அம்பலம் - சிறுகதை

அம்பலம் 
நாலு தூணு, ஒரு ஓட்டுக் கூர, ஒரு திண்ண, பக்க்த்தில் ஒரு இளவட்டக் கல்லு, ஒரு வேம்பு, பயக்க கார் வைக்கிற இடுப்பளவுள்ள பட்ட பூவரசு இப்படியாட்டு உள்ள அம்பலம் ஊருக்கு புறத்த இருந்து. அம்பலம் நிறைய சோகங்கள சந்திச்சிருக்கு. சந்தோசங்களையும் சந்திச்சிருக்கு. சோகமோ சந்தோசமோ எதுக்குமே அப்பல்லாம் அம்பலம் அசைஞ்சதில்லை. அப்படியொரு கம்பீரம் அம்பலத்துக்கு. சிலநேரம் பாத்தா அம்பலம் எனக்கு எங்க பாட்டா வைத்திலிங்க நாடார் ஈஸிசேர்ல படுத்திருக்கதுபோல இருக்கும். அவரும் அம்பலத்தப்போல சாவுயதுவர சடஞ்சதே இல்லை. 
ஏக்கியம்மங் கோயில்ல பாட்டா வந்து நின்னார்னா ஆராசன வந்த சொள்ளமாடனுக்கு தொட நடுங்கும். ஏக்கியம்மனா இருக்கட்டு, பலவேசக்காரனாவட்டு, சொள்ளமாடனாவட்டு, நீலனாவட்டு எல்லா சாமியும் ஆராசனவந்து முதக்குறி இல்லன்னா ரெண்டாங்குறி எங்கப் பாட்டாவுக்குத்தான். அப்படியொரு கம்பீரம் அவர்ட்ட இருந்து. சொள்ளமாடனுக்குச் சல்லடம் பூட்டச்சில எங்க பாட்டா ஒத்தையில சொள்ளமாடன தூக்கிப் பிடிச்சுக்கிடுவாரு. சொள்ளமாடன் பந்தத்த வாங்கிற்று தரமாட்டேன்னு ஒத்தக்கால்ல நிக்கச்சில ஆங்காணுங்காணுங்னு சொல்லி ‍எங்க பாட்டையாதான் சொள்ளமாடான்கிட்டே இருந்து பந்தத்த புடுங்கி எடுப்பாரு. வடலி பனிபோல கம்பீரமா எங்கபாட்டா ஏக்கியம்மங்கோயிலுக்க சுத்திவரச்சில அதிசயமா இருக்கும். வில்லுப்பாட்டுக் கேக்கச்சில மட்டும் நீலஞ்செலக்கிப் புறத்த சுவருல சாஞ்சி இருந்துக்குடுவாரு. பாட்டுக் கேக்கியதில அவருக்குள்ள ஈடுபாடு இப்ப எனக்கு சினிமா பாக்கியதிலகூட இல்ல. வெத்தலக்கி சுண்ணாம்பு தடவிக்கிட்டே வெள்ளயனக் கூப்பிட்டு, லேய் வெள்ளையா, பூச குடுக்கியதுக்கு நேரமிருக்கு. அவசரப்படாம மெள்ள பாடச் சொல்லுன்னு பாட்டுக்காரிக்கிட்ட சொல்லிவுடச்சில அவருக்கு வாக்க பாட்டுக்காரிக்கிட்ட சொல்லிவுடச்சில அவருக்கு வாக்ககோரப் பாக்குக்குக்கூட நமட்டுச் சிரிப்பும் ஒதுங்கிக் கிடக்கும். எங்க பாட்டா அசைஞ்சி நான் பார்த்ததில்லை. 
எங்க மாமி சாவச்சில எனக்கு பதினொரு வயசு. மாமிக்கு என்னைய எப்படியில்லாமோ பிடிக்கும். பத்து வயசுவர என்னைய இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டு கொண்டு திரிவா. கொல்லாம்பளத்த நறுக்கிப் போட்டு உப்பு போட்டுத் தருவா. பயினில செட்டியோட்டு மாங்கா அரிஞ்சு போட்டுத் தருவா. சின்ன அண்டி மாங்காயில அண்டியப்பிதுக்கி வெளிய தள்ளிற்று முளவு, உப்பெல்லாம் வச்சி கெட்டி வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொல்லாமாவுல ஏறி தொங்கவிடச்சிலயும், புறவு எடுக்கச்சிலயும் என்னைய கையோட கூட்டிக்கிட்டே போவா. புட்டவிக்கச்சில எனக்கு மூணு நாலு பிடி மாவு போடாட்டா அவளுக்குக் காலையில காப்பி போட்ட மாதிரியே இருக்காது. தவுனு வெட்டச்சில கஞ்சி தவுன அவ தின்னுற்று நல்ல தவுனு பாத்து எனக்குத் தருவா. இப்பவும் தவுனு திங்க ஆசைதான். கஞ்சித் தவுனாவது. ஆனா மாமியுமில்ல தவுனுமில்ல. பனையெல்லாம் தறிச்சி எப்படியெப்படியோ ஆகிப்போச்சி. மாமி தூக்குப்போட்டுச் சாவச்சில கிழவி அலர்னா. நான் அந்தாலயும் இந்தாலயுமா நிரந்தரமா திரிஞ்சிகிட்டேயிருந்ததா ஞாபகம். வீடு தறிச்சுப்போட்ட பன மாதிரி கிடந்து. பாட்டா மட்டுந்தாங் அப்பம் அசையயேயில. கண்ணெ எங்கையோ வச்சிக்கிட்டு தேருகெட்டுயதுலயும் குழி வெட்டியதுக்கு ஆள் உடியதுலயும், அம்மங்கோயில் பெட்மாஸ் லைட்ட எடுத்து வக்கியதிலுமா நின்னாரு. அதெல்லாம் முடிஞ்சி போச்சி. அப்புறம் கன்னிக்கு வைக்கச்சில திரும்பயும் பாட்டா தொலைவுல பாத்திற்கு பேசாம ஈஸிசேர்ல கிடப்பாரு. 
பாட்டா சாவச்சில எனக்கு பதினெட்டு வயசு. அம்பலத்தில் உட்கார்ந்து சின்னாடாங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கச்சில நெஞ்சு வலிக்கின்னு சொல்லி பத்து நிமிஷத்துக்குள்ள செத்துப் போயிற்றாரு. நான் தெங்கம்புதூர்ல நிக்கச்சிலயாக்கும் கணேசன் லேய் இப்படியாக்கும் அம்பலத்தில வச்சி இப்படியாகிப் போச்சின்னான். எனக்கு எங்க பாட்டா செத்துப்போவார்னே தெரியல்ல. அவரு சின்ன வயசில லேய் பயல ஆரும் அடிச்சேங் வாங்கினேன்னு வரப்புடாதுன்னு எனக்காகச் சொல்லச்சில எவ்வளவு தெம்பா இருக்கும் எனக்கு. அவரு சாகக்கூடாதுன்னெல்லாம் நான் நெனச்சிகிட்டதல்ல. ஏன்னா அவரு செத்துப்போயிருவார்னே எனக்குத் தோணல்ல. சைக்கிள தெங்கம்புதூர்ல போட்டுற்று ஓடியே வந்தேன் வீட்டுக்கு. கொட்டுமேளம் திரும்பவும் பச்சைத்தென்ன ஓலை, பெட்மாஸ் லைட் எல்லாம் வீட்டு முத்தத்தில் இருந்து. எங்க சித்தப்பாக் கல்யாணத்துக்கு வந்தக் கூட்டத்தவிட எங்க பாட்டா சாவுக்கு கூட்டம் வந்து. பாட்டா சொன்ன கதை ஒண்ணு எதனாலோ இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகம் வருவு. 
ஒருசமயம் ஊருணிப் பத்துக்க ராத்திரி நின்னு தண்ணி பாச்சிக்கிட்டு நிக்கேன். என்னதோ அண்ணக்கி சரியாயில்ல. அண்ணைக்கு வீட்லருந்து கிளம்பச்சிலயே தடவேற அடிச்சிருந்து. என்னவோ சரியில்லாம நடக்குயதுபோல இருக்கு. ஒங்க மாமி சாவச்சலயுங் இப்படித்தால இருந்து. என்னவோ நடக்கப்போவு, சரி நடக்கட்டுன்னிக்கிட்டு வரப்ப வெட்டுகேங். மம்பட்டி சரியா கால் பெருவிரல்ல உழுவு. ரெத்தம். சரி இனி இங்க நிக்கப்புடாது. நாளைக்குப் பாத்துகிடலாண்ணி உடனே கிளம்பிற்றேங் வர வர வெசர்க்கு, காத்துங் சுரீர்ண்ணி அடிச்சிக்கிட்டுதாங் இருக்கு. கட்டநாடான் விளை தாண்டி வரச்சில நிக்காது வெசர்ப்பு. ‍தேகங்குளுந்துகிட்டு கண்ணுஞ் சுத்துவு. அம்பலத்துக்கிட்ட வந்தாச்சி. அவ்வளவுதான் நட பாவாது. யாரோ கெட்டிப் புடிச்சி இறக்குகாவ. ஒரு அடிவைர எடுதுதுவைக்க ஆவாது. எப்படியிருக்கும் மனுசனுக்கு. அம்பலத்துல சுடலமணிக்க பயலும் இன்னும் ஒண்ணு ரெண்டு பயக்களுமா படுத்துக்கிடக்கானுவ. அவனுவளக் கூப்பிடலான்னி கூப்பிட்டா தொண்ட குழிக்க யாரோ கமந்துழுந்து படுத்துக்கிடக்காவ. மேல அம்பலத்துக்கு கூரையில் பாக்கேங், சச்சுருவமா ஒரு பந்தம். அந்த ரத்துல நின்னு எரிஞ்சிக்கிட்டிருக்கு. சொள்ளமாடன் எதுக்கு நம்மள வழி மறிக்கான்னு யோசிக்கச்சில ஒரு நா னின்னு மாற மாற ஊழ உட்டு கிட்டேயிருக்கு. அப்பம் சொள்ளமாடமல்ல வாத. என்ன செய்யன்னு நிக்கேன். பிடியும் உடும்புபோல தளரவே மாட்டேங்குவு படார்பண்ணி ஏக்கியம்மன் மனசில் நினைச்சிக்கிட்டு கூடியமட்டும் பெலத்தோட கைய விரிச்சி படியியலிருந்து தள்ளுனேங். பிடி உட்டுற்று. பிடி உட்டதுந்தாந் தாமசம் கூரையில நாலு பத்தங்  நின்னு எரிவு. உங்கள எனக்குத் தெரியாதால தாயோழிக்க மக்கான்னுக்கிட்டு நடக்க ஆரம்பிச்சவுடனே பந்தத்த ஒண்ணயுங் காணல்ல. அதுக்குப் புறவு வீட்டுக்கு வந்து படுத்தா ஒரு மாசமா குளுருங் காச்சலுங். ஒந்தன்னாண மக்கா ஏக்கிக்கப் பார்வ மட்டும் இல்லியாக்குங் அம்பலத்துக்கிட்ட மாசத்துக்கு ரெண்டு பிரேதமாவது விழும். 
பாட்டா செத்து எல்லாரும் குழி வாசலுக்குப் போயிற்று வந்து பெரும்பயிறு அவிச்சித் தின்னச்சிலயே மூத்தம்ம சொத்து கணக்கு வழக்கு பேச ஆரம்பிச்சி. எங்கப்பா தகராறு போட்டு அதுக்குப் புறவு பதினஞ்சு கழிச்சச்சிலயும் அதப்பத்திப் பேசி, பாதை விசயத்தில் அப்பாவும் சித்தப்பாவும் அடிச்சி சண்ட போட்டு. போலீஸ் கேஸாகி குடும்பக் கோயிலுக்கு நாலு வருசமா கொடநடத்தாம போயி என்ன எளவெல்லாமோ நடந்து எல்லாரும் தனித்தனியா வீடு போட்டு கிழவி செத்த அண்ணக்கி திரும்பவும் சித்தப்பா, அப்பா, மூத்தப்பா எல்லாருமா சண்ட போட்டு இன்னும் பக ஓயல்ல. முத்தாரம்மன் கோயில் கொடையில மட்டும் அப்பா, சித்தப்பா, மூத்தப்பா, தம்பி, அக்கா, சித்தி, மூத்தப்பா எல்லாருமா சண்ட போட்டு இன்னும் பக ஓயல்ல. முத்தாரம்மன் கோயில் கொடையில மட்டும் அப்பா, சித்தப்பா, மூத்தப்பா, தம்பி, அக்கா, சித்தி, மூத்தம்மா எல்லார்த்தையும் ஓரோர் முக்குலயா பாக்க முடியிவு. இப்பல்லாம் நான் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குப் போற வழில அப்பப்ப எப்பாவது அம்பலத்தப் பார்க்கேன். இன்னும் எங்க பாட்டா சுண்ணாம்பு தேச்சு வச்சதெல்லாம் அம்பலத்து சுவத்தில இருக்கு. பாட்டா முன்னுக்கெல்லாம் அம்பலத்துக்கு வரவுடமாட்டாரு. அவரு சின்னாடாரு இன்னும் ஒண்ணு ரெண்டு பேரு எல்லாம் இருந்து தாயம் போடியது. பழக்கட்டன்னு சாயங்காலமானா உக்காந்திருப்பாவ. சின்ன புள்ளைல நான் அம்பலத்துக்கிட்டோடி போனா, போல வூட்டுக்குன்னு வெரட்டுவாரு. அம்பலத்தில உனக்கென்னல ஜோலி, நாங்க நேரம் போவாதவிய இருக்கம் வேல மெனக்கெட்டுன்னா உனக்கென்ன லன்னு வாரு. எங்க பாட்டா காலத்தில இருந்து இப்ப வரைக்கும் அம்பலத்தோட தொடர்பு வச்சிருக்கது சின்னநாடார்தான். சின்னநாடாரைபற்றி தாத்தா ஒருக்க என்னிடம் சொன்ன கதைலேருந்து சின்னநாடாரை எனக்குப் பிரித்துப்பார்க்க இயலவில்லை. 
சின்னடாங் வண்டிமாடு வச்சிருந்தாங்.அவன் வடசேரி சந்தக்கி தேங்கா கொண்டு வித்துகிட்டு வரச்சில சாமமாவிரும் அண்ணக்கி வழக்கம்போல சரியா பன்னிரண்டு மணிக்கு சின்னாடாங் வண்டியடிச்சிகிட்டு வரச்சில நாலஞ்சி பேயழுவ முண்டமாட்டு அம்பலத்தில ஒரு பிரேதத்தக்கொண்டு வச்சி தின்னுகிட்டு இருந்திருக்கு. பேயழுவ ஊழவுடியதும் ஆடுகதும் திங்கதும் ஒண்ணுக்குள் ஒண்ணு சண்ட போடியதும் சின்னாடானுக்கு கலுங்கில வரச்சிலயே மனசிலாயிருக்கு. இவனும் பயறல்ல. என்ன வந்துருண்ணிக் கிட்டு வேட்டியையும் தலமுண்டையும் உரிஞ்சி வண்டில வச்சிக்கிட்டு வண்டிமாட்ட கலுங்குக்கிட்ட உட்டுக்கிட்டு (கலுங்கு இன்னக்கிமாரி சிமெந்துல கிடையாது. மண்ணு மங்கட்டதான்) அவனும் பேயள்வள்கிட்ட போய் ஒரு பேயப் போல ஆடிருக்காங். பேயள்வழும் சின்னாடான பேய்னு நம்பிக்கிட்டு எல்லாரும் பேசி கூத்தடிச்சிக்கிட்டு இருக்கச்சில, ஐயே நீ ஒண்ணும் திங்கலியேன்னி சொல்லி ஒரு பியா பிரேதத்துக்க தொடக்கறிய பூச்சி இவனுக்கு குடுத்திருக்கு.சின்னாடானுக்கு தின்னயும் முடியாது கக்கவும் முடியாது. பேயள்கிட்ட என்னயும் சொல்லயா முடியும்? பேயள்வ அதுவள போலவே ஆடாட்டா எங்க நம்மளயும் என்னையுஞ் செஞ்சிருமோண்ணி பயந்து திங்கதுபோல நடிச்சிக்கிட்டு குண்டிக்கப்போட்டு குத்தவச்சிருந்தாக்காங். அம்பலம் ஏக்கியம்மைக்க பார்வையிலையாக்கும் இருக்கு. பேயள்வ ஒண்ணும் செய்துகிடாதுன்னாலும் யாருதான் இப்படி பேயள்வ சேந்து கூத்தடிக்கச்சில பயறாம இருப்பா. தொடக்கறி வேற அழுவி நாத்தமுன்னா சொல்ல ஆவாதாங். என்ன செய்யண்ணி அழுகயையும், பயத்தயும் அடக்கிட்டு இருந்திருக்காங். பிரேதம் மூணாமத்தாநாளு அடக்கின பாலையக்கதுன்னாக்கும் சின்னாடாஞ் சொன்னா. அவன் உயிரோடு இருக்கச்சிலயே அவங்கிட்ட போவ ஆவாது நாத்தம். செத்து புழுத்தப்பிறவு கேக்கயா வேணும். சின்னாடா முன்னதுனால சமாளிச்சாங். அதுக்குப்புறவு இரண்டு நாழி கழிச்சி பேயள்வ ஆடி ஓடிச்சிக்கிட்டு மிச்ச பிரேதத்தையும் தூக்கிக்கிட்ட உட்டுக் கிட்டே ஓடிருக்கு. இவன் வண்டி மாட்டப்பத்திக்கிட்டு தப்பிச்சோன்னி வந்திருக்காங் மாட்ட அவுத்து தொழுவத்தில் கட்டி வக்கீலு போட்டு இவனுஞ் சாப்பிட்டுக்கிட்டு தொடக்கறிய தூக்கி வசமா ஓட்டுக்கூரையில போட்டுக்கிட்டு படுதுதிருக்க மாண்டானாம், பேயளுவ எல்லாம் கூடி வீட்டுக்கு வந்திற்றாம். லேய் சின்னாடாங், ஏமாத்திப் புட்டியல பலவரஒழிமவன!வெளியே வாலன்னிருக்கு. போவானா இவங் அந்த சாமத்தில் நாமளா இருந்தாத்தாம் போவாமா, போனாத்தான் அதுவ உடுமா!வெள்ளன பாக்கலாமுன்னிருக்காங். அதுவ அதுக்கு அப்பங் நாங்க தந்ததயெல்லாம் தான்னிருக்கு. அவன் கூரையில கிடக்கு எடுத்துக்கிடுங்கன்னிருக்கான். ‍எடுத்துக்கிட்டுப் போயிருக்கு. இப்படியாக்கும் அம்பலத்த சுத்தியுள்ள பேயள்வளுக்கு அட்டூழியம்!'
சின்னநாடார் வயசில எல்லாருமே போயாச்சு. சின்னநாடார் இப்ப காலையில தூங்கி முழிச்சி காப்பி குடிச்சிற்று நேரா ஊனு தூண்ல சாஞ்சி அப்படியே இருப்பாரு. ஒரு மணிக்கு திரும்பயும் வீட்லபோய் சாப்பிட்டுக்கிட்டு அம்பலத்துக்கு வந்தார்னா திரும்ப ஆறு ஆறரையாவும். இப்படியாகிப் போச்சி சின்னாடாருக்கு வயசான காலத்தில் வீட்ல கிடயுமே ஓய். எதுக்கு அம்பலத்தில போய் கிடக்கீருன்னு சின்னநாடாருக்க மொவன் எனக்கு கேக்கும்படியாகவே பலதடவ அவரை ஏசியிருக்கான். சின்னநாடாரு அதையெல்லாம் கேக்கியது இல்ல. தினமும் அம்பலத்துக்கு வந்து அவருக்குப் பரக்கப் பரக்கப் பாத்துக் கிட்டேயிருக்கணும். 
பாட்டா இருக்கச்சில ஒரு எலக் ஷனுக்கு பயக்க நாலஞ்சிவரு தி.மு.க காரியாலயத்த அம்பலத்தில கட்டினதுக்கு பாட்டா என்னமா நின்னாரு தெரியுமா? ஊர்க்கூட்டம் போட்டு அம்பலத்தில எவனும் கட்சிக் கொடியெல்லாம் கட்டப்புடாது. வெள்ளனக்குள்ள அம்பலம் அம்பலமா இருக்கணும். அம்பலத்தில இருக்குயதுக்கு வாங்குயதுக்கு இப்படியிருந்தா சரிபடாதுன்னாரு. வெள்ளனயே காரியாலயம் போயிற்று. ஆனாலும் எலக்ஷன் முடியதுவரைக்கும் பயக்களுக்கும் பாட்டாவுக்கும் கசப்பு கசப்பாயிருந்தது.

பாட்டா அந்த எலக்ஷன்ல ஓட்டுப் போடயுமில்ல. ஈஸிசேர்ல வெத்தலப் போட்டுகிட்டு படுத்துக் கிடந்தாரு. அம்பலத்துக்குப் போவ உடாத பட்டா அம்பலத்துக்கு மேல அக்கறை காட்டுயதெல்லாம் எனக்கு அர்த்தம் அர்த்தமா ‍தெரியுவு . 
பாட்டா சின்னப்புள்ளையா இருக்கச்சில வீட்டுல சண்டை போட்டுக்கிட்டு அம்பலத்தில போய் படுத்துக்கிடுவாருன்னு கிழவி சொல்லியிருக்கா. பாட்டாக்க அப்பா காலையில போய் பாட்டாவ அம்பலத்திலிருந்து எழும்பி வீட்டுக்குக் கூட்டிற்று வருவாராம். அம்பலம் எங்க பாட்டாவுக்கு ஒரு தவசிபோல்;பாட்டாவுக்கும் அம்பலத்துக்கும் அப்படியொரு ஒட்டுதல் இருந்தது. அம்பலத்துக்கும் ‍எங்க ஊருக்கும் அப்ப உள்ள நெருக்கம்னு எனக்குத் தெரிஞ்சத சொல்லணுமானா ஒரு ஐஞ்சண்ணத்த சொல்லலாம். 
1. ஐயப்பன் கோயிலுக்கு கெட்டு கெட்டிப் போறவிய எல்லாம் அம்பலத்துல இருந்துதான் கிளம்புவாவ. 
2. கார்த்திகமாசம் முத்தாரம்மங்கோயில் புஜனை முடிச்சிற்று சுண்டல் அவிச்சு பங்கு வைக்க பயக்க அம்பலத்துக்குத்தான் போவானுவ. 
3. எங்க ஊர்ல உள்ள விடல பயக்க டவுணுல இருந்து சரக்கு கொண்டு வாறது அம்பலத்துக்குத்தான்.
4, பறக்கையில் இருந்து ஆராட்டு வரச்சில மோர் தானமும் பானக்கமும் குடுக்கியதும் அம்பலத்தில் வச்சித்தான்.
5, நான், ராகவன், கணேசன் எல்லாம் கள்ளகோழி புடிச்சி கறிவச்சி உளுந்தஞ்சோறு பொங்கியதும் அம்பலத்திலதான்.
இப்படி எந்தக் காரியமாயிருந்தாலும் அம்பலம் எங்க ஊரோட ஏதாவது ரீதியில சம்பந்தப்படும். எல்லாத்துக்குமே அம்பலம் தேவையாயிருந்தது அப்ப. இப்போ சின்னநாடாருக்கு மட்டும்தான் அம்பலம் தேவையிருக்கு. அம்பலத்துக்கு வெள்ளையடிக்கியதில்ல யாரும். முன்னுக்கெல்லாம் பங்குனி சித்திர கொடைக்கி கோயிலுக்கு வெள்ளையடிச்சது போக மீதிய கொண்டு போய் அம்பலத்துக்கு அடிப்போம். அம்பலத்துக்கு வெள்ளையடிக்க மிச்சம் வரணும்கற முழு கவனத்தோடதான் கோயிலுக்கு வெள்ளையடிப்போம். இப்பம் அம்பலம் ஊருக்கு சம்பந்தமில்லாம ஆகிப்போச்சு. ஐயப்பன் கோயிலுக்கு போறவிய தெங்கம்புதூர்ல ஒரு கோயில்ல இருந்து போறாவளாம். கார்த்திக பஜன ஊர்ல செத்து போச்சு. பயக்க பேண்ட் போட்ட பிறகு பஜனை பாடியது கேவலமாயிற்று. ராகவந்தான் அப்பவெல்லாம் பஜனைக்கு தலைமை. புதுப்புதுப் பாட்டெல்லாம் வர வர அத பஜனைக்கு தகுந்த மாதிரியா மாத்தியெழுதி பாடி அசத்துவான். ஒண்ணாம் திருப்பதி சரணம் பொன்னய்யப்பா, சாமி பொன் அய்யப்பா, ஐயனே பொன் ஐயப்பா சத்தமெல்லாம் போச்சி கார்த்திக மாசத்திலே கோயில்ல குமார் ஸ்பீக்கர்ல சரஸ்வதி சபதம் வசனம், திருவிளையாடல் வசனம், கண்ணதாசன் பேச்சின்னு போடுகதோடு சரி. 
ஊர் எப்படியோ மாறிப் போச்சு. எங்க தாத்தா செத்ததுக்கு பிறகு 1970 வாக்கில எங்க மூத்தப்பா முதன் முதலாக ஓட்டுக் கூரையை எடுத்திட்டு காங்கிரீட் போட்டாரு. அதுக்குப்பிறகு அய்யாப்பழம் வாத்தியாரு, பால்கிளி, கீறாரு ராமகிருஷ்னன் எல்லோரும் காங்கிரீட் பில்டிங் போட்டாவ. ஊர் கிட்டத்தட்ட டவுண்போல ஆகிப் போச்சு, எவ்வளவு பெரிய வனாந்திர வெளிய வச்சுக்கிட்டு எல்லாவனும் வீட்டுக்க பேலுகானுவன்னு வேலப்பன் வெப்ராளப்பட்டான். 1980/ல் வேலப்பனும் காங்கிரீட் பில்டிங் போட்டு வீட்டுக்கையே பேல ஆரம்பிச்சான். எங்களுக்குக் கிடைத்த பட்டா வீட்டுக்க ஒரு பகுதியை எங்கப்பாவுக்கு இடிக்க விருப்பமில்லனாலும் வழியில்லாம முன் பக்கத்தை மட்டும் இடிச்சி போர்டிகோ இழுத்துவிட்டு 1985/ல் பால் காச்சினோம்.  
 
1985/க்கு பிறகும் எங்க ஊர்ல வேல கிடைக்காம சுத்திக்கிட்டே திரிஞ்சது நானும் கணேசனுந்தா. கணேசன் அப்ப அம்பலத்துக்கிட்ட உள்ள விளையில ஓலப்பெரையில வெத்தலபாக்குக் கடை போட்டான். நான் ஆரம்பத்தில் கொஞ்சநாள் அவங்கூட நேரம் போறதுக்காக கடையில் இருந்தேன். பிடீ, சிகரெட், வெத்தலன்னு இருந்து கடையில் மாம்பட்டையும் வாங்கி வச்சாங் கணேசன். மாம்பட்டை வாங்கி வச்சதுக்குப் பிறகு என்னால கணேசங்கடைக்குப் போவ முடியல்ல.பீடி சிகரெட், வெத்தலன்னு இருந்து கடையில் மாம்பட்டையும் வாங்கி வச்சாங் கணேசன். மாம்பட்டை வாங்கி வச்சதுக்குப் பிறகு என்னால கணேசங்கடைக்குப் போவ முடியல்ல. பீடி, சிகரெட் பழக்கமெல்லாம்கூட எனக்கு கணசேங்கடையில் இருக்கச்சிலதான் பழக்கமாச்சி அந்த பயமாகூட இருந்திருக்கலாம். மாம்பட்ட வச்சதுக்கு பிறகு யாவாரம் கூடிற்று. அதுக்குப்பிறகு இடையிடையே சாராயமும் அவங் கடையில கிடைக்குவுன்னாவ. இப்பம் கணேசன் பிராந்தி கடையும் ஏலம் பிடிச்சிருக்கான். 1989/ல் ஊர்ல ஆகஸ்ட் 15/க்கு காங்கிரஸ் கொடி நட்டு கணேசன் மீட்டிங் போடச்சில நானும் அவங்கூட உண்டு. எங்க ஊர்ல முதன் முதல்ல கலர் டி.வி.வாங்கி ஆன்டனா நட்டுட்டது கணேசந்தான். முதல்நாள் டி.வியை ஆன் பண்ணச்சில கணேசன் என்னைக் கூப்பிட்டு படங்காட்டினா. பால்ய ஸ்நேகம் அவனுக்கு இன்னும் எங்கிட்ட உண்டு. அவன் வீட்ல ஒவ்வொரு விசேசத்துக்கும் நான் முக்கியமா அவனுக்கு இருந்தாகணும். கணேசன் டி.வி. வாங்கினதுக்குப்பிறகு வெள்ளிக்கிழம மட்டும் சீக்கிரமா வீட்டுக்கு வந்திருவாவன்னு கணேசனுக்கு பொண்டாட்டி டி.வி. வாங்கினதுல உள்ள லாபத்த எடுத்து சொன்ன சமயத்தில், டி.வி. படம் பாக்குயதுக்கு மட்டுமில்ல வேறயும் சிலதுக்கும் பயன்படுதுன்னு எனக்குப் புரிஞ்சி. காங்கிரீட் வீடு கட்டச்சில இருந்த தீவிரம் இந்த சமயத்தில் டி.வி. வாங்கச்சில இருந்து. எல்லா வீட்டு மாடியிலேயும் தென்னை மரங்களுக்கு ஈடா அலுமினிய ஆண்டனா. ராம கிருஷ்ணர் வீட்ல டி.வி. ஆன்டனா மாட்டச்சில தூக்கி உடுகதுக்கு ஆள் வேணும்னு என்னையக் கூப்பிட்டுட்டாவ. ராமகிருஷ்ணர் வெளியூர்ல பேங்கில வேல பாக்காரு. எப்பவாவது ஊருக்கு வருவாரு. முன்னால நான், அவரெல்லாம் அதிகமா பேசியிருக்கோம். சவடால் அடிச்சிருக்கோம். கெட்டவார்த்தை சொல்லி மாறிமாறி ஏசியிருக்கோம். ராமகிருஷ்ணர் எனக்கு அத்தான் முறையுங்கூட. ஒருக்கா ராத்திரி கள்ளஇளனி பறிக்கப் போச்சில ராமகிருஷ்ணர் மரத்தில இருக்காரு. நான் சும்மாயும் லேய் பண்டுக்காரனுவ வாறானுவ ஒடிருங்கலன்னு சத்தம் போட்டேன். நிஜமாவே ராமகிருஷ்ணரு மரத்தில இருந்து ஒண்ணுக்கிருந்திற்றாரு. ஒன்னு ஊழவுட்டு சிரிச்சி மரத்திலிருந்து ஒண்ணுக் கிருந்தவன்தானல நீன்னு பேசிக்கிட்டு இளனி வெட்டி குடிச்சி முடிக்கச்சில உண்மையிலயே பண்டுக்காரனுவ கண்டுக்கிட்டானுவ. செருப்ப போட்டுக்கிட்டு அம்பலத்துக்கு ஓடினோம். அதுக்குப்புறவு பைனெல்லாம் கெட்டிகாரியம் முடிஞ்சு. இப்படியானதுனாலயே ராம கிருஷ்ணர் மரத்திலிருந்து மோண்டது ஊரெல்லாம் தெரிஞ்சி போச்சு.
ராமகிருஷ்ணரெல்லாம் வேலை கிடைக்காம ஊர்ல இருக்கக்கூடிய சமயத்தில் நாங்க பண்ணின அட்டூழியமும், கொண்டாடுன சந்தோசமும் கொஞ்ச நஞ்சமில்ல. கல்யாணவீடு வந்தாச்சின்னா கொமச்சல்தான். சந்‍தைக்குப் போறதுக்கு, காய்கறி வெட்டுகதுக்குன்னு பயக்க எல்லாவனும் கூடிருவோம். நாராயணதாஸ் சீட்டுக்கெட்டையும் மடிக்க எடுத்துப்போட்டு கொண்டு வருவாங். சீட்டடியும், காய்கறி வெட்டும், காய்கறி வெட்டுகதுல கள்ளங்கடத்தியதும், சுக்குக்காப்பி குடியும் அப்போ! கல்யாணம் வந்தா மூணு நாலு நாளு தூக்கமும் கிடையாது ஒண்ணுங் கிடையாது. ராமகிருஷ்ணர் காய்கறி வெட்ட வெட்ட வெள்ளரிக்கா கொடலு எல்லாத்தையும் தின்னு தள்ளுவாரு. அதனாலயே அவருக்கு குடல் பண்ணின்னு ஒரு பேரும் உண்டு. குடல் வெட்டி எடுக்கவஞ் செலசமயம் குடல தூக்கி ராமகிருஷ்ணருக்கு மூஞ்சில எறிஞ்சிருவாங். இப்ப அவரோட பேசவே என்னவோபோல இருக்கு. வார்த்த திக்குவு. டி.வி, ஆண்டனா மாட்டச்சிலயும் அசடு வழிஞ்சிகிட்டே நின்னேன். நெஞ்செல்லாம் வறண்டுபோன மாதிரியா இருந்து. டி.வி. ஆன்டனா மாட்டி முடிச்சதும் ராமகிருஷ்ணரு தந்த காப்பி சம்பளத்துக்குத் தந்ததுபோல இருந்து. அதுல மட்டுமில்ல, ஊர்ல கல்யாணவீடு, இளவுவீடு எல்லாம் இப்ப ஒருப்போலதான் இருக்கு. காய்கறி வெட்டகதுக்கு, சந்தைக்குப் போறதுக்கு எல்லாமே சம்பள ஆள் கிடைக்குவு. நமக்கென்ன அந்த சமயத்தில் போய் நிக்கணும் வரணும். அவ்வளவுதான். 
பாட்டா இருக்கச்சில கடைசில அம்மங்கோயிலுக்கு வரி 25 ரூபாயா இருந்து. மொத்தம் 55 வரிகிட்ட வரும். அதுக்குள்ள கொட ஜாம் ஜாம்னு நடக்கும். பரபரப்பு, துணியெடுப்பு, சாமியாட்டம் கொட முடிஞ்சு வில்லுல மங்களம் பூட்டச்சில யாரையோ பிரியற மாதிரியா இருக்கிற மனவெறுமை. எல்லாம் 25 ரூவா வரியில நடத்த முடியும். இப்ப வரி 200 ரூவா. பொங்கல்பானைக்கு தீ வைக்க ஆள் வரமாட்டேங்குவு. காவோலை கொண்டுவர சம்பளத்துக்கு ஆள் புடிக்க வேண்டியிருக்கு. சந்தைக்குப் போவ ஆள் தெரக்க வேண்டியிருக்கு. ஒவ்வொருத்தனையும் தொங்க வேண்டியிருக்கு. பாட்டா இருக்கச்சில அய்யாவழிக்காரமாரு நாலஞ்சிவாரு புதுசா ஓருக்க ஒரு கோயிலை கட்டி வச்சிக்கிட்டு வரி தரமாட்டேன்னுற்றானுவ. அப்ப பாட்டா வீட்ட சுற்றி தென்னங் கண்ணு நட்டு பூசணிக்கா உடையிங்கல என்ன மயிரு வரும்னு பாத்திருவோம். ஒரு கோயில கட்டி வெச்சிக்கிட்டு புளுத்திக் காட்டிரலான்னூ பாக்குயானுவ தாயழிய. பெந்தகோஸ்த்து காரணுவளபோல அய்யா சிவ சிவ ஹர ஹர ஆண்டிக்கும் கல்யாணம் கல்யாணம்னு சத்தம் போடுகானுவ. இதுக்கே நமக்கு இவனுவ ஒவ்வொருத்தனும் ரெண்டண்டு வரி தரணும்னாரு. லிங்கன் தலமையில் போய் பூசணிக்கா ஒடச்சி எலுமிச்சம்பழம் வெட்டின மறுநாளு வரி தன்னால வந்திற்று. இப்ப வரி பிரிக்க சரியான ஆளுல்ல. ஒவ்வொரு கொடைக்கும் பத்து பதினெஞ்சி வரி பிரியாமலேபோவு. ஏக்கியம்மங் கோயிலாவது குடும்பக் கோயிலு; சமாளிக்கலாம். அம்மன் கோயில்ல வரி பிரியாட்டா என்ன செய்ய ஆவும்? அம்பலத்தைச் சுத்தியுள்ள விளையில உள்ள தென்னை செவ்வாதோறும் பூசு வக்கயே காணுவுல்ல. 
இத்தனைக்குப்புறவும், ஊர்ல பல மாற்றம் நடந்த புறவும் அம்பலம் இன்னும் அசையவே இல்ல. பழைய பணங்கம் புல போட்ட கை ஓடையெல்லாந்தாங்கி நிக்குவு. சுத்தி, தூணும் கம்பீரம் கொறயல்ல. வெள்ளையடிக்காம உட்டுற்றாலும் என்னவோ அம்பலத்துக்கு கிழட்டு மிடுக்கு இன்னும் உயிரோட இருக்கு. பெளர்ணமி ராத்திரிகள்ல அம்பலத்துக் கிட்டோடி போனா அம்பலம் என்னவோ பேசுகு. ஆனா புரிவுல்ல. காத்தே அடிக்காத நாழியில அம்பலத்தப் பாத்தா தாலியறுத்தவளபோல இருக்கு. ஆனாலும் அம்பலத்துக்கு சுயமரியாதையெல்லாம் ஒண்ணுங் கொறஞ்சி போவல்ல. கழிஞ்ச வாரம் நைனாபுதூர்ல நாடகம் பாத்துகிட்டு வரச்சில இடையில நாடகம் பாக்காம எழும்பி வந்தவன் சிலபேரு அம்பலத்துல படுத்து தூங்கிக்கிட்டிருந்தானுவ. அம்பலம் முழிச்சிருந்து. அம்பலத்துக்கு ராத்திரிதான் சிரமம், வெள்ளயனயாயிற்றா சின்னாடாரு வந்திருவாரு. பேசிகிடலாம், அழுதுகிடலாம், ஆறுதல் சொல்லி கிடலாம். எனக்குள்ள ‍ஆசையென்னான்னா நாப்பதுலியோ நாப்பத்தஞ்சிலயோ எனக்க பாட்டாவாப்போல அம்பலத்தில உக்காந்து நெஞ்சுவலி வந்து சாகணும்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"