ருக்மணி அக்கா-மூன்றாம் தலைமுறைப்பெண்கள்-உற்சாகமற்ற பழைய பியேட் கார்

நாகர்கோயிலில் நடந்த சாகித்ய அகாதமியின் கவிதை வாசிப்பரங்கில்
வாசித்த ஐந்து கவிதைகள்
1
ருக்மணி அக்கா
ருக்மணி அக்கா
இடுப்பில் குழந்தையுடன்
தன்னிடமிருந்த விஷேசமான புகைப்படக்கருவியால்
தனது புகைப்படங்களை படமெடுத்துக்கொண்டாள்.
வளர்ந்த மகனின் கண்கொண்டு
படமெடுக்கும்
லென்சின் மூடியைத் திறக்க மறந்த
கருவி அது .
சுற்றுலா ஸ்தலத்தில்
பல கோணங்களில்
ருக்மணியக்காவின் புகைப்படங்களை
எடுத்துக்கொண்டன புகைப்படங்கள் .
லென்சின் மூடியைத் திறக்க மறந்த
ருக்மணியக்காவின் புகைப்படக்கருவி
மூன்று கண்கள் கொண்டது .
உடலுக்குள்ளிருந்து அறியப்படாத கண்ணீராய்
திரளும் கண் ஒன்று.
அவளாய் ஆக இயலாத கனவின்
கண் மற்றொன்று .
புகைப்படங்களை சாட்சியாய்
பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா ஸ்தலத்தின்
கண் மூன்றாவது.
எவராலும் அச்சிட்டுப் பார்க்க இயலாத
புகைப்படங்களுடன் கூடிய பழுதடைந்த கருவி
திருமணப்புடவை சுற்றப்பட்டு
இரும்புப் பெட்டியில் இருக்கிறது .
எடுக்கப்பட்ட எல்லா படங்களுமே
ருக்மணியக்காவுக்கு
தெளிவாய் தோன்றுகின்றன .
2
மூன்றாம் தலைமுறைப்பெண்கள்
ஊருக்கு வரும் போதெல்லாம்
பராதி சொல்லி அழுதுவிட்டுப் போவாள்
தங்கம்மாள் மாமி .
ரெங்கமணி மாமி யாரைக் கண்டாலும்
அழுதுவிடுவாள் .
காலத்தின் சிறகு கொண்டு வந்து
கொடுத்த நரம்பாய் நெளியும்
உள்ளுடலின் கனத்தால்
சதா நீர் துளிர்த்து நிற்பாள் ஒரு சித்தி .
ஊரிலிருந்து குழந்தையை அடித்திழுத்து ,
சாபமிட்டு
திரும்பமாட்டேனென சபதமிட்டுச் செல்பவள் ;
கணவன் ஊரைச் சாபமட்டு
குழந்தையை அடித்திழுத்துத் திரும்பி
அம்மாவுக்குப் பராதிகள் சொல்வாள் .
பராதியில் உடலை வதைத்து
சுற்றம் முறிப்பாள் அக்கா .
ஊர் வீடு ஆண்களையெல்லாம்
உத்தமர்கள் என்று சொல்வதற்கில்லை
உத்தமர்கள் இல்லை என்றும் சொல்வதற்கில்லை .
ஊருக்குள் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக
உடல் கொண்டலையும் பழந தெய்வங்களின்
முகக்குறி கொண்டலையும் தாவரங்களும்
வளரும் நிலா வெளிச்சமும்
ஊருக்குள்
மூன்றாம் தலைமுறையாக நடமாடும்
பெண்களின் கண்ணீரையும் ,பராதிகளையும்
சாட்சியாய் பார்த்து வருகின்றன
3
உற்சாகமற்ற பழைய பியேட் கார்
தொலைதூரப் பயணங்கள் ஏதும்
செய்ததில்லை இதுவரை .
நடன அரங்குகள்
இசை விழாக்கள்
வைபவ நிகழ்வுகள்
என்று சென்றிருக்கிறது
அது .
எண்ணையில் கழுவப்பட்ட
பழுதடைந்த சுவர்க்கடிகாரத்தின்
உள்ளுறுப்பு மட்டும் தனியே இயங்கிக்
கொண்டிருப்பதுபோல
அதன் இயந்திரங்கள் இன்றுவரையில்
நுட்பமாகத் தொழில்படுகின்றன.
தினசரி கழுவப்பட்ட பிறகும்
காலத்தின் நீங்காத தூசுப்படலம்
போர்த்தியிருக்கிறது
வெளித்தோற்றம் .
நினைவின் பயணமாய்
காரின் பின்னிருக்கை
இடது ஓரத்திலமர்ந்து பயணம் செய்கிறாள்
யுவதி .
நகரத்தில் குளிக்க இயலாத வேசியின்
மனமும் ,விழாக்களின் சங்கீதமும் இணைந்து
நகரும் யுவதியின் கார்
தனிமையால் பூட்டியடைக்கப்பட்டுள்ளது .
யுவதி,உற்சாகமற்ற
பியேட் காரிலிருந்து
நடன அரங்கிற்குச் செல்கிறாள்
இசைவிழாக்களில் பங்கு கொள்கிறாள்
வைபவங்களை ஊடறுக்கிறாள்.
வெளியே புதிய வாகனங்களுக்கு நடுவே
நகரம் பற்றிய வரைபடமாய்
நிற்கிறது பியேட் கார் .
மேலும் வயதான
ஓட்டுனரிடமிருந்து பெருகும்
சுருட்டு வாசனையில் கட்டப்பட்டுள்ளது
அது .
தன்னைச் சுற்றிக் கவிந்த
தனிமையின் திரவத்தால்
கூட்டங்களில்
தோற்றங்களைத் தீண்டுகின்றன
யுவதியின் கண்கள் .
உற்சாகமற்ற பழைய பியேட் காரிலிருந்து
பயணம் செய்யும் கடைசி யுவதியாக
கடவுள் அவளை முடிவு செய்து கொள்ளட்டும் .
சருகுகள் பெருகுகிற தனது ஓய்வறையில்
புறாக்களின் எச்சம் வீச
கார் மரித்துக் கிடக்கட்டும் .
சுருட்டு வாசனைக் கிழவன்
திறந்தவெளிச் சாராயக்கடையின் கதைசொல்லியாய்
நகரத்தில் அலையட்டும் .
வெளிறிய பியேட் கார்
இப்படியாய் பயணிக்கும் வெகுகாலம் .
ஆனால் அதுவோ இப்போது
இயங்கிக் கொண்டிருக்கும்போதுகூட
நிற்க வைக்கப்பட்டிருப்பது போல
தோற்றமளிக்கிறது
சருகுகள் படர்ந்த .புறாக்களின் எச்சம்
வீசும் தரையில் .
4
பயணம் செய்யும் நூறுரூபாய் நோட்டு
மயக்கம் மூண்ட ஒரு சாயுங்கால ஒளியில்
விரைவு ரெயில்
பிரிவின் ஓலம் நிறைந்த ஊளையுடன்
நிலையத்திலிருந்து தயாராகிறது .
கசந்த ஊரிலிருந்து
சங்கரவடிவு
நினைவுகள் அடைக்கப்பட்ட
பயணப்பெட்டியோடு
ரெயிலேறுகிறான்.
கழிப்பறையற்ற
தனது நகரம் நோக்கி ...
பலர் தங்கும் அறையை
மனம் சுமந்து ...
சங்கரவடிவின் பயணம்
ரெயில் பயண ஓலத்தின் கூர்கிழிக்க ...
தொடங்குகிறது .
நகரத் தொடங்கிய
ரெயிலுக்கு வெளியே ...
வெறுமை ததும்பும் வழியனுப்புதளோடு ...
தரவிருப்பமற்ற நூறு ருபாய் நோட்டைப்
பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துபவரின் கரம்
நீள மறுக்கிறது .
'வேண்டாம் வேண்டாம் 'என
முனகிய சங்கரவடிவின்
மன இடைவெளியில்
தர விருப்பமற்று நீட்டிய கரம்
பின்னகர்கிறது .
கடைசி ரெயில் பெட்டியின்
தொலைவு கண்டு
பெருமுச்சு விட்டபின்
கொடுக்கப்படாத நூறு ரூபாய் நோட்டு
ரெயில் பெட்டிக்குள் சிக்குண்டு பறக்கும்
பட்டாம்பூச்சியென
சங்கரவடிவின் பயணம் முழுவதும்
அலைகிறது
கழிப்பறையற்றுக் கசக்கும்
வெளிறிய தன் அறைக் கனவுகளோடு .
5
தோலுரிந்த கவிதை
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால்
முடியிருக்கிறது அதன் உடல் .
நண்பர்களும் , அல்லாதோரும் அந்தரங்கத்தில்
பயம் கொள்கிறார்கள் .
ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள் .
மேல் தோலுரிந்த அபாயம்
எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத் தெரிகிறது .
ஆனால் அப்படி இல்லையென மறுத்துக் கொள்கிறார்கள் .
அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம்
தற்காலிகமாக அபாயத்தை ஒத்தி வைத்து விட்டோம்
என்று நம்பிக்கை தோன்றுகிறது
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
சக கவிகள் எழுதும் கவிதைகளிலோ
ஆடை அலங்காரங்கள்
அழகிய கைப்பின்னல் பூ வேலைப்பாடுகள்
அலங்கரிக்கப்பட்ட கவிதையை எழுதுவதுதான்
எவ்வளவு பாதுகாப்பானது ?
மூடிய கர்ப்பத்தின் நீர்ப்பையில்
வளரும் சிசு அது .
எனது சிசுவோ பாதுகாப்பின்மையின் கர்ப்பத்தில்
உதிரம் கொட்டியபடி வளர்கிறது .
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
பெரியவர்கள் முகம் சுழிக்க
பிசாசுகள் மோப்பமிட
அதிகாரிகள் அருவருப்படைய
அக்கறை கொண்டவர்கள் எச்சரிக்கை செய்ய
தொலைபேசி இணைப்புகள் கசப்படைய
சாப்பாட்டு மேஜைகள் மவ்னம் சுமக்க
பயணங்கள் தனிமை கொள்ள
மேல் தோலுரிந்த கவிதையொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன் .
சட்டம் ஒழுங்கால் சிறை பிடிக்கிறது அரசு .
எரியும் கண்களால் சுடுகிறது நிறுவனம் .
துரத்துகிறது குடும்பம் .
உரிக்கப்பட்ட தோலை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது
மனநலக் காப்பகம் .
பழைய சந்நியாசிகள்
காலத்தில் மரித்த உயிரைச் சுமந்தபடி
பயணிக்கிறது எங்கள் உடல் .
இப்போது அன்னியர்கள்
அதனால் தோலுரிந்திருக்கிறது
கவிதை
( வீரலெட்சுமி கவிதைத் தொகுப்பிலிருந்து -2003)
அகரம் ,மனை எண்-1,நிர்மலா நகர்,தஞ்சாவூர் -613007

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"