ஃபிடல் காஸ்ட்ரோ நீங்கள் வருகை தந்த பணி நிறைவடைந்தது

 புதுயுகத்தின்  மகான்  ஃபிடல் காஸ்ட்ரோ வுக்கு அஞ்சலி

 [ Fidel Alejandro Castro Ruz, commonly known as Fidel Castro, was a Cuban politician and revolutionary who governed the Republic of Cuba as Prime Minister from 1959 to 1976 and then as President from 1976 to 2008.]

உலகமெங்கும் புதுயுகத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய பாதையில் நவீன அரசு அமைப்புகள் தங்களையே மேலாண்மை செய்யத் தகுந்த ; உயரிய அதிகாரமாக  முன்வைக்க தொடங்கின.மனித உரிமைகள் பற்றிய புதிய வரையறைகளை அவை தோற்றுவித்தன.மனித அணுகுமுறைகள் , நீதி,மானுட தர்மம் எல்லாவற்றையும் அவை வகுத்து தங்களை மேலாதிக்கமான அதிகாரமாக உலகின் முன்பாகக் கொண்டு நிறுத்தின.

நம்மில் இன்று பலரும் ஏற்றுக் கொண்டுள்ளதும்,சரியென விளைவதும் நவீன அரசாங்கங்களின் மானுட தர்மங்களைத் தான்.பழைய அமைப்புகளின் மீதான நிபந்தனைகள் அற்ற அதிகாரமாக ,பாரம்பரிய சமூகங்களைக் கட்டுக்குள் கொண்டுவர சுரண்ட ,தண்டனைகள் வழங்க நவீன அரசு உலகமெங்கும் வியாபித்தது.தனது மானுட விழுமியங்களை ஏற்காதவர்களை அது காட்டுமிராண்டிகள் என்று வசைபாடியது.நம்ப வைத்தது.உலகளாவிய அளவில் ஏராளமான முகவர்களைக் கொண்டு பண்பாட்டுத் தளங்களிலும் காலூன்றி நடக்கும் அதிகார மிருகம் இந்த நவீன அரசமைப்பு.

புதுயுகத்திற்கான மனித சமூகத்தின் தேடலில் பழைய பாரம்பரியமான ஏற்ற தாழ்வுகளும் ,நேரடியான வதைகளும் நிரம்பிய புராதன மனித அரசமைப்புகள் சிதைவுற்று நொறுங்கத்  தொடங்கிய காலத்தில் இந்த மாதிரியே உலக மேலாதிக்கத்திற்கான வடிவமாக முன்நின்றது.ஏகோபித்த பெரிய அரசு வடிவமாக .நாம் இன்று ஏற்றுக் கொள்ளப் பழக்கிவைத்திருக்கும் வடிவமும் இதுதான்.ஜல்லிக்கட்டு போன்றவற்றைத் துரத்தவும் ,அவற்றை அநாகரீகமானவை என்று நம்மிடம் வாதிடவும்   செய்கிற அமைப்பு இதுதான்,வேறெதுவுமில்லை.பிரிட்டன் ,ஜெர்மன் ,அமெரிக்கா என்று இந்த மேலாதிக்கத்தைச் சுமந்த நாடுகள் உலகளாவிய பாரம்பரியமான அனைத்து அமைப்புகளையும் தங்கள் கீழ் கொண்டுவர உதவிய கருவி இது.

இந்த சிக்கலை , பாரம்பரிய சமூகத்திற்கும் நவீன அரசமைப்பிற்கும் இடைப்பட்ட மோதலை விபரமாகக் கையாண்ட இரண்டு உலகமாதிரிகள் நம்முன்னர் உண்டு ,ஒன்று காந்தியத்தின் துணை கொண்டு இந்திய சாதித்து பின்னர் கைவிட்ட விடுதலையின் அதிகாரம்.இரண்டாவதாக சேயுடன் இணைந்து ஃபிடல் காஸ்ட்ரோ சாதித்த கியூபாவின் மாதிரி.அதை பரிபூரணமானது என்று சொல்லவில்லை.ஏராளமான பிழைகள் , எடுத்துச்சாட்டங்கள் கொண்டதுதுதான் அது.ஆனால் உலகளாவிய நவீன அரசமைப்பிற்கெதிரான ரிஸிஸ்டென்ஸ் சக்தியாக இருக்கவும் ,அது முன்வைத்த மானுடவிழுமியங்களை நாகரிகத்தை புறந்தள்ளி அந்த இடத்தில் சமூக நீதியை கடினப்பட்டேனும் முன்வைக்கவும் கடைசிவரையில் பாடுபட்ட சக்தி அது.அது சாத்தியப்பட்டதா என்பது வேறு விஷயம் . விடுதலைக்கான  சாத்தியத்தில் ஒருபோதும் இதனை மனித சமூகம் புறந்தள்ளவே முடியாது.

ஃபிடல் காஸ்ட்ரோ வின் புகழ் பெற்ற வாக்கியங்களில் ஒன்று "இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை " என்பது.அவர் அமைத்த அரசமைப்பிற்கும் அது பொருந்தும் .வாழ்ந்த வாழ்க்கைக்கும் இந்த வாக்கியம் கச்சிதமாகப் பொருந்தும்.சுமார் ஆயிரம் தடவைகள் அமெரிக்க உளவுப் படைகளால் கொலைமுயற்சிக்குள்ளான வாழ்க்கை ஃபிடல் காஸ்ட்ரோ உடையது.கடைசி காலங்களில் அவர் நோயுற்றிருந்த காலங்களில் கூட அமெரிக்க ஊடகங்கள் அவரை விட்டு வைக்கவில்லை.சே பனியனை அணிந்த வண்ணம் அவை வதந்திகளை பரப்பிக் கொண்டிருந்தன.தள்ளாத வயதிலும் வதந்திகளுக்கு அடிபணியாமல் அவர் பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடி வதந்திகளை முறியடித்தார். நமது இந்திய நாட்டில் எனில் அவதார புருஷன் என்றே சொல்லியிருப்போம்.

நான் அவரை புதுயுகத்தின் மகான் என்பேன்.ஃபிடல் காஸ்ட்ரோ நீங்கள் வருகை தந்த பணி நிறைவடைந்தது.நன்றி .ஆனால் நாங்கள்தான் நீங்கள் கற்றுத்தந்தவை என்னவென அறியாமலே உங்கள் பனியனை மார்பில் சுமந்தலைகிறோம்.

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"