம் எல்லாமே.அய்யர்கள் பூஜையில் வேலையாட்கள் என்பதற்கும் மேலே கடுகளவு கூட போற்றப்படுவதில்லை.வேலையை செவ்வனே செய்யாமல் போகும் பட்சத்திலும் சரி,அதிகார ஆசையில் ஊசலாடும் போதும் சரி அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம் .

முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாக அமைப்பு ; இந்து மத அமைப்பு மட்டுமே என்பது போல வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் கூட ,இது கிளர்ச்சிகரமான மக்களின் உளவியல் சார்புநிலையைத் தன்னகத்தே கொண்ட மக்கள் அமைப்பு முறை ஆகும்.திருச்செந்தூரை நிராகரித்து விட்டு உவரி சுயம்புலிங்கசாமி கோவில் உருவான திக்கும் திசையும் இதுவே .மக்களைப் புறக்கணிக்கும் தெய்வங்களுக்கோ , சாமிகளுக்கோ வேலையில்லை என்னும் குணத்தை சகல பண்புகளிலும் கண்டடைய உதவிய , மக்கள் உளவியல் பின்புலம் கொண்ட அமைப்பு முறையே முத்தாரம்மன் கோவில் வழிபாடும்,ஊர் நிர்வாகமும்.நிறுவனத்தில் தன்னிடம் கடைநிலை ஊழியனாக வேலை பார்ப்பவனின் வீடு நோக்கி அரசியல் தலைவர்கள் வந்து செல்வதை ;முதலாளி கண்டு திகைக்கும் இடத்தில் இந்த முத்தாரம்மன் கோவில் ஊர் நிர்வாகம் என்னும் அமைப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆரம்ப காலங்களில் இந்த அமைப்பு நிலச்சுவான்தார்களிடமிருந்தும் , ஆதிக்க சக்திகளிடமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள போராட வேண்டியிருந்தது .இந்த போராட்ட கூறு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது . "எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? அவ்வளவிற்கு பெரியவர்களாகி விட்டீர்களா ? என்பது போன்ற ஆதிக்கச்  சப்தங்களை "கணக்கு வழக்கை யாராக இருப்பினும் பொதுவில் வைத்து விட்டு பேசு " என்கிற எதிர்வினை முலமாக ஸ்திரபடுத்தியது.

கணக்கு கேட்டல் என்பதே இந்த அமைப்பின் ஜனநாயகத்தைக் கட்டிக் காத்தது.
இறப்புச் சடங்குகளில் மக்களின் செல்வாக்கை இந்த அமைப்பு உறுதி செய்தது.இந்த அமைப்பை உதாசீனம் செய்பவர்கள் கூட இறப்புச் சடங்குகளின் போது இந்த அமைப்பின் முன்பாக பதில் சொல்லியே தீரவேண்டும் என்பது இன்றுவரையில் கடைபிடிக்கப்பட்டு வருவது.

முத்தாரம்மன் கோவில்கள் என்பதும் .இவை கொண்டியியங்கும் நிர்வாகமும் வெளியே தெரிவது போன்ற வெறும் பஜனை மடங்கள் அல்ல.மக்கள் தங்களைக் கண்டடைந்த பாதை

தோழர் ஜீவா

தோழர் ஜீவா
ஆகஸ்ட் - 21 ஜீவானந்தம் பிறந்த தினம்.நமது முந்தைய தலைமுறையின் லட்சிய முகங்களில் ஒன்று ஜீவா.அந்த தலைமுறையின் நற்குணங்களுக்கு அசலான ஒரு சான்று.
லட்சிய புருஷர்களில் இருவகையினர் உண்டு.தங்களின் குறிக்கோளுக்கப்பால் ஏதுமில்லை எனக் கருதுபவர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் .பிற மார்க்கங்கள் எதற்கும் சிற்றிடம் கூட தங்களிடம் இல்லாதவர்கள்.இவர்களும் தாங்கள் சார்ந்திருக்கும் மார்க்கங்களுக்கு பல தியாகங்களையும் ,பங்களிப்புகளையும் செய்தவர்களாகவே இருப்பார்கள்.மார்க்கங்கள் இறுகி மக்கள் செல்வாக்கிற்கு மார்க்கங்களை நகர்த்துபவர்கள் இவர்கள்தான் பெரும்பாலும்.எல்லா மார்க்கங்களிலும் இவர்களுடைய செல்வாக்கே நமது நாட்டில் அதிகம். இவர்களின் இருப்பை அசையா சொத்தாகக் கொண்டிராத மதங்களோ,நிறுவனங்களோ,கட்சிகளோ இந்தியாவில் கிடையாது. பக்தி மார்க்கத்தின் தொடர்ச்சியில் வருகிற இவர்கள் தங்களின் தரப்பைப் புனிதத் தரப்பாக்கும் வல்லமை படைத்தவர்கள்.தாங்கள் சார்ந்த தரப்பில் சிறு சந்தேகம் கொள்ளவும் இவர்களிடம் பொறுமை கிடையாது.மதத் தலைமைகள் பெரும்பாலும் இவர்களைக் கொண்டே நிரப்பப்படுகிறது. சகல மதங்களும் அபாயத்தன்மை அடைவதற்கு இவர்களுடைய அடிப்படை குணங்களே காரணமாகின்றன.
ஜீவா இரண்டாவது வகையை சேர்ந்தவர்.இவற்றின் இரண்டாவது வகைப்பட்ட லட்சியமுகம் இளகிய தன்மையும் ,பிற விஷயங்களை உள்வாங்குதலில் வெளிப்படைத்தன்மையும் கொண்டது.வெளி விஷயங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நிறைந்தது.சிந்தனையில் பல்வேறு தரப்புகளையும் வெறுப்பற்று பரிசீலனை செய்ய தயாராக இருப்பது.காந்தியின் தன்மை இவ்வகைபட்டதே.ஜீவானந்தமும் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.முதல் வகை லட்சியவாதம் சிந்திக்கும் திறனை இழப்பதிலிருந்து திரண்டு உருவாவது எனில் அதற்கு நேர் எதிரான குணம் கொண்டது இது .
நிறுவனங்களிலும் , மதங்களிலும்,பக்தி மார்க்கத்திலும்,கட்சிகளிலும் , பொதுவாக வாழுங்காலத்தில் இது உவப்பான குணமாகப் போற்றப்படுவதில்லை.சந்தேகத்திற்கிடமற்ற இறுகிய லட்சியவாதத்திற்கே பொதுவாக செல்வாக்கு அதிகம்.அது அடைகிற குடும்பத்தன்மையும் ,மதத் தன்மையும் அதற்கான காரணங்கள் .
இரண்டாவது வகை அச்சமூட்டக் கூடிய பண்பாகவும்,குழப்பமான தரப்பாகவுமே கருதப்படக்கூடியது.வெகு அபூர்வமாகவே இந்த பெருத்த இடைவெளியை சீரமைக்கும் தலைவர்கள் பிறக்கிறார்கள்.ஜீவா அத்தகையவர்.அபூர்வமானவர்.மதங்களில் இத்தைய பண்பு நிலைகள் அமையப் பெற்றவர்கள் மட்டும்தான் பின்னாட்களில் அவதார் புருஷராகக் கருதப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் மதத்திலும்,மார்க்கத்திலும் ஜீவாவை ஒத்த ஒருவர் மீண்டு எழுந்து வரவே இல்லை.
நான் ஏன் இங்குள்ள தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட்களை மதம் என்று சொல்கிறேன் எனில் சிந்தனை மரபில் தேக்கமுற்று புனிதத்தை பிரதானப்படுத்தி இறுக்கமான நிறுவனம் உருவாகும் போது அது மதமாகிவிடுகிறது.இங்குள்ள தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட்களுக்கு நேர்ந்த அவலம் இதுதான்.பிற சிந்தனைகளுக்கிடமற்ற இறுக்கம் மதமாதலின் அடிப்படை.
சிந்தனைகளில் அவர்கள் அடைந்த தேக்கம்தான் இன்றுவரையில் அவர்களை கலோனியல் தன்மையிலேயே வைத்திருக்கிறது.மரபு பற்றியெல்லாம் எவ்வளவுதான் அவர்கள் வகுப்பெடுத்தாலும் கூட அவர்களால் கலோனியல் தன்மையிலிருந்து வெளிவர இயலாமைக்குக் காரணம் இதுதான்.மக்களுக்காகப் பேசுகிறேன் தரப்பு என்று இவர்கள் தங்களை நம்பினாலும்கூட ;இவர்கள் பேணி வருகிற கலோனியல் அடிமைத்தனம் காரணமாகத்தான் மக்கள் பண்பாட்டு ரீதியில் தாழ்வுற்ற நிலையில் இருக்கிறார்கள்; நாம் அவர்களை சீர்திருத்தி மேன்மைப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கிறோம் என்று இவர்கள் கருதுகிறார்கள்.உலகில் உள்ள சகல மதங்களும் கடைபிடிக்கிற வழி இது.மக்களைக் கடைநிலையாகப் பார்த்து மேன்மைபடுத்தும் இந்த குணம் பண்பாட்டுரீதியில் கலோனியல் அம்சம் கொண்டதும்கூட.
நமது தீமைகள் அத்தனைக்கும் நமது சுய மரபுகளே காரணம் மேன்மைகளுக்கேல்லாம் பிற பண்பாடுகளே காரணம் என நம்பாத ஒரு கம்யூனிஸ்ட் தோழரைக் கூட நாம் சந்திக்க இயலாமல் போனமைக்கும் இதுதான் காரணம்.சுய மரபின் மீது கொள்ளும் எள்ளல் சுயத்தின் மீது அடையும் அருவருப்புணர்ச்சி என்பதை இன்னும் இவர்கள் கண்டுபிடிக்கவே இல்லை.சுயமரபின் மீதான போதாமைகளை இவர்கள் தொடர்ந்து பேயுருவாய் மாற்றிக் கொண்டிருப்பதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை.
ஜீவானந்தம் மேற்கொண்ட லட்சியவாதம் சுயமரபின் தீமைகளை எதிர்ப்பதுதான் ஆனால் சுயமரபின் மீதான எள்ளல் அதற்கில்லை.கம்பராமாயணத்தை அவர் வியந்தார்.அதன் பின்னர் காலனியத்தின் கட்டுப்பாட்டிற்குள் சிந்தனைகளை சிந்தனை மரபைச் சுருக்கிகொண்டதே அவர்களின் தற்கொலை ஆயிற்று.கம்யூனிஸ்ட்களின் தரப்பில் ஜீவானந்தமும்,திராவிட இயக்கத்தில் தரப்பில் அறிஞர் அண்ணாவுமே மரபின் கடைசி கண்ணிகள் .பின்வந்தவை அறுபட்டுப் பறந்தலையும் நூழிலைகள்.தமிழில் பொதுவுடமைச் சித்தாந்தம் ஜீவாவிட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வழி

தமிழ்நாட்டு சட்டசபைக்கு தேர்தல் வருவதுதான் உகந்த வழி

இந்த ஆட்சி இவ்வாறே தொடர்வது நல்லதல்ல.இப்போதைய இரு குழுக்களின் இணைவு என்பது பா.ஜ.கவின் இரண்டு துணைக் குழுக்களின் இணைப்புதானே அன்றி ஏற்கனேவே மக்களால் தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.கவிற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.இப்போதைய ஆட்சியாளர்கள் டெல்லியில் இருந்து பெறப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப  ஆடுகிற பொம்மைகள்.பதவி மோகத்தில் தமிழ் நாட்டை மொத்தமாக இவர்கள் வாய்ப்பு இருப்பின் விற்று விடுவார்கள்.இவர்கள் சரண் அடைகிறவர்களின் கால்கள் தற்போது மாறியிருக்கிறதே அன்றி பதவியின் பொருட்டு எதை வேண்டுமாயினும் செய்யத் துணியும் பண்பில் மாற்றமில்லை.

பதவி மோகத்தின் வெறியில் மக்களை முட்டாளாக்குகிறார்கள்.இந்த இரண்டு குழுக்களும் பா.ஜ.க வுடன் கட்சியில் இணைத்து கூட தேர்தலில் மக்களை சந்திக்கட்டும்.எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்கிற மடமை மட்டுமே உகந்ததாக இருக்க முடியும்.குறுக்கு வழிகளில் அதிகாரத்தில் யார் நின்றாலும் அது நல்லதல்ல.

மாநில அரசாங்கத்தின் அதிகாரிகள் ,மாநில காவல் துறை உட்பட மத்திய அரசாங்கத்தின் சார்பாக இயங்குவது ,கவர்னர் ஆட்சிகளை கழித்து விட்டுப் பார்த்தால் இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.தமிழ்நாட்டின் அனைத்து அதிகார அமைப்புகளும் டெலியைத் தலைமையகமாகக் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கின்றன.மக்கள் இதற்காக வாக்களிக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் அவசியம்.எந்த பன்னாடையை மக்கள் தேர்வு செய்தாலும் பரவாயில்லை,அது மக்கள் தேர்வு செய்கிற பன்னாடையாக  இருக்கட்டும்.

இதற்கு மேலும் இந்த அசிங்கங்களை சகித்து கொள்வது ஒவ்வொருவருக்கும் அசிங்கம் 

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார் - வெட்டியெறிந்த வலி.
சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது எங்களுக்கு சி.மோகனின் அறை,நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறை எல்லாம் நேசிப்பிற்குரிய போக்குவரத்துப் பாதைகள் .நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறையோடு விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்குத்தான் தொடுப்பு அதிகம்.சி.மோகன் அறை எங்கள் அறையைப் போன்றிருந்தது. சி.மோகனின் அறைகள் அனாதைத்தனத்தை கொண்டிருப்பவர்களைக் கொண்டாடுபவை.தனிமையை துதிப்பவை.இலக்கிய ஆர்வமும் ,பன்முகத் தாக்கமும் தேவையென உணரும் தனிமைக்கு சி.மோகனின் அறைகளில் பெரிய முக்கியத்துவம் உண்டு.
வசதி,வாய்ப்புகள்,புகழ் என எந்த திறத்தினராக இருந்தாலும் அவர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை இந்த அறையின் பண்பு கொண்டிருந்தது.யாரும் கைவிடப்படுவதில்லை என்கிற கிறிஸ்துவின் வாக்கியம் மோகனின் அறைகளுக்குப் பொருந்தும்.நான் சொல்லக் கூடிய விஷயங்களின் காலம் இரண்டாயிரம்.இந்த அறையோடு என்னுடைய பழக்கம் திருவல்லிகேணியிலிருந்தே தொடங்கிவிட்டது.முத்துக்குமார் அப்போதே சினிமாவில் புகழ் பெற்றுவிட்டார்.ஓய்வின்றி உழைத்தார்.நேரம் கிடையாது.ஆனால் இந்த கர்த்தரின் அறையோடு அவருக்கு சமயம் இருந்தது.மோகன் அழைத்தார் என்றால் எப்போது வருவேன் என்பதைச் சொல்லிவிட்டு சரியாக வருவார். மோகன் மீது மானசீக நேசம் அவருக்கு இருந்தது.
மோகனின் அறைதான் அவருக்கு நவீன தமிழ் இலக்கியத்தின்பால் கவர்ச்சி ஏற்படக் காரணம் .அனாதைத்தனத்தைக் கையாள்வது எப்படி என்பதை அந்த அறையே அவருக்கு கற்றுத் தந்திருக்கவேண்டும். கற்றுத் தந்தது.தீவிர இலக்கியத்தாலும்,கலையாலும் மட்டுமே தனிமையிலிருந்தும்,அனாதைத்தனத்திலிருந்தும் கழற்றமுடியும் என்பது அவருக்குள் ஆழமாகப் பதிந்தது.அவர் ஏற்கனவே பழகி வந்த பாதையோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது,பாசாங்குகள் நிறைந்தது.அந்த பாசாங்குகளின் அக அழுத்தத்திலிருந்து வெளியேற மோகனின் அறை உதவியது மட்டுமல்லாமல் புதிய பாசாங்கற்ற , பட்டவர்த்தனமாக உலகைக் காட்டியது. முத்துக்குமார் நவீன இலக்கியத்தின் அத்தனை காரண கர்த்தாக்களையும் பாகுபாடின்றி நேசித்தமைக்கும்,மதித்தமைக்கும் ,உதவிகள் புரிந்தமைக்கும் இந்த அறையில் அவர் கொண்டிருந்த தொடர்பிற்கும் சங்கதி உண்டு.
அந்த அறைக்கு செல்லும் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் முத்துக்குமார் வந்திருக்கிறார்.அதுபோல சென்னை புத்தகவிழாக்களை ஒட்டி அகரம் கதிர் உட்பட இந்த அறையில் தொடர்புள்ளவர்கள் கூடுவதுண்டு.அத்தகைய ஒரு சில சந்தர்ப்பங்களில் அவரும் உடனிருந்திருக்கிறார்.அந்த அறைக்கு வருகிற குஞ்சுக் குருமானிகள் கூட தன்னகந்தையைக் கையிலெடுத்து வைத்து பிசைந்து காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.நோயுற்ற எங்களை போன்ற குழந்தைகளின் பொதுப் பண்பு அது.அகந்தையின் கரத்திலிருந்து ஒருபோதும் கீழிறங்குவதே இல்லை.நான் அறிந்தவரையில் முத்துக்குமாரிடம் தன்னகங்காரத்தை ஒருமுறை கூட பார்த்ததில்லை.இந்த தன்னகங்காரமற்ற அவரது குழந்தைத்தனத்தை வெகுவாக ரசித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு கைவரப்பெறாத பண்பு இது.
2005 ல் என்னுடைய "எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் "கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்குப் பிற நண்பர்களுடன் இணைந்து நாகர்கோயில் வந்திருந்தார்.சந்தியா பதிப்பகம் வெளியீடு அது.ஊர்ப்பக்கம் ஒரு கோவிலில் கிடா வெட்டிக் கொண்டாடினோம்.அவரை அந்த விழாவிற்கு அழைத்திருக்கவில்லை.சந்தியா பதிப்பகம் நடராசன்,சி.மோகன் , ராஜ கோபால் ,கள்ளழகர் ஆகியோருடன் இணைந்து தன்னிச்சையாக அவரும் வந்து கலந்து கொண்டார்.இலக்கிய நண்பர்களை அதிகமாகக் கொண்டிருந்த விழா அது .கோணங்கி , கைலாஷ் சிவன்,பாலை நிலவன் ,முத்து மகரந்தன் உட்பட நிறைய பேர் அந்த நிகழ்வில் உண்டு.
ஊரில் நண்பர்கள் முத்துக்குமாரை மட்டும் அடையாளம் கண்டுகொண்டார்கள்.அவர்பேரில் அவர்கள் மிகுந்த அன்பு பாராட்டினார்கள்.சுற்றிவளைத்துக் கொண்டு அவர்கள் அன்பினில் மாட்டிக் கொண்டார்.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூசும் தன்மை கொண்டவர் அவர் .ஆனால் அன்று அவர்களுடன் உற்சாகமாக இருந்தார்.அப்போதுதான் முத்துக்குமாரின் பாடல்கள் வழியே அவர்கள் அவரை தினமும் தொடர்பு கொண்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது.விழா நடைபெற்ற வளாகத்திலிருந்து அவர்களையும் தனது வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்று அந்த பகுதியையெல்லாம் சுற்றிவிட்டுத் திரும்பினார்கள்.அவர்கள் எப்போது என்னைக் கண்டாலும் முத்துக்குமார் நலமா ? எனக் கேட்கத் தொடங்கினார்கள். அன்றைய நாளில் அவர் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.அந்த விழாவிற்குப் பின்னர் எனக்கும் அவருக்குமான நட்பு விலகவே இல்லை.
நள்ளிரவுகளில் அழைத்தாலும் கூட அவர் எனது அழைப்புகளை எடுக்கத் தவறியதில்லை.ஒருமுறை இரவு மிகவும் பிந்தி விட்டது.தீராத அன்பில் ஒரு நண்பர் அவருடைய பாடல் ஒன்றை மனப்பாடமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.இப்போதே அவரிடம் பேசவேண்டும் என தொல்லைதர முத்துக்குமாரை நள்ளிரவிற்கும் பிந்தைய பொழுதில் அழைத்தேன்.தூங்கி எழும்பிக் காலையில் பேசும் குழந்தையின் பாவத்தில் பேசிக் கொண்டிருந்தார்.வேலை நெருக்கடிகளிலும் அழைப்பை எடுக்க இயலவில்லையெனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு திரும்ப அழைப்பார்.முத்துக்குமாரின் இழப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் இருக்கக்கூடும்.எனக்கு எனது உடலுறுப்பில் ஒன்றை வெட்டியெறிந்த வலி.
சிறுவயதில் அம்மாவை இழக்கும் குழந்தைகள் வாழ்நாளெல்லாம் அன்பிற்கான ஏக்கம் கொண்டிருப்பார்கள்.எனக்கும் அவருக்குமான பொதுத்தன்மைகளில் ஒன்று இது. நாங்கள் இருவரும் அது குறித்துப் பேசிக் கொண்டிராவிட்டாலும் அமைதியில் அந்த ஓர்மையிருந்தது. அதுபோலவே அப்பாவை இழக்கும் பெண் குழந்தைகளிடமும் இந்த அன்பிற்கான ஏக்கம் துளைத்துக் கொண்டே இருக்கும் .இது ஒரு அவதி.அப்பாவை இழக்கும் ஆண்குழந்தைகள் நேர்மாறானவர்.பின்னர் அம்மாவிடமிருந்து பெறுகிற அழுத்தங்களால் லௌகீகமாக கறார் பேர்வழிகளாக அவர்கள் இருப்பார்கள்.முத்துக்குமார் ஏராளமானவர்களுக்கு கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நன்மைகள் செய்து கொண்டே இருந்தார்.அவற்றை அவர் செய்துவிட்டு சிந்திக்கும் பண்பு கொண்டவரும் இல்லை.நினைவுபடுத்துபவரும் இல்லை.உறவின் காரணங்களில் அவற்றைத் தொடர்புபடுத்துபவரும் இல்லை.விகடனில் அவர் ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தபோது இரண்டொருமுறை அழைத்துப் பாராட்டியிருக்கிறேன்.விளங்கிக்கவே இயலாத அளவிற்கு அவ்வளவு சந்தோஷப்பட்டார்.புகழின் உச்சியில் இருக்கும் ஒருவருக்கு இத்தகைய குணங்கள் வாய்ப்பது அபூர்வம்.
அவரது நடையுடை பழக்கங்களை மிகவும் ரசித்திருக்கிறேன்.அவற்றில் அன்பின் நெளிவு சுழிவுகள் உண்டு.அதிகார மமதை கிடையாது.கோவில்பட்டியில் முருகபூபதியின் திருமண விழா கொண்டாட்டமாக நடைபெற்றது."எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் "கவிதைத் தொகுப்பு வெளிவந்து ஒருசில மாதங்கள் கழிந்து என நினைக்கிறேன்.முந்தைய நாள் இரவு சி.மோகனுடன் சினிமா நண்பர் ஒருவருடன் வந்திறங்கினார்.அந்த காலத்தில் இப்போது போலில்லை.சினிமா ஆட்கள் வெற்றுப் பேதைகளாக இருப்பார்கள்.நானும் பாலை நிலவனும் சாலையின் அந்தப்பக்கமாக இருந்து மோகனையும் ,முத்துக்குமாரையும் ஓங்கிச் சத்தமிட்டு அழைத்தோம்.எனக்கு எழுதுகிறவர்கள் ,நண்பர்களை பெரும்பாலும் பெயர்கூறி அழைப்பதே பழக்கம்.முத்துக்குமாருடன் வந்திருந்த சினிமா அபிமானி பெயர் கூறி அழைத்ததில் திடுக்கிட்டு எங்களிடம் சீற்றமுற்றார்.அப்போதே அவரை கைகழுவிப் புறக்கணித்து விட்டு எங்களுடன் இணைந்து கொண்டார்.பிறகு திருமண வீட்டில் மறுநாள் எங்கெங்கோ பிரிந்து கலைந்து விட்டோம்.
திருமணம் முடிந்த மறுநாள் காலையில் விடுதியின் வெளியே கலக்கத்துடன் நின்ற அவரை ஏன் என்று நானும் பாலைநிலவனும் விசாரித்தோம்.அவரிடம் ஒரு தடுமாற்றம் இருந்தது. கோவில்பட்டியை பொறுத்தவரையில் கோணங்கியிருக்க அங்கே எவருக்கும் எந்த இடர்பாடும் கிடையாது.
"ஒன்றுமில்லை மணிவண்ணன் உடன்வந்தவர்கள் விட்டுச் சென்றுவிட்டார்கள் என நினைக்கிறேன்.ஏற்கனவே மோகன் ஊருக்குச் செல்லவேண்டும் என்பதைச் சொல்லியிருந்தார்.மற்றவர்களிடந்தான் பிரயாணச் சீட்டும் இருக்கிறது .என்ன செய்வதென்று தெரியவில்லை.இங்கிருந்து சென்னைக்குப் பேருந்தேற என்ன செய்ய வேண்டும்? அருகில் ATM ஏதேனும் இருக்குமா ? "
என்று கேட்டார்.
அவர் கையிலிருந்த அனைத்து பணத்தையும் பிறருக்கு செலவு செய்துவிட்டது தெரிந்தது.உடனடியாக கோணங்கியை அழைத்து கோணங்கி மூலமாக அவரைச் சென்னைக்குத் திருப்பி அனுப்பினோம்.நான் சொல்ல நினைத்த விஷயம் வேறு.அவர் கோவில்பட்டி வந்திறங்கும்போது டிராலி சூட்கேஸ் சாலையில் உருட்டிக் கொண்டே வந்தார்.அப்போது அது புதிது.அபாரக் கவர்ச்சியில் இருந்த அந்தக்காட்சி இப்போதும் என் கண்முன்னே நிற்கிறது.
ஒருமுறை சென்னையில் நடைபெற்ற ஒருபுத்தக விழாவில் இருவரும் கலந்து கொண்டோம்."என்னுடைய "வெள்ளைப் பல்லி விவகாரம்" சிறுகதை நூலை உயிர்மை வெளியிட்ட விழா.அவர் வேறு ஏதோ ஒரு புத்தகத்தை வெளியிடவோ ,பெற்றுக் கொள்ளவோ வந்திருந்தார்.அப்போது வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது ஒல்லியான வெள்ளை நிற சிகிரெட் எடுத்துக் பற்ற வைத்தார்.மிகு கவர்ச்சி.என்கையில் இருந்த சிகிரெட்டை வீசி விட்டு அவருடன் இருந்த ஒல்லியான வெள்ளிநிற சிகிரெட்டை வாங்கிப் பெற்றவைத்துக் கொண்டோம். அந்த ஒல்லி வெள்ளை சிகிரெட்டை வேறெந்த உலக நாயகன் பற்ற வைத்திருந்தாலும் அதன் பேரில் எனக்கு கவர்ச்சி ஏற்பட்டிருக்காது.
நமக்குத் பிடித்தமான எழுத்தாளர்களிடமிருந்தோ,
நண்பர்களிடமிருந்தோ
உடல்மொழியில் சில உதிரிபாகங்கள் நம்மிடம் வந்து இணைவதுண்டு.அதில் சில பொருந்தியும் போகும்.அப்படி முத்துக்குமாரிடமிருந்து தொற்றிய சிலபாகங்கள் என்னிடம் உண்டு . அந்த ஒல்லி வெள்ளை சிகிரெட் பற்றி தீராநதியில் எழுதிய "ஓம் சக்தி ஓம் பராசக்தி " தொடர்பத்தியில் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தேன் சற்று பகடியாக.படித்து விட்டு அழைத்த
அவர் ...
"அது மிகவும் விலை மலிவானதுதான் மணிவண்ணன் .நீங்கள் பிடிக்கும் சிகிரெட்டைக் காட்டிலும் மிகவும் மலிவுதான். " நான் வரும்போது நிறைய வாங்கி கொண்டுவருகிறேன் " என்றார்.
சிகிரெட்டை வாங்கிவிடமுடியும். அந்த ஒல்லியான வெள்ளை நிறக்காட்சியை எப்படி விலைக்கு வாங்க முடியும் ?
முத்துக்குமார் மறைவை என்னால் ஏற்கவும் முடியவில்லை.நம்பவும் முடியவில்லை.அப்படியில்லை அவர் எதோ வேலை நெருக்கடியில் இருக்கிறார் குறுஞ்செய்தி கூட அனுப்ப இயலாத அளவிற்கு என்பதாகவே நினைவில் இருந்து விட்டுப் போகட்டும்.உண்மைகளை வைத்துக் கொண்டு என்னதான் சாதித்துவிடப் போகிறோம்?
இரண்டாண்டுகளுக்கு முன்னர் இருக்கும் என நினைக்கிறேன்.திருச்செந்தூரிலிருந்து பேசினார்.
"மணிவண்ணன் எங்கே இருக்கிறீர்கள் ? திருச்செந்தூருக்கு ஒரு படப்பிடிப்பிற்காக வந்தேன்.இங்கே இருப்பு கொள்ளவில்லை.நாகர்கோவில் வருகிறேன் எங்கேயாவது போவோம் "
என்றபடி கிளம்பி வந்தார்.
நான் அப்போது சபரிமலைக்கு மாலையிட்டு விரதத்தில் இருந்தேன்.கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிந்தோம் .நான் மாலையிட்டிருப்பதும்,விரதத்தில் இருப்பதும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தன.திரும்பும் போது வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு ஆசிகூறிச் சென்றார்.மற்றொரு முறை நாகர்கோவிலில் மெஸ் போன்ற ஏதேனும் உணவகத்தில் மீனுணவு சாப்பிட வேண்டும் என விரும்பினார்.நான் நல்ல கடைகளுக்குச் சென்றுவிடுவோம்.அதுதான் நல்லது என்று சொல்லிப் பார்த்தேன்.அவர் ஏற்கவில்லை.யாரோ அவரிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மெஸ் போன்ற உணவகத்தில்தான் மீனுணவு சிறப்பாக இருக்கும் என்று சொல்லி ஏற்றியிருந்தார்கள்.அப்படியே பிரபலமான ஒரு கடைக்கு அழைத்துச் சென்றேன்.அவரால் அந்த எரிப்பில் சாப்பிடவே முடியவில்லை.கண்கள் கலங்க எழுந்து விட்டார்.
நான் என்னுடைய புத்தகங்களில் ஏதேனுமொன்றை அவர் வெளியிடவோ ,அல்லது பெற்றுக் கொள்ளவோ வேண்டும் என ஆசைப்பட்டேன்.நடைபெறவில்லை.இரண்டுமாதங்களுக்கு முன்பு படிகம் நவீன கவிதைக்கான இதழ் வெளிவந்தபோது அந்த இதழை ஞானக்கூத்தன் வெளியிட முத்துக்குமார் பெற்றுக் கொள்ளவேண்டும் என விரும்பினோம்.ஒத்துக் கொண்டார்.ஒருவாரம் கழித்து அழைத்து
"மணிவண்ணன் அதே தேதியில் என்னுடைய கல்லூரி நண்பர்கள் காஞ்சிபுரத்தில் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.கழிந்த முறை என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.தவறாக எடுத்துக் கொள்வார்கள்.ஆனால் உங்கள் நிகழ்வில் கலந்து கொள்வதே எனது விருப்பமாக உள்ளது.உங்கள் நிகழ்வில் சமயத்தை சற்று மாற்றிக் கொள்ள முடியுமா?
எனக்கேட்டார்.
ஞானக்கூத்தன் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.இனி எல்லாவற்றையும் மாற்றவேண்டி வருமே முத்துக்குமார் ! என்றேன்.இந்தமுறை நான் வரயியலாதத்திற்குப் பதிலாக சி.மோகனை நிகழ்ச்சியில் பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று சொன்னவரும் அவரே.அவர் சொன்னதன் அடிப்படையிலேயே படிகம் இதழின் ஆசிரியர் ரோஸ் ஆன்றா இதழை வெளியிட ஞானக்கூத்தனையும் பெற்றுக்கொள்ள சி.மோகனையும் நிகழ்வில் சேர்த்துக் கொண்டது. சரி அடுத்த முறையில் எப்படியும் வருவேன் என்றார்.
ஒருமாதத்திற்கு முன்னர் பேசும்போது
"டைபாய்டு காய்ச்சல் மணிவண்ணன் .மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் திரும்பியிருக்கிறேன். எப்போதும் மிகவும் களைப்பாக இருக்கிறது"
என்றார் .
நீங்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் வயிற்றில் புண்கள் ஏற்பட்டிருக்கும்.அந்த மருந்துகளை எடுத்துக் குணம் வரட்டும்.பின்னர் இங்கு வந்து தெரிசனங்கோப்பு மகாதேவ ஐயரிடம் முழுவதுமாக ஒருமுறை பரிசோதித்து ஆயுர்வேத மருத்துவம் செய்து கொள்வோம் என்று சொல்லியிருந்தேன்.வருகிறேன் என்றே அவரும் சொல்லியிருந்தார்.

தனியார் பயிற்சி மையங்கள் தடை செய்யப்பட வேண்டும்

தனியார் பயிற்சி மையங்கள்  தடை செய்யப்பட வேண்டும்


எய்ம்ஸ் மருத்துவமனைகளின் மருத்துவ படிப்பிறகான அகில இந்திய தேர்வில் முதல் பத்து இடங்களை ஆகாஷ் பயிற்சி மையம் பெற்றிருக்கிறது.ஒரே பயிற்சி மையம் இவ்வாறாக அதிக இடங்களை பிடிப்பது மருத்துவக் கவுன்சிலின் நடைமுறைகளில் முறைகேடுகளுக்கான வாய்ப்பு இருப்பதையே உணர்த்துகிறது.நகரம் ,பெருநகரம் சார்ந்த இந்த பயிற்சி மையங்களுக்கும் அகில இந்திய தகுதித் தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கும்  இடையில் உள்ள புரிந்துணர்வு , உயர் படிப்பு விஷயங்களில் உள்ள நம்பகத்தன்மைக்கு இடையூறு செய்கின்றன.கேள்வி தாள்கள் இந்த மையங்களுக்கு முன்னரே  கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இத்தகைய பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு  பாடங்களில் துணை செய்பவையாக மட்டும் இருப்பதில்லை.வினா  தாள்களின் அடைப்படையில் அவர்களுக்கு வருடக் கணக்கில் முதிர்ச்சியூட்டுவதன் வழியாக குறுக்கு வழிமுறைகளை எவ்வாறு மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் திறன் கொள்ளச் செய்கிறது.இத்தகைய குறுக்கு வழிகள் நமது கல்வி முறையை சமநிலை அற்றதாகவும் ஊழல் நிரம்பியதாகவும் மாற்றிவிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கழிந்த நீட் தேர்விற்காக திருச்சுர் தேர்வு மையத்தில் மட்டும் 150000 மேலாக மாணவர்கள் குவிந்தனர். இவை மாணவர்களை  தேர்வுக்கு தயார் படுத்தும் வேலையை மட்டும் செய்வதில்லை.கேள்வித்தாள்களின் அடிப்படையில் தங்கள் பயிற்சியை இவை வகுத்துத் தருகின்றன.ஒரே மையத்திலிருந்து குறிப்பிட்ட அகில இந்திய தேர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெறும் போது ,இத்தகைய தேர்வுகளின் கேள்வி தாள்கள் முன்கூட்டியே இந்த மையங்களுக்கு கிடைத்து விடுவதற்கான வாய்ப்புகள் இந்தியா போன்ற ஊழல் மிகுந்த நாடுகளில் அதிகம் உண்டு.

மருத்துவப்படிப்புகளை பொறுத்தவரையில் பல வருடங்களாக இந்த பயிற்சி மையங்களுக்கும் ,இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும்  தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் உள்ளன.பலமுறை ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.பாண்டிச்சேரி  ஜிப்மரில் ஏற்பட்ட உள்ள குற்றச்சாட்டுகள் முக்கியமானவை.நமது அமைச்சர்கள் பயிற்சி மையங்களுக்கு சார்பானவர்களாக இருப்பதற்கும் ஊழலுக்கும் தொடர்புகள் கிடையாது என்று நம்புவதற்கில்லை.மருத்துவ படிப்பில் உள்ள மர்மங்களை ,மருத்துவ கவுனிசிலின் மர்மங்களை வெளியே கொண்டு வருவதற்கான அமைப்புகள் தேவை.இல்லையெனில் எதிர்கால மாணவர்களின் நலம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கப்  போவது திண்ணம்.

மாநிலங்களின் பாட திட்டங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் மறுப்பதில் நிறைய மர்மங்கள் உள்ளன.இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பு எவ்வாறு இந்திய மாநிலங்களின் கல்வி முறையை பொருட்படுத்த மறுக்க முடியும் ? இது உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத புதுமை .இத்தனைக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து உலகத்தரமான ஏராளமான மருத்துவர்கள் மாநில பாடத்தில் இருந்து மட்டுமே உருவாகி வந்திருக்கிறார்கள்.அமெரிக்கா ,ரஷ்யா,சிங்கப்பூர் ,மலேஷியா போன்ற நாடுகளின் மருத்துவத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மருத்துவம் திறமையானது என்பது மட்டுமல்ல,ஒப்பீட்டளவில் விலையும் மலிவானது. எனில் மருத்துவக் கவுன்சில் விதிக்கும்  புதிய நடைமுறைகள் நிச்சயமாக சந்தேகத்திற்குரியவை.

புனே இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவச் சேர்க்கை மிகுந்த பூடகத்தன்மையை அடைந்து வருகிறது.கேட்பாரில்லை.

திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ...

திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு ...


நீங்கள் நீட் விஷயத்தில் தொழில்முறை வழக்கறிஞராக மட்டுமே பேசுகிறீர்கள் எனில் அது உங்கள் தனிப்பட்ட
விஷயம் .பொது மனிதராக பேசுகிறீர்கள் எனில் அது வேறுவிதமானது.இந்தியாவில் உள்ள ஒரு சதமானம் பணக்காரர்களுக்கும் ,99 சதமானம் ஏழைகளுக்கும் இடைப்பட்ட பிரச்சனை இது.

நீங்கள் ஒரு சதமானம் பணக்கார்களுக்கு ஆதரவான நியாயங்களை பேசுகிறீர்கள்.அது உங்களுக்கு தொழிலாகப் பணிக்கப்பட்டிருப்பதால் அதில் காலூன்றி நிற்க வேண்டியது உங்கள் வேலை.அதன் பொருட்டு 99 சதமானம் ஏழைகளின் தரப்பு தவறுதலானது என்று சொல்வதற்கு உங்களுக்கு தார்மீக நியாயங்களோ ,அறமோ கிடையாது என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு பொதுவில் பேசுங்கள்.

நீங்கள் இப்போது நின்று கொண்டிருப்பது சமூக அநீதிகள் தரப்பில் என்பது நினைவில் இருக்கட்டும்.

நீட் விஷயத்தில் மிகவும் எளிமையான தீர்க்கப்படாத கேள்விகள் உள்ளன.
1 .
மாநில அரசு பள்ளிக்கூடங்களின் கல்வி மேல் படிப்புகளுக்குத் தகுதியற்றதென்று முடிவு செய்கிற அதிகாரத்தை மத்திய அரசாங்கமும் ,நீதி மன்றமும் எந்த வகையில் 
பெற்றீர்கள் ? மாநிலங்களோடு இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதா ? சி.பி.எஸ்.ஈ மாணவர்களை மாநில அரசு பாடத்திட்டத்தில் தேர்வு எழுதச் சொன்னால் தேறுவார்கள் என நம்புகிறீர்களா ?
2 .
மாநில பாடத் திட்டங்கள் மேற்படிப்புக்கு உதவாது என நீங்கள் புறக்கணிக்கும் மாநிலங்கள் இந்தியாவில்தானே உள்ளன ?அல்லது அவை வேறு பக்கத்தில் உள்ள அண்டை நாடுகளைச் சேர்ந்தவையா ?
மாநில பாடத் திட்டங்கள் உயர்படிப்பிற்கு உதவாது எனில் மாநிலங்களின் கல்வி இனி யாருக்கானது ? அவற்றிற்கான அவசியங்கள் என்ன ? கல்வியை இனி சி.பி.எஸ்.ஈ பொறுப்பில் விடப் போகிறீர்களா ?
இல்லையெனில் சில கல்வித் பிரிவுகளை தனியார் கம்பெனிகள் மூலம் மாநிலங்களில் தொடங்கியிருப்பது போல ,தனியார் கல்லூரிகள் மூலம் தொடங்கியிருப்பது போல,தனியார் கம்பெனிகள்
மூலம் மத்தியில் கல்வியை இணைக்க இருக்கிறீர்களா ?
3 .
மாநிலங்களின் கல்வி கதைக்கு உதவாது எனில் மாநில அரசுகளின் கல்வி நிலையங்கள் எதற்காக செயல்பட வேண்டும் ? பொருள் விரயத்திற்காகவா ? இல்லை ஏழை மாணவர்களை லேபர் கம்யூனிட்டியாக மட்டும் உருவாக்கி மத்தியில் உருவாகும் சமூகத்திற்கு வீட்டு வேலைகளுக்கு அனுப்புவதற்கா ? இதற்கு உங்களுடைய நீதி மன்றங்களில் பதில் உண்டா ?
4 .
சி.பி.எஸ்.ஈ தான் தரமான கல்வியை தர வல்லது என்பதை எந்த நூற்றாண்டிலிருந்து நீங்கள் கண்டறிந்து கொண்டீர்கள் ? அதற்கு ஏதேனும் ஆய்வினை உங்கள் நீதிமன்றங்கள் செய்து கொண்டனவா ?
5 .
நீதி மன்றங்கள் என்பது வாதி,பிரதிவாதி வாதங்களைக் கொண்டு சில பஞ்சாயத்து முடிவுகளை எட்டுவதற்குரிய இடம்தான்.வாதி பிரதி வாதங்களுக்கு மேலதிக அறிவை அவை ஒருபோதும் கொண்டிருப்பதில்லை.மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நீதி மன்றங்கள் , நீட் விஷயத்தில் நடந்து கொள்வதை போலவே பல காலம் மறுத்து வந்திருக்கின்றன.சரி அது இருக்கட்டும்.
இனி வருங்காலங்களில் இந்தியாவில் நீதி மன்றங்கள்தான் கொள்கை 
முடிவுகளை ,அரசியல் முடிவுகளை எடுக்கும் என கருதலாமா ? எனில் சட்டசபைகளும்,பாராளுமன்றமும் எதற்காக ? யாரேனும் ஒருவரிடம் மொத்தமாக நாட்டை ஒப்படைத்து விடுவதுதானே சிக்கனமானது ?
6 .
கோச்சிங் சென்ட்டர்கள்தான் இனி இந்தியாவில் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் எனில் பாடசாலைகள் எதற்காக ? ஏழைகளை வடிகட்டி பணக்காரர்களைத் தேர்வு செய்யவே அகில இந்திய தேர்வுகள் என்னும் வழிமுறைகள் எனில் நேரடியாகவே குறிப்பிட்ட வருமானத்திற்கு குறைவானவர்களுக்கு உயர் கல்வியில் இடமில்லை என்று நேரடியாக தெரிவித்து விட வேண்டியதுதானே ?
7 .
எல்லாம் இருக்கட்டும் .இந்த "தகுதி" என்பதை எப்படி பொன் ராதா கிருஷ்ணன் , உங்களை போன்றோர் கண்டுபிடிக்கிறீர்கள் ? உங்களுக்கு மட்டுமே தனியாக உள்ள எட்டாவது அறிவை பயன்படுத்தித்தானே ? நீங்கள் பெற்றிருக்கும் எட்டறிவிற்கு இந்த எளிய கேள்விகள் விளங்குகிறதா ?
8 .
நீங்கள் உங்களுடைய தோப்புகளுக்குள்ளிருந்து கொண்டு ஏழைகள் எதற்காக படிக்க வேண்டும் ! என்று சும்மா பேசிக் கொள்வீர்களே ! அதற்கும் இந்த நீட் நடைமுறைப் படுத்தலுக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உண்டா ?
மக்கள் ஒருநாள் உங்களை அடித்து கொல்லப்போகிறார்கள் என்பது நிச்சயம்.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .பிறகு யாரும் சொல்லவில்லையே என வருத்தப்படாதீர்கள்.

கவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது

கவிதை புரியவில்லை எனில் கதைகள் எழுத முடியாது

சமகால கவிதைகள் என்பவை ஒவ்வொரு மொழியிலும் அதன் அளவு மட்டமாகத் திகள்பவை.ஒரு மொழியின் கூரிய முன்னோட்டுப் பாய்ச்சல்கள் முதலில் கவிதையிலேயே நிகழ்கின்றன.கவிதையில் நிகழும் மாற்றங்களே பின்னர் அந்த மொழியில் முப்பது வருட காலத்திற்கு புனைகதைகளில் ,நாவல்களில் வருகிற போக்கைத் தீர்மானம் செய்கின்றன.ஒரு புனைகதை எழுத்தாளன் தனது சமகால கவிதைகள் புரியவில்லை என்று சொல்வானேயாயின் ,அவன் பழைய பிரதிகளை எழுதிக் கொண்டிருக்கிறான் என்பதே பொருள்.கண்ணோட்டங்களின் மூலக் கருப்பொருளை ஒவ்வொரு மொழியிலும் கவிதைகளே முதலில் திறக்கின்றன.அதன் சாரத்தை பிடித்துக் கொள்ளும்  புனைகதையாளன் பின்பு சமகாலத்திற்குள் நுழைகிறான் .கவிதை அறியாமல் எந்த மொழியிலும் அதன் சமகாலத்திற்குள் நுழைவதற்கான கதவுகள் திறப்பதில்லை.

தமிழில்  புனைகதைகளில் புத்துணர்வு குன்றியிருப்பதற்குக் காரணம் ; அல்லது புனைகதைகள் பின்தங்குவதற்கு காரணம் இங்குள்ள புனைகதையாளர்கள் பலருக்கு கவிதையோடு பரிச்சயமின்மையே .பிச்சமூர்த்தியிலிருந்து தொடங்கிய நவீன கவிதைகளின் தாக்கம்  புனைகதைகளில் கடந்த முப்பதாண்டுகளை புனைகதைகளில்  தாங்கிப் பிடித்து நிறுத்தியிருக்கிறது.இன்றைய புனைகதை எழுத்தாளனுக்கு அது உதவி செய்யாது.அவன் புதிதாக எதையேனும் செய்யவேண்டும் என விரும்பினால் கவிதை அறியவேண்டும்.எனது தலைமுறை கவிஞர்களையாயினும்  சரி ,பின் வந்து கொண்டிருக்கிற  தலைமுறை கவிகளையாயினும் சரி ; புரியவில்லை அல்லது ஈடுபாடில்லை என்று ஒரு புனைகதை ஆசிரியன்  சொல்வானேயாயின் அவனுக்கு காலம் விளங்கவில்லை என்பதே பொருள்.தற்கால தமிழ் கவிதைகளை அறிந்து கொள்ள முயலும் புனைகதையாளனே இனி வருகிற முப்பதாண்டுகளுக்கானவன் .

என்னுடைய கவிதைகளிலிருந்தே இரண்டொரு உதாரணங்கள் சொல்கிறேன்.என்னுடைய ஒரு கவிதையின் தலைப்பு "அவன் பெயர் ஆறுமுகம் ;உண்மையில் மூன்று முகம்" என்பது.இதனை ஒருவர் தனது திறனாக கொண்டு ஒரு குறுநாவலாக எழுதிவிட முடியும் .தனக்குள் இருக்கும் நாவலை தூண்டிக் கொள்ளவும் முடியும் .கொடுப்பதற்கு கை நீட்டுகிற அதேசமயத்தில் கொடுக்க விரும்பாத பணம் என்னுடைய ஒரு கவிதையில் ஒரு வண்ணத்துப் பூச்சியாக ரயில் வண்டிக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.இதனை யுசுநாரி கவபத்தா அளவிற்குத் திறன் கொண்ட ஒருவன் சிறுகதையாக்கி விட முடியும்.என்னுடைய வீரலட்சுமி தொகுப்பிலுள்ள "ஒரு வீடு பற்றிய வரலாற்று பதிவை "நாவலாக்க முடியும்.அந்த தொகுப்பின் பல கவிதைகளை புனைகதையாக்கத்தில் வீரியம் கொண்டோர் புதிய சாத்தியங்களாகத் திறக்க முடியும்.எனது கவிதைகளில் என்றில்லை .யவனிகாவில்,ஸ்ரீநேசனில் என ஒவ்வொருவரிடத்திருந்தும் இவ்வாறாக பல விஷயங்களைக் குறிப்பிட முடியும்.

ஒரு புனைகதையாளன் சமகால கவிதை அறியமாட்டார் எனில் அவனுடைய உரைநடையில் பழைய வீச்சம் அடிக்கும்.அதனைத் தவிர்க்கவே முடியாது.வைரமுத்து ,மனுஷ்ய புத்திரன் ,அப்துல் ரகுமான் போன்றோரையெல்லாம் சில புனைகதையாளர்கள் கவிஞர்கள் என்கிறார்கள்.அப்படியில்லை .அவர்கள் கவிதையின் மேல் சருமத்தை எழுதுபவர்கள்.ஏகதேசம் பாடலாசிரியர்கள் அவர்கள்.கவிதை என்பது எப்போதுமே அடியாழம்.ஆழம்.அது மேல் நீச்சலில் துலங்காது..அடியாழத்தில் சொற்ப எளிமையிலேயே வெளிப்பட்டு விடும்.சமகால தமிழ் கவிதைகள் மிக மிக எளிமையானவை.இவை உங்களுக்கு புரியவில்லை என்றால் கவிதை பற்றிய உங்கள் மனப்பதிவில் தவறு இருக்கிறது என்றர்த்தம்.பாடலாசிரியர்களைப் பின்பற்றுபவர்கள் ஜன ரஞ்சகக் கதைகளை எழுதலாம்.புதுமை பித்தன் போல மௌனி போல சாராம்சத்தில் செயல்பட சமகால கவிதைகளுடனான பரிச்சயம் மட்டுமே உதவ முடியும்.

கவிதைகளுக்கு ஒருபோதும் புனைகதைகளிடம் சென்று யாசகம் கேட்கும் தேவை முக்கியமானதாக இருப்பதில்லை.ஆனால் புனைகதைகள் கவிதைகளிடம் யாசகம் கேட்டு நின்றே ஆகவேண்டும் .வேறு வழி கிடையாது.ஏனெனில் கவிஞனே  மொழியின் சமகாலத்தின் ஏக முதல்வன்.

இடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் ?

இடித்ததை கட்டித் தருவதுதானே நியாயம் ?


எந்த ஒன்று இருந்ததோ ,எந்த ஒன்றை ஒட்டு மொத்த சமூகத்தின் கண் முன்பாக இடித்துத் தள்ளினீர்களோ அதனை மீண்டும் கட்டித் தருவதுதானே நியாயம் ? இல்லாததற்கு துடிப்பது எதனைக் காட்டுகிறது ? வரலாற்று காரணிகள் வழியே ,சாதுர்யமான வாதங்களின் மூலமாக ,விலைக்கு வாங்கப்பட்ட எதிர்தரப்புகளின் ஒப்புதலைக் காரணம் காட்டி மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவிலை கட்ட முயற்சிப்பது எந்த வகையான நியாயம் ? இதற்கு நீங்கள் நம்புகிற ராமன் சம்மதிக்கிறானா ?
எனக்குத் தெரிந்த ராமன் தந்தையின் வாக்குறுதிக்காக பதினான்கு வருடங்கள் வனவாசம் சென்றவன்.நீதியின் பிம்பம்.நியாயங்களை வளைத்து அநீதி நிறுவப்படுதலை அவன் ஒருபோதும் சம்மதிக்க மாட்டான் என்றுதான் நினைக்கிறேன்.இல்லை ஒருவேளை நீங்கள் செயற்கையான வரலாற்றுக் காரணிகளை முன்வைத்தும் ,வாத சாதுர்யங்களை முன்வைத்தும் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்றால் ,இந்தியா முழுமைக்கும்; இதுபோன்ற செயற்கையான வரலாற்று காரணங்களும் ,வாத சாதுர்யங்களும் கிடைக்கும் பட்சத்தில், இங்கே இருப்பவற்றை இடித்து விட்டு மறுகட்டிடங்களை கட்டிக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? இது ஒரு முறையற்ற செயல்.
இந்தியா முழுமைக்கும் இந்து பழமைவாத ,அடிப்படைவாத சக்திகள் ,பசுக் குண்டர் குழுக்கள் பா.ஜ.க அரசு மீது கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள்.சிவ் சேனா போல பல அதிருப்திகள்.ஏற்கனவே இந்த குழுக்கள் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது தொடங்கி சிறுமையான அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களை பா.ஜ.க வால் சமாளிக்க இயலவில்லை என்பதே உண்மை .ராமர் கோவிலை சாதுர்யமாக எழுப்பி விடுவதன் மூலமாக இந்த பழமைவாத , அடிப்படைவாத இந்து தரப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பா.ஜ.க குறுகிய கணக்கு போட்டுப் பார்ப்பதையே ,இந்த ராமர் கோயில் மும்முரம் காட்டுகிறது. அதற்குரிய வியூகங்கள் தயாராகின்றன . மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை சுமூகத் தீர்வாக கருதி "இந்து தமிழ்" நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.சுமூகத் தீர்வு ஒருபோதும் ராமர் கோவில் கட்டுவதாக இருக்க முடியாது இந்தியாவில் .
மசூதி இடிக்கப்பட்டதிலிருந்தே பழமைவாத ,அடிப்படைவாத இந்து தரப்பினரால்; "இடிக்கப்பட்டது பழுதடைந்த கட்டிடம்தானே அன்றி மசூதியல்ல" என்ற ஒரு புத்திசாலித்தனமான வாதம் இனிக்க இனிக்க முன்வைக்கபட்டுக் கொண்டே இருக்கிறது.இந்த வாதத்திறமைக்கு முன்பாக நான் எழுப்புகிற ஒரேயொரு எளிமையான கேள்வி,வழிபாடு நடைபெறாதவை எல்லாம் வெற்றுக் கட்டிடங்கள் என்றால் இந்தியா முழுவதிலும் இது போன்ற ஏராளமான வெற்றுக் கட்டிடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இடித்து நொறுக்கி விடலாமா என்ன ? மாவட்ட வாரியாக , மாநிலங்கள் வாரியாக வழிபாடற்ற கட்டிடங்கள் ஏராளம் உள்ளன.எப்படி வசதி ?
சாட்சியங்களை மறைத்தோ ,ஒளித்தோ வைத்துக் கொள்வதற்கு ; பாபர் மஜித் ரகசியமாக ஒன்றும் இடிக்கப்படவில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த மனங்களின் மீது,இறையாண்மை மீது பகிரங்கமாக மோதி, கண்காட்சி செய்து , அது இடிக்கப்பட்டது.அது இடிக்கப்பட்டதை போலவே , இடித்தவர்களின் நோக்கமும் இந்திய இறையாண்மைக்கும் நீதிக்கும் எதிராக பகிரங்கமாக வெளிப்பட்டது.அவர்கள் இந்தியாவை இந்து ராஜ்யமாக மட்டுமே கருத்தில் கொள்கிற, இன்றைய சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்கு முற்றிலும் எதிரானவர்கள். இந்தியா பல மதங்களின் தாய் வீடு என்பதறியாத பழமைவாதக் குழுக்கள் அவை.
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதே நியாயம்.பாபர் மஜித் இடிக்கப்பட்ட நிகழ்வு என்பது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.இந்திய முஸ்லீம்கள் அனைவருக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்திய நிகழ்வு அது.பன்முகத்தன்மை வாய்ந்த இந்திய இறையாண்மை,மாண்பின் மீது நடத்தப்பட்ட கூட்டுத் தாக்குதல் அது.அவர்கள் அனைவரும் இந்தியாவை இந்து ராஜ்யமாக கற்பனை செய்பவர்கள்.அந்த தாக்குதலை அவ்வாறே ஏற்பது இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து.
இந்திய இறையாண்மை என்பது எந்த குறிப்பிட்ட ஒரு மதத்துடனும் தொடர்புடைய ஒன்று அல்ல.அது பன்முகத்தன்மையின் மீது எழுந்து நிற்பது.எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இந்தியாவின் இறையாண்மை அவ்வாறே பாதுக்காக்கப்படுத்தலில் மட்டுமே அதன் உயிர் அம்சமும் , பெருமையும் , ஜனநாயகத்திற்கான நீடித்த உத்திரவாதமும் அடங்கியிருக்கிறது.
இடித்த இடத்தில் மசூதியை கட்டுங்கள் அதுவே சாலவும் சிறந்த செயல்,இல்லையெனில் இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றும் விதமான நினைவுச் சின்னங்களை அங்கே நிறுவலாம்.ராமர் கோவிலை அதில் கட்டியெழுப்புதல் ராமனுக்கும் தகாது,இந்தியாவின் இறையாண்மைக்கும் கேவலம்.

பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே வற்புறுத்தக் கூடாது

பக்தியில் பழைய நியதிகளை மட்டுமே  வற்புறுத்தக் கூடாது சமத்துவம்,சம உரிமை போன்ற பொது நியதிகளும் மனிதனின் நீண்ட தீவிரமான பயணங்களின் மூலம் ...