ஜெயாவும் செளந்திரபாண்டியனும் - சிறுகதை

ஜெயாவும் செளந்திரபாண்டியனும்

எண்பத்தொன்பது தொண்ணூர்ல எனக்கு கேர்ல் ப்ரண்டா இருந்தது ஜெயா. ஜெயாவுக்கு அப்ப இருபத்திமூணு இல்லன்னா இருவத்தி நாலு வயசா இருந்திருக்கும். எனக்கு இருபத்தியேழு வயசு நடந்திட்டிருந்தது. ஜெயாவுக்கு கே.என். ஹாஸ்பிட்டல்ல நர்ஸ் வேலை. ரொம்ப குரூரமாக தெரியற மென்மையான மனசு அவளுக்கு. அது எனக்குப் பிடித்திருந்தது. அந்த நாட்கள்ல நான் தூங்குன நேரமும் ஜெயாவோட பேசிட்டிருந்த நேரமும்தான் அதிகம். எவ்வளவோ பேசியிருக்கோம். என்னவெல்லாமோ பேசியிருக்கோம். நெஜமாவே மனசு திறந்து சொல்றதா இருந்தா அது உண்மையான ப்ரண்ட்ஷிப்தான், காதல் இல்லைன்னு என்னால உறுதியா சொல்ல முடியாது. ஆரோக்கியமான நட்பில் இருந்துதான் ஆரோக்கியமான காதல் உருவாக முடியும். அப்படீன்னு பல தடவ ஜெயாகிட்ட சொல்லியிருக்கேன். ஜெயாவும் அத ஆமோசிச்சிருக்கா. ஆனாலும் ஜெயாவும் நானும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறோம் அப்படீன்னெல்லாம் எந்தத் தீர்மானமும் எடுத்துக்கிட்டதில்ல.

அவளுக்கு ஹாஸ்பிட்டல்ல நைட்ஷிப்ட் வரும்போது ஆரம்பத்தில் கொஞ்சநாள் நானும் ஹாஸ்பிட்டல்ல அவளோட முழிச்சிருந்திட்டு பகல்ல வீட்ல போய் தூங்குவேன். ரொம்ப சந்தோசமான தூக்கமும் முழிப்பும் அப்ப. (ஹாஸ்பிட்டல்ல இதை வச்சிட்டு அவளுக்கு சில பிரச்சனைகள் வர ஆரம்பிச்ச பிறகு ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு திரும்பிடுவேன்) ஹாஸ்பிட்டல்ல நானும் அவளும் பேசிட்டிருக்கும்போது ஜெயாவோட தோழி மோரின் சிலநேரம் எங்களோட இருந்து பேசிட்டிருப்பா. நானும் மோரினும் சேர்ந்து ஜெயாவ தொடர்ச்சியா விவாதத்துல தோற்கடிச்சிட்டேயிருப்போம். செக்ஸ் பத்தியெல்லாம் கூட பேசியிருக்கோம். ஒருநாள் பேசிட்டிருக்கும்போது திடீர்னு மாஸ்டர்பேஷன் பண்ணுவீங்களான்னு கேட்டுட்டா ஜெயா, மோரின் பக்கத்துல இருக்கும் போதே எனக்குச் சூன்னு ஆகிப்போச்சு. வேர்த்துட்டேன். எப்படி தலையசைக்கறதுன்னே தெரியல. என்னவோ எப்படியோ ஆமா, சரி எதுவுமில்லாத ஒரு தலையசைப்பு அசைச்சிட்டு சாமுவேல் கம்பெனி ப்ரெண்ட்ஸ்களோட ஒருதடவ நாங்க பேசிட்டிருந்ததைச் சொன்னேன்.

தாமஸ், சாமுவேல், பன்னீர், நான் எல்லாம் பேசிட்டிருக்கும்போது தாமஸூக்கும் பன்னீருக்கும் பெரிய டிஸ்கஷன். தாமஸ் உலகத்துல மாஸ்டர்பேஷன் பண்ணாத யாருமே இருக்கவே முடியாதுன்னு திட்டவட்டமாச் சொன்னான். பன்னீர் எடன அப்படின்னா விவேகானந்தர், இப்படித்தானான்னு பெரிய பெரிய ஆளுகளையெல்லாம் துணைக்கிழுத்திட்டு கேட்டான். தாமஸ் கொஞ்சங்கூட கூச்சமே இல்லாம ஸ்ரீராமனுங்கூட இங்க வாழ்ந்திருந்தான்னா மாஸ்டர் பேஷன் பழக்கம் உள்ளவனாத்தான் இருந்திருப்பான் அப்படீன்னுட்டான். எனக்கு என்னமோபோல ஆகிப்போச்சு. ஸ்ரீராமனை இந்த விஷயத்துல இழுத்திட்டது சரியாப்படல. இருந்தாலும் தாமஸ் சொல்றது உண்மையாயிருக்க வாய்ப்பு நிறைய அப்படீன்னு தோணிச்சு. அதோட பன்னீர் ஸ்ரீராமன்கிட்ட இந்தப் பழக்கம் இருந்திருக்குமாயிருக்கலாம் ஆனா என்கிட்ட இல்லன்னு முத்தாரம்மன் மேல சத்தியமடிச்சிக் சொன்னத என்னால் துளிகூட நம்ப முடியல. (முத்தாரம்மா, பன்னீருக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாதுன்னு நான் தனிப்பட்ட முறையில் வேண்டிக்கிட்டேன்) இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரியா சாமுவேல் பேச ஆரம்பிச்சான். பன்னீர் சொல்கிறதிலயும் நியாயம் இருக்கு. எங்க அண்ணாச்சிகூட சொல்லியிருக்காரு தொண்ணித் தொன்பது பெர்சென்ட் பேருட்ட இந்த பழக்கமிருக்கு. மிச்சம் ஒரு பெர்சென்ட் இந்த பழக்கம் வச்சுக்கிட்டே இல்லன்னு மறுத்துருவாங்க அப்படின்னான்.பன்னீர் அப்ப எழும்பிப் போனவன்தான், அப்புறமா சாமுவேல் இருக்கிற எந்தக் கூட்டத்திலேயும் பன்னீர் கலந்துகிட்டதேயில்லை. இந்த விஷயத்தை அவங்ககிட்ட அப்ப தோணியதுபோல வேறெதோ ஒருவகையில் சொல்லி முடிச்சதும், ஓ ஒன்னு சிரிச்சாங்க. எனக்கும் திருப்பி அதே கேள்வியை ஜெயாகிட்ட கேக்கணும்னாலும் அப்ப கேட்க தைரியம் இல்லாமல் போச்சு. 

நானும் ஜெயாவும் ரொம்ப அன்னியோன்யமா இருந்‍தோம். சினிமா பார்த்தோம். தொடையில் மாறி மாறி கிள்ளிக்கிட்டோம். திருநெல்வேலி மதுரைன்னு பஸ்ஸிலேயே போயிட்டு அப்படியே அடுத்த பஸ்ஸூல திரும்பினோம். பாதி சாப்பிட்டு முடிச்சபிறகு சாப்பாடு, இட்சி, தோசை, பூரி, சப்பாத்தி, சூப், ஐஸ்கிரீம், எல்லாத்தையும் மாத்திக்கிட்டோம். ஜட்டி, பிரா, ஜம்பா, சட்டை, பேன்ட், சேலை இதையெல்லாந்தான் எங்களால் மாத்திக்க முடியல்ல. அதுக்கான தேவையும் ஏற்படல. அந்த சமயத்தில் நான் புதுசா எடுத்து தைத்த சட்டைகள்ல எல்லாத்திலயுமே பாக்கட் பக்கத்தில் 'Mamo, Mano'-ன்னு எம்பேரு எம்ராய்டா பண்ணப்பட்டிருக்கும். அது ஜெயாவோட கை வண்ணம்தான். எங்க நட்பில, எங்க பேச்சில, காத்திருப்பில, ஏமாற்றத்தில, ஊர் சுற்றுறதுல எல்லாம் எனக்கு சுகமிருந்தது. யாராவது பேஷ்ண்ட்கிட்ட இருந்து அவ 555 சிகரெட்,ஃபாரின் சிகரெட் எனக்காக வாங்கிக் கொண்டு வரும்போதும், நான் ஜெயாவுக்காக ஹேர்பின் பல தினுசில் வளையல் போலவுள்ள எதாவது நொங்கு நொங்குணிவாங்கித் தரும்போதும் எங்களுக்குள்ள பேரானந்தம் குறிப்பா, எனக்குள்ள பேரானந்தம், அருவியில குதிச்சு செத்தாலும் ஏற்படாது. 

அறிவுள்ள, சுதந்திரமான ஒரு பெண்ணோட பழகிறது எவ்வளவு சந்தோசமான காரியம் அப்படீங்கறதை ஜெயாவோட என் காலத்தைச் செலவிட்ட ஒவ்வொரு கணத்தையும் வச்சுச் சொல்லமுடியும். எல்லாம் அப்படியே ரொம்பப் பத்திரமா இருக்கு. ஆஸ்பத்திரியைப் பார்க்கும் போதெல்லாம் ஜெயா ஞாபகம்தான் வருது. ஆஸ்பத்திரிக்கு ஏன் போகணும்? கால்ல ஒரு முள்ளு தச்சா கூட டெட்டால் லோஷன் கலந்த அவ ஞாபகம்தான் வருது. ரெண்டு காரியம் அவளைப்பத்தி சொல்லியிருக்கேன். அதை வச்சிட்டு நீங்கள் அவளைப் புரிஞ்சிக்க முடியாமலும் போகலாம். 

காரியம் 1 
ஜெயா கவிதைகள்ல அதிக ஈடுபாடுள்ளவ. ஈடுபாடுள்ளவளப்போல காட்டிக்கிறதாகவும் சிலருக்குத் தோணலாம். வேறு மொழிக் கவிதைகள் ‍எல்லாம்கூட அவளுக்கு ரொம்ப ஸ்நேகம். கவிதைகள் பற்றிப் பேசியே எங்களுடைய பல பொழுதுகளை நாசம் பண்ணியிருக்கா. அப்படியொரு மோசமான இரவில் அவ கமலாதாஸ் கவிதை ஒண்ணுபத்தி ஆஸ்பத்திரிக்கு எதிர்தரப்பில் இருந்த ஆற்று மணல்ல இருந்து பேசிட்டிருக்கும்போது ஜெயாவுக்கு போன் வந்தது. ஜெயா போய் போன் அட்டன்ட் செய்திட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தொடர்ந்து பேசிட்டிருந்தா. 

குறிப்பு: அவை அன்னைக்கு பேசிட்டிருக்கும்போது பயன்படுத்திய கவிஞர்களின் பெயர்களை கீழே தந்திருக்கேன். 
கமலாதாஸ் (மாதவிக்குட்டின்னும் இடையிடையே சொன்னாள்)
பசுவய்யா
தேவதேவன் 
வைரமுத்து
பிரம்மராஜன்
இன்குலாப்
தமிழன்பன்
குஞ்சுண்ணி 
ஆத்மாநாம் 
அரைமணிநேரம் கழிச்சி ஜெயா உனக்கு என்ன போன்னு கேட்டேன். எங்க சிஸ்டர்  ஒண்ணு  சுகமில்லாம இருந்தது இறந்து போச்சாம். இப்ப போனா வழக்கமான சடங்குகள், வழக்கமான பொய்யான அழுகை, நானும் அழணும். அந்த சடங்குகள் எல்லாத்திலயும் கலந்துக்கிடணும். அதனால நாளைக்கு காலையில்தான் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா போறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். எனக்கும் அழுகையிருக்கு மனோ! ஆனா அது கூட்டத்துக்கு சனங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்ல. வெளிப்படையாச் சொன்னா உனக்குக்கூட தெரிய வேண்டிய அவசியமில்ல. அப்படீன்னா, நான் இதை இப்ப சொல்றது அப்ப எனக்கும் அவளுக்கும், நாங்க உட்கார்ந்திருந்த ஆற்றுமணல் மீது விழுந்து கிடந்த டியூப்லைட் வெளிச்சத்துக்கும் இடையில் நிலவிய இறுக்கமான சூழலை உங்களுக்குப் புரியவைக்குமான்னு எனக்குப் புரியவில்லை. ஒருமணி நேரத்துக்கும் மேல அப்புறமா ரெண்டு பேரும் எதுவும் பேசிக்க முடியாமலும், நேரே முகம் பார்க்க முடியாமலுமிருந்தோம். டியூப்லைட் வெளிச்சம் மட்டும் ஏதோ எங்களுக்கிடையில் பேச முயற்சி எடுத்து தொடர்ச்சியா தோத்தக்கிட்டேயிருந்தது. அவ வழக்கமான சடங்குகளுக்காகப் பயந்து போனதா சொன்னது பொய்யாக எனக்குப் பட்டுது. அவளுக்கு கொஞ்சம் கூட சலனமே ஏற்படல அப்ப. தங்கச்சி இறந்த சலனம் ஏற்படாத சோகத்தை என்கிட்ட மறைக்கத்தான் அவ சொல்லிய விளக்கமெல்லாம், அப்படித்தான் பட்டுது. அவளுடைய விளக்கத்தோட போலித்தனத்தை நான் புரிஞ்சுகிட்டத அவ புரிஞ்சுகிட்ட பிறகுதான் அந்த மெளனம் எங்களுக்கிடையில் வந்திருக்கக்கூடும். இந்த மெளனம் மட்டும் தான் அப்ப அவ இயல்பைப் பாதிச்சதே தவிர அவ தங்கச்சி இறந்தது இல்ல. அப்புறமா நாலுநாள் அவளை நான் பார்க்கவே இல்ல. நாலாவதுநாள் அவகிட்ட இருந்து எனக்கு வந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. 
"சொந்த பந்தங்களில் எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. அறிவுபூர்வமான நாளைய உலகத்தில் ரெத்த பந்தம் கேள்விக்குரியதாகவும், கேலிக்குரியதாகவும் ஆகிவிடும் என்பதை நம்புவது மனோ, உனக்கு சாத்தியமேயில்லை. கணவன், மனைவி உறவுகள் இங்கே ரத்த பந்தத்தாலா தீர்மானிக்கப்படுகின்றன? அதுதானே இங்கே முதல் தரமான உறவுநிலை. அண்ணன், தம்பி, தாய், தந்தை எல்லாம் பிற்பாடுதானே. மனோ, நீ சாதாரண சினிமாக்களிலேயே இறுதி யாத்திரை, சவ அடக்க காட்சிகள் வரும்போது அழுதுவிடுமளவுக்கு பலகீனமான மனம் கொண்டவன். இந்த பலகீனமான மனத்தின் பின்னணி தெரியுமா உனக்கு? நீ நேசித்த ஜீவனின் மரணத்துக்காக அழுத சூழலை ஞாபகப்படுத்தி ஞாபகப்படுத்தி எந்த தருணத்திலும் அழத்தயாராக இருக்கிறாய். அந்த சூழலை சினிமாவில் ஏற்படுத்தி தந்தாலும் சரி, நிஜ  வாழ்வில் ஏற்பட்டாலும் அழுவதற்கு நீ தயாராக இருக்கிறாய்.அழுகைக்கு இங்கே வேறென்ன அர்த்த முண்டு. எனக்கு அப்படியொரு தயார் நிலை இல்லை. என் தங்கச்சியின் மரணம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மரணம். அதற்கு நான், சாதாரண நியாயமான குமாஸ்தா அப்பா, நவீன இலக்கிய கிறுக்கன் என் அண்ணன், ஒரு வகையில் நீ எல்லோரும்தான் காரணம். எனவேதான் அதில் அதிர்ச்சியடைய எனக்கு ஏதும் இல்லை. 

சரி, எனக்கா நீ அதிர்ச்சியடைந்தது போலித்தனம் இல்லையா? பொய் இல்லையா? நீ எப்படி எனக்காக அதிர்ச்சியடைய முடியும்? நீ நடந்து கொண்டது என்னைப் பொறுத்தவரை ஆபாசமானது. எனக்காக அதிர்ச்சி அடைவதுபோல நீ காட்டிக்கொள்வதன் மூலமாக என் நம்பிக்கையைப் பெற, என் தங்கச்சியின் சாவை நீ பயன்படுத்த முயற்சி செய்கிறாய்? ரெண்டாவது விஷயம் எனக்கு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படாத பொழுதில் நீ என் பொருட்டு அதிர்ச்சி அடைந்ததாகக் காட்டிக் கொண்டதால் நீ படுதோல்வியடைந்தாய். இந்த உன் முயற்சி கோரமானதில்லையா? ரொம்பவும் சராசரியான பையன் பஸ் ஸ்டாண்டில் நின்று என்னை டாவடிப்பதற்கும் நீ நடந்து கொண்டதற்கும் என்ன வித்தியாசம்?"

காரியம் 2 
வழக்கம்போல ஒருநாள் நானும் ஜெயாவும் திருநெல்வேலிபோக T.T.C பஸ்ஸில் ஏறினோம். வழக்கமாகவே திருநெல்வேலி போணும்னா நாகர்கோவில்ல இருந்து ஏதாவது T.T.C பஸ்ஸீல போறதுதான். அதுதான் செளகரியம் எங்களுக்கு. பக்கத்துல யாரோட கவனிப்போ, உற்று நோக்குதலோ இல்லாம பேசிக்கிட்டு, போகமுடியும். அப்படி T.T.C பஸ் கிடைக்காத பட்சத்தில் திருநெல்வேலி போறதில்லை. டிரெயின்லயும் இந்த உற்று நோக்குதல் இல்லாம போகமுடியும். ஏன்னா, நாகர்கோவில் திருநெல்வேலி டிரையின்ல வழக்கமா அதிக கூட்டம் வர்றதில்ல. உற்று நோக்குதல் மிகப் பெரிய கொடூரம், அதோட உற்றுநோக்கப்படுகிறோம் என்கிற நிலையில் நடந்துக்கறதுதான் மிகப் பெரிய கொடூரம். எல்லா கோணல்களுக்கும் இதுதான் காரணம் இல்லையா! நாம் தப்பா இருக்கோமோங்கிற பதட்டத்தை உற்று நோக்குதல் கூட்டுது. நிதானமிழக்கிறோம். எப்பவுமே கேமராவுக்கு முன்னால நிற்கிற ஒரு நிலையை இது ஏற்படுத்துகிறது. இன்னைக்கு உள்ள மத்தியதர வர்க்கத்து சனங்களின் பிரச்சனையில் இதுவும் ஒண்ணுன்னு நெனக்கிறேன். கவனிக்கப்படுகிறோம் என்கிற நிலைய ஏற்படுத்தி பக்கத்தில் திரும்பிப் பார்க்க முடியாம சூட்கேஸ்  தூக்கிட்டு நேரா நடக்கிற மனிதன் பரிதாபமானவன். இந்த  மனிதன்தான் பதட்டப்படறான். ஒரு நன்னாரி சர்பத்தக்கூட இவனால் சுதந்திரமா உறிஞ்சிக் குடிக்க முடியாமல் போச்சு. முட்டு மடக்கி உட்கார முடியாதவன், தொட்டு தொட்டு நக்கறான். சட்டையில் கொட்டிக்கறான். என்னென்னமோ செய்யறான். இவ்வளவு சிரமமும் இவனுக்கு ஏற்பட்டதே கவனிப்பு தான். இது எங்க ஊர் வயல்ல வேலை செய்யறவங்கிட்ட இல்ல. பனையேறுகிறவன்கிட்ட இல்ல. கக்கூஸ் அள்ளுறதா நினைச்சுக்கிட்டு அள்ளுறதில்லை. இந்த கலர் டி.வி. பார்க்கிற வர்க்கத்துக்குத்தான் இந்த சோகமெல்லாம். கவனிக்கப்படாம இருக்கிறதில் உள்ள சுகம் ஜெயாவோட சுத்தின காலங்களில் நான் உணர்ந்தது. கவனிக்கப்படாமலிருக்கிற சுகம் ரொம்ப அலாதியானது. பெரும்பாலும் திருநெல்வேலிக்கு பஸ்ல போக நானும் ஜெயாவும் பிளான் பண்ணினா 11 மணிக்கெல்லாம் T.T.C பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருவோம். ஒண்ணேமுக்கால் மணி நேரம் பயணம். வசந்தத்திலயோ பரணியிலேயோ சாப்பாடு. அப்புறமா திரும்பவும் ஒண்ணே முக்கால்.
 
அண்ணைக்கும் இதே ப்ளான்தான். பஸ்ஸில் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஏறினதும் நான் டிக்கட் எடுகுகறேன் மனோ அப்படீன்னா ஜெயா. சரின்னேன். ஆரல்வாய்மொழி தாண்டனதுக்கு அப்புறமாத்தான் கண்டக்டர் எங்க பக்கமா வந்ததா ஞாபகம். ஜெயா இருபது ரூபாய் கண்டக்டர்கிட்ட குடுத்திட்டு திருநெல்வேலிங்கறதுக்குப் பதிலா ஒரு இண்டியா டுடே, ஒரு ஆனந்தவிகடன், ஒரு குமுதம்  அப்படீன்னு ரொம்ப சீரியஸா கேட்டா. எனக்கு அதிர்ச்சியாகப் போச்சு. நான் என்னைய சுதாரிச்சிட்டு ரெண்டு திருநெல்வேலின்னு கேட்டேன். கண்டக்டர் ரெண்‍டோ மூணோ வாக்கியங்கள்ல திட்டிட்டு டிக்கட் தந்தான். பின் சீட்ல இருந்த இரண்டு பேர் கண்டக்டர்க்கு ஒத்தாசையா சிரிச்சாங்க. நான் திருநெல்வேலின்னு உச்சரித்த பிறகுதான் ஜெயா நிலைமையப் புரிஞ்சுகிட்டது. ரொம்பவும் ஷேம் ஆயிட்டு. குருவிபோல என் நெஞ்சில் முகத்தை மறச்சுகிட்டா. கொஞ்சதூரம் போனதுக்கு அப்புறமா லேசா ரெண்டு சொட்டு கண்ணீர் என் சட்டை வழியா உடம்பைத் தொட்டபிறகு, இது ரொம்ப சகஜம் ஜெயா, இதுவ அவமானப்பட எதுவும் இல்லை அப்படீன்னேன். இது கற்பனைபோலகூட உங்களுக்குத் தோணலாம். அதுக்கான வாய்ப்பு இந்த சம்பவத்திலயும் என் பலகீனமான மொழியிலயும் இருக்கு. ஆனால் நாம நம்ப முடியாத சம்பவங்கள் சில நிஜமா இருக்கு. என்ன செய்ய? ஒருசமயம் 80 வயசுல ஒரு கிழவர் விறகு வெட்டிட்டிருந்ததைப் பார்த்தேன். பக்கத்துல முப்பது முப்பத்தைஞ்சி வயசில ஒருத்தர் மேஸ்திரி வேலை பார்த்திட்டிருந்தான். இது எனக்கு அதிர்ச்சியா இருந்தது. நான் பார்க்காம இதை யாராவது சொல்லியிருந்தா நான் நம்பியிருக்கவே மாட்டேன். அது போலத் தான் இதுவும். உங்களுக்குத் நேரணும். 

இது மாதிரியா எனக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கு. ஆனந்த செவ்வாய் கிழமைகள்ல நான் பார்க்கிறதுண்டு. ஒருநாள் ஏதேச்சையாக புதன்கிழமை பாத்து கொஞ்சநேரம் பேசிட்டிருந்திட்டு பஸ் ஸ்டாண்ட் வரும்போது நான் வழக்கமா முடிவெட்ற கடை திறந்திருந்தது. ஒருநபர் மூலம் பழக்கப்பட்டிருந்த விஷயத்தால நாள் குழம்பிப் போச்சு. நான் புதனை செவ்வாய்னே முடிவு பண்ணிட்டேன். அந்த சூழல் டைம் எல்லாமே எனக்கு செவ்வாய்கிழமைக்கான தயார் நிலைக்கு மாறியிருந்தது. செவ்வாய்கிழமைகளில் இல்லாத முடிவெட்டும் கடை மட்டும் இந்த சூழலை மறுத்ததில் எனக்குக் குழப்பம். கடையில் ஏறி ஏன் லீவ் நாள்ல கடை திறந்து வச்சிருக்கீங்கன்னு கேட்டேன். எல்லோரும் புதன்னு சொன்னதும் சிரிச்சிகிட்டதும்தான் என்னை நிலைக்குக் கொண்டு வந்தது. அப்புறமா முடிவெட்டப் போகும்போது வழக்கமா பேசிக்கிட்டே முடிவெட்டுறவன் என்கிட்ட பேசறதையே விட்டுட்டு ஒழுங்கா முடியை மட்டுமே வெட்டினான்கறதும் சவுகரியமாகத்தான் இருந்தது. டவுன் சர்குலர்ல டிக்கட் ‍எடுக்கும்போது பன்னீரும் ஒருதடவை ரெண்டு பஸ் ஸ்டாண்ட், ஒரு ப்ளைன் கோல்டு ப்ளாக்னு கேட்டு, அசடு வழிஞ்சு சிரிச்சு சமாளிச்சு அவதிப்பட்டிருக்கான். என்கூட வரும்போது ஜெயாவுக்கு முகத்தை நேரா நிமித்தவே முடியாமப் போச்சு. இதை யாரு கவனிச்சாங்க;கவனிக்கல்ல அப்படிங்கறதே அவளுக்கு தெரியாததால அவளுக்கு யாரையும் எதிர்கொள்ள முடியல்ல. நான் என்னன்னவோ சொல்லிப் பார்த்தேன். நீ எவ்வளவு தைரியமானவ; ஏன் சுத்தியுள்ள சமூகத்துக்குப் பயப்படணும்னுகூட கேட்டேன். வள்ளியூர்ல இறங்கிருவோம் மனோ அப்படீன்னு பத்தாயிரம் ரூபா கடன் கேக்கிறதுபோல சொன்னா. வள்ளியூர்ல இறங்கினோம். ரெண்டுபேரும் டீ குடிச்சிட்டு எதுவுமே பேசிக்காம வள்ளியூர்ல இருந்து அன்னக்கி மட்டும் P.T.C-யில் திரும்பினோம். இந்த ரெண்டு காரியங்கள வச்சிட்டு ஜெயாவ உங்களால புரிய முடியுமா? தெரியல்ல. எனக்கு அவள புரிய முடிந்தது. தீர்க்கமா, மீக நீளமா. இந்த விஷயங்கள், ஜெயாவோட சம்மந்தப்பட்ட ஏனைய காரியங்கள் எல்லாம் அப்படியே மனசில தேங்கி அசையாதக் காட்சிகள் போல நிக்குது. இந்த இறந்த காலத்தில் வாழுவதில் எனக்கு எந்தவிதமான சிரமங்களுமேயில்ல. இறந்தகாலம் என் நிகழ்காலமா இருக்கு. அசையாத பிம்பங்கள், தீர்மானிக்கப்பட்ட காட்சிகள் வரலாற்றுத் தடயங்கள் மாதிரி கல்லு கல்லா, பழைய மரக்கதவுகளா, சிதைஞ்ச கோபுரங்களா, ஆனா புதுசா எப்படியோ இருக்கு. பழைய கோபுரத்து மணிகள் இப்ப சத்தங்கள் உண்டு பண்றதில்ல. ஆனா அசையுது. பழைய சிற்பங்கள்ல மழையோ, வெயிலோ, காத்தோ எதுவுமில்ல. அச்சடிச்சது போலவுள்ள பாதுகாப்போட இருக்கு. பச்சையம் மாறாத மரங்கள் சருகுகள், பூக்கள் கருகாத மரங்கள் சுத்திச்சுத்தி. மனசெல்லாம் சந்தோசம் பனிக்கட்டிபோல உறிஞ்சி போயிருக்கு. உறைந்த நிலை சந்தோசங்கள் மனச என்னவோ செய்யுது. பனிக்கட்டிக்குள் சிக்கிக் கொண்ட மீன்கள் இன்னும் செத்துப் போகவேயில்லை. ‍எப்பவாவது ஒளி பீசுசியடிச்சி வெப்பம் நேர்ந்தா இந்த மீன்களுக்கு இன்னும் துடிப்பு வரக்கூடும். துடுப்பு அசையக்கூடும். சில கல்வெட்டுகள் தூசி பாஞ்சி வாசிக்க முடியல்ல. ஞாபகம் ஒரு ரசம் போன கண்ணாடி. மங்கல் மங்கலாகவும் மங்கலிம்லாமலும். 

இறந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் உண்டுன்னா இறந்தகாலம் சப்தம் செய்யறதில்ல. ஒலியுண்டாக்கறதில்ல. கிழிந்த காலண்டர், கடிந்த பேனா, துருப்பிடித்த இரும்பு, இரசாயன மாற்றமடைந்த பாறைத்துணுக்குகள், அசையாத மரங்கள் எல்லாமே இறந்தகாலத்தில் ஒலியுண்டாக்காத ஞாபகம். ஒலியுண்டாக்காத எல்லா பொருட்களும், ஜீவராசிகளும் எனக்கு ஜெயாவ ஞாபகப்படுத்துதுது. சாய்ந்தரம்போல ஒரு நிமிஷம் கண்ண மூடினாகூட ஜெயாவோட பிம்பம், மங்கிப்போய் தெரியும். சில நேரம் மங்கல் சிரிப்பு, சில நேரம் மங்கல் மெளனம், சில நேரம் மங்கல் புன்னகை. என்னுடைய தனிமை வெளிச்சம் பூசப்பட்ட மங்கல். ஜெயாவுக்கு இனி நான் ஹேர்பின் வாங்கிக் கொடுக்க முடியாமற் போகலாம். ‍ஜெயாவ விட்டுட்டு ரொம்ப தூரத்துக்கு நான் விரட்டப்படுறதும், நெருக்கறதுமா இருக்கேன். ஜெயா காலம், காலத்தோட யாரு போலியா வாழ முடியும். ஜெயாவோட ஞாபகங்கள் என் தியான நிலை. 
ஜெயாவ நான் எப்படி பார்க்க முடியாம போச்சு அப்படீங்கறது உங்களுக்குத் தெரியாது இல்லையா? மிஸ்டர் செளந்தரபாண்டியன்தான் முதல்மதலா ஜெயாவுக்கும் எனக்குமுள்ள பழக்கத்தை ஜெயா வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போனது. செளந்தர பாண்டியன என்னால புரிய முடிஞ்சதேயில்ல. செளந்தரபாண்டியன் ஏன் இந்த விஷயத்த ஜெயா வீட்டுக்குத் தெரியப்படுத்தணும்? ஜெயாவோட அண்ணன் ஜெயாவ அடிச்சிருக்கான். ஜெயாவோட அம்மா ஜெயாவோட தங்கச்சி இறந்தசமயம் சிந்தின கண்ணீரைக் காட்டிலும் கூடுதலா சிந்தியிருக்காங்க. ஜெயா ஹாஸ்பிட்டல் வர்றது தடை செய்யப்பட்டது. நான்கு அறைகள், ஊர் குளம், திருச்செந்தூர் உவரி விசாகம், ஊர் அம்மன்கோவில் கொடை இப்படியாகிப் போச்சு அவள் சுதந்திரம். எனக்கு எதுவும் செய்ய முடியல்ல. இதை எல்லாத்தையும்விட செளந்தரபாண்டியன நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவது அவசியம். செளந்திரபாண்டியன பற்றி கீழே குறிப்பிட்டிருக்கேன். அவ்வளவுதான் எனக்கு சொல்லவுள்ள விஷயம். 
 
 பெயர்   : எஸ். செளந்திரபாண்டியன் 
 வயது   : 29 
 கல்வித் தகுதி  : (எம்.காம்)
 மதம், வகுப்பு : இந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பு 
 தகப்பனார் பெயர் : அ. சிவனணைந்த 
    பெருமாள் நாடார் 
 முகவரி  : 21பி, 'சிவனகம்', சாலை ஜங்ஷன்,
    மாலையணிந்தான் குடியிருப்பு, 
    புத்தளம் அஞ்சல் - 629 602.

மிஸ்டர் செளந்திரபாண்டியன் ஆறு அண்ணன் தம்பிகளில் ஆறாவதா பிறந்தவர். அவங்க மூத்த அண்ணன் பி.இ. இஞ்சினியர். அடுத்த அண்ணன் காலேஜ் புரபசர் (எக்னாமிக்ஸ் டிப்பார்ட்மென்ட்) அப்புறமா ஒருத்தர் நாகர்கோவில்லவுள்ள பிரபலமான சர்ஜன் செளந்திர பாண்டியன் அக்காவ எட்டு லட்சரூபாய் சீதனங் கொடுத்து அகஸ்தீஸ்வரத்துல பி.இ. இஞ்சினியருக்குக் கட்டிக்கொடுத்த சமயத்தில் ஊர்ல நடந்த விசேஷம் அம்மன்கொடை பரபரப்பை முந்தியது. எம்.எஸ் விஸ்வநாதன் கச்சேரி. மூணுநாள் திரைப்படம் (16 எம்.எம்) ஊர் அமர்க்களப்பட்டது. கெளரவம், பட்டிக்காடா பட்டணமா, நல்லவனுக்கு நல்லவன் ஆகியவை திரையிடப்பட்டன. கெளரவம், பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் அவங்க அண்ணன்மார்களின் ரசனையின் பேரிலும், நல்லவனுக்கு நல்லவன் செளந்திரபாண்டியன் ரசனையின்பேரிலும் திரையிடப்பட்டன. எங்க ஊர் சாப்பட்டுப் பந்தியில் போளி பரி மாறப்பட்ட முதல் கல்யாண நிகழ்ச்சியும் அதுதான். முருகேசன் ‍போளிய குளுந்த பப்படம்னு நினைச்சி பருப்பு சோத்துல பிச்சிப்போட்டு பிசஞ்சி சாப்பிட்டு முகஞ்சுழிச்சதுகூட எனக்கு ஞாபகமிருக்கு. அப்புறமா செளந்தரபாண்டியனோட ஒரு அண்ணன் எம்.ஏ.தமிழ் படிச்சுட்டு தோப்புகள கவனிக்கறது;ஊர்ல பட்டிமன்றம் போட வர்றவங்களுக்கு வரவேற்புரை அல்லது நன்றியுரை சொல்றது இப்படியிருக்காரு. செளந்தர பாண்டியனுக்கு கடைசியா சிவனணைஞ்ச பெருமாள் விதிச்சவிதி கோட்டத்துல இரும்புக் கடை. 
செளந்தரப்பாண்டியன் 22-25 வயதுக்குள் இருக்கும் போது பார்த்த வேலைகள் ஸ்பீக்கர் செட், டியூஷன் ஹோம். ஸ்பீக்கர்செட் கொஞ்சநாளையில் அவுங்க குடும்பத்தாரால் தடை செய்யப்பட்டது. ஸ்பீக்கர்செட் தடை செய்யப்பட்ட புத்துணர்ச்சியோடு பாண்டியன் டியூஷன் ஹோம் என்கிற ஓலைக்குடிசை சிவனணைஞ்சான் தோப்புக்குள்ள உதயமானது. ஆரம்பத்துல மூணு பேர் சேர்ந்து ஸ்கூல் பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்தாங்க. அதுல செளந்தரபாண்டியன் பொம்பளப் பிள்ளைங்க படிக்காம வந்தா வெறித்தனமா அடிக்கறதாகவும், பொம்பளப் பிள்ளைகள செளந்தர பாண்டியனுக்குப் படிக்காதுன்னும், ஆம்பிளபிள்ளைகள் பேர்லதான் செளந்தர பாண்டியனுக்கு அபிமான முன்னும் டியூஷன் படிக்கற பசங்க பேசிக்கிட்டாங்க. அப்புறமா ஒருமாசம் கழிச்சி ஓம்பதாங்கிளாஸ் படிச்ச சிறுமி டியூஷன் முடிஞ்சி அழுதுகிட்டே வந்து, படிக்காததுக்காக செளந்தரபாண்டியன் சார் என் உடுப்பையெல்லாம் கழற்றி மடியிலே வச்சி என்னென்னலாமோ செய்திட்டாருன்னு அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்ல, கொஞ்ச விசாலமா விசாரிச்சதில் பாண்டியன் டியூஷன்‍ஹோமில் பல பெண் பிள்ளைகளுக்கும் அது போலவுள்ள தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. அன்றிரவே பாண்டியன் டியூஷன் ஹோம் தீ வைக்கப்பட்டது. அப்புறமா செளந்தர பாண்டியனைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு விஷயங்கள் இன்னும் உறுதியா நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் சொல்றேன். கோட்டார் கூழக்கடை பக்கத்திலே ஒரு சமயம் செளந்தரபாண்டியனை நொறுங்க அடிச்சிருக்காங்க. அப்பதான் வேலப்பன் என்கிட்ட "லே மக்கா, மற்றவன் கூழக்கடை பக்கத்துலே எட்டுமணிக்குப்போல் வெளிக்கிருக்கப் போன பொம்பளையள்வள உத்துப் பார்த்திருக்கான். இருட்டுல முண்டமா தெரியக் கூடாதுங்கறதுக்காக வேட்டியையும் சட்டையையும் உரிஞ்சி ஒரு தென்னம்பிள்ளை கொண்டையில சொருவி வச்சிற்று பார்த்திருக்கான். பொம்ளையள்வ என்னவோ அனங்குவேன்னு பாக்க முண்டமா இவன் ஓடியிருக்கான். கையோட புடுச்சுப்புட்டாவ. அடின்னா நீசத்தனமான அடியாம். புறவு கூழக்கட தேங்காயாவாரி தங்கசாமிதான் பாவம்பாத்து சமாளிச்சி பயலுக்கு வேட்டியும் முண்டும் எடுத்துக் கொடுத்து வசமா கூட்டிட்டு வந்து பஸ் ஏத்திவச்சிருக்கான்னு சொன்னான். இப்படி உத்துப் பாக்கறது அவனுக்குத் தொடர்ச்சியா பழக்கமோ என்னவோ தெரியல்ல. ஒருசமயம் ஊருக்குப் புறத்தவுள்ள மூக்குப்புறியாரு திண்டுலயும் செளந்தரபாண்டியன் இதுபோல மாட்டி அடி வாங்கினதா ஊர்ல குமரேசன் உட்பட எல்லாரும் பேசறாங்க.ஆனா செளந்தரபாண்டியன்கிறது இதுமட்டும்தானா அப்படின்னா அதுவுமில்லை. செளந்தரபாண்டியன் நிறைய நல்ல காரியங்களன்னு நம்பப்படற காரியங்களையெல்லாம் செய்யறாரு. ஊர் பையன்களுக்கு டவுண் ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் அட்மிஷன் வாங்கி கொடுக்கிறது. ஊர் அம்மன் கோயில் கொடைக்கு வரி எழுதறது எல்லாத்திலேயும் உற்சாகமா நிற்கிறது. ஊர்ல இந்து இளைஞர் மன்றம் தொடங்கினது. யாருக்கு வேணும்னாலும் கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிக் கொடுக்கிறது இப்படி, தற்சமயம்கூட செளந்தர பாண்டியன் வியாபாரிகள் சங்கத் தலைவர், ரோட்டராக்ட் மெம்பர். ஒருசமயம் ஊர்ல இன்னொரு பஸ்கேட்டு மறியல் பண்ணணுனதுல ரொம்ப முக்கியமான ஆள் செளந்தரபாண்டியன். 

இதனாலதான் செளந்தரபாண்டியன என்னால புரிஞ்சுக்க முடியாம போச்சு. ஜெயாவுக்கும் எனக்கும் மத்தியில் செளந்திரபாண்டியன் நுழைஞ்சதையும் கூட நான் சொல்லணும். என் ஊர்க்காரருங்கறதுனாலயும், என் வயச ஒத்தவருங்கறதுனாலயும் செளந்தரபாண்டியன் எனக்கு ஏற்கனவே பரிச்சயம், பழக்கம்.பின்ன ரொம்ப பேசிக்கிறதில்ல. பாக்கறது, சிரிக்கறது, சிரிக்கறதுபோல காட்டறது இப்படி. செளந்தர பாண்டியன் எனக்கு சில உதவிகளும் செய்திருக்காரு. அதனால் அவர்மேல் மரியாதைபோல ஒண்ணும்கூட இருந்திருக்க வேண்டும் அல்லது இருந்திருக்கலாம்.

ஜெயாவும் நானும் சக்கரவர்த்தி மினில படம் பார்க்க போகும்போது எனக்கும் ஜெயாவுக்கும் மத்தியில அவரு அறிமுகமானாரு. ஜெயாவை அறிமுகம் பண்ணினேன். டிக்கட்ட அட்ஜஸ்ட்பண்ணி மாத்தி வாங்கி, எங்க பக்கத்திலே உக்காந்தாரு. வாழ்த்துக்கள் சொன்னாரு. மனோ உங்களுக்குப் பொருத்தமான ஆளு அப்படீன்னு ஜெயாகிட்ட சொன்னாரு. அய்யய்யோ இப்படியெல்லாம் பொய் சொல்லி மனோகிட்ட என்ன மாட்டி விட்டுடாதீங்க அப்படீன்னு ஜெயா சொன்னா. இன்னும் என்னென்னமோ பேசினோம். உங்களுக்கு என்ன ஹெல்ப் தேவைப்பட்டாலும் நான் செய்யறேன்னார். செளந்தரபாண்டியன் இடைவேளையில் எங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார். எனக்கு அப்ப டீ தான் தேவையா இருந்தது. ஜெயாவுக்கு ஐஸ்கிரீம் இருக்கட்டுமேன்னு தோணுச்சி. சரீன்னு ஐஸ்கிரீமே வாங்கச் சம்மதிச்சேன். அவரு உதவிபண்றது எனக்கந்த சமயத்திலே நெருக்கடியா இருந்தது. 
அப்புறம் ஜெயாவிடம் ரெண்டுதடவை செளந்திரபாண்டியன் மூவ் பண்ணியிருக்கிறார். ஒருசமயம் ரொம்ப சின்சியரா ஜெயாவ சினிமாவுக்குக் கூப்பிட்டிருக்கார். மனோவோட மட்டும்தான் போவீங்களோன்னு செல்லக் கோபம் காட்டியிருக்கிறார். ஜெயா அப்புறம் பார்க்கலாம்னு சொல்லியிருக்கா. இன்னொரு தடவை ஜெயாவுக்கு நான் உங்களை லவ் பண்றேன்னும், நீங்க இல்லாட்டா செத்துப் போயிருவேன்னும் லெட்டர் எழுதியிருந்தார். அவருடைய குடும்ப படோடோபங்களையும் எனது குடும்பத்தின் சீரழிவையும்கூட அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். எப்படியிருந்தாலும் கூட ஈத்தாமொழி போய் அறிமுகமேயில்லாத ஜெயா வீட்டுல இதையெல்லாம் சொல்ல எப்படி இவருக்கு முடிஞ்சதுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. செளந்தரபாண்டியனோட மேனரிசம் அப்படின்னு சொல்ல எனக்கு எதுவுமில்ல. அவரோட டிரஸ் பெரும்பாலும் சஃபாரி, பெல்ஸ் சஃபாரி இல்லாவிட்டா இன் பண்ணி அகலமான பெல்ட். ஒருதலைராகம் பீரியேட்ல உள்ளது. அவர் முகத்துக்கு பொருத்தமே இல்லாத காதுக்கு மேல தூக்கிட்டு நிக்கிற ஒரு ஸ்டைல் ப்ரேம் கூலிங்கிளாஸ். கையில் இந்தியா டூடே, த ஹிண்டு இரண்டில் ஏதாவது ஒண்ணு. ஒரு புளிச்ச சிரி.

ஓவியம்  - செல்வம் 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"