பூனை - சிறுகதை



பூனை 

மல்லிகாவை அவளது பயிற்சி வகுப்பில் விட்டுவிட்டு கடைக்கு வந்தேன். நேற்று காலைமுதல் அவளோடு எதுவும் பேசவில்லை. மிகவும் பிடிவாதத்தோடு இருந்தாள். எளிதில் அவளது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்வாள். என்றாலும் இந்தமுறை நான் அவளது பிடிவாதத்தைத் தளர்த்துவதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பேசாமலிருந்து விட்டேன். பயிற்சி வகுப்புக்கு ஸ்கூட்டரில் வரும்போது அவள் எனது தோளில் கைபோடவில்லை. ஸ்கூட்டரில் ஒதுங்கி உட்கார்ந்திருந்தாள்.ஸ்கூட்டரிலிருந்து இறங்கிச் செல்லும்போது லேசாக சிரிக்க முயற்சித்தாள். ஆனால் அவளால் சிரிக்க இயலவில்லை. அவளுக்குக் கோபம் தளர்ந்திருந்தாலும் பிடிவாதம் உருவாக்கியிருந்த இறுக்கம் கலையவில்லை. நேற்று முதல் நானும் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ளவில்லை. என்றாலும் எனக்கு அவளிடத்தில் தற்பொழுது கோபம் ஏதுமிருக்கவில்லை. 

கடையில் உட்கார்ந்திருந்தேன். கைகள் லேசாக நடுங்குவதுபோலத் தோன்றியது. இரண்டு நண்பர்கள் கடையிலிருந்து எதைஎதையோ பேசிக்கொண்டிருந்தனர். அதில் மனம் ஈடுபடவில்லை. எரிச்சலாக இல்லை என்றாலும் மனம் எதிலும் கவனப்படாமல் இருந்தது.மழை தூறலாக ‍பெய்துக்கொண்டிருந்ததையும் நான் கவனிக்கவில்லை. கடையில் வேலை பார்க்கும் புஷ்பாவிடம் கடை சம்பந்தமான ஏதோ விஷயத்தைப் பேசும்போது மனம் தூர்ந்துபோய் அதிருவது போன்றிருந்தது. டீ குடிக்கலாமா என்று நினைத்தேன். மிக்ஸி வாங்குவதற்காக ஒருவர் கடைக்கு வந்தார். அவரிடம் புஷ்பாதான் பேசிக்கொண்டிருந்தாள். வழக்கமாக நான்தான் கடைக்கு வருகிறவர்களிடம் பேசுவேன். பொருட்களைப்பற்றிப் பேசுவதோடு, அவற்றை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லுவேன். ஆனாலின்று பேச முயற்சித்தாலும் அது ஒழுங்கில்லாமலிருந்தது. புஷ்பாவுக்கு உதவிசெய்ய முயன்றபோது தடுமாற்றமாகச இருந்தது. தடுமாற்றத்தினூடே வீட்டிலுள்ள பூனையின் ஞாபகம் கூர்மையாக இருந்துகொண்டிருந்தது. அது வீட்டின் பின்புறத்தில் சாயங்காலங்களில் எப்போதேனும் நான் உட்கார்ந்திருந்தால் உரசிக்கொண்டு நெளிந்து செல்லும். லேசாக தடவிக் கொடுப்பேன். அப்போது அது முதுகை மட்டும் உயர்த்திக் கொண்டு நிற்கும். சிலநேரங்களில் அப்படி அது உரசுவது எரிச்சலாக இருந்தால் காதைப்பிடித்து தூர எறிவேன். தூக்கி எறிந்த அதே வேகத்தில் வந்து மீண்டும் உரசும். சில சந்தர்ப்பங்களில் அது ஒதுங்கிக் கொள்வதும் உண்டு. அதன் முதுகுப்புறத்தில் பெரிய காயம்பட்டிருப்பதுபோல நினைத்துப் பார்த்தேன். சங்கடமாகவும் நடுக்கமாகவும் இருந்தது. 

நேற்று இரவு ஒரு புகார் தொடர்பாக போலீஸ் ஸ்டேசனுக்குப் போகவேண்டியிருந்தது. மல்லிகாவிடம் சற்று தாமதமாகக்கூடும் என்று சொல்லியிருந்தேன். போலீஸ் ஸ்டேசனில் உள்ள புரோக்கர் புகார் தொடர்பாக எனக்கு அவன் செய்த உதவிக்காக விருந்து வைக்கும்படி கேட்டிருந்தான். அந்த விருந்தில் நானும் அவனுடன் சேர்ந்து குடிக்க வேண்டியிருந்தது. அவன் அந்த காவல் நிலையத்தில் காவலர் பதவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். முந்தினநாள் அவனைக் காவல் நிலையத்தில் பார்த்தபோது அவன் கடுமையாகக் சீறினான். அவனுக்கு கன்னங்கள் வரை மீசை வளர்ந்து படர்ந்திருந்தது. முன் தலை வழுக்கையாக இருந்தது. முரட்டுத்தனமான சில சாமி சிலைகளைப் போன்றிருந்தது அவனது உருவம். அவனுக்கு சிறிய தொப்பையும் இருந்தது. அது அவனது தோற்றத்திற்கு பொருத்தமாகவும், அவனது தோற்றத்திற்கான நேர்த்தியை அதிகப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.அவனை காவல் நிலையத்திற்கும் அதை ஒட்டி அமைந்திருந்த காவலர் குடியிருப்புக்கும் இடையில் ஒரு வேன் போகுமளவு விரிந்திருந்த பாதையில் பார்த்தேன். அந்த பகுதியின் வடக்குப்புறத்தில் ஓட்டுச் சாய்வும் திண்ணையும் இருந்தன. ஓட்டுச் சாய்வில் சிறிய மரத்தூண்கள் வரிசையாக நின்றன. அது காலத்தில் பழைமையான கட்டடம் என்பதற்கான வாசம் வந்துகொண்டிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. பாதை நீண்டு சென்ற பகுதியின் கடைசியில் முப்பதடி தூரத்தில் பழுதடைந்த நிலையில் ஒரு காரும் ஒரு டெம்போவும் பழுதடைந்த வாகனங்களின் சில உதிரி பாகங்களும் கிடந்தன. அவன் என்னை மேலும் கீழுமாக காட்டமாகவும் கவனமாகவும் பார்த்தான். 'நீ தான் மணிவண்ணனா'? என்று கேட்டான். 'ஸ்கூட்டரில் கத்தி, துப்பாக்கியெல்லாம் வச்சிருக்கியாமே'என்றான். நான் 'அதெல்லாம் வச்சிருந்தா உங்ககிட்ட வரவேண்டியதே வந்திருக்காதே' என்றேன். என்னுடன் வக்கீலும் காவல் நிலையத்தோடு பரிச்சயமுள்ள ஒருவனும் சில நண்பர்களும் வந்திருந்தனர். அவனது சீற்றமும் காட்டமும் பதினைந்து நிமிடத்துக்குள் தணிய ஆரம்பித்திருந்தது. சரி இனி விஷயத்தைப் பேசுவோம் என்றபடி வக்கீலும் அவனும் திண்ணைப் பகுதியில் உட்கார்ந்தனர். வக்கீல் பணத்தை சற்று குறைப்பதற்காக அவனுடன் பேசிக் கொண்டிருந்தான். நான் என்னிடமிருந்த ரூபாய் இரண்டாயிரத்தை வக்கீலிடம் கொடுத்தேன். வக்கீல் அவனிடம் கொடுத்து 'போதும் போதும்' என்றான். இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு காவலர்கள் என்று எல்லோருக்கும் கொடுத்துபோக தனக்கு எதுவும் கிடைக்காது என்று அவன் புலம்பிய வண்ணமிருந்தாலும் சற்று மகிழ்ச்சியாக இருந்தான். என்னை அவனது அருகில் வந்து உட்காரும்படிக் கூறினான். அவனது அருகில் உட்கார்ந்தேன். அவனிடம் விஷயத்தைப் பேசுவதற்கு முயற்சி செய்தேன். தோளில் கைபோட்டபடி 'நீ எதுவும் பேசாத இப்படி எவனாவது ஏமாறுவானா? உன்னைய எனக்குப் பிடிக்கல. பேசாத' என்று கூறினான். அதன்பிறகு அவன் பேசிய விஷயங்கள் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் உரிமையெடுத்துக் கொண்டு கண்டிப்பது போன்றிருந்தது. நான் மண்புழுவாக மாறி அவர்களைச் சுற்றி ஊர்ந்து கொண்டிருப்பதைத் திடீரென உணர்ந்தேன். நான் மண்புழுவாக மாறிவிட்டதையோ, ஊர்ந்து கொண்டிருப்பதையோ யாரும் கவனிப்பதாகவோ, அது குறித்து அனுதாபப்படுவதாகவோ தெரியவில்லை. எனக்கு எனது உடல் மண்புழுவாக மாறிவிட்டது குறித்த கவனம் மட்டுமே முக்கியமாக இருந்தது. 
விருந்துக்காக செல்லும்போது நேரம் இருட்டியிருந்தது. புரோக்கர் காவல் நிலையத்துக்கு மேற்குப் பக்கமாக இருந்த டீ கடையில் நின்றுகொண்டிருந்தான். டீ கடையின் முன்பு கட்டப்பட்டிருந்த டியூப்லைட் வெளிச்சம் பிரகாசமாக இருந்தது. அந்த வரிசையில் வேறு சில பெட்டிக்கடைகளும் இருந்தன. அவற்றிலிருந்து மிகவும் மங்கலான வெளிச்சம் பரவிக்கிடந்தது. அந்த கடைக்கு ரோட்டைத் தாண்டிய எதிர்பகுதி கறுப்பு இருளோடு இருந்தது. என்னுடன் எனது நண்பன் ரமேஷூம் வந்திருந்தான். நான் இருள் பகுதிக்குள் ஸ்கூட்டரை நிறுத்தினேன். எனது மனம் நிதானமாகவும், அமைதியாகவும், பிரகாசமாகவும் இருந்தது. ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நானும் ரமேஷூம் அவனை நோக்கிச் சென்றோம். அவன் என்னைப் பார்த்து கண்களைச் சிமிட்டியவிதம் அருவருப்பாக எனக்குத் தோன்றியது பழையாற்றிலிருந்து பாலத்துக்குக் கீழே தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கும் சத்தம் பாலத்தில் சிதறிக் கிடந்த சோடியம் வெளிச்சத்தினூடே கேட்டுக் கொண்டிருந்தது. என்னையும், என் நண்பர்கள் ஐந்து பேரையும் சேர்த்து புகார் கொடுத்தவனும் அவனுடன் நின்று கொண்டிருந்தான். புகார் கொடுத்தவன் கண்களை உருட்டியபடி நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அது பார்க்க அழகாக இருந்தது. நான் அதன்பிறகு அவர்களைக் கவனிக்கவில்லை. ரமேஷ் அவர்களது பாவனைகள் குறித்து தொடர்ந்து அதிருப்தியை தெரிவித்துக் கொண்டிருந்தான். ரமேஷின் பெயரும் அந்த புகாரில் இருந்தது. அவனைக் கண்டிப்பாக அழைத்து வர வேண்டும் என்கிற நிபந்தனை அடிப்படையில் அவன் வந்திருந்தான். அவனுக்கு சற்று பயமிருந்தது எனக்குத் தெரிந்தது. கிண்டலாக பேசி அவன் அதை சமநிலைப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனும் முந்தினநாள் வந்திருந்தானென்றால் தற்பொழுது அவன் பயமில்லாமல் நிம்மதியாக இருந்திருப்பானென்று எனக்குத் தோன்றியது. என்றாலும் எங்கள் இருவருக்குமே விருந்தில் குடிக்கச் செல்வது குறித்த உற்சாகமே அதிகமாக இருந்தது. அவனுக்கு விருந்து வைக்கிறோம். என்பது எனக்கு சாக்காகத்தான் இருந்தது. நான் நிறையக் குடித்து நெடுநாட்கள் ஆகிவிட்டது. மல்லிகாவிடம் அனுமதி கேட்டுவிட்டு அவ்வப்போது குடித்து வந்தேன். என்றாலும் அவை எனக்கு சுவாரஸ்யமானதாக இல்ல‍ை. அவள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு பாட்டில் பீர் குடிப்பதற்கு அனுமதி தந்திருந்தாள். அந்த அனுமதியை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய ஆகாது. அவளது தகப்பனார் ஒரு பெரிய குடிகாரர். குடித்துவிட்டுப் பெரிய ரகளைகளில் ஈடுபடக்கூடியவர். குடிப்பதுபற்றி அவளுக்குள்ள ஒரேயொரு சித்திரம் அவர்தான். நான் குடித்துவிட்டு வரும் சந்தர்ப்பங்களில் அவளது தகப்பனாரின் சித்திரத்தை எனக்கும் பொருத்தி என்னை தாக்கத் துவங்குவாள். நான் குடிப்பது என்கிற காரியம் என்னையும் உன் தகப்பானரையும் ஒன்றாக்கி விடாது என்று அவளிடம் சொல்வேன். அவற்றை அவள் காது கொடுத்துக்கூட கேட்கமாட்டாள். அவள் எனக்குள்ளிருக்கும் அவளது தகப்பனாரோடு கடுமையாக சண்டையிடுவாள். கூடியமட்டும் வன்முறையோடு தாக்குவாள். அந்த சமயங்களில் நான் மெல்லமெல்ல அவளது தகப்பனாரின் சாயலை அடைந்து கொண்டிருப்பேன். அவரது சாயலை அடையும்போது அவர் எப்படிப்பட்டவர் என்பதை நான் தெரிந்துகொள்வது போன்றிருக்கும். என்றாலும் அவரது சாயலை அடைய அடைய எனக்கு பீதியும், அருவருப்பும், குற்றவுணர்ச்சியும் நிரம்பிப் பொங்கும். சாமியாடப் படிக்காதவனின் உடம்புக்குள் சுடலை மாடசாமி ஆராசனைகொண்டு ஆடுவது போன்றிருக்கும் அது.எனது நண்பன் ஒருவனுக்கு சுடலைமாடசாமி வரும். ஆனால் அவனுக்கு சாமி வருவது துளியும் பிடிப்பதில்லை என்று சொல்வான். சுடலைமாடசாமி ஆடுவது கடினமான காரியமென்றும் அது ஒரு ஏமாற்றுக்கார சாமி என்றும், ஆராசனை கொண்டு ஆடும்போதே இடைஇ‍டையே அது விட்டுவாங்கி பின்னும் உடம்பைப் பிடித்துக்கொள்ளும் என்றும், அப்படி சாமி விட்டுவாங்கிவிடும் சமயங்களிலும் ஆடிச் சமாளிக்க வேண்டிவருவது மிகவும் கடினமான காரியமென்றும் சொல்வான். அதிலும் பொங்கப்பானை குளிக்கும்போதோ அல்லது தீப்பந்தம் பிடிக்கும்போதோ அல்லது சுடுகாட்டுக்குச் செல்லும்போதோதான் விட்டு வாங்கி அவனை சிரமப்படுத்துவதாகச் சொல்வான். சாமி அவன்மேல் வராமலிருப்பதற்காக அவன் பல்வேறு சாகஸங்களைச் செய்து பார்த்தும் எதுவும் பலனில்லை. அவன் உடலை விரதத்துக்கு எதிராகக் கடுமையாக அசுத்தப்படுத்திப் பார்த்தும் சாமி அவனை விடவில்லையாம். இப்போது அவன் சாமிக்கு எதிரான முயற்சிகளை விட்டுப் பணிந்துவிட்டான். அவனது தகப்பனாரின் சாயல் என்னிடம் குடிகொள்ளும்போது நானும் அவனைப் போன்ற ஒரு சாமியாடியைப் போலவே இருப்பேன். என்னிடம் குற்றவுணர்ச்சி துரிதப்படும்போது மல்லிகா துவண்டு படுத்துத் தூங்கிவிடுவாள். அப்படி அவளைப் பார்ப்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். 

புரோக்கர் நாங்கள் நின்று கொண்டிருந்த கடைக்கு வந்தான். அவனிடம் முந்தினநாள் நான் கண்ட கடுமையை நினைத்துப்பார்க்கிறபோது இன்று பரிதாபமாக இருந்தது. அவனது சாமி தோற்றம் இன்று கிடுகிடென ஆடியது. தேர் வீதிவலம் வரும்போது ஆடுவதைப்போல அவனது தோற்றத்தின் ஆபரணங்களெல்லாம் ஆடிக்கொண்டிருந்தது. ஆபரணங்கள் ஒட்டிக்கொண்டிருந்த பகுதிகளில் சிரங்குகள் இருக்கக்கூடுமென தோன்றுமளவுக்கு அவனது தோற்றம் சிதைந்துபோயிருந்தது. அவன் புகார் கொடுத்தவனைச் சமாளிப்பது சிரமமாக உள்ளதாகச் சொன்னான். அந்த கடையில் ரூபாய் அறுநூறு கொடுக்கும்படியும் அதை வைத்து இன்ஸ்பெக்டரையும் பிறரையும் சமாளித்துவிடுவதாகவும் பொய் கூறி அவசரத்துடனிருந்தான். 'தம்பி லேய், நான் உன்ன ஆறுமணிக்கே வரச்சொன்னாம்லா'? என்றான். நான் பதிலுக்கு அவனிடம் பேசியபடியே அறுநூறு ரூபாயை அனுப்புங்கள். நமக்கு நேரமாகிறது' என்று அவனிடம் சொன்னேன். அவன் 'இரு பிள்ளே இப்ப வந்துருகேன்' என்று சொல்லிவிட்டு அலசரமாகச் சென்றான். கடைக்காரனைப் பார்த்தேன். அவன் கவனமெதுவுமில்லாமல் வாயில் எதையோ போட்டு சவைத்துக் கொண்டு கவனத்தை வேறெதோ விஷயத்தில் செலுத்தியபடியே தூரத்தில் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான். 

மதுபானக்கடையை ஒட்டியிருந்த புரோட்டாக்கடையில் உட்கார்ந்தோம். புரோக்கர் ரமஷை நளியடித்தபடி புரோட்டாக் கடையில் வேலைபார்க்கும் பையனை மிரட்டும் தொனியோடு சிகரெட்டும் V.S.op பிராந்தியும் வாங்கிவரும்படி கூறினான். ரமேஷை நளியடித்தபடியே ரமேஷீக்கு ஒரு பீர் கேட்டான். ரமேஷ் நன்றாகத் ண்ணியடிக்கக்கூடியவன். அவன் தண்ணியடிக்கும் போது கூடுதலான அலப்பையும் காட்டுவான். எதனாலோ அவன் பீர் மட்டும் குடிக்கக் கூடியவன் என்கிற விதமாக புரோக்கரிடம் அவனைக் காட்டிக் கொண்டிருந்தான். ரமேஷை தாறுமாறாக புரோக்கர் நளியடித்துக் கொண்டிருந்தான் என்றாலும் ரமேஷூக்கு பிடிக்கும்விதமான நளியாகவே அவை இருந்தன. கொஞ்சம் போதை உள்ளிறங்கியதும் 'நாம இனி பிரண்ட்ஸ் பிள்ளே. உனக்கு இனி என்னன்னாலும் நான் செய்வேன்' என்றான். 'நாம முதல்லயே சந்திச்சிருந்தால் இந்த பிரச்சனையை வேறுவிதமாக ‍பேஸ் பண்ணியிருக்கலாம்' என்றான். புகார் கொடுத்தவன் அவனுக்குச் சொந்தக்காரன் என்பதை அவனுக்கு ஞாபகப்படுத்தினேன். 'சாணானுக்கு சொந்தம் சட்டிக்கயும், பொட்டிக்கயும் தான். தோண்டித் தோண்டிப் பார்த்தா நீயும் சொந்தமாகத்தான் இருப்பா' என்றான். போதையில் அவனது முகமெல்லாம் வியர்த்திருப்பது என்னுடைய போதையிலும் தெளிவாகத் தெரிந்தது. போதை ஏறியதும் உயிரைக் கொடுக்கக்கூடிய பல நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். அவர்களை நினைவூட்டும்படியாய் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் தண்ணியடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உயிரையும் இருதயத்தையும் தருபவர்களாக இருந்தார்கள். பலமுறை அவர்களிடம் உயிரோ இருதயமோ எனக்குத் தேவையில்லை என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபிறகும் அவர்கள் தொடர்ந்து இருதயத்தையும் உயிரையும் தந்து கொண்டிருந்தார்கள். எனக்கு அவற்றைப் பாதுகாப்பது பெரும் வேலையாக மாறிவிட்டது. அப்படிப் பாதுகாத்த உயிரும் இருதயமும் என்னிடம் நிறைய உலர்ந்த நிலையில் உள்ளன. அவர்களைத்தான் காண முடிவதில்லை. 

ரமேஷை அவனது வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஏற்கனவே நேரம் தாமதமாகும்போது மல்லிகாவின் ஞாபகமாக இருந்து கொண்டிருந்தது. எவ்வளவு தாமதமானாலும் அவள் தூங்கமாட்டாள். ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அவளைக் கூப்பிட்டேன். ரொம்ப தாமதமாக வந்து அவள் கதவைத் திறந்தாள். எனக்கு கால்கள் சற்று தள்ளாடுவது நடக்கும்போது தெரிந்தது. அவளது கண்கள் நிறைந்திருந்தது. ஏதேனும் பேசினால் அவள் உடனடியாக அழுதுவிடுபவளைப் போன்றிருந்தாள். எனக்கு அது துன்பமாக இருந்தது. அதன் பிறகு அவள் போய் படுக்கையில் படுத்துக் கொண்டாள். அவளிடமிருந்து அழுகையின் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. 'ஏனிப்படி நடந்துக்கற' என்று எரிச்சலோடு கேட்டேன். 'ஏற்கனவே சொல்லிவிட்டுதான் போனேன்' என்றேன். அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். எனக்கு போதையினூடே கோபமாக இருந்தது. அவள் சாப்பிட்டிருக்கமாட்டாள் என்று தோன்றியது. சாப்பிட்டுவிட்டு தூங்கும்படி சொன்னேன். 'லேட்டானா தேடக்கூடாதா?' என்று கேட்டாள். கீழ்வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் உள்ள தொலைபேசி இணைப்பின்மூலம் தொடர்பு கொண்டு எங்கள் உறவினர்கள் பலருக்கு அவள் தகவல் சொல்லி என்னைத் தேடும்படி கூறியிருப்பதையும் அழுகையினூடே சொன்னாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மணி ஒன்றரையை தாண்டிக் கொண்டிருந்தது. என்னைத் தேடி குறைந்த பட்சம் இரண்டு பேரேனும் இந்த இரவில் அலைந்து திரிவார்கள் என்று தோன்றியது. போதை மூர்க்கமாக இருந்தது. அதோடு தெளிவாக இருக்கவும் சிரமப்பட்டு முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவளுக்கு தொலைபேசியில் உறவினர்களுக்குத் ‍தெரிவித்திருக்க வேண்டியதில்லை என்கிற எண்ணமிருப்பது தற்பொழுது தெரிந்தது. வீட்டுக்கு வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து மாடியிலிருந்து பார்த்தேன். ஆதியண்ணன் நின்று கொண்டிருந்தான். அவன் அலைந்து திரிந்த விஷயங்களைப்பற்றி கீழே நின்றபடி விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தான். கீழ் வீட்டிலுள்ளவர்கள் வெளியிலுள்ள விளக்கைப் போட்டார்கள். நான் அவனிடம் கண்ணன் வீட்டுக்குப் போன் செய்து நான் வந்துவிட்டேன் என்று சொல்லி விடும்படி கூறிவிட்டு கதவை மூடுவதற்கு ரெடியானேன். அவனுக்கு அலைச்சல் குறித்த அவனது கதையை நான் இடையில் குறுக்கிட்டு முடித்துவிட்டது மனச்சோர்வை ஏற்படுத்தியதுபோல எனக்குத் தோன்றியது. அவன் திரும்பிச் செல்லும்போது முகம் சூம்பிவிட்டது தெரிந்தது. 

வீட்டுக்குள் ஸோபாவில் உட்கார்ந்திருந்தேன். டியூப்லைட் வெளிச்சம் பளபளப்புடன் இருந்ததில் மனம் கவனப்படவில்லை. மல்லிகா விளக்கை அணைத்து விட்டு அடுத்த அறையில் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள். இப்போது அவளிடத்திலிருந்து விம்மல் ஏதும் வரவில்லை. காவல் நிலையத்தில் லாக்கப்பில் என்னை அடித்து மிதித்திருப்பார்கள் என்ற அவளுக்கு ஏற்பட்டிருந்த கற்பனைத்திரை தற்பொழுது விலகி இருக்கக்கூடும். என்றாலும் அவளுக்கு கோபம் மூர்க்கமாக இருந்ததை உணர்ந்தேன். உறவினர்களுக்கெல்லாம் அவள் போன் செய்திருப்பதை நினைத்த போது மீண்டும் எரிச்சலாக இருந்தது. அப்போது அறையின் வாசல் பக்கத்தில் பூனை படுத்திருப்பதைப் பார்த்தேன். துள்ளிக் குதித்து வேகமாக எழும்பி அதனை விரட்டினேன். பின்பக்கக் கதவு பூட்டி இருந்ததால் அது திக்குமுக்காடியது. காலால் உதைக்க எகிறினேன். அது பூனைமேல் படாமல் விறுதே போனது. எனது கால்கள் போதையால் தள்ளாடியது. அதை வெளியேற்றி விடவேண்டும் என்பதைக் காட்டிலும், காரணமற்ற மூர்க்கமான கோபத்தில் விரட்டி அதைத் திக்கு முக்காடச் செய்வதிலேயே குறியாக இருந்தேன். அது அடுக்களைக்குள் ஓடிப்போய் பதுங்கியிருந்தது. காதைப் பிடித்துத் தூக்கினேன். கோபத்தை அதன்மீது எப்படி செலுத்துவது என்பது தெரியாமல் காதைப் பிடித்து அதனைக் கறக்கினேன். கதவைத் திறந்து வெளியே எறிந்தேன். அது தாவிச்‍ சென்று பின்பக்க மொட்டை மாடியின் மதில்சுவரில் கால்களையும் உடலையும் திருப்பி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. பின்பக்கத்து இருட்டு வெளிச்சத்தில் அதன் கண்கள் தீவிரமாகத் தெரிந்தது காரணமற்ற எனது தீவிரத்தைக் கிளறியது. மீண்டும் ஓடிச் சென்றேன். கைகளால் ஓங்கி அடித்தேன். எனது கையின் ஒருபகுதி பூனையின் மீதும் ஒருபகுதி காம்பவுண்ட் சுவர் மீதும் பட்டு சத்தம் ஏற்பட்டதை நான் கவனிக்கவில்லை. கையின் உப்புக்குத்திப் பகுதி விண்விண்ணென்று தரித்தது. தரிப்புடன் கை நடுங்கத் துவங்கியது. பூனை காம்பவுண்டு சுவரை ஒட்டியிருந்த தென்னை மரத்தில் மோதியதைப் பார்த்தது கண்களில் படமாகப் படிந்திருந்தது. அதன்பிறகு அது கீழே விழுந்த சத்தமெதுவும் கேட்கவில்லை. இறந்துபோயிருக்குமோ என்று தோன்றியது. கைநடுக்கம் மேலும் அதிகரிப்பது போன்றிருந்தது. காரணமில்லாமல் பயம் தீ‍டிரென மனதை ஊடுருவிச் செல்வது போன்றிருந்தது. விளக்கை அணைத்துவிட்டு மல்லிகாவிடம் சென்று படுத்தேன்.மிகவும் அனுசரணையுடன் தொட்டேன். கைநடுக்கம் அப்போதும் இருந்துகொண்டிருந்தது. அவள் கையை உதறினாள். பூனையின் ஞாபகம் மேலும் தீவிரப்படத் துவங்கியது. ஆனால் சற்று நேரத்திற்குள் நன்றாகத் தூங்கிப் போயிருந்தேன், 

காலையில் மல்லிகா எழும்பி சற்று நேரத்திற்குள் என்னை எழுப்பி விடுவாள். இன்று அவள் என்னை எழுப்பவில்லை. ஆனால் நான் எழும்பும்விதமான சத்தங்களையும் சூழலையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். எழும்பி பின்பக்கம் சென்று தென்னை மரத்தில் ரத்தம் பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். சுற்றியிருந்த மரங்களுக்குள்ளிருந்து சூரியவொளி பனிக்கட்டியைப் போல உருவி வந்து கொண்டிருந்தது. உடலச் அசதியாக இருந்தது என்றாலும் மனம் பூனையின் மீது கூர்மையாக இருந்தது. காம்பவுண்டு சுவரை ஒட்டியுள்ள திண்டிலெல்லாம் பார்த்தேன். பூனையைக் காணவில்லை. மல்லிகா முளித்த உடனேயே பூனை வீட்டிற்குள் வந்துவிடும். அவள் கதவைத் திறக்கும்போது அது 'மியாவ்' என்றபடி வெளியே நிற்கும். பெரும்பாலும் அது இறந்துதான் போயிருக்கும் என்பதை நினைத்தபோது மனம் அதிருவது போன்றிருந்தது. மல்லிகாவிடம் எதுவும் பேசவில்லை. பூனையின் மீதே நினைவாக இருக்கிறேன் என்பதும் அவளுக்குத் தெரியாது. பல் துலக்குவதற்கு பிரஷை எடுத்தேன். அவள் பூனை இதுவரை வீட்டிற்கு வராததைப்பற்றி அக்கறை எதுவுமில்லாமல் இருந்தாள். பூனையை நான் அடித்ததும் அவளுக்குத் தெரியாது. என்மீதுள்ள கோபத்தில் அவள் பூனையைப்பற்றிய கவனமில்லாம லிருக்கிறாள் ‍என்று தோன்றியது. அது ஒருவிதத்தில் எனக்கு ஆறுதலாக இருந்து. என்மீதுள்ள கோபம் அவளுக்கு நீண்டு செல்லவேண்டும் என்று விருப்பமாயிருந்தது. திருமணத்திந்கு முன்பு நானும் எனது நண்பர்களும் இரவில் பல்வேறு விதமா பிராணிகளையும் பறவைகளையும் வேட்டையாடி தின்றிருக்கிறோம். அவற்றின் பல தினுசான பூனைகளும் உணடு. வேட்கையில் எங்களுக்கு முரட்டுப் பூனைகளெல்லாம் கிடைத்த திருக்குகின்றன. வெருதுகளும் கிடைக்கும். வெருதுப்பூனைகள் கிடைத்தால் மனசுக்கு சந்தோஷமாக இருக்கும். பூனையைக் குழிதோண்டி உயிருடன் புதைத்துவிடுவோம். சற்றுநேரம் கழித்து எடுத்து தலையைத் தனியாகத் துண்டித்து ஒரு சிறிய கல்லில் இருத்தி வைத்துவிட்டு முண்டத்தைத் தீயில் வாட்டி தோலை உரித்து எடுத்துவிட்டு சமையல் செய்வோம். கறியைச் சாப்பிடும்போது எல்லோருக்கும் தயக்கம் உள்ளூர இருப்பதுபோலத் தோன்றும். ஒருவர் மற்றவரை நிறைய தின்னும்படியும் ருசியாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டே தின்னுவோம். ஆரம்பத்தில் அப்படித் தின்ற பூனைகளில் சில எனது கனவுகளில் வந்து கொண்டிருந்தன. நாளாவட்டத்தில் நிறைய பூனைகளைத் தின்னத் துவங்கியபிறகே அவை கனவில் வருவதை நிறுத்திக்கொண்டன. பூனைகளை தின்னும் போதெல்லாம் எனக்கு இந்த சிரமம் ஏற்படவில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்பு நானும் மல்லிகாவும் இந்த வீட்டின் மேல்மாடிக்கு வாடகைக்குக் குடி வந்தோம். ஏற்கனவே இருந்த வீட்டில் அறைகள் குறுகலாக இருந்தன. சன்னல்களும் இல்லை. இந்த வீட்டில் காற்று சுத்தமாக வந்தது. சற்று பெரிய அறைகள் பெரிய சன்னல்களுடன் இருந்தது எனக்கு வசதியாக இருந்தது. பின்பக்கம் மொட்டை மாடியில் நிறைய இடம் இருந்தது. மொட்டை மாடியின் பின்பக்கம் கிழக்கு திசையில் இருந்தது. பின் மதியம் ஆகிவிட்டாலே அந்த பகுதிகளில் நிழல் பரவிவிடும். நான்கைந்து தென்னை மரங்களும், வளர்ந்து படர்ந்த சில பலாமரங்களும், படர்ந்து விரிந்த வேம்பும் அந்த காம்பவுண்டுக்குள் நின்றன. ஒரு தென்னை மரத்தின் இரண்டு ஓலைகள் மொட்டை மாடி காம்பவுண்டில் மூலையில் தளர்ந்த கைகளைப்போல நீண்டுகிடந்தன. இன்னொரு தென்னைமரம் வளைந்து நெளிந்து வந்து மொட்டை மாடியின் மற்றொரு மூலையில் குடைபோல நின்று கொண்டிருந்தது. அந்த வீட்டுக்கு வந்த துவக்கத்தில் நிறைய பூனைகள் வீட்டின் பின்பகுதியில் இருப்பதைப் பார்த்தோம். நிறைய வினோதமான வண்ணங்களுடன் பூனைகள் வீட்டின் பின்பகுதியில் இருப்பதை மல்லிகா எனக்குக் காட்டினாள். கீழ் வீட்டில் ஆளில்லாத சமயங்களில் பின்பகுதியில் கர்வம் பிடித்த நடன பாவத்துடன் அவை நடந்து திரிந்தவண்ணமாயும், பல்வேறு தினுசுகளில் படுத்தவண்ணமாயும் இருந்தன. ஏதேனும் சத்தம் கேட்கும்போது மட்டும் அவற்றின் நடன சொரூபம் அழிந்து பயத்துடன் பல்வேறு திசைகளை நோக்கி அவை ஓடும். ஆளில்லாத சமயங்களில் பின்பகுதிக்கு அவை அபூர்வமான அழகைத் தந்து கொண்டிருந்தன. மல்லிகா மீன் கழுவிக்கொண்டிருக்கும் ஒருசமயத்தில் நான் பார்த்தபோது கீழே பதினொரு பூனைகள் நின்று கொண்டிருந்தன. அவற்றில் கறுப்பு பூனைகளும் உண்டு, அந்த பூனைகளில் நான்கைந்து மேல்மாடிக்கு வருமெனில் அவற்றை வளர்க்க மல்லிகா தயாராக இருந்தாள். எனக்கு அவற்றைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வது பரவாயில்லை என்றிருந்தது. அவை ஆளரவம் கேட்டதும் பல்வேறு திசைகளை நோக்கி தாவி ஓடும். எங்களது பூனை மட்டும் ஓடுவதில்லை. அதனுடைய இந்த குணம் மூலமாய் எனக்கு ஏற்கனவே இந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களிடம் பழகிய பூனையாக அது இருந்திருக்கும் என்கிற எண்ணம் இருந்தது. மெதுவாக ஒரு சில நாட்களிலேயே மேல்மாடிக்கு வந்துவிட்டது. அதற்கு மல்லிகா இரைகளைப் போட்டாள். மேலும் சிலநாட்கள் கழிந்தபிறகு அது வீட்டுக்குள்ளும் வரத் துவங்கியது. முதலில் நான் அது வீட்டுக்குள் வருவதை அனுமதிக்கவில்லை. எனக்கு அப்போது அருவருப்பாக இருந்ததாக ஞாபகம். ஆவேசமாக ஒன்றிரண்டு நாட்கள் விரட்டினேன். மல்லிகாவுக்கு அது வீட்டுக்குள் வந்தால் பரவாயில்லை என்றிருந்தாலும் நான் அதை விரட்டுவதை அவள் ஆட்சேபிப்பதில்லை. அவளுக்கும் அது வீட்டுக்குள் வருவது ஒருவேளை பிடிக்காமல்தான் இருந்திருக்குமோ என்னவோ? ஆனால் என்னுடைய எந்த ஜம்பமும் அதனிடம் பலிக்கவில்லை. ஒருநாள் இரவு நான் கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபிறகு பூனை தொடர்ந்து அழுவதுபோல சத்தமிட்டுக் கொண்டிருந்தது. சாயங்காலத்திலிருந்தே அது அழுது கொண்டிருப்பதாக மல்லிகா சொன்னாள். எனக்கு களைப்பாக இருந்தது. அவள் பூனையின் சத்தத்திலேயே மிகவும் கவனமாக இருந்தாள். அது குறித்து அவள் தொடர்ந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். அது ஏன் அழுகிறது என்று என்னிடம் கேட்டாள். பூனைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழுவதை நான் கேட்டிருக்கிறேன் என்றும், அவை அழுவது குழந்தைகள் அழுவதுபோலவே இருக்கும் என்றும், காரணங்கள் எதுவும் எனக்குத் தெரியாது என்றும், காரணங்களை நான் யோசித்துப் பார்த்ததில்லை என்றும் நான் ஆர்வமற்ற தொனியில் சொன்னேன். 'இல்லை அது இன்றிரவு குட்டி போடப்போகிறது' என்று சொன்னாள். கற்பனையாக அவள் நினைத்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. நாங்கள் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றபிறகும் அதன் அழுகுரல் அன்று வெகுநேரம் வேதனையோடு கேட்டவண்ணமிருந்தது. 

மறுநாள் பக்கத்து வீட்டு சன்ஷேடில் குட்டியை எனக்கு மல்லிகா காட்டித்தந்தாள். தூங்கி முழித்து முதல் வேலையாக அவள் அதைத்தான் கண்டு பிடித்திருப்பாள் என்று நினைத்தேன். அவள் மிகவும் மகிழ்ச்சியுடனிருந்தாள். அது எனக்குப் பார்க்க விருப்பமாயிருந்தது. உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. குட்டி போட்டதற்கான சிறு தடயம்கூட இல்லாமல் பூனை குட்டியை சனஷேடில் கிடத்திவிட்டு வீட்டுக்குள் வந்து நின்று கொண்டிருந்தது. அதன் பிறகு சிலநாட்கள் அது குட்டியை சன்ஷேடிலேயே பல பகுதிகளுக்கு மாற்றிக் கொண்டிருந்தது. மல்லிகா தொடர்ந்து அவற்றின் பேரில் ஆர்வத்துடனிருந்தாள். ஒருவாரத்திற்குப் பிறகு வேறொரு பக்கத்துக்குக் குட்டியை இழுத்துச் சென்று விட்டது பற்றியும் அது அங்கு வசிப்பதுபற்றியும் விபரங்களை மல்லிகா எனக்குச் சொல்லி கொண்டிருந்தாள். எனக்கு அவள் சொல்லும் விவரங்களில் அதிகமான ஆர்வம் இருக்கவில்லை. அது இடத்தை மாற்றிக்கொண்டு சென்ற பிறகு நான் அதனை பின்தொடர்ந்து செல்லவில்லை.ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு பூனை வீட்டிற்குள் வருவதை நான் ஆட்சேபிப்பதில்லை. நானும் இரைகள் போட்டேன். லேசாக எப்போதேனும் தடவிக் கொடுக்க ஆரம்பித்தேன். நாங்கள் சாப்பிட்ட உணவு வகைகளில் மீனையும் பாலையும் அது அதிக விருப்பத்துடன் தின்றது. சாப்பிடும்போது வீட்டுக்குள் நான் அதற்கு மீன் போடுவதில் மல்லிகா சற்று வருத்தம் தெரிவித்தாள். என்றாலும் எனக்கு அதனோடு உறவு நெருங்கி வருவது அவளுக்குப் பிடித்திருந்தது. அதிகமாக அதனிடம் நெருங்கிப் பழகுவது லேசான ஆட்பேசத்திற்குரியதாகவும் அவளுக்குத் தோன்றியது. நான் மீன் கடைக்குச் செல்லும்போது பூனையின் ஞாபகம் உள்ளூர இருந்தது. வழக்கமாகவே மீன் அதிகமாக வாங்குவேன். மீன் எனக்குப் பிடித்தமான உணவு. பூனையின் ஞாபகம் வரும்போது மீன் வாங்குவது மேலும் உற்சாகமானதாக இருந்தது. ஒருநாள் நிறைய நெத்தலி மீன்களை வாங்கிக் கொண்டு வந்தேன். நானும் மல்லிகாவும் மீன் கழுவும்போது செள்ளையும் தலையையும் உருவி பூனைக்குக் போட்டுக் கொண்டிருந்தோம். அதற்குத் தின்னுதீர முடியவில்லை. கடைசியில் அது ஒதுங்கிக் கொண்டது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 
மாலை 4 மணிக்கு பயிற்சி வகுப்பிலிருந்து மல்லிகாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். மதியம் பிந்தி சாப்பிட்டது ஒருவித செளகரியமாக எனக்கு இருந்தது. கைநடுக்கம் சற்று தணிந்திருப்பதை உணர்ந்தேன். பூனையின் ஞாபகம் மட்டும் மனதில் சற்று துருத்திக் கொண்டிருந்தது. மல்லிகா தற்பொழுது இலகுவாக இருந்தாள். அவளுக்குக் கோபமெல்லாம் தணிந்து இறுக்கமும் கலைந்திருந்தது. அதில் நான் சரியாக அக்கறை காட்டவில்லை. பின்கதவை திறந்துகொண்டு வெளியே போனேன். பூனை 'மியாவ்' என்றபடி நின்று கொண்டிருந்தது. அதன் முதுகுப்பகுதியையும் வயிற்றுப் பட்ட தடயம் எதுவும் தெரியவில்லை. உள்காயம் ஏதேனும் பட்டிருக்கக்கூடும் என்கிற எண்ணத்தில் அதன் முதுகுப்பகுதியை லேசாகத் தடவினேன். முதுகை குவித்தபடி என் கால்களின் ஓரத்தை மூட்டி நெரித்துத் தள்ளியது. ஒரு முத்தம் கொடுத்தேன். மனதுக்கு விடுதலையாக இருந்தது. 
மீண்டும் நான் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மணி பத்தாகியிருந்தது. சாப்பிட்டுவிட்டு கைகழுவப் போகும்போது பூனை பின்பகுதியில் நின்று கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் மிரண்டு ஓடத் துவங்கியது. 'பூஸ் பூஸ்' என்று மிகவும் கெஞ்சலான குரலில் கூப்பிட்டுப் பார்த்தேன். அது சன்ஷேடில் குதித்து ஓடிக்கொண்டிருந்தது. 
 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"