காந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயலுதல்

காந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயலுதல்

காந்தி மீது நான்கு கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டு கோட்ஷேவால் ஐந்தாவது முறையில் பௌதீகமாக கொல்லப்பட்டார் காந்தி.ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நான்கு முயற்சிகளையும் அறிந்திருந்தும் அவற்றைப் பொருட்படுத்தியவரல்ல காந்தி .அச்சம் என்பது அவருக்கு வெகுதூரம்.எனக்கு உலகிலேயே இரண்டு அரசியல் தலைவர்கள் பேரில்தான் கவர்ச்சி அதிகம்.ஒருவர் காந்தி .மற்றொருவர் சேகுவேரா.சே வை அமெரிக்கப்படைகள் சூழ்ந்து கொல்ல முயன்ற கடைசி தருணத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவன் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறான் .கடைசி கணத்தில் சே வை நெருங்கிய பின்னர் ; அவர் பார்வையின் முன்பாக எதிர்கொள்ள முடியாமல் இருபது அடிதூரம் துப்பாக்கியுடன் பின்னகர்ந்ததாக அவன் சொல்கிறான். சே அவனை நோக்கி

"சுடுவதற்குத்தானே வந்தாய்   சுடு"  என்கிறார் .
அதன் பின்னர்தான் அவனால் சே வை சுட முடிகிறது.இந்த குறிப்பு ஒருவேளை புனைவாகக் கூட இருக்கலாம் .இருந்தாலும் இந்த புனைவில் ஒரு சுகம் இருக்கிறது.சே என்னும் வினை ஒருபோதும் அழிய இயலாது என்னும் ஏக்கம் தரும் சுகம்தான் அது. இரண்டு தலைவர்களுமே வினையின் மீது நம்பகம் கொண்டவர்கள்.வினையை உயிராக்கிக் கொண்டவர்கள்.இலக்கியத்தின் பால் ஏக்கம் கொண்டிருந்தவர்கள்.இருவரும் யார் கொல்ல முயன்றாலும் மீண்டும் மீண்டும் சினைத்துக் கொண்டுதானிருப்பார்கள்.கொல்லவே முடியாதவர்கள் அவர்கள்.பிற அரசியல்   தலைவர்கள் இறப்பார்கள் மீண்டும் சினைக்க மாட்டார்கள்.இருவருக்குமே ஆழமான சுய பரிசீலனை உண்டு.ஆனந்தமும் அறிந்தவர்கள் .அதிகாரத்தில் நாட்டமற்றவர்கள்.இருவருமே தீர்க்கதரிசிகள்.

சே ஒருசமயம் நண்பர் ஒருவர் விரும்பியழைத்த விருந்துக்காக ஒரு கிராமத்திற்குச் செல்கிறார் .குடி விருந்தென்பது அங்கு பொதுவானது.விருந்தில் சே விரும்பியழைத்த நண்பரின் மனைவியை இழுத்துக் கொண்டு இருட்டுக்குள் ஓடி மறைய ஊர் திரண்டு அவரை வெளியேற்றுகிறது.இந்த செய்தியை மறைக்க சே முயன்றதில்லை.அவருடைய  சரிதையில் அந்த நிகழ்வு வருகிறது.அவரது நாட்குறிப்பிலிருந்து இந்த செய்தி எடுத்தாளப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு பற்றிய ஆழ்ந்த குற்றபோதம் வெளிப்படும் இடம் அது.மதுவருந்திய நிலையில் அவள் என்மீது   ஈர்ப்பு கொண்டிருந்தாள்.பின்னர்தான்  அவளுக்கு ,அவளுள் இயங்கும் சமூகம் விழிப்பு தட்டியது  என்று அவர் நிறுவ முற்பட்டிருந்தாலும் கூட குற்றபோதம் எழுத்தில் வெளிப்பட்டிருக்கும்.எதற்குச் சொல்கிறேனென்றால் இந்த இரண்டு தலைவர்களுமே பிம்பங்களின் தூய இரும்பு எருமை மாடுகள் அல்லர்.சதா தங்களை பரிசீலித்துக் கொண்டே இருந்தார்கள்.பரீட்சையில் மனம் வெற்றி கொள்ளாத எதையுமே பிறருக்கு பரிந்துரைக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தவர்கள்.காந்தியை எவ்வளவு அவதூறுகள் வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே போகலாம்.காந்தி அதற்கு அனுமதிப்பார்.அகற்ற முடியாது அது தான் அவர் ஏற்றெடுத்திருக்கும் நல்வினை.காந்தியை ஆதரிப்போரிடமும் ,எதிர்ப்போரிடமும் ,சகலவிதமான அடிப்படைவாதிகளிடமும் பல்வேறுவிதமான பிம்பங்கள் கையில் உண்டு.அவற்றையெல்லாம் கழற்றிவிட்டு காந்தியை அறிய கடும் தவம் தேவை.

காந்தியொருவர்  மட்டும்தான்  நவீனகால இந்தியாவின் அக உருவமாக முற்றிலும் பொருந்திப் போவதற்குத் தகுதியான ஒருவர்.அவர் பன்முகத் தன்மையின் சௌரூபம்.கொல்லவே இயலாததொரு பேரூரு.கொல்ல நினைப்பவனுக்கும் கூட பெரிய அறச்சிக்கல் அது.காந்தியை இல்லாமலாக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இல்லாமலாகப் போகிறீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

காந்தியற்ற இந்தியா கடவுளற்ற கோவில்
காந்தியற்ற கரன்சி புனிதமிழந்த வெற்றுப்   பணமதிப்பு  

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"