சமீபத்திய ஐந்து கவிதைகள்

சமீபத்திய ஐந்து கவிதைகள் 

இந்த காலையை உருவாக்க
சில பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன.
ஒருத்தி முற்றத்தில் எழுப்புகிற கோலம்
பாடலுக்கு ஒத்தாசை செய்கிறது.
டிப்பர் லாரி இன்னும் புலரவில்லை
அதன் நெற்றியில் நேற்றைய பூளை
கோவில் மணிச் சத்தம்
இந்த காலையைத் தொடங்கி முடிக்கவும்
தயாரான காலையை
தனது சாக்குப்பைக்குள் சிறுகச் சிறுக சேமித்த வண்ணம்
கடினம் இழுத்துக் கொண்டோடுகிறான்
இன்றைய நாளின்
பைத்தியம்.

#
உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் போது
வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்
இங்கே நீங்கள் பகவான் நான் சம்சாரி .
சட்டையில் கொட்டி நீரருந்த மகாபலி சக்ரவர்த்தி கனவில்
வரவேண்டும்
முருகன் காதில் பேச வேண்டும்
குழந்தை ஏசு கைபிடித்திழுத்து
விண்ணுலகு காட்டவேண்டும்
அதன் பின்னர் உங்களுக்கு ஒரு பூச்சி விளையாட்டை
அறிமுகம் செய்து வைப்பேன்.
ரயிலில் சுற்றியலையும் வண்ணத்துப் பூச்சியை
ரயிலில் இருந்து கீழே தள்ளி விடும் விளையாட்டு
இதனை ரயில் இருந்தால் மட்டும்தான் விளையாடமுடியும்
என்றில்லாதிருப்பதே
இதன் சிறப்பு
நீங்கள் தடுமாறாமல் நடக்குமிடத்தில் அங்கேயே இருந்து தங்கிவிடுங்கள் .
அப்போது நீங்கள் சம்சாரி
நான் பகவான்

#
பயணப் பாடல்
பனியில் தெளிந்து நீ கண்ட நிலவு
தரித்த தலைவலிக்குப் பின்னர் நீயடைந்த தரிசனம்
கடலை நீ ஒருமுறையோ இருமுறையோ
நேருக்கு நேராக உண்மையாகவே கண்டாய்
உன் உப்பும் என் உப்பும் வேறில்லை என்றது கடல்
பயணத்தில் மலைத்தொடர் உன்னையும் அழைத்தது
முந்தின இரவில் மரித்த நண்பனுக்கு மூடியிருந்த அந்த காட்சி
உனக்கு இன்று திறந்திருந்தது
அவனது சுடலைச் சாம்பலை எடுத்து நீயின்று பூசிக் கொள்ளலாம்
எத்தனையோ மாமழைகளை நிராகரித்த உன்முகத்தில்
சர்ரென்று சர்ப்பக்கடி வலிச்சாரல்
நீ கண்டாயே அதுதான் ஸ்தல விருட்சம்
நீயதனுடன் பேசினாய் அது உன்னிடம் பேசியது
நீ பேசாதிருந்தால் அதுவும் பேசாது
உனக்குள்ளிருந்த கடவுள் அவ்வப்போது கிளம்பி
வெளியெல்லாம் அலைகிறார்
சின்னஞ்சிறு கூட்டிற்குள்ளிருந்து அவர் எடுப்பதோ
விஸ்வரூபம்
அவற்றை சேமித்து வைத்துக் கொள்ளச் சொல்லி
உன்னிடத்தில் கைகொட்டிச் சிரிக்கிறேன்
வேறொன்றுமில்லை.
உன்னிடத்தில் பிச்சைக்கு வருபவன் வேறுயாருமில்லை
மகா சிவன்
உன் இச்சைக்கு இணங்கி பெயரெடுத்துப் புறப்பட்டவளோ
மகா சக்தி.
நானிதையுனக்குச் சொல்லவில்லையென்றால் தான்
என்னுடன்
சண்டைக்கு வருவாள்
என்னம்மை அன்னபூரணி
அப்படியானால் நான் யாரென்று கேளேன் ...
அன்னபூரணியின் உடலை தானியமாகத் தின்பவன்.
உனக்கு வேறு ஜோலியே கிடையாதா என என்னை நோக்கி
வருந்தாதே
எனக்கு ஜோலியே இதுதானே
என் செல்லக்குட்டி
உன் அத்தனை பொழுதும் சேர்த்துத்தான் ஒரு காட்சி
காட்சி முடியும் முன்பாகக்
கண்டுவிடு.
உனக்கு நேரப்பட்ட அந்த அருங்காட்சி
திறந்து வைக்கப்பட்டிருப்பது உனக்கு முன்னால்தான்
என் செல்லக்குட்டி
உன் ஜன்னலோரம் பாதுகாக்கப்படட்டுமென
நானுன் பக்கத்திலிருக்கிறேன்

#
குளி குடி ஊண்
அருகிலுள்ள மரம் தெளிவடையும் வரையில்
குளி
மரம் அருகில் இல்லையெனில் வானம் தெளிவடைகிறதா 
என்று நோக்கு
வானமும் இல்லையெனில்
ஒரு சிறு ஒளியேனும் உன்னை ஊடுருவட்டும்
ஒன்றுமே இல்லையா
நிமிர்ந்து உனக்குள் கவனி
பயணம் தொல்பாடலை கிளர்த்தி
பின்னோக்கும் காலத்தில் இறங்கிவிடு
பால்யம் முகிழ்க்கும் இடமே நீ படியிறங்க வேண்டிய காடு.
பானத்தைப் பருக
நீ நட்ட செடி தளிர்க்க வேண்டும்.
ருசி நாக்கில் நிற்கும்போதே எழுந்து விடு
பின் நீ எடுத்துக் கொள்வதுதான்
மற்றொருவனுக்காக நேரப்பட்ட
அப்பம்

#
கம்பனிக் குதிரைகள்
பிறக்கும் போது கம்பனிக் குதிரைகளாகப்
பிறப்பதில்லை
கம்பனிக்குதிரைகளின் எள்ளும் கொள்ளும்
ஒன்றுதான்.
கம்பனிக்குதிரைகள் ஆனதால்
கம்பனிக்குதிரைகளுக்கென்று
புதிதாக எதுவும் நடைபெறுவதில்லை.
எஜமானன் வந்து தடவி ரசிப்பது வெறும் பாவனைதான்
அதன் நிமித்தம் குறி கூட எழும்புவதுவுமில்லை.
என்னவானாலும் கம்பனிக்குதிரைகள் கம்பனிக் குதிரைகளாக
இருப்பதைத் தான் விரும்புகின்றன.
அவை கம்பனிக் குதிரைகளாக இருப்பதற்கு
வேறு ஒரு காரணங்களும் கிடையா
கம்பனிக்குதிரைகளுக்கு தாங்கள் இல்லையெனில்
கம்பெனி கவிழும் என்றோரு பிரேமை உண்டு
தனிமையில் அது உண்மைதானோ என்று அசைபோட்டுப் பார்த்தாலும்
கம்பனிக்குதிரைகளுக்கு அதன் பேரிலும்
நம்பிக்கை கிடையா
இதுவரையில் ஒரு கம்பனிக்குதிரை கூட
கம்பெனிக் குதிரையாகப் பிறந்ததில்லை.
ஆனால் எல்லா கம்பனிக்குதிரைகளும்
கம்பனிக் குதிரைகளாக மட்டுமே
சாகின்றன.
கம்பனிக்குதிரைகள் மாடுமேய்க்கப் போன கதை
இவ்வாறுதான் முடிவுக்கு வந்தது
"புல்லு மேய்ந்த ஆட்டையும் காணோம்
களனி குடித்த பசு மாட்டையும் காணோம் "
இதில் கம்பனிக்கோழிகள்
கம்பனி ஆடுகள் எல்லாம்கூட உண்டு
அவை அத்தனை விஷேசமில்லை
கம்பனிக்காளைகளோ அடிமாட்டுக்கும்
ஆகாது

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"