தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் 2016 விருது

கவிஞர் ராஜன் ஆத்தியப்பனுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் இந்த வருடத்திற்கான -2016 கவிதைக்கான விருது பெறும் ராஜன் ஆத்தியப்பனுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டிடக் தொழிலாளியாகவும் ,கவிஞராகவும் செயல்படும் ராஜன் ஆத்தியப்பனின் கவிதைகள் விசேஷமானவை .ஓர்மைக்குரிய ஒரு சமூகத்தில் கொண்டாடப்பட வேண்டியவை.
ராஜன் ஆத்தியப்பனின் முதல் கவிதை நூல் கடைசியில் வருபவன் "சிலேட் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.இரண்டாவது கவிதைத் தொகுப்பு "கருவிகளின் ஞாயிறு " படிகம் பதிப்பகத்தின் வெளியீடு.கருவிகளின் ஞாயிறு கவிதைத் தொகுப்பை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் 2016 விருதிற்கென தேர்வு செய்திருக்கிறது.கலையிலக்கிய பெருமன்றத்தின் இந்த தேர்வு ஒரு மாற்றம் .கலையிலக்கியத்தின் பால் அவர்கள் ஆர்வம் கொள்ள விளைவதின் தடயம். பாராட்டுதலுக்குரியது.வாழ்த்துக்கள்.
கருவிகளின் ஞாயிறு தொகுப்பிலிருந்து ராஜன் ஆத்தியப்பனின் இரண்டு கவிதைகள்
1
விற்கப்படுவதற்கொன்றுமற்ற
பெட்டிக்கு கடை
நாள் முடங்காது
திறந்து மூடப்படுகிறது.
புராதன காலத்தின்
பழங்களற்றுக் கறுத்துலர்ந்த
வாழைத்தார்கள் ஒன்றிரண்டு
தலைகீழ் கேள்விக்கு குறியாய்
குறுகித் தொங்கும் முன்புறம்
வரிசை காக்கும்
காலியான மிட்டாய் குப்பிகள் தூரில்
இனிப்புப் பொடிகளின்
காம்பிய மிச்சங்கள்
நிறம் வாரியாக
வகை வாரியாக
நேர்த்தியாக அடுக்கப்பட்ட
உள்ளீடற்ற சிகிரெட் கூடுகள்
கடையினுள்
அட்டி நிறைந்திருக்கிறது
வெப்பப் பெருமூச்சொன்று
ஐந்தாறு செல்லா காசிருக்கும்
கல்லாப் பெட்டியைத்
திறந்தடைக்கும் இடைக்கிடை
ஊர் நடுவிலிருக்கும்
அந்த பெட்டிக் கடையில்
அவ்வப்போது ஆட்கள் கூடுவர் மீள்நினைவில்
ஆவதொன்றில்லையெனப் பின்
முணுமுணுத்துக் கலைவர்
விற்பனைக்கு ஏதுமற்ற
பெட்டிக்கடை இருப்பது
ஊருக்கு நன்மை என்பது
ஊரார்களின் நம்பிக்கை
பிற கடைகளோடு
போட்டியின்றியிருப்பதால்
அதனால் இடைஞ்சலுமில்லை
இரவில்
பெட்டிக்கடை அடைக்குமந்த
பெரியவர்
கைத்தடியூன்றியபடி
மறுநாளை நோக்கி
மெல்ல நடக்கத் தொடங்குகிறார்.
2
ஆண்களும் பெண்களுமாய்
விழா தீர்ந்த
முச்சந்தி வெளியில்
கசங்கிய புத்தாடையோடு
குழுமி நிற்க
ஒன்றன்பின் ஒன்றாக
நா தழைய ஓடி வந்த
நாய்களிலொன்று மற்றொன்றின் பின்புறம்
கால்களேற்றிப்
புணரத் தொடங்கியது .
கணத் திகைப்பு மீண்டு
ச்சூ ச்சூவென விரட்ட
எல்லோர் ஆடைகளையும்
பற்றியிழுத்து
அம்மணமாக்கி
அகன்றன நாய்கள்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"