நமது மிருகம் உடை உடுத்த விரும்பியது.

நமது மிருகம் உடை உடுத்த விரும்பியது.

நமது ஆளுமை என்பது எங்கிருந்து வருகிறது ? நமது தன்னிலை எவ்வாறு கட்டப்படுகிறது ? நாம் கட்டியெழுப்பும் அக உருவத்தில் நம்முடைய பங்கு எவ்வளவு இருக்கும்? அதற்கு முழுப் பொறுப்பையும் நாம் எடுத்துக் கொள்ள முடியுமா ?

அகம் என்பது வசதி கருதி சொன்னால் இரண்டுவிதமாக இருக்கிறது.ஒன்று மிருகம் தானே கொண்டிருக்கும் அகம்.அது நம்மிடத்தில் எதையுமே கேட்டு உருவானதில்லை.அதற்கு நாம் பொறுப்பும் கிடையாது.அதனை எவ்வாறெல்லாம் கையாள்கிறோம் அல்லது கையாள விரும்புகிறோம் என்பதை வேண்டுமானால் நமது பொறுப்பில் உள்ள காரியங்கள் எனலாம்.கலைகள்,படைப்புகள் ,கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் இதனைச் சார்ந்தே நிகழ்கின்றன.

விஞ்ஞானமும் நாம் இந்த மிருகத்திற்கு உடுத்திக் கொடுக்கிற ஆடைதானே அன்றி வேறொன்றுமில்லை.இப்படி ஏராளமான ஆடைகளை அதற்கு உடுத்திக் காட்டினாலும் கூட அது அம்மணமாகத்தான் இருக்கும் .ஒன்றுமே செய்ய முடியாது.அதன் அழகே அதுதான்.உடைகளை இகழ்வது அதன் பிரதானமான பண்பு.ஆன்மிகம் ,மதம் போன்ற சில்க் ஆடைகளுக்கும்  இது பொருந்தும்.ஒவ்வொரு மிருகத்தின் கைரேகையையும் போன்றே அது மாறும் தன்மை கொண்டது.

மிருகத்திற்கு தயாரிக்கப்படுகிற அரசியல் என்பது உட்லண்ட் ஷு அணிந்து கொள்வது போல.சில யாத்திரைகளுக்கு அது உபயோகமாக இருக்கலாம்.இடையூறாகவும் ஆகலாம்.நடந்து செல்வது இதனைக் காட்டிலும் நல்லது என்றும் தோன்றலாம்.பொது இடத்தை மிரட்டுவதற்கும் இந்த ஷு பயன்படலாம்.பிறரை ஓங்கி மிதிக்க பயன்பட்டு வசக்கேடாக மாட்டிக் கொள்வதற்கும் இது வகை செய்யலாம்.

நமது நாட்டில் பொதுவாக அகத்தின் மத்தியில் அரசியலை மட்டுமே வைத்து ,அதனுள் கருணை  , அன்பு ,சமத்துவம் எல்லாவற்றையும் பேணுமாறு அரசியல் கூட்டத்தினரால் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.நீ கொண்டிருக்கும் அரசியல் என்ன ? என்பதை வைத்து மட்டுமே ஏற்பேன் என்கிற கும்பல் இது .அது விஞ்ஞானம் ,வரலாறு ,அறிவு என்றெல்லாம் சிலவற்றை கற்பனை செய்து வைத்திருக்கிறது.கருணையை,அன்பை ,நற்குணங்களை அது தீர்மானிக்க முயல்கிறது.அது தீர்மானிக்க முயல்வதை மறுக்கும் அகத்தை அது அழிக்க முயல்கிறது.ஷு வை எடுத்து அதன் முன்பாகக் காட்டுகிறது.

நீங்கள் யார் என்று என்னிடம் அடிக்கடி சிலர் கேட்கிறார்கள் ? எனக்கெப்படி தெரியும் ? என்னுள் ஒரு பௌர்ணமியும் உண்டு துர்தேவதையும்   உண்டு என்று நான் பதில் சொன்னால் அதற்குப் புரிவதில்லை.அணிந்திருக்கும் ஷு எந்த கம்பெனியைச் சேர்ந்தது என்பதைத் துளாவவே அது விரும்புகிறது.அரசியல் சமூக அடையாளமாக முயல்தலின்  அபத்தமே இந்த கேள்வி .அரசியலைக்   கொண்டு மட்டுமே தன்னிலையை கட்டி விடமுடியுமானால் எனக்குள் இருக்கிறதே பளிங்கு நீராக ஓடிய பழைய தாமிரபரணி குழித்துறையாறு !அதனை நான் என்ன செய்வேன்? அதன் மீதிரைந்த தவளை சத்தத்திற்கு உங்களுடைய அரசியல் அகத்தில்   இடம் உண்டா ? நானொரு   தவளையை மிகவும் விழிப்பு நிலையோடு கொண்டு எனது அகத்தில் செருகிக் கொள்ளவே எப்போதும்  விரும்புகிறேன்.அவர்கள் தவளையின் கட்சிக் கொடியென்ன ?  சிலுவை உண்டா ? என்று கேட்கிறார்கள்.தவளையின் கழுத்தில் ஒரு சிலுவையை மாற்றிவிட்டால் அவர்களுக்கு திருப்தி ஏற்படக் கூடும்.தவளை சம்மதிக்க வேண்டுமே !

அகத்தின் உடை அத்தனையாலும் ஆக வேண்டும்  .அரசியலால் மட்டும் அல்ல.அப்போதுதான் இனிய உருவம் கிட்டும் .இல்லாதது அத்தனையும் வெற்று விகாரம்.அடைப்பு.

அட்டைப்பெட்டி

முதலில் வெறும் அட்டைப்பெட்டி.
கட்டத் தொடங்கினேன்
ஆனது ஆகாதது எல்லாமே உள்வந்து எப்படி
படுத்துக் கொண்டன ?

குலசாமி துடிகொண்டாட எப்போதும் தயாராக ,
உள் வந்து படுத்து துயிலில் இருந்தார்

ஒரு ஓர்மைகுன்றாத பௌர்ணமிக்கும்
அட்டைப் பெட்டிக்குள் ஓரிடம் இருந்தது

கைவிடப்பட்ட குழந்தைதான் அட்டைப்பெட்டிக்குள்
கதாநாயகன்
சாமியோ ஆசாமியோ உள்ளே வந்தால்
அவனிடம் தான் கேட்டுக் கொள்ளவேண்டும்.

இளமையின் நதியொன்று அட்டைப் பெட்டிக்குள்
பாய்ந்து கொண்டிருந்தது

ஒரு சொப்பனம் அட்டைப்பெட்டியின்
வெளிமூடியையெல்லாம் கழற்ற முதலில் விகாரம் .
அப்புறம் அகோரம்
அப்புறம் அப்புறம்
விவகாரம்
பின்னரே விகாசமாயிற்று

அட்டைப்பெட்டி இல்லை
சொப்பனம் அகற்றிய பிற்பாடு அட்டைப்பெட்டி இல்லை.
நதியின் காடு .
அம்மாவின் பௌர்ணமி தான் அது
அட்டைபெட்டியற்ற அகத்தின்
பிரதானத்தில் ஜொலித்துக் கொண்டிருப்பது .

மற்றபடி பெரியவர் சொன்னது சரிதான்
சுத்த வெங்காயமென்று

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"