"ஏய் முற்போக்கிகளே ! உங்களுக்கும் கருத்துரிமைக்கும் என்ன சம்பந்தம்?

"ஏய் முற்போக்கிகளே ! உங்களுக்கும் கருத்துரிமைக்கும் என்ன சம்பந்தம்?

கிறிஸ்துதாஸ் காந்திக்கு தமிழ்நாட்டு முற்போக்கிகள்  ஆதரவு  திரட்டிய கூட்டறிக்கையில் கையொப்பம் கேட்டு இரண்டு முற்போக்கிகள் என்னை அணுகினர்.எனக்கு விளங்கவில்லை . சதா எங்களை போன்றோரைக் கரித்துக் கொட்டிவிட்டு ,சகலவிதமான தாக்குதல்களிலும் ஈடுபட்டவாறே  இதுபோன்ற நற்தருணங்களில் எந்த அடிப்படையில்  வருகிறார்கள் ? மரண தண்டனை விவகாரம் ,அணுமின்நிலைய விவகாரங்கள் எனில் கூட பரவாயில்லை. பொதுவில் உளறுகிற ஒருவருக்கு இவர்கள் ஏன் ஜாமீன் கோருகிறார்கள்? பொதுவில் இப்படி உளறுகிற அத்தனை பயல்களையும் காபந்து செய்வதில் இந்த கும்பலர்களுக்கு ஏன் இவ்வளவு தன் முனைப்பு ?  பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிற அத்தனை பேருக்கும் ஜாமீன் கோருவது அவர்களுக்கு தொழிலாக இருக்கலாம். ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எனக்கு இவ்விஷயத்தில் என்ன இருக்கிறது ? ஒருவருக்கு பதிலளிக்கவில்லை.மற்றொருவரிடம் மறுத்து விட்டேன்.

இப்போது அந்த கூட்டறிக்கையில் ஏராளமானோர் கையொப்பமிட்டிருப்பதை பார்த்தேன்.முதலில் தமிழ்நாட்டில் இயங்குகிற  இந்த முற்போக்கிகள் பேரில் எனக்கு சிறிய நம்பிக்கை கூட இல்லை.தமிழ்நாட்டில் கும்பல் கலாச்சாரத்தை ஏற்படுத்தி தன்னிச்சையாக இயங்குகிற எழுத்தாளர்கள்,கவிகள் எல்லோரையும் தொடர்ந்து தாக்கி வருபவர்கள் இந்த முற்போக்கிகள் தான் . பொதுமக்கள் தினம்தோறும் எழுதுகிறவனிடத்தில் வம்பிற்கெல்லாம் வருவதில்லை. நீங்கள்தான் அன்றாடம் பிற கருத்துக்களோடு மோதி அழிக்க நினைப்பவர்கள்.எதிர்தரப்புகள் அத்தனையோடும் மோதியழிக்க முயலும் இந்த முற்போக்கிகள் கருத்துரிமை ஜவான்கள் போன்று அவ்வப்போது அவதாரம் எடுக்கவே இது போன்ற சந்தர்ப்பங்கள் உதவுகின்றன.

பொதுமக்கள் விஷயத்தில் தலையிட்டு பொது விவாதத்தில் ராமனை செருப்பால் அடிக்கலாம் ,அது எனது கருத்துரிமை என்று ஒருவர்   கொள்வாரேயானால் அதற்கு பொதுமக்களிடம் இருந்து வருகிற எதிர்வினைகளை சேர்த்து எதிர்கொள்வதுதானே நியாயம்? ராமன் பொதுமக்களின் புனித உருவம் .இவர் ராமனை பேசியதால் என்றில்லை.ஏசுவையோ,அல்லாவையோ யாரை வேண்டுமானாலும் இப்படி பேசியிருந்தாலும் இதனைக் காட்டிலும் அதிகப்படியான விளைவுகளையே சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.

பெரியார் பேசினார் என்றால் அதற்கு பொதுமக்களிடம் இருந்து  வந்த எதிர்வினைகளையும் சேர்த்துதான் அவர் எதிர்கொண்டார்  . பெரியார்  முதல் செருப்பை மக்கள்  மீது தூக்கி வீச ; மக்கள் இரண்டாவது செருப்பை இவர்  மீது கொண்டடித்தார்கள்.பொதுமக்களைச் சீண்டுவதும் ,அதற்கு வருகிற எதிர்வினைகளின்  போது ; இந்த முற்போக்கிகள் கருத்துரிமை என்று கத்துவதும் வேடிக்கையானவை.

பொதுமக்கள் என்பது பெரிய தளம்.அந்த தளத்தில் கல்விட்டு எறிந்து விட்டு இனிப்பு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பார்கள் போல.முரட்டுத்தனமாக பேசாதீர்கள் என்று நான் சொல்லவில்லை.பேசினால் அதற்குரிய விளைவுகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.முரட்டுத்தனமாக நீங்கள் பேசியமர்ந்தவுடன் பொதுமக்கள் உடனடியாக வந்து இனிப்பு வழங்கி தேசியகீதம் பாடவேண்டுமென எதிர்பார்க்காதீர்கள்.

இந்த முற்போக்கிகளிடம் நானொரு கேள்வியை முன்வைப்பேன் எனில் "ஏய் முற்போக்கிகளே ! சதா எழுத்தையும்,கவிதைகளையும் கண்டு அஞ்சி, கம்பனியில் இல்லாத  எல்லாவிதமான   தனித்த எழுத்தாளர்களையும் , கவிகளையும் பல்வேறு வழிகளில் தாக்கிக் கொண்டே இருக்கும் உங்களுக்கும் கருத்துரிமைக்கும் அப்படி என்ன சம்பந்தம்? எதற்காக தொடர்ந்து குமுறுகிறீர்கள் இரட்டை வாழ்க்கை கொண்டவர்களே ?

Comments

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்