நட்சத்திரங்களைப் போல பூமியில் கடல்களும் முடிவற்றவை

நட்சத்திரங்களைப் போல பூமியில் கடல்களும் முடிவற்றவை
லக்ஷ்மி மணிவண்ணன்
அன்பிற்குரிய தமிழ் இலக்கிய சிறுமிகளே ,இளைஞிகளே ,பேரிளம் பெண்களே ,மூதாட்டிகளே ,,
வணக்கம் .உங்களைப் பலவிதங்களிலும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பலவீனப்பட்டு விட்டோம் .எங்கள் சமிக்கைகளை தீவிரமாகத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறீர்கள் .நீங்கள் உங்களுடைய முழு புத்தி சுவாதீனத்தோடுதான் மேற்படி காரியத்தைச் செய்து வருகிறீர்கள் என்பதை உங்களைப் போலவே நாங்களும் அறிகிறோம் .இது வருத்தத்திற்குரியது .
தமிழ் இலக்கியச்சுழலில் சிறுவர்கள் ,இளைஞர்கள் ,ஆண்கள் ,முதியோர் ஆகியோரிடம் எங்களுக்குள்ள உறவைக் காட்டிலும் உங்கள் மீதே எங்களுடைய விருப்பமும் உறவும் அமைந்துள்ளது .இது நாங்கள் எங்கள் சித்தப்படி செய்துகொண்ட ஏற்பாடல்ல.இயற்கையின் சித்தம் அது .அதில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை .இப்படி நாங்கள் சொல்வது ,சமத்துவம் என்று உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு பொருத்தமற்றதாக இருக்கலாம் .அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் .
ஆண்களுக்குச் சமமானவர்கள்தான் நீங்கள் என்பதில் சிறிய சந்தேகமும் எங்களுக்கில்லை .குறிப்பாக உங்களுடைய ஆசிரியர்களைக் காட்டிலும் இதனை உறுதியாக நம்புகிறோம் .நீங்களோ , உங்களுடைய ஆசிரியர்களோ கூட புறக்கணிக்க இயலாத அளவுக்கு எங்களுடைய நம்பிக்கைகள் அடிப்படைகள் சார்ந்தவை .நீங்கள் நம்புகிறீர்களா?ஆண்களைப் போலவே நீங்களும் அனைத்துத் துறைகளிலும் ஸ்தாபிக்க முடியும் .ஆனால் உங்களுடைய தரப்பிலிருந்தும் பொறுக்கிகள் ,திருடர்கள் ,சூதர்கள் ,குடியர்கள் ,குற்றவாளிகள் ,போராளிகள் ,பாலியல் பலாத்க்காரிகள் ,என்றெல்லாம் கருதப்படுகிறவர்கள் சம அளவுக்கு அல்லது அதிலும் அதிக அளவுக்கு அதிகரிக்கும்போதுதான் நீங்கள் சமத்துவம் அடைந்ததாகக் கருதமுடியும்.
நமக்குள் ஒரு பகையும் இல்லை .பகையாகக் கருதப்படுபவற்றில் பெரும்பாலானவை கற்பிதங்கள் . அவற்றில் நீங்கள் உங்கள் தற்கால வசதி வாய்ப்புகளுக்கேற்றவாறு செய்த கொண்ட கற்பிதங்களும் உண்டு .பொதுவாக உண்மைகளை உண்மைகள் என்று நம்பி வதந்திகள் பரப்பப்படுகின்றன . பொய்களை உண்மைகள் என்று ஏற்றுக்கொள்ள இயலாத மனோநிலை கல்வியறிவு பெற்ற மனிதனுக்குப் பழக்கமாகிவிட்டது .நட்சத்திரங்களைப் போலவே பூமியில் கடல்களும் முடிவற்றவை என்று சொன்னால் கற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .
கடற்கரைகள் ,பூங்காக்கள் ,திரையரங்குகள் ,மது விடுதிகள் ,நடன அரங்குகள் ,பயணங்கள் என்றும்,
இன்னும் யூகித்தே அறிய இயலாத பல நிகழ்தகவுகளும் நமக்கு உள்ளன.எங்களுடைய அறைகளில் உங்களை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன .பரிசுப்பொருட்களாகக் கருதப்படாத பரிசுப்பொருட்களுக்கோ பஞ்சமில்லை . நீங்கள் வராதது மட்டுமே குறை . ஏனிந்தப் புறக்கணிப்பு,அவமதிப்பு?ஓரினப்புணர்ச்சியாளர்களின அறைகளைப்போலல்ல,சுயப் புணர்ச்சியாளர்களின் அறைகளைப்போல தன் சுய காலத்தடங்களால் நிறைந்து வருகின்றன அறையின் தரைகள் .உங்களுடைய காலடிச்சுவடு ஒன்று பட்டுவிடுமானால்கூட ,தன் கால்த் தடங்களைத் தூசியைப்போல துப்புரவு செய்து விட முடியும் .
உங்களை பாலியல் பலாத்காரத்திற்கு நேரடியாகவும் ,மறைமுகமாகவும்கூட ,ரகசியமாகவும்கூட உட்படுத்தமாட்டோம் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் .உலகின் மறுகரைக்கும்கூட ஒரு பாலியல் சேதாரமும் உங்களுக்கு நிகழாமல் ,நம்மால் சென்று திரும்ப இயலும் .இது சாத்தியம் என்பதால் இதனை தீர்மானமாகவும் மேற்கொள்ளவும் வேண்டியதில்லை .விரும்பினால் நாம் உறவு கொள்வதையும் யாரும் ஆட்சேபிக்க இயலாது .இவற்றையெல்லாம் விளக்கி முடித்துவிட்டால் ஏதேனும் சுவாரஸ்யம் மிஞ்சுமா ?உங்களுக்கான வெற்றிடங்களை நாங்களும் ,எங்களுக்கான வெற்றிடங்களை நீங்களும் மட்டும் தானே செயல்படுத்த முடியும்!
டால்ஸ்டாயைப் பார்ப்பது போல எங்களைப் பார்க்காதீர்கள் .பெருநகரச் சாலைகளில் நடந்து செல்லும்போது ஓரக்கண்ணால் பார்த்து விட்டுச் சுய உணர்வு மேலோங்க நீங்கள் வேகமாக நடந்து செல்லும்போது எங்களுக்கு தாங்க ஒண்ணா துயரம் மேலோங்குகிறது .எண்ணிப் பாருங்கள் ! அரங்குகளில் நாம் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்கள் ,நாடகங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியு மெனில் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? டால்ஸ்டாயைப் பார்ப்பது போல பார்க்காதீர்கள்.அவனைப் பழைய மனசாட்சியின் தடியன் என்றுதான் எண்ணுகிறோம் .டாஸ்டாவெஸ்கி உணர்ச்சிகளின் கொதிநிலைக் கிடங்கு .நடன அரங்குகளில் மயங்கி கிழே விழுந்துவிடக் கூடியவன் .
ஆனால் எங்களுடைய கால்களோ உங்களுடன் நடனமாடுவதற்காக மட்டுமே சீரமைக்கப்பட்டவை . தயாராக இருப்பவை .நமது பிற உடலுறுப்புகளைப் பற்றித் தற்காலிகமாக மறந்து விடுவோம் .நமது கால்களுக்கு மட்டுமேனும் நடன அரங்குகளுக்குச் செல்லும் வாய்ப்பளிப்போம் .பிற உறப்புகள் ஏதுமற்று தனியே நமது கால்கள் மட்டும் நடனமாடுமெனில் அது ஒரு வசீகரமான காட்சியாக அமையும் .மேலும் அரங்குகளும் முக்கியத்துவமுடையவையாக உருமாறும் .
பரன்ஸ் காப் கா.அவனைப் பற்றிய பேச்சையே துவக்காதீர்கள் .மொழி மூலம் கொலை செய்யமுடியும் என்பதை உலகுக்கு உரத்து அறிவித்தவன் அவன் .உற்றுப்பார்க்கும் கண்களைப் பரிசளித்து வருபவன் .உலகம் முழுவதிலும் அவனுடைய கண்களால் பார்க்கும் ஒரு வாசகர் கூட்டமும் நிரம்பி விட்டது .எங்களுக்கும் அவனுடைய கண்களுக்கும் பெரிய தொடர்பொன்றும் இல்லை .
எங்களை இன்னார் என்று உறுதிப்படுத்திக்கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன .ஏற்கனவே உள்ள தரவுகளைக் கொண்டு எங்களை முற்றுப்புள்ளிக்குக் கரைத்துவிடும் பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன .எங்களை அடையாளப்படுத்திக் கொன்று விடுவதற்கான துரித ஏற்பாடுகள் தொழிற்பட்டு வருகின்றன .அடிப்படையில் பிறரைப் போலவே எங்களாலும் எங்களை அறிய இயலவில்லை .காலமும் ,இயற்கையும் .தொன்மங்களும் புணர்ந்து பிறக்கும் பறவையைப் போல கூடுவிட்டு கூடு பாய்ந்து வருகிறோம் .எங்களுக்கென்று நிரந்தரமான உடல்களும் இல்லை .இதுவும் நம்பிக்கை சார்ந்ததுதான் .எங்களைத் தீர்மானிக்கும் தரவுகளாகக் கருதப்படும் சிகிச்சை முறைகள் , சட்டங்கள் ,ஆகியவை உடலைக் கட்டி இறுக்குகின்றன .எங்களைப் பற்றி பரப்பப்படும் படிமங்களோ , செய்தித்தாள்களில் படிக்கும் குற்றச்செய்தியைப் போல புதுமை நிரம்பியதாகவும் வாசிப்பு சுவாரசியம் மிக்கதாகவும் உள்ளன .பிறரைப் போலவே நாங்களும் அவற்றை வாசித்து வருகிறோம் .
நாங்கள் ஜோசப் ஜேம்ஸும் அல்ல .நீங்கள் வாசிக்கத் தருகிற கவிதை நூல்களை ரெயில் பெட்டிக்கு வெளியே ஒருபோதும் தூக்கி ஏறிய மாட்டோம் .கவிதை நூல் அச்சிடப்படாமல் வெற்றுப்பக்கம் நிரம்பியதாக இருப்பினும் சரி : தூக்கி ஏறிய மாட்டோம்.மேலும் அவை வெற்றுப்பக்கங்களாக இருப்பதே சிறப்பானது .வெற்றுப்பக்கங்களில் மட்டும்தான் எழுதப்படாத கவிதைகள் நிரம்பியிருக்கின்றன .நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் நாம் ஒருங்கிணைந்து எழுதப்படாத கவிதைகளை எழுதுவதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம் .
உங்களுடைய கவிதை நூல்களை வாசித்துவிட்டு பலமுறை உங்கள் வீடுகளின்முன் யாசித்து நின்றிருக்கிறோம்.யேசுவைத் தவிர்த்த ஜமீன்தாரைப் போல நீங்கள் எங்களைத் தவறவிட்டீர்கள்.அப்போதெல்லாம் உங்கள் நள்ளிரவுகளில் ,தீவினைகளின் நடமாட்டமும் , பிசாசுகளின் நடமாட்டமும் உங்கள் வீடுகளைச் சுற்றியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டதுண்டு . பின்னாட்களில் அவற்றைக் கவிதையாகவும்கூட நீங்கள் தீட்டியிருக்கிறீர்கள்.நாங்கள் வேவு பார்த்த அந்த நாட்களில் இருளிலும் வெளிச்சத்திலும் ஒரேயொரு நபரை மீண்டும் மீண்டும் உங்கள் அறைகளில் பார்த்தோம் .அவர் பல்வேறு சமயங்களில் பல்வேறு விதமான உடைகளுடன் பார்க்கக் கூடியவராக இருந்தார் .
நீங்கள் எழுதியுள்ள கவிதைகளிலிருந்தும் ,ஏனைய பிரதிகளிலிருந்தும் அவரை நீங்கள் உயிர்ப்பித்துப் பார்க்க பெருமுயற்சி செய்தீர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை .உங்களுடைய பிரதிகளில் பெரும்பாலானவை அவருக்காக எழுதப்பட்டவை ,இறைஞ்சப்பட்டவை .நீங்கள் சாத்தானாக இருப்பதற்கும்,உங்கள் கணவர்கள் ,காதலர்கள் ,நண்பர்கள் ஆகியோர் கடவுளாகவே இருந்தாகவேண்டும் என்பதற்குமான கட்டளைகளாக உங்களுடைய பிரதிகள் அமைந்தபோது அவர் ஒரு போலியான கடவுளாக உங்கள் அறைக்குள் நுழைந்தார் .
போலியான கடவுளுக்குரிய சகலவிதமான பண்புகளும் அவரிடத்திலே சிறப்புற்றிருந்தன .உங்களைப் பறவையைப் போல கருதி அடைக்கலம் தருபவராக ,பூங்காக்களில் உங்கள் தலையைக் மடியில் சாய்த்துக் கோதுபவராக ,தோள்சாய்த்துக் கொள்பவராக அவர் காட்சியளித்தார் .
கடவுளாக இருந்து சாத்தானாக திரிபடைந்தவர்களையும் ,சாத்தானாக இருந்து கடவுளாக சிதைவுற்றவர்களையும்; உங்களது பிரதி அந்தரங்கமாக வெளியேற்றியபோது உங்களுடைய போலியான கடவுள் புன்னகைத்தார் .போலியான கடவுளின் புன்னகை பொருட்படுத்த தக்கதல்ல . ஆனால் அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாய் இருப்பதுபோலவும் ,உன்னதமானது அவருடனான உறவு என்பதைபோலவும் ,ரகசியதிசைகளைப் பார்த்தபடி நீங்கள் அடிக்கும் லூட்டிகள் எங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகின்றன .
நிராதரவான நிலையில் கடவுளுக்கும் சாத்தானுக்குமிடையே இறுகக் கட்டப்பட்டுள்ள நூலிலையில் தொங்கியபடி உங்கள் கவிதை நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் .அவற்றின் இடைவெளிகளில் எவருக்கேனும் எழுதப்பட்டு .விடுபட்டுப் போன சமிக்ஞைகள் எங்களை வந்தடையக் கூடுமென .ஆனால் பரிதாபம் ,அப்படி எதுவுமே வந்தடைவதில்லை .எங்கள் உடல் கடந்து தாவுகின்றன அவை .தாவியவைபோக பிறவற்றில் உங்கள் கணவர்களது பாலியல் பலாத்காரம் பற்றியும் ,உறவுக்கு பின்னர் அவர்கள் முத்தமிடாதது பற்றியும் ,வயோதிகர்கள் வரை உங்களைப் பெண்ணாகவே பார்க்கிறார்கள் எனபது பற்றியும் புகார்களைத் தெரிவிக்கிறீர்கள் .இந்தப் புகார்களைத்தான் கவிதை என்று நீங்கள் கருதுகிறீர்கள்போல தோன்றுகிறது .
நல்லது .நீங்கள் பெண்ணாகவும் ஆணாகவும் இல்லாத இடத்திற்கு நகர்ந்து வருவீர்கள் எனில் நாங்கள் அங்கே அமர்ந்திருப்பதை உணர்வீர்கள் .அங்கெ நிலா முற்றமுண்டு ,கேளிக்கை விருந்துண்டு . சதியாலோசனைகள் ,தானிய முளைகள் ,மேஜையல்லாத அழகிய மேஜை விரிப்புகள் ,உருவத்தை காட்டுகிற மற்றும் உருவமற்றதைக் காட்டுகிற கண்ணாடிகள் ,களப சந்தன வாசனைகள் ,சடங்குகள் , பல கடவுளர்களுக்கான பிரார்த்தனைகள் ,எதிர்ப்புகள் ,கேலிப்பேச்சுக்கள் ,வேடிக்கைகள் , விதண்டாவாதங்கள் எல்லாமுண்டு .
ஏகதேசமாக அது கெஸ்டா பெர்லிங்கின் விருந்து மாளிகையை ஒத்தது .மத குருமார்களுக்கு சிறப்பான சாராயமும் கள்ளும் நிரப்பப்பட்டுள்ள பீப்பாய்கள் உள்ளன .அழகுக்காக கடல்ப்பன்றிகள் பலவற்றை அவ்விடத்திலே ஓடவிட்டிருக்கிறோம் .
மகளிர் காவல்நிலையங்களில் தருவதற்கான தயார்நிலைப் புகார்களாக எழுதப்பட்ட கவிதைகளால் மூடப்பட்ட உங்கள் கணவன்மார்களும் ,பிற ஆண்களும் விருந்தினர்களாக வந்து செல்கிறார்கள் . என்றாலும் முழுமனதுடன் விருந்தினை அவர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை .உங்கள் கவிதைகள் பற்றி வெளிப்படையாகப் பேச அவர்கள் துணியவுமில்லை .அதுபற்றிக் கவலைப்பட ஏதுமில்லை .நீங்கள் வராமல் இவ்விடம் பூர்த்தியாகப் போவதில்லை நட்ச்சத்திரங்களை எண்ணியபடி நள்ளிரவில் தேநீர் கடைகளின் அருகில் நீங்கள் வருவீர்களென காத்திருப்போம் .அவை வெறும் கனவுகளாகி விட்டன .
ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வீடுகளைத் தலையால் நெம்பித் தூக்கியபடி இரண்டு கரங்களில் அறைகளை தொங்கவிட்ட வண்ணம் நள்ளிரவு வராதவண்ணம் உங்கள் பயணங்கள் பாதுகாப்பாக நிகழ்கின்றன .ஏற்கனவே இல்லாத,உருப்பெறாத வீடுகளில் தூங்கும் நாங்களும் பயணிக்கிறோம் . உருப்பெறாத வீடுகள் உங்களுக்கு அச்சமேற்படுத்துகின்றன .எங்கள் வருகையை உங்கள் வீடுகளில் கம்பளிப்பூச்சிகளென அருவெறுப்புடன் உணர்கிறீர்கள் .பளிங்குத் தரையில் கம்பளிப்பூச்சிகளை வளர்த்து சிறப்பானதாக வானில் பறக்க விடுவது மகிழ்ச்சி தராமல் போய்விடுமா என்ன?
போலிக்கடவுளின் சதித்திட்டம் புரிந்தும் நீங்கள் மேற்கொள்ளும் ரகசியங்களில் எவ்வளவு விதவிதமான லயம் அதிகரித்து வருகிறது?வீடுகளைத் தூக்கியபடி திரள்கிறீர்கள்.உங்களைப்போலவே வீடுகளைக் கால்களுக்குள் புதைத்தபடி நடக்கிற புலவர்கள் , கவிஞர்கள் ,முதியோர்கள் ஆகியோரைப் பார்த்து அரங்குகளில் ஊளையிடுகிறீர்கள் .பரிகசிக்கிறீர்கள் .மேற்கொள்ளவேண்டிய சவால்களைப் புறக்கணிப்பு செய்கிற தந்திரமல்லவா இது? நீங்கள் எங்களை எதிர்கொள்வதை விடுத்து கிழவர்களிடம் மோதி தஞ்சமடைவது ஏன் ? அலங்காரமானதும் , அருவருப்புண்டாக்குவதுமான இடம் எவ்வளவு நன்மை தரக்கூடியது ?ஏன் இவற்றை நீங்கள் புரிந்து கொள்வதில்லை ?
தொலைபேசி மணி அழைப்புகள் அடைத்துக் கொள்ளும்போது சாத்தான் எங்களுடைய ஆண்கால்த்தடம் நிரம்பிய அறைகளுக்குள் நுழைகிறார் .
சாத்தானே...! " புளித்துப் போன தயிர் சாதம் சாப்பிடுவீர்களா ? எங்களுடைய ஒயின் கிண்ணங்கள் கவிழ்த்தி வைக்கப்பட்டுள்ளன .சாத்தானே ...! மதுவருந்துவதை எங்கள் அறைகளில் தவிர்க்கச் செய்து காப்பாற்றும் .காலத்தின் இயற்கையின் தொன்மத்தின் மரங்களிலிருந்து நீர் எங்கள் உடலுக்குள் பாய்ச்சும் மது எங்களுடைய ரெத்தத்தை வற்றச் செய்கிறது .வரலாற்றின் அந்தரங்கக் குகைகளிலிருந்து நீண்டு சபிக்கப்பட்ட உடலாக நாங்கள் இவ்வறைகளில் படுத்துத் துயில்கிறோம் நீரும் நிழலாகப் படுத்துத் துயில்கிறீர் .
மதுவால் எங்கள் துயர் கழுவும் நீர் ,துயரத்தை விடமுடியாத கசப்பையும் தருகிறீர் .போதும் சாத்தானே ..."
இப்படியாக அமைகின்றன எங்களுடைய அன்றாடப் பிரார்த்தனைகள் ,எங்களுடைய அறைகளில் பலவண்ண மலர்கள் மலரவும் ,வண்டுகள் ரீங்கரிக்கவும் நீரே வகை செய்யவேண்டும் . அப்போதுதான் நீரும் மகிழ்ச்சியடைய முடியும் .துர்சொப்பனங்களில் நாங்கள் துடித்து எழும்போது நீர் உடனிருக்க மறுப்பது நியாயம் அல்ல .இவை தனிமை நிறைந்த எங்களுடைய வேண்டுகோள்கள் .
தமிழ் இலக்கியச் சிறுமிகளே ,இளைஞிகளே ,பேரிளம் பெண்களே ,மூதாட்டிகளே ,,
இத்தகைய தொடர்பு முயற்சிகளும் ,வேண்டுகோள்களும் நீங்கள் செவிமடுத்துக் கருதவேண்டியவை . உங்கள் உதாசீனம் மூலமாய் இத்தகைய முறையீடுகள் பல்வேறு நபர்களால் காலத்தில் தொடர்வது இயற்கைக்கு நல்லதன்று .உங்கள் உடலுக்குள்ளிருந்து எழும் தடித்த கொப்பளங்கள் எங்கள் உடலை வெண்பருத்தியாய் வெடிக்கச் செய்கின்றன .அவற்றைப் பல்லிகளைப்போல சுவரில் ஊரும்படி மின்விசிறி சுழலும் அறைகளில் விடுவது நல்ல சகுனமல்ல .
பிரயாணங்களும் ,நடனங்களும் இணைந்து நடைபெறட்டும் .பொதுவிடுதிகள் ,அவற்றின் கழிப்பறைகள் எதுவும் நமக்கானவை அல்ல.பொதுவற்ற விருந்துகளில் நமது வெற்றிடங்கள் படரவேண்டும் .பொதுவெளி மொழியில் வெற்றிடங்களை கவிதையாக்க இயலாது .இதுஒரு கடைசி எச்சரிக்கையாகவும் ,பிரார்த்தனையாகவும் ,வேண்டுகோளாகவும் அமையவேண்டும் .அறுக்கப்பட்ட இதயங்களின் குருதி மையாலும் ,சாத்தானின் தோட்டத்து மலர்களில் பெருகும் தேன் துளிகளாலும் இரண்டு நகல்களாக இவற்றை எழுதி உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம் .கடவுளின் தரிசான தோட்டத்தில் மழை பெய்யவும் ,வாழை மரங்களைப் பயிர் செய்யவும் ,நவ தானியங்களை பயிரிடவுமான அழைப்புச் செய்தியாகவும் இது அமையட்டும் .
இப்படிக்கு ,
எப்போதும் அன்புமயமானவராகவே இருக்க விரும்பும்
சாத்தானின் செய்தித் தொடர்பாளர்
( ஜூன் -2005 மீள் சிறகு சிற்றிதழில் வெளிவந்தது )
painting - karthik mega

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"