சாகித்ய அகாதமி சர்ச்சைகள் - லக்ஷ்மி மணிவண்ணன்

சாகித்ய அகாதமி சர்ச்சைகள்
ஒருபோதும் தீராத சர்ச்சைகளை தொடர்வதில் சாகித்ய அகாதமி முதலிடத்தைப் பெற்றுவிடும் என்றே தோன்றுகிறது.
தான் வாழும் காலத்தில் சாகித்ய அகாதமி சர்ச்சைகளில் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அந்த அமைப்பின் மீது அவர் இரண்டு பராதுகளை மிகக் கடுமையாக முன்வைத்தார். ஒன்று, சாகித்ய அகாதமியின் விருதுகள் வழங்கப்படும் பின்னணியின் வெளிப்படைத் தன்மை குறித்தது; மற்றொன்று, இரண்டாம் தரமான எழுத்தாளர்களுக்கேனும் உரிய முறையில் அவ்விருது சென்றடைய வேண்டும் என்கிற அக்கறை குறித்தது. மோசமான படைப்புகளை விருதுகள் சென்றடைவது, இந்திய மற்றும் உலக அரங்கில் தமிழுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.
படைப்பில் மோசம் என்பது அதன் தன்மை மற்றும் தீவிரம் சார்ந்ததேயன்றி ஒருபோதும் நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அதன் வெளிப்படைத்தன்மை திறந்திருக்க வேண்டும் என்கிற சுந்தர ராமசாமியின் கவலை சிறப்பிற்குரியதாகும். இன்றைய தேதி வரையில் அது திறக்கப்படவும் இல்லை. ஒரு மோசமான படைப்பைத் தேர்ந்தெடுக்கும் பின்னணி வெளிப்படையாகத் தெரியும் பட்சத்தில் தேர்ந்தெடுப்பவர்களின் முக, அக லெட்சணங்களையும் சேர்த்து நாம் கண்டுணர்ந்துவிட முடியும். முன்றாம் தரமான எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி விருதுகளும் பரிசுகளும் சென்றடையும் போது, தமிழ்நாட்டில் படைப்பாளிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவது ஒரு மரபு போலாகி வருகிறது. அவை குண மதிப்பில் சீர்கேடு அடைவதும் அப்போதுதான். இரண்டாம் தரமானவர்கள் அங்கீகாரம் பெறும்போது பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்படுவதில்லை. முதல் தரமானவர்களை ஒருபோதும் இவை நெருங்குவதே இல்லை. முதல் தரமானவர்கள் பேரில் இத்தகைய அமைப்புகள் கொண்டுள்ள அச்சம் நிரந்தரமானதாக உள்ளது.
பொதுவாகவே நோபல் பரிசு உட்பட .உலகளாவிய பல பரிசுகளும்கூட இன்று சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயைக் காட்டிலும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், இந்தியா முழுவதிலுமுள்ள பிராந்திய மொழிகளில் இரண்டு தலை முறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே பரிசுகளை, விருதுகளை, அங்கீகாரங்களைப் பெறுவது மட்டும்தான் ஒரு கவிஞனுக்குரிய, எழுத்தாளனுக்குரிய தகுதிச் சான்றிதழ் என்று கருதுவதற்கில்லை. சார்த்தர் நோபல் பரிசையே நிராகரித்தார்.
இவையெல்லாம் ஒருபுறம் எப்போதுமே இருப்பவை என்றாலும்கூட, தற்போது சாகித்ய அகாதமி போன்ற நிறுவனங்கள் அடைந்திருப்பது சீரழிவுகளின் உச்சநிலை. அதில் அவை வெகுவேகமாய் வேறு இருக்கின்றன. இவற்றிற்கு வெகு அப்பால் இருப்பவர்களுக்கு மட்டுமே இவை புனிதம் பூசப்பட்ட தனது தோலை மினுமினுக்கி காட்டமுடியும். மற்றபடி உள் இறைச்சி அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கிவிட்டது .
பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றை எவ்விதத் தகுதியுமின்றி பெற விளைபவர்களின் - கல்குவாரி, மணல் குவாரி மனோபாவத்துடன் அணுகுபவர்களின் - எண்ணிக்கை சமூகம், அரசியல், பண்பாடு என எல்லா தளங்களிலும் வேகம் பிடிக்கிறது.
பலகீனமான எழுத்தாளர்கள் இவ்வகைப் பரிசுகளைப் பெற்றே தீருவது என்பதில் லட்சிய உறுதி கொண்டிருக்கிறார்கள். இவற்றிக்காக அவர்கள் வாழ்நாள் முழுதும் பின்தொடரவும் உழைக்கவும் மரணிக்கவும் தயார். அதனால்தான் இப்போது மூன்றாம் தர எழுத்தாளனையும் கடந்து இவை சிலசமயங்களில் வழிப்போக்கர்களின் கரங்களையும் சென்றடைகின்றன. கலை இலக்கியத்திற்குத் தொடர்பற்றவர்களுக்கு, குறைந்தபட்ச வைராக்கியத்தையும் இழந்து விருதுகள், அங்கீகாரங்கள் போய்ச் சேருகின்றன. பொதுவாகவே எழுத்தாளர்களைக் காட்டிலும் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர்களே இந்த அமைப்புகளை அணுகுவதில் திறமை கொண்டிருகிறார்கள். பெறுமதிகளை அவர்கள் பெற்ற பிறகு சிலசமயம் படைப்பாளிகள், கலைஞர்கள் மீது கழிவிரக்கம் காட்டி, உங்களை இந்த அமைப்புகளிடம் அறிமுகப்படுத்தட்டுமா? எனக் கேட்கிறார்கள்! விஷயங்கள் அந்த நிலைக்கு உறங்குகின்றன.
சுந்தர ராமசாமி போன்றவர்கள் இவ்வகை அமைப்புகளின்மீது தாக்கத்தை ஏற்படுத்தி மேம்படுத்தி விடமுடியும் என நம்பியவர்கள். இன்றைய நிலவரமோ நம்புவதற்கும் வாய்ப்பற்ற தொலைவுக்கு சென்று கொண்டிருக்கிறது. அவசர சிகிச்சை பிரிவில் இருக்குமானால்கூட முயற்சி எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. சவக் கூடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு காவல் காத்து என்ன செய்ய? இன்று கல்வியாளர்கள் தொடங்கி, சாதியவாதிகள் வரையில் உள்ளே சென்றமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களிடம் உள்ள அதிகாரத்தை சாதியவாதிகளுக்குக் கடத்துபவர்கள் கல்வியாளர்கள்தாம் என்பதில் சந்தேகமே வேண்டாம். சொந்த சாதி நலன்களுக்காக மட்டுமே உழைப்பவர்களையும், தன் சாதியில் பிறந்தவர்கள் என்கிற காரணத்திற்காக மட்டுமே பெருமக்களை குறியீடாக்கிக் கொண்டாடுபவர்களையும் சாதியவாதிகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். இவ்வமைப்புகளில் திருமண வேலைகளெல்லாம் பட்டாசு, வெடிச்சத்தம், வானவேடிக்கை என்று அமர்க்களம்தான். மணமக்கள்தான் கிடையாது. நமது அமைப்புகள் உள்ளடக்க குறைபாடுகளால் நிரப்பபட்டவை. அதுபற்றி யாருக்கும் ஒருகுறையும் இல்லை. குறைகூறி தூரத்திலேனும் தென்படும் வாய்ப்புகளை ஏன் இழக்க வேண்டும்?
நம்முடைய ஜனநாயகத்தன்மை என்பது அளவற்ற சாதுர்யமும் மோசடியும் நிறைந்தது. இவற்றில் விலகி இவற்றைக் காப்பாற்றியே தீரவேண்டும் என்று எவரேனும் விரும்புவார்களேயானால் கலை இலக்கியத்தில் தொடர்புடையவர்களின் திசைவழியை நோக்கி முதலில் இவ்வமைப்புகள் திரும்ப வகை செய்யவேண்டும். தயவு தாட்ஷணியம் ஏதுமின்றி தனி நபர்களிடம் முடங்காமல் அடிப்படையான ஜனநாயகப் பண்புகளை பேண நிர்பந்திக்க வேண்டும். சமகால கலைஇலக்கியத் தொடர்பற்ற கல்வியாளர்களின் கரங்களிலோ, தனி நபர்களின் அதிகாரத்திலோ இவற்றை வீழ்த்தக்கூடாது. தனிப்பட்ட நபர்களின் கரங்களில் இவை ஒப்படைக்கப்படும்போது, இவை குடும்பத்தன்மை அடைவதையும் சாதியப்பண்பு மெருகேறுவதையும் தவிர்க்கவே இயலாது.
சாகித்ய அகாதமி என்றில்லை, அவற்றுக்கு ஆள் தேர்வு செய்து அனுப்பும் முற்போக்கு அமைப்புகளும் அரை நூற்றாண்டு காலமாக தகுதியற்றவர்களின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றன. முற்போக்கிகள் மாவட்ட ரீதியாக பண்பாட்டு அமைப்புகளின் பொறுப்பாளிகள் பட்டியலை ஒப்படைக்கத் தயார் எனில் கசப்பு நிரம்பிய உண்மை விளங்கிவிடும். தமிழ்நாட்டில் பலகாலமாக கட்சிக்காரர்கள், தொழிற்சங்கவாதிகள் படைப்பாளிகளைக் கடுமையாக ஒடுக்கி வருகிறார்கள். உண்மைகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் குறியாய், கைப்பற்றி வைத்திருப்பவர்கள் அரண் காக்கிறார்கள். தமிழ்நாட்டில் படைப்பாளிகளை ஒடுக்குவதை இங்கே முறைப்படுத்தி வைத்திருப்பவர்கள் முற்போக்கிகள்தான். உண்மைகளைக் கூறத் துணியும் படைப்பாளிகளை சூத்திரங்களாலும் முத்திரைகளாலும் கூடித் தாக்க பெரும் கோஷ்டியே தயார் நிலையில் இருக்கிறது. பொதுச் சூழ்நிலை அறிந்த அல்லது பொதுச் சூழ்நிலையோடு சிறிது உறவேனும் கொண்டிருந்த தொ.மு .சி. ரகுநாதன், தி.க.சி. போன்ற முன்னோர்களின் தகுதி பெற்றவர்கள்கூட இன்று பதவிகளில் இல்லை. அதனால்தான் பேசுகிற படைப்பாளிகளிடம் இவ்வமைப்புகள் பேரச்சம் கொள்கின்றன. உலகெங்கும் இல்லாத அவலநிலை இது. அவல நிலை என்று உணரப்படாத அவல நிலையும்கூட. எப்போதேனும் இவர்கள் கரிசனத்தில் இவர்களது அரங்குகளில் உரையாற்றும்போது தர்ம சங்கடமாய் இருப்பதற்கு, சமகால கலை இலக்கியத்தோடு இவர்கள் தொடர்பற்றுத் தனித் தீவில் வசிப்பதுதான் காரணம்.
ஊழல் என்பது இன்று அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. அது பண்பாட்டு நிறுவனங்கள் வரை ஊடுருவி இருக்கிறது. ஆய்வுகளை விற்கும் கல்வியாளர்கள், சம்பள அடிப்படை மதிப்புரையாளர்கள் எல்லோருமே கூட்டாளிகள். செம்மொழி பயில்வான்கள் எல்லோரையும் மிஞ்சிவிடக் கூடியவர்கள். கல்வியாளர்கள் எல்லாவற்றிலும் சம்பந்தப்படுகிறார்கள். நாம் வாழும் காலத்தின் அறச் சீர்கேடு கல்வியாளர்களோடும் தொடர்புடையது. கேரளத்தில் இளங்கலைக்குச் செல்லும் ஒரு மாணவன் நவீன இலக்கியத்தில் இரண்டு பாடங்களில் கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றாக வேண்டும். நமது செம்மொழி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையே தாண்டவில்லை. நவீன இலக்கியம், கலை, அறிவு ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு அங்கே அனுமதி இல்லை.
தமிழ் நாட்டில் கண்ணுக்கெட்டிய காலம் தொடங்கி சொற்பொழிவாளர்களைத்தான் வெகு மக்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் பிரசங்கிகள் இல்லை என்பது பொது மக்களிடம் தெளிய இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் செலவாகும் போலிருக்கிறது.
பிரசங்கிகளைப் பற்றி குறைபட ஏதும் இல்லை. அவர்கள் எழுத்தாளர்களாகும் தன்முனைப்பைத்தான் விளங்க முடியவில்லை? ஏன் அவர்கள் ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ தன்முனைப்பு கொள்வதில்லை? தமிழில் விலை மலிந்த தரப்பில் அவர்களுக்கு ஏன் இந்த ஆர்வம்?
தமிழ்நாட்டில் நவீன கவிதைகள் பேரில் கவனம் உருவாகியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் சாகித்ய அகாதமி நவீன கவிஞர்களுக்கு விருது வழங்க முன்வருவதன் மூலமாக அது தரவிட்டிருக்கும் சமகாலத் தன்மையை மீட்க முடியும்.தமிழில் நவீன கவிதைகள் உலகத் தரத்திற்கு குன்றாதவை.
[ ஓராண்டிற்கு முன்னர் தமிழ் இந்துவில் வெளிவந்த கட்டுரை ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"