முன்னேற்றம் குறித்த இந்திய மாயா ...

முன்னேற்றம் குறித்த இந்திய மாயா ...
இந்திராகாந்தி + மோடி

முன்னேற்றம் ,வளர்ச்சி போன்ற கருத்தாக்கங்களோடு பாகிஸ்தான் வெறுப்பு , அணுசக்தி அதிகரிப்பு ஆகியவற்றை இணைத்ததில் இந்திராகாந்தி ஒரு முன்மாதிரி .சரியாகவோ  தவறாகவோ இதனை அவர் இணைத்தார்.ராஜ தந்திரோபாயங்களுக்காக இப்பயன்பாடு ஏற்பட்டது.வளர்ந்த நாடுகள் என்று நமது கற்பனைகளில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்  நாடுகளிடமும் இந்த பழக்கமும் பயன்பாடும் உண்டு.அமேரிக்கா .ரஷ்யா இரண்டும் இவ்விஷயத்தில் கை தேர்ந்தவை.  சில மாயைகளை மக்கள் மனதில் ஏற்றி அவர்களை உறுதியாக நம்பச் செய்வதன் மூலமாக மூடுபனியால்  சாதிப்பது. பிராந்தியத்திற்குத் தக்கவாறு அகில இந்திய அளவில் இதுபோல நிறைய அரசியல் மாயாக்கள் உண்டு.தமிழ் பிராந்தியத்தில் நிலவும் இன மூடுபனி போன்ற அகில இந்திய மாயாக்கள் இவை.

பாகிஸ்தான் வெறுப்பும்,அணுசக்தி அதிகரிப்பும் இந்திய ராஜ தந்திரிகளின் ஜீவனைக் காக்கிற மாயாக்கள்.ஒரு நாட்டு மக்கள் அனைவரையுமே பிற நாட்டு மக்கள் எதிரிகளாக கற்பனை செய்து வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் செல்லுபடியாகக் கூடிய காரணங்கள் இருக்க முடியுமா ? இப்படியான எதிரிக் கற்பனை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பரஸ்பரம் அரசியல்வாதிகளால் காக்கப்படுகின்றன.சுயலாபங்களும் அரசியல் பிழைப்பையும்   தவிர்த்து  இந்த மாயைகளுக்கு வேறு ஒரு அர்த்தமும் கிடையாது.

கிராமங்களில் கூட பாகிஸ்தானோடு படையெடுத்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்கிற தவறான   போதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி சொல்கிறார்கள்.அப்படி நினைக்கிறார்கள்.அப்படி கருதுவோர் எனக்கு அணுக்கமானவர்களாக இருந்தால் பக்கத்துக்கு வீட்டுக்காரனோடு யுத்தம் செய்து கொண்டே இருந்தால் எப்படி நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் ? எப்படி முன்னேறுவீர்கள் ? என்று கேட்டிருக்கிறேன்.இல்லை அதுவும் இதுவும் வேறு என்பார்கள்.இல்லை அதுவும் இதுவும் வேறில்லை ஒன்றுதான்.இத்தகைய சில்லரைத்தனங்கள் இல்லாமல் உலகில் எவ்வளவோ நாடுகள் நிம்மதியாக உள்ளன.

இந்திராகாந்திக்கு இணையாக மோடியும் இந்த மாயாவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்.அல்லது இந்திராகாந்தியை காட்டிலும் அதிகமாக இந்த மாயாவை நம்புகிறார்.எதிர்காலத்தில் அவருக்கு வீழ்ச்சியாகப் போவதும் காலத்தில் புழுத்த இந்த மாயாதான்.மோடி சில நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்.இல்லையென்றே சொல்ல முடியாது.அத்தியாவசிய  மருந்துப் பொருட்களின் விலையேற்றத்தைத் தணித்தது பெரிய காரியம்.காங்கிரஸ் இவ்விஷயத்தில் வேட்டையாடியது.நம்மூர் அன்புமணி அதிகார பவிசில் இருந்தபோது அத்யாவசிய மருந்துப் பொருட்களைத் தாரை வார்த்தே துட்டடித்தார்கள்.மோடி இவ்விஷயத்தில் பரவாயில்லை.   ஒரு நல்ல செயலுக்கு உடனடியாக ஒரு கெட்டதை செய்து விடுவது என்றோரு முறை வைத்திருக்கிறாரா தெரியவில்லை.ஒரு கெட்டது செய்தால் பரிகாரமாக ஒரு நல்லது செய்கிறார்.இருக்கட்டும் அது அவர் பாடு.

என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான் .இரண்டு காங்கிரஸ் காட்சிகள்,கட்சிகள் இந்தியாவில் எதற்கு ? பி.ஜெ.பி மற்றொரு காங்கிரஸ் கட்சியாகத் தான் இருக்குமெனில் நீங்கள் எதற்கு? பொருளாதாரத்தில் , அணுசக்தி விவகாரத்தில் நீங்கள் போலி சுதேசியம் பேசிக் கொண்டே காங்கிரஸ் காட்சியைத்தான் பின்பற்றுவீர்கள் எனில் அவர்களே போதுமே ராஜா ? அவன் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டால் நீங்கள் ஜப்பானில் போடுகிறீர்கள் ? புகுஷிமாவில் செத்துக் கொண்டிருப்பவர்களின் சவ அடக்கம் கூட இன்னும் சரியாக முடிந்திருக்காதே தோழா ! துஷ்ட்டி  வீட்டில் போய் ஒப்பந்தமும் பிறந்த நாள் கொண்டாட்டமுமா ?

கதிரியக்க விபத்துக்கள் பற்றிய சில எளிய தகவல்கள்
------------------------------------------------------------------------------

[அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் (Nuclear and radiation accidents) என்பவை மக்கள், சுற்றுச்சூழல் அல்லது அணுவுலை மற்றும் கதிரியக்க மையம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தனி நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் விளைவுகள் (கதிரியக்க நச்சேற்றம்), சுற்றுச்சூழலில் பெருமளவு கதிரியக்கத்தை வெளியிடல், அணு உலையின் நடுப்பகுதி எதிர்பாராத விதத்தில் உருகுதல் ஆகியவற்றை இத்தகு விபத்துகளுக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.

1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்தில், அணு உலையின் நடுப்பகுதி (reactor core) பாதிப்படைந்து குறிப்பிடத்தக்க அளவுகளில் கதிர்வீச்சு வெளிப்பட்டதை பாரிய அணுஉலை விபத்தாகக்கருதலாம். என்றாலும், அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் பரவலாக அனைத்து நாடுகளிலும் நடந்திருக்கின்றன.

அணுவுலை விபத்துகளினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் முதல் அணுவுலைகள் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதே தொடங்கிவிட்டன. இத்தகு விபத்துகள் அணு ஆற்றல் மையங்கள் குறித்த பொது மக்களின் அச்சத்திற்கு, கவலைகளுக்கு முதன்மைக் காரணியாக விளங்குகிறது.

விபத்துகள் நடப்பதற்கான இடர்களைக் குறைக்கும், சுற்றுச் சூழலில் வெளிப்படும் கதிரியக்க அளவுகளைக் குறைக்கும் சில தொழில் நுட்ப நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும், பல்வேறு தாக்கங்களைக் கொண்ட பல அணுவுலை விபத்துகள், தவறுகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

2010 ஆம் ஆண்டு வெளியீட்டின்படி உலகமெங்கும் அணுவுலை மின் உற்பத்தி நிலையங்களில் 99 விபத்துகள் நடந்துள்ளன. செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு 57 விபத்துகள் நடந்துள்ளன. அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளில் 57 சதவிகிதம் (56/99)

அமெரிக்காவில் நடந்துள்ளன 2011 செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்த அணு விபத்து; 2011, மார்ச் 11 இல் நிகழ்ந்த புகுஷிமா, ஜப்பான் அணு உலை விபத்து; 1986, ஏப்ரல் 26 இல் நிகழ்ந்த செர்னொபில் அணுவிபத்து; 1979 இல் அமெரிக்காவில் முதன் முதலில் நேர்ந்த திரிமைல் தீவு விபத்து, 1961 இல் அமெரிக்க இராணுவத்தின் சோதனை அணு ஆற்றல் உலை, தாழ்திறன் அணுவுலை எண் – ஒன்று (Stationary Low-Power Reactor Number One, SL-1) விபத்து ஆகியவை குறிப்பிடத்தக்க விபத்துகளாகக் கருதப்படுகின்றன.

அணு ஆற்றலால் இயங்கிய முன்னாள் சோவியத் ஒன்றிய நீர் மூழ்கிகளின் அணு உலையின் நடுப்பகுதி பாதிப்படைந்ததால் நிகழ்ந்த விபத்துகளில் சம்பந்தப்பட்ட நீர் மூழ்கிகளின் பட்டியல்: கே-19 (1961), கே-11 (1965), கே-27 (1968), கே-140 (1968), கே-429 (1970), கே-222 (1980), கே-314 (1985), கே-431 (1985). தீவிர கதிரியக்க விபத்துகளாக சோவியத் ஒன்றிய கிஷ்டிம் [Kyshtym] பேரழிவு (1957), இங்கிலாந்தில் வின்ட்ஸ்கேல் [Windscale] விபத்து, கோசுட்டாரிக்கா கதிரியக்கச் சிகிச்சை விபத்து, எசுப்பானியாவின் சரகோசாவில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சை விபத்து, மொராக்கோவில் நிகழ்ந்த கதிரியக்க விபத்து], பிரேசில் விபத்து, மெக்சிகோ நகரத்தில் நடந்த கதிரியக்க விபத்து, தாய்லாந்தில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சைக் கருவி விபத்து, இந்தியாவின் மாயாபுரியில் நடந்த கதிரியக்கவியல் சார்ந்த விபத்து ஆகியவற்றைக் கூறலாம்.

அண்மையில் நடைபெற்ற அணுவுலை, கதிரியக்க விபத்துகளைக் குறித்த செய்திகளை பன்னாட்டு அணு சக்தி முகமையகத்தின் இணையதளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"