எதிர்வேடம்

எதிர்வேடம்

வாழ்க்கையில் பலவிதமான வேடங்கள் இருக்கின்றன.ஒரு வேடமும் மற்றதுக்கு சற்றும் இளைத்ததல்ல.ஒவ்வொன்றுமே  நல்ல வேடமும்தான்.கதாபாத்திரங்கள் அனைத்தும் வேடங்கள்தாம்.நல்லது கெட்டது என்பதல்லாம் மாயை.ஒருவர் அணிந்திருக்கும் வேடம் அவருக்கு விருப்பத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது.வெறுக்கும் வேடம் விரும்பி அணியத் துடிக்கிற வேடமாகவும் இருக்கலாம்.

எங்கள் பகுதியிலிருந்து குலசேகர பட்டினம் தசரா வேடமணிதலில் பங்கேற்கும் பல செல்வந்தர்கள் "பிச்சைக்காரர்கள் "வேடமணிந்து செல்கிறார்கள்.எதிர்வேடமணிந்தால் பாவம் கரையும் என்பதொரு நம்பிக்கை.ஆனால் உண்மை இது மட்டுமல்ல,பிச்சைக்காரன் வேடத்தில் நிம்மதியிருப்பதாகவும் கஷ்டங்கள் இல்லையெனவும் செல்வந்தனுக்கு   ஒரு நினைப்பு இருக்கிறது.தெருவில் வசிப்பவர்கள் கவலையற்றவர்கள் என சிலர் நினைத்துக் கொண்டிருப்பதை போல.

வாழ்வில் அணிய இயலாத வேடங்களை அணிந்து பார்ப்பது மற்றொரு வகை.போலீஸ் வேடம் அதில் ஒன்று.சாமி வேடங்கள் பக்தியின் வேறு வேறு நிலைகள்.தசரா விழா நமது கலாச்சார விழாக்களிலேயே மிகவும் தலைசிறந்தது.ஆகாத வேடங்களையெல்லாம் அணிந்து பார்க்க கிடைக்கிற வாய்ப்பினைக் கொண்ட விழா.இது எவ்வளவு முக்கியமான விழா என்கிற உணர்வு   சிறிதுமின்றி ஆண்டாண்டு தோறும் இது அடைப்படை வசதிக் குறைபாடுகளுடன் நடந்தேறி வருகிறது.

ஒருமுறை எனக்கொரு வழக்கு காவல் நிலையத்தில்.அப்போது துணை கண்காணிப்பாளராக இருந்தவர் எனது நண்பர்.எதிராளி ஒளித்துக் கொண்டுவிட்டான்.காவல் நிலையத்தில் ஒத்துழைப்பில்லை.நண்பர் இறுதியில் ஒரு வியூகம் வகுத்தார்.அவரது வாகனத்தில் அவருடைய உதவிக் காவலர்களுடன் இணைந்து நானே சென்று எதிராளியைத் தேடித் கண்டுபிடிக்கும் வியூகம் அது.இரண்டு மூன்று நாட்கள் அவர் அமர்ந்து பயணிக்க வேண்டிய இருக்கையில் அமர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது.முதல் நாள் அவருடைய இருக்கையில் அமரும் போது கூச்சமாக இருந்தது.சரியாக என்னால் அந்த இருக்கையில் அமரமுடியவில்லை.ஒதுங்கி ஓரத்தில் அமைந்திருப்பேன்.காலவலர்களோ அவருக்குத் தர வேண்டிய அத்தனைப் பணிவிடைகளையும் எனக்கு செய்து கொண்டிருந்தார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக நான் இருக்கையில் சரியாக அமர பழகினேன்.இப்படியாக நான்கைந்து முறை சுற்றும்போது என்னை அறியாமலேயே நானே அவராக மாறிப் போயிருந்தேன்.எனது கட்டளைகளுக்கு பிறர் அடிபணிவதைக் காண துப்பாக்கி இல்லாமல்கூட எதிராளியை சுட்டுவிடுவேன் என்று தோன்றியது.இந்த விளையாட்டு போதும் என்று அவரிடம்  சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன்.எதிராளியை பிடிக்கவில்லை.அது தேவையில்லை என்று மனதில் திகட்டிவிட்டது .எதிராளி எனது மனக் கற்பனையில் பெற்றிருந்த இடத்திலும் வலுவிழந்து போய்விட்டான்.இவனெல்லாம் ஒரு எதிராளியா எனத் தோன்றும் வண்ணம்.வேறுவிதமாகச் சொன்னால் பிடிபடாத அந்த எதிராளியும் நானும் ஒரேசமயத்தில் அந்த வாகனத்திலிருந்து இறங்கி விட்டோம் என்று சொல்லலாம்.வாகனத்திலிருந்து அது எந்த வாகனமாக இருந்தாலும் இறங்கிவிடுவது எவ்வளவு ஆசுவாசத்தைத் தருகிறது?

அந்த நண்பர் ஊருக்கு ஊர் என மாறுதல் பெற்று எங்கெங்கோ சென்றுவிட்டார்.இருந்தாலும் எங்கள் சரகத்திற்குட்பட்டவர்கள் கண்காணிப்பாளரின் நண்பர் என அடையாளம் கொள்வதை நிறுத்தவில்லை.அணியும் வேடங்கள் சிறிதோ பெரிதோ அத்தனை எளிதில் நம்மிடம் கரைந்து போவதில்லை.   

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"