படிகம் இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்

படிகம் இதழில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்


#
இறந்த பின்னர் அழைப்பவர்களைப்
பார்த்து விட்டுத் திரும்பினேன்
வழக்கமான மனிதர்களைப் போன்றுதான்
அவர்களும் உடை உடுத்துகிறார்கள்

இறந்தவர்களின் பட்டியல் ஒன்று அவர்களிடத்தே இருக்கிறது.
இறந்த பின்னர் எல்லாவற்றையும் செய்வதாக
அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்

மசாலா டீயிலிருந்து
பிரியாணி வரையில் எது வேண்டுமானாலும்
அவர்கள்
இறந்த பின்னர்தான் செய்வார்கள் .

அவர்கள் செய்ய வேண்டுமாயின்
நிபந்தனை ஒன்றுதான்
முதலில் இறக்க வேண்டும்
வைத்துச் செய்ய அதுதான் உகந்தது என்பதே
அவர்கள் கொள்கை
இறந்த பின்னர் உடனடியாக அவர்களிடமிருந்து
அழைப்பு வரும்

எல்லோரையும் போலத்தான் அவர்களும்
பேசுகிறார்கள்
சந்தை நிலவரம் தொடங்கி
இங்கே வாழவே முடியாது என்பது வரையில்

சந்தேகமே வேண்டாம்
ஒருவேளை நீங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் போதே
அவர்களிடமிருந்து அழைப்பு வந்து விட்டால்
நீங்கள் இறந்து விட்டதாகத் தானே
அர்த்தம் ?

#

சிசேரியன்

பத்திரகாளி அம்மன் வேடமிட்டார்
ராஜாமணி நாடார் .
ராஜாமணி நாடார் வேடமிட்டாள்
பத்திரகாளி ,கைகள் பல கொண்ட கருங்காளி .
இரண்டு வேடங்கள்
உடல் ஒன்றே

ராஜாமணி நாடாரும் ஒரு வேடம்தானே அன்றோ ?

இவர் அங்கு செல்ல
அவளிங்கு புறப்பாடு
முதலில் ராஜாமணி நாடார்தான்
பத்திரகாளியம்மனை தன் வேடத்திற்குள் அழைத்தார்
விரதம் தொடங்க வேடத்தினுள் நுழையத் தொடங்கினாள்
அம்மன்.
கஷ்டப்பாடுதான்

அவளுக்கு இடங்கொடுத்துக் கொடுத்து
வீங்கத் தொடங்கிற்று ராஜாமணி நாடாரின் உடல்
அவள் ஒரேநாள் விரதத்தில் மேல்வந்து சாடிவிடமாட்டாள்
என்பதை நன்கறிவர் அவர்
ராஜாமணி நாடார்.

ஒவ்வொருபடியாக மெல்ல மேலேறி உடல் கட்டுமானத்தில் அவள்
ஏறி உட்கார
பரவெளியில் கைவிரித்தெழுந்தன அம்மனின்
விஸ்வரூப கைகள்
விரிந்த கோலம் .

அம்மன் புத்தாடையாக
தனது உடலை எடுத்துக் கொண்டதை அறியாத
ராஜாமணி நாடார்
அவசரமாக வேடம் கலைத்து விரதம் முறித்த அன்று
கடலுள் இறங்கிச் சென்றது வேடம்
மிஞ்சிய உடலெங்கும் பரவெளியில் அலையும்
காளியின் கைகளின் நமநமச்சல்
வேடம் விட்டகன்ற இடமெங்கும் முளைத்த உடல்
கருங்காளியின் ஒரு பெரிய வடு

"ஒரு கள்ளக் கோழியடித்து உண்டு
நல்லச் சாராயம் பருகி
சொருகியினி மீளுங்கள் நாடாரே ...
அம்மன் விடைபெற்று விலகிச் செல்ல ...
உங்கள் உடலை மீண்டும் ஒருமுறை அவள் ஈனித் தர .."

வேறு வழியேதும் உண்டோ?
உங்கள் வேடத்தை அவள் மீண்டும் உங்களுக்கு
விட்டுத் தர வேண்டாமா?
நீங்கள் ராஜாமணி நாடாராக இருப்பது தானே
அவளுக்கும் நல்லது
உங்களுக்கும் பேறு

#
ஆண்டாளின் கண்ணாடி அறை

ஆண்டாளை முதலில் பார்க்கச் சென்றபோது
பார்க்கத்தான் சென்றேன்
கவிக்கரம் குவித்து

ஆண்டாளின் கண்ணாடி அறை
தொங்கும் திரைச்சீலை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது போன்று
அணங்கி அசைகிறது.

கிசுகிசுப்பில் ரங்கன் தொட்டுத் தொட்டு பேசும் பிம்பங்கள்
அகத்துக்குள் எதிரொளிக்கின்றன

தேவதையின் அகம்
எடுத்துத் திரும்பும் வழியெங்கும்
பேய்முலைச் சுரப்பு
கீசுகீசென்று பேச்சரவம்
பிம்பங்கள் உருள
மனச்சாயல் தடுமாற
தூமணி மாடத்து சுற்றும் விளக்கொளி

இப்படியிருந்தால் எப்படியம்மா வெளியேறுவான்
பார்க்கவந்தவன் ?
ஆண்டாளைப் பார்க்கத் தான்
சென்றேன்
உள்ளிழுத்து இறுக அடைத்துக் கொண்டதோ
மினுமினுங்கும்
மாயக் கண்ணாடி அறை
திருமேனிக் குடமுடைந்து சிந்த

நீ சூடிக் கொடுத்தாலும்தான் என்ன ?
வாடிக் கொடுத்தாலும்தான் என்ன?
பெரியாழ்வாருக்கு மட்டும்தானோ
இத்தனை பெரிய பெருந்தகப்பன் ஸ்தானம் ?

#
தொடர்ந்து களிமண் பொம்மைகளைத்தான்
செய்து கொண்டிருக்கிறேன்

அதில் தோசை சுட்டுக் போடுவேன்
நீங்கள் உண்ண முடியாது.
அதில் ஆபரணங்கள் செய்வேன்
ஆனால் விற்க முடியாது.

பழைய ஒலிபெருக்கிகள் செய்து மரத்தில் கட்டுவேன்
பாடல்கள் கேட்கும்
கேட்காத பாடல்கள்
வாய்க்காத ருசிகள்
வேண்டாத வரங்கள்

சாலைக்கு நடுவே
போக்குவரத்துக்கு இடையூறாக
சந்தியில்
அன்றாடத்தை குழப்பியடிக்க
லட்சியங்களைப்
பரிகாசம் செய்ய
அதிகாரத்தைக் கீழிறக்க
பவிசைப் பார்த்து சதா சிரிப்பொலியெழுப்ப
களிமண் பாண்டத்தில்
பத்தாவது துளையிட

தொப்பிகளையெடுத்து மலங்கழிக்கும்
களிமண் தெய்வங்களை செய்து கொண்டேயிருப்பேன்
ஆனால் ஒருபோதுமே வணங்கவே இயலாது
இந்த
களிமண் தெய்வங்களை
விளையாட்டில் விஷேஷம் வேறொன்றுமில்லை.

#
வயோதிக பிச்சைக்காரன் எனது கையைப் பிடித்திழுத்து
தானம் கோரும் போது
எனது கையை நானே பிடித்திழுப்பது போன்ற மெதுமெதுப்பு வெப்பம்.

ஒரு மனோநோயாளி என்னை தடுத்து நிறுத்தி திட்டும் போது
தன்னைத்தானே திட்டிக் கொள்கிறது சப்தம்.

கொலைக்குற்றவாளி தண்டனையறிவித்தலுக்கு பின்னர்
படியிறங்கி வரும்போது அப்படியே உறைக்கிறது என் முகம் ரேகை

என்றாலும் சிறுநகரத்தின் சிறுமழைச் சகதியில்
நகரத்தின் இரவு ஒளியெல்லாம் என் மேனியில் கசிந்து கிசுகிசுப்பதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மைனாக்களின் பாடலுடன்
எனது தேநீரில் புலர்கிறது காலை

பாடலையும் ,ஒளியையும்
தானத்தின் கரத்திலும் , ரேகையின் முகத்திலும்,
பைத்தியத்தின் சத்தத்திலும் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்
பணி முடியும் வரையில் இருக்குமென்
கவிதையில் பிரபஞ்சம்
ஒரு கையில் வாளாகவும்
மறு கையில் அமுதசுரபியாகவும்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"