திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம்திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம்
ஐம்பது ஆண்டுகளில் திராவிட இயக்கங்களின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி இப்போது முற்றிலும் பழமையின் நெடியடிக்கத் தொடங்கியிருக்கிறது.அதன் தத்துவார்த்த பின்னணிகள் முடங்கியுள்ளன.ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் இளைஞர்கள் மத்தியில் அது பெற்றிருந்த எழுச்சியும் ,அடித்தட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக மாற்றத்தில் ,வளர்ச்சியில் அது ஏற்றுக் கொண்ட பொறுப்பும் குறிப்பிடத் தகுந்தவை.சமூக மாற்றத்தின் இடைப்பகுதியில் திராவிட கருத்தியல் மிக சிறந்த பங்காற்றியது.தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் திராவிடக் கருத்தியல் தவிர்க்க முடியாத அளவிற்கு மாநில உரிமைகளின் பால் செயலாற்றியிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் அரசியலில் ஒரு கருத்தியல் பங்காற்றியிருக்கிறது எனில் அது சாதாரணமான காரியமில்லை.இன்று நாம் காண்பது இற்று நொறுங்கிக் கிடைக்கும் அதன் நிலையை.உள்ளும் புறமும் அது நொறுங்கிக் கிடக்கிறது.ஐம்பதாண்டு காலம் மக்கள் அதன் சார்பில் இருந்திருக்கிறார்கள்.மக்கள் எந்த ஒன்றினையும் தேவையின்றி தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதில்லை.இன்று மக்கள் அதன் இற்று நொறுங்கிக் கிடக்கும் பரிதாப நிலையை வெறுக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
காலம் மாறிக் கொண்டிருக்கிறது.அடுத்த காலத்திற்குள் காலம் நுழைய வேண்டியிருக்கிறது.பழைய தலைவர்கள் உருவாக்கிய நில பிரபுத்துவ உருப்படிகள் மேலும் உதவாது.காங்கிரசுக்கும் , காமராஜுக்கும் தமிழ் நாடு விடை கொடுக்கும் போதும் அது ஏன் என்பது பெரும்பாலோருக்கு விளங்கவில்லை.இன்னும் கூட அது பலருக்கு விளங்கவில்லை எனலாம்.ஆனால் காமராஜின் பின்னால் துணைக்கிருந்த பின்புலமும் திராவிட இயக்கத்தின் நிலவுடைமைத் தன்மையைக் காட்டிலும் இறுக்கமானது என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள்.தியாகராஜ பாகவதரின் காலம் முடிவுற்று சிவாஜி,எம்.ஜி.ஆர் காலம் உருவானதை போன்றுதான் இதுவும்.பாகவதருக்கு இது விளங்காமல் அதிக பொருள் முடக்கி படமெடுத்தாடி மேலும் முடங்கினார்.
அதிகாரம் எவ்வளவு தூரத்திற்கு பரவலாகிறது,என்பதே அரசியலில் நல்லது செய்கிறார்களா அல்லது செய்கிறார்களா என்பதைக் காட்டிலும் முக்கியமானது.காமராஜ் காலத்தில் அதிகாரம் முடங்கியிருந்த இடம் நிலப்பிரபுத்துவம்.அவர்கள் நல்லது செய்திருக்கிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை.ஆனால் சமூகத்தில் அதிகார பரவல் அனைத்து சமூகங்களுக்கும் ஏற்படவில்லை.அது ஆங்காங்கே உடலில் கட்டிக்கட்டியாக திட்டுகள் ஏற்படுவதை போல குவிந்திருந்தது. இப்போதுவரையில் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.ஒருவர் காலாவதியாகும் போது எதனால் காலாவதியாகிறோம் என்பது அவருக்கு மட்டும் விளங்குவதே இல்லை. காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஏன் காலாவதியானார்கள் என்பதும் இன்றுவரையில் அவர்களுக்கு விளங்கவில்லை.அப்படியே ஜமீன் தோரணையில் நல்லதுக்கு காலமில்லை என்னும் பிறழ்வுண்ட குரலில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைய தமிழ் நாட்டு பா.ஜ.கவினரின் நிலையும் பழைய காங்கிரஸ் காரர்களின் நிலையும் வேறல்ல.
தமிழ் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை வெற்றி கொள்வதில் சமர்த்தர்கள் என்பது எனது கணிப்பு.அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஜனநாயகத்தை தங்களிடம் எடுத்துக் கொண்டே வருகிறார்கள்.இந்த விஷயத்தில் தமிழர்கள் மிகவும் கூர்மையானவர்கள்.பலரும் எதிர்மறையாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மையல்ல.அதிகாரத்தை பரவலாக்காத ஒன்றை தமிழ்நாட்டு மக்கள் ஏற்பதில்லை.ஏற்க தயாராகவும் இல்லை.இல்லை நீங்கள் அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டாம் ஒதுங்கி நில்லுங்கள் ; நாங்கள் உங்களுக்கு சொர்க்கத்தை காட்டுகிறோம் என்று எவரேனும் தமிழ் மக்கள் முன்னின்று சொன்னால் மக்கள் அவரிடமே நேரடியாக நரகத்திற்கு வழியெங்கே இருக்கிறது என்பதை நேரடியாக சொல்லிவிட்டுப் போய்விடுங்கள் என்றுதான் சொன்னவரிடமே கேட்பார்கள்.
திராவிட இயக்கங்கள் அடித்தட்டு வரையில் அதிகாரத்தைப் பரவலாக்கியதுதான் தமிழ் நாட்டில் அது ஐம்பதாண்டு காலம் நிலைக்கக் காரணம்.இன்றும் கூட தி.மு.க ; அ.தி.மு.க இரண்டிற்கும் இணையான உள்கட்டமைப்பைக் கொண்ட வேறு கட்சிகள் எதுவுமே கிடையாது.உள்கட்டமைப்பு என்பதை கிராமங்கள் தோறும் உங்களுக்கு கிளைகள் , தொடர்புகள் இருப்பதை பற்றி நான் சொல்லவில்லை.தொடர்புகள் எல்லோருக்கும்தான் உண்டு.மூன்று சீட்டு விளையாடுகிறவனுக்கும் கூட தொடர்புகள் உண்டு.உள்கட்டமைப்பில் அனைத்து சாதி சமய இன மக்களுக்கும் ; அவர்களின் வாக்கு மதிப்பினை ஒட்டி சமமான பிரதிநிதிதித்துவத்தை இவ்விரு கட்சிகள் மட்டுமே கொண்டிருக்கின்றன.ஜனநாயகத்தின் வேல்யூ என்பது இதுதான்.ஜனநாயகத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் செய்ய வேண்டியது இதனையே .பின்னர் அந்த அதிகார பங்கேற்பு தனக்கு நல்லது எது தீயது எது என்பதையெல்லாம் அதுவே முடிவு செய்து கொள்ளும்.
பத்துப்பதினைந்து ஆண்டுகளாக கிரிமினல்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றோரு கருத்தாக்கம் இந்தியாவில் முன்வைக்கப் பட்டது.ஊடகங்கள் ,நலம் விரும்பிகள் இந்த கருத்தாக்கத்தை விரும்பி வரவேற்றார்கள்.இதனை ஒரு உதாரணத்திற்காகத் தான் சொல்கிறேன்.இப்படி ஏராளமான ஜனநாயக விரோத கருத்தாக்கங்கள் ஜனநாயகக் கருத்தாக்கங்களை போன்று நம் முன்னர் வைக்கப்பட்டன.இவ்வாறான கருத்தாக்கங்களை எதிர்கொள்வதில் இந்தியா முழுமையிலும் அரசியல் அறிஞர்கள் மத்தியில் பிரச்சனைகள் இருந்தன.ஆனால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து அரசியலில் உருவாக்கி வருகிறவர்களுக்குத்தான்;இது மிகவும் போலியான ஜனநாயகத்திற்கு எதிரான கருத்தாக்கம் என்பது விளங்கும்.
வழக்குகள்,பொய்வழக்குகள் என்றெல்லாம் எதிர்கொள்ளாமல் இந்தியாவில் ஒரு தலைவர் உருவாகவே இயலாது.அதற்குரிய வாய்ப்புகள் எந்த மட்டத்திலும் கிடையாது.ஆனால் இந்த கருத்தாக்கம் கற்பனையாக ஒரு "மாரல் பொசிசன்" போல இனிப்பு தடவி நம் முன்னர் வைக்கப்பட்டது.எல்லோருமே இதனை ஏற்றுக் கொண்டார்கள்.அல்லது இப்படியான கருத்தாக்கங்களை எதிர்கொள்வது என்பது எப்படியென யாருக்கும் விளங்க வில்லை.அடுத்த இனிப்பாக இப்போது வழங்கப்படுவது ஊழல் என்னும் கருத்தாக்கம் .இந்த இனிப்பு வலைகளில் அடிமட்டக் குரல்கள் இன்று நசுங்குகின்றன.இந்த இனிப்புக்கு கருத்தாக்கங்களின் மூலமாக இன்று சில அடிமட்டத் தலைவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அறிஞர் அமர்த்தியா சென் "ஊழல்" என்னும் இனிப்புக்கு கருத்தாக்கம் எப்படி போலியானது என்பது பற்றி எச்சரித்திருக்கிறார்.இத்தகைய சிந்தனை முறைகளோடு ,அடித்தட்டு மக்கள் பேரில் ஆர்வம் கொண்ட அறிஞர்களோடு ; திராவிட இயக்கம் போன்று இந்தியா முழுவதிலும் உள்ள அடித்தட்டு மக்கள் இயக்கங்கள் தொடர்பு பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.இவற்றின் உள் காரணிகள் தனியே எழுதப்பட வேண்டியவை.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியப் பண்பாட்டின் மேலாதிக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கக் கூடிய தலைமை மிகவும் அவசியம் .ஒவ்வொரு முறையும் வடக்கு இவ்விதத்தில் இப்போது போலவே எப்போதும் நெருக்குகிறது .அதே சமயத்தில் வருங்காலத் தலைமைகள் வடக்கின் லகானுக்குள் முடங்காத தன்மை பெற வேண்டியதும் அவசியம்.நம்முடைய அரசியல் என்பது தேசியத்தைப் புறக்கணிக்காத; அதே சமயத்தில் தமிழ் நாட்டின் தனித்தன்மைகளை விட்டு தராத பண்பு பெற்றிருத்தல் அவசியம்.
அ.தி.மு.க ; தி.மு.க இரண்டு கட்சிகளையும் இணைத்து தேசியக் கட்சிகளை எதிர்கொண்டால் இப்போது கூட தமிழ் நாட்டில் மிகச் சிறந்த ஏற்பாடு கூடிவிடும்.இது ஒரு கற்பனையாக இருப்பினும் கூட. பிராமண எதிர்ப்பு ,பகுத்தறிவு வாதம் இவையெல்லாம் கதைக்குதவாதவை.பழமையானவை.பிராமண எதிர்ப்பிற்கு திராவிட இயக்கங்களின் சைவ பின்புலம் காரணமாக இருந்ததையும் உடைத்துப் பரிசீலிக்க வேண்டும். மாநில உரிமை பாதுகாப்பே இப்போது பிரதானம்.ஆனால் அதனை தேசிய எதிர்ப்பாக வெளிப்படுத்தவும் கூடாது.திராவிட இயக்கங்கள் நவீனமடையாமல் இவையெதுவும் சாத்தியமல்ல.நவீனமடையாவிட்டால் திராவிட இயக்கங்கள் மத்திய அதிகாரத்திடம் விலை போவதையும் சிறிது காலம் தவிர்க்க இயலாது என்றே தோன்றுகிறது.பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.தற்போதைய நிலை உண்மையாகச் சொல்லப்போனால் பின்நவீனத்துவ நிலை.சரியாக எதிர்கொண்டால் சிறப்பு இல்லையேல் துர் மரணம்.

முத்தரப்பிற்கு மத்தியில் ...

முத்தரப்பிற்கு மத்தியில்  ...நம்மிடையே மூன்று வகையான சிந்தனைப் போக்குகள் முன்வைக்கப்படுகின்றன.உலகெங்கிலும் மூன்றாம் உலகப் பின்னணி கொண்ட அடிமைச் சமூகங்களில் உலவுகிற பொதுவான போக்குகள் இவை.முதல் வகை மேலை நாட்டுச் சித்தாந்தங்களை அப்படியே வாரிச் சுருட்டி நம்மிடத்தில் சேர்க்கக் கூடியவை.இவை நம்முடைய மிகையுணர்ச்சில்,ரொமேன்டிக் தளத்தில் வந்தது கலப்பவை.ஒரு சமூகத்தின் விடலைகள் ,அதிருப்தியாளர்கள் இந்த போக்கிலேயே வசீகரம் கொள்கிறார்கள்.பெரும்பான்மையான ஆதரவு ,அரசியல் ஆதரவு எப்போதும்  இந்த வகைக்கு கிடைக்கிறது.இவர்கள் தங்களிடம் இருப்பதனைத்தையுமே தாழ்வுணர்ச்சியில் வைத்து ரொமேன்டிக்காக சிந்திக்கக் கூடியவர்கள்.இவர்கள் செயல்வடிவத்திற்குள் ஒருபோதுமே நுழைவதில்லை.கலை, இலக்கியம் உருவாக்குகிற பார்வைகளை புறக்கணிப்பவர்களாகவும் ,எதிர்ப்பவர்களாகவும்,சுய சமூகத்தை வெறுப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள். காலனிய பிளவு உத்திகள் அனைத்தும் இவர்கள் வழியாகவே சமூகத்திற்குள்  உள் நுழைகின்றன.கலையிலக்கிய அச்சம் என்பது இவர்களின் பொது மனப்பாங்கு.

இரண்டாவது வகையினர் உலகத்தின் சிந்தனைகளை நடைமுறை சார்ந்தது தன் வயப்படுத்த விரும்புபவர்கள்.அதே நேரத்தில் சுயமான சிந்தனைகளையும் இவர்கள் கைவிடுவதில்லை. நடைமுறை சாராதவற்றிற்கு இவர்களிடம் செல்வாக்கு எதுவும் கிடையாது.மரபின் ஆழமான கால்களிலும் நடைமுறைத் தன்மையிலும் நின்று சிந்திப்பவர்கள் இவர்கள்.பிற தரப்பினர்களால் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய பிரிவினர் இவர்கள்.பிற இரு பிரிவினரும் இவர்களையே தொடர்ந்து தாக்க முற்படுகிறார்கள்.சிந்தனையை செயல் வடிவம் நோக்கி நகர்த்துபவர்கள் இவர்கள்.சமூகத்தில் இவர்களுடைய சிந்தனைகளே ஆழமான தாக்கத்தை,திறப்பை ஏற்படுத்துகின்றன.முதல் வகையினரின் செயல்பாடற்ற கூச்சல்களுக்கு மாற்றாக ஏராளமான பங்களிப்புகளை தங்கள் அர்ப்பணிப்புகளின் மூலமாக நிகழ்த்துவார்கள் இவர்களே .கலையிலக்கிய படைப்புச் செயல்பாடுகளைப் பொருட்படுத்துகிற தரப்பினர் இவர்கள்.

மூன்றாவது வகையினர் அனைத்து சிந்தனைச் சரக்குகளையும் சுய மரபிற்கு அர்த்தம் ஏற்படுத்த,வேடம் பூண பயன்படுத்தக் கூடியவர்கள் .முதல் வகையின் நேரெதிர் பண்பு கொண்ட திருப்தியாளர்கள்.இவர்களையே அடிப்படைவாதிகள் என்கிறோம். அச்சம் இவர்களின் பிரதான பண்பு.அச்சத்தின் காரணமாகவே தாக்கவும் முற்படுபவர்கள் இவர்கள்.இவர்கள் பிறவற்றில் மீதெல்லாம் பயம் கொண்டவர்கள்.other என்பதில் இவர்களுக்கு ஏற்பில்லை.கலையிலக்கிய படைப்புச் செயல்பாடுகளில் சந்தேகம்  நிரம்பியவர்கள்.other என்று எதையெல்லாம் அடையாளம் காண்கிறார்களோ அனைத்தும் அழிக்க முற்படுபவர்கள்.

நம்மிடம் புழங்குகிற சிந்தனையாளர்களில் முதல் வகையினரையும்,மூன்றாவது நபரையுமே நாம் அதிகம் அன்றாடம் எதிர்கொள்கிறோம்.இரண்டாவது வகையினரோடு உறவு கொள்ள நமக்கு நிஜமான அக்கறைகள் தேவைப்படுகின்றன .இவர்கள் மூவருக்குமே நீங்கள் இவர்களுடைய தரப்பில் நிற்கிறீர்களா இல்லை எதிரில் நிற்கிறீர்களா  என நோக்கும் தன்மை உண்டு.இவர்கள் வாதங்களை ஏற்றுக் கொண்டால் தரப்பில் நிற்பதாகவும் ,மறுத்தால் எதிரில் நிற்பதாகவும் இவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.முதல் வகையினருக்கும் ,கடைசி வகையினருக்கும் காட்டமான எதிரிகள் தேவை.

படைப்புக் கண்ணோட்டம் என்பது இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது.இந்த மூன்று தரப்பினராலும் குழப்பமானது என வரையறை செய்யப்படுவது.நிரந்தரத்தன்மையும் நோக்கமும் அற்றது.ஆனால் பிறரால் எப்போதும் நோக்கமுடையது என உளவு பார்க்கப்படுவது.நோக்கம் கொண்டவர்களால் நோக்கம் கொண்டது இதுவென சாடப்படுவது.

இவையெல்லாம் நதிகள்.எதில் போய் விழுதாலும் இழுத்துச் சென்று கொண்டேயிருக்கும்.இதில் முதலும் மூன்றாவதும் பாலைவனத்தில் கொண்டு இறக்கிவிடக்கூடியவை.

நாம் யாராக இருந்தாலும் இவர்களில் ஒருவராகவே நின்று உரையாடிக் கொண்டிருக்கிறோம்

சாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் உண்ணாவிரதப் போராட்டம்

சாமிதோப்பு வைகுண்டசாமி பதியில் உண்ணாவிரதப் போராட்டம்
ஒன்றுபடுவோம் சமய உரிமை காப்போம்

எங்களுடைய சமய உரிமைகளுக்காகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதில் வருத்தமுற்றிருக்கிறேன்.இந்து சமயத்தில் அய்யாவழி தனித்த வழிபாடுகளும் ,தனித்தன்மையும் கொண்டது.தென்திருவிதாங்கூர்  சுவாதி திருநாள் ஆட்சி காலத்தில் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட இந்த வழிபாட்டை அய்யா வைகுண்டசாமிகள்  உருவாக்குவதற்காக 112  நாட்கள் சிறையிருந்த வரலாற்றைக் கொண்டது.இப்போது மீண்டும் தமிழக அரசின் அற நிலையத் துறையினரிடம் இருந்து அய்யாவழி வழிபாட்டு முறைகளைக்  காப்பதற்காக போராட வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.இந்த போராட்டத்திற்கு அரசாங்கம் செவி சாய்க்காத பட்சத்தில் இந்த போராட்டம் தீவிரமடையும் என்பதில் சந்தேகமில்லை.இந்த இக்கட்டில் இருந்து எங்களை பாதுகாக்க இந்து சமய பெரியவர்களும் ,சமூக நீதிபேரிலும் அய்யாவழியின் பேரிலும் பற்று கொண்ட சான்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வருகிற ஞாயிறுக்கிழமை மார்ச் 18  ம் தேதி முதல்கட்டமாக சாமிதோப்பு தலைமைப்பதியில் வைத்து ; அற நிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் சாமிதோப்பு அய்யா பதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடைபெறுகிறது.ஏற்கனவே  அற நிலையத்துறையின் பணியாளர்கள் பதி விதிமுறைகளை அவமதிப்பு செய்கிறார்கள்.இது அய்யா வைகுண்டசாமியை  அவமதிப்பதற்கு சமம்.

அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் .


இது எங்கள் வழி.எங்கள் நம்பிக்கை.வைகுண்டசாமிகள் காட்டிய நெறிகளுக்கு மாறாக நாங்கள் நடந்து கொள்ள இயலாது.நாங்கள் அமைதி   ,பொறுமை ஆகிய வைகுண்டசாமியின் போதனைகளை பெரிதும் மதிப்பவர்கள்.ஆதீனங்கள்,மடங்கள் இந்து மதத்தில் தன்னிச்சையாக இயங்கி வருவதை போல எங்களுடைய நம்பிக்கைகளையும் ,வழிபாட்டு  உரிமையையும் தன்னிச்சையாக இருக்க விடுங்கள்.

தேவையற்ற தலையீட்டை அய்யாவழி பதிகளில்,தாங்கல்களில் அரசு ஏற்படுத்துவதன் மூலம், எங்கள் அமைதியான சமூக வாழ்விற்கு அரசு இடையூறு செய்கிறது.மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்க்காமல் அரசு,  வைகுண்டசாமிகள் வழிபாடுகளில் தலையிடாதிருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

அய்யாவிடம் அன்னதானம் பெற்றே வாழ்ந்த நாம் ஒரு நாள் அந்த தலைமைப்பதியிலேயே உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருக்கிறது.அமைதியாக எதிர்ப்பைத் தெரிவித்து ஒருங்கிணைவோம்.வாருங்கள்.

"தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் "

குடும்பம் என்பது புராதனமானதொரு அலுவலகம்

குடும்பம் என்பது புராதனமானதொரு அலுவலகம்

சமூகத்தின் பிற அமைப்புகள் ஏற்படுத்திய அலுவலகங்கள் பலவற்றைக் காட்டிலும் இதற்கு சிறப்பு அதிகம்.மனிதன் ஏற்படுத்திய அலுவலகங்கள் பலவற்றிலும் புராதனமான அலுவலகம் இதுவே.பல அமைப்புகளின் வேர் இந்த அலுவலகத்தில் இருந்து தொடங்குகிறது.குடும்பம் என்கிற இந்த தொன்மையான அலுவலகம் ஆண் , பெண் என்கிற பலகீனமான உறவு நிலையில் மீது கட்டப்பட்டிருப்பது விந்தையானது.பலகீனமான அடித்தளத்தின் மீது உயர்ந்து நிற்கும் கோபுரம் போல. எப்போது வேண்டுமாயினும் உடைவதற்கு சாத்தியமான ஆண் பெண் உறவுநிலையை ; அது பல காலங்களாக பராமரிப்பு செய்து வருவது எவ்வளவு பெரிய ஆச்சரியம் ? எப்போது வேண்டுமாயினும் உடையும் சாத்தியம் கொண்டது உறவு என்பதை புரிந்து கொண்டோருக்கு; இந்த அமைப்பினைப் போல இசைவானதொரு அலுவலகம் வேறில்லை.

அமைப்புகள் உருவாக்கும் எத்தனையோ அலுவலகங்கள் காலத்தில் அழிந்து விடுகின்றன.முற்றாக அழியும் தன்மை  கொண்டவை,உருமாற்றத்துடன் தன்னை தற்காத்துக் கொள்பவை என பல அலுவலகங்கள் .மத அமைப்புகள் உருவாக்குகிற; அரசாங்கம் உருவாக்குகிற அமைப்புகள்;  மடங்கள்,கல்விச்சாலைகள் போன்றவற்றை உதாரணம் சொல்லலாம்.மடங்களுக்கு தன்னை சீர்திருத்தியவாறு தற்காத்துக்  கொள்ளும்  பண்பு அவசியம் .மடங்களை சீர்திருத்தினால் கல்விச்சாலைகள் உருவாகும்.தண்டனை அமைப்புகள் எவ்வளவோ அழிந்து விட்டன.சமூக அமைப்புகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன . குடும்பம் என்கிற அலுவலகம் தன்மையில் மாறவில்லை.

பல அலுவலகங்களை அமைப்புகளே ஏற்படுத்துகின்றன.மனிதன் தன் இயல்புணர்ச்சியிலிருந்து உருவாக்கிக் கொண்டதிந்த குடும்பம் என்னும் அலுவலகம். தனிச்சையானது.இதனை அமைப்பென்று புரிந்து கொள்ளாமல் அலுவலகம் என புரிந்து கொள்வதன் மூலம் இதன் பணி மிகவும் எளிமையாகிறது.அலுவலகம் என புரிந்து கொள்ளும்போது ; இதற்குள் உங்களுக்கிருக்கிற பணி என்ன ? என்பதனை விளங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

குடும்பம் என்னும் இந்த அலுவலகத்தின் மற்றொரு சிறப்பு ; இந்த அலுவலகத்தை சமூகத்தின் பிற அமைப்புகளோ ,அறிவுக் கருவிகளோ , சிந்தனைப் போக்குகளோ ,மதங்களோ ஒருபோதும் புறத்தில் இருந்து பாதிக்க இயலவில்லை.இந்த அலுவலகத்தில் தொடர்பு கொள்கிற ,அதற்கான தேவை கொண்ட அமைப்புகளை மட்டுமே இது ஏற்கிறது.முற்றிலும் துறவை போதித்த மதங்கள் அந்நியப்பட்டு நின்றன.இங்கு குடும்பத்தை உடைப்போம் கருத்தாளர்கள் முற்றிலும் துறவை போதித்த மதங்களின் தொடர்ச்சியாளர்கள்.பூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் இதனை அலுவலகமாக நோக்காமல் அமைப்பாகப் பார்த்ததன் காரணமாக சில தவறுகளை செய்தார்கள்.சமூகத்தின் பிற அமைப்புகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.இது முதல் தவறு.அமைப்பு என்பது ஒருமித்த சிந்தனை உடையவர்களுக்கானது எனில் குடும்பம் என்கிற அலுவலகம் ஒருமித்த சிந்தனையோ,ஒற்றுமையோ இல்லாதவர்கள் இணைவதற்கானது என்பதை காணத் தவறினார் அவர் . பின்னாட்களில் கத்தோலிக்கம் ஒருபக்கம் குடும்பத்தை  ஆராதித்த வண்ணமும்,பிறிதொரு பக்கம் எதிர்த்த வண்ணமும் என இரட்டை நிலைகளைக் கையாண்டது .அதில் மதப்  பணியாளர்களை உருவாக்குதலுக்கான நோக்கம் உண்டு.

குடும்பம் ஒருபோதும் ஒருமித்த கருத்து கொண்டார் வேண்டும் என நிர்பந்திப்பதில்லை.ஒருமித்த கருத்தோ,ஒற்றுமையோ இல்லாமல் புழங்குவதற்கான தளம் இது.மிகவும் முற்போக்கான அமைப்பு இது.பணியின் அடிப்படையில்,ஏற்றெடுக்கிற பொறுப்புகளின் அடிப்படையில்   அதிகாரத்தை மறைமுகமாக தருகிற அலுவலகம் இது.அதே சமயம் பணியில் பின்னடைவோரை முழுதுமாக புறக்கணிக்காத அலுவலகம்.

குடும்பம் தனது பணியினை அதிகமாக செய்வோருக்கு அதிகமான இயங்கு வெளியைத் தருகிறது.காலையில் வீட்டிற்குரிய அனைத்தையும் உங்களால் வழங்கி விட இயலுமாயின் மீதமுள்ள நேரத்தை அது உங்களிடம் கேட்பதில்லை.நீங்கள் செய்ய வேண்டிய பொறுப்புகளைக் கைவிட்டால் உங்களுக்கான அவகாசத்தை சுருங்கிவிடும்.எவ்வளவுக்கு விரிவுபடுத்துகிறீர்களோ அவ்வளவிற்கு விரியும் தன்மை கொண்டது வீடு.

யோசித்துப் பாருங்கள்.அப்பாவுக்கும் மகனுக்கும் ஒத்த கருத்து வேண்டியதில்லை.மனைவியும் கணவனும் வேறு வேறு உடல்கள்.வெவ்வேறு மிருகங்கள்.ஒருவரும் பிறிதொருவரைப் போல சிந்திக்க வேண்டியதில்லை.தனித்தனியாக இங்கே புழங்க முடியும்.பிற மனித அமைப்புகள் அத்தனையும் ஒன்றாக சிந்தித்தலைக் கோரக் கூடியவை.குடும்பத்தில் ஒத்த சிந்தனையைக் கோரினால் அது உடையத் தொடங்கும்.பிற அமைப்புகள் ஒத்த சிந்தனை இல்லையென்றால் உடையும் நேரெதிராக .

ஆணை சிறுமைப்படுத்துவதில் கைதேர்ந்தவள் பெண்

ஆணை சிறுமைப்படுத்துவதில் கைதேர்ந்தவள் பெண்

ஏனெனில் அவன் எவ்வளவு பெரிய ஆணாக இருந்தாலும் அவனுடைய சிறுமையை அவள் அறிவாள்.ஊரே கொண்டாடும். அவன் பெரிய மலை போல, மாமலை போல நின்று கொண்டிருப்பான்.ஒரு கணத்திற்குள் அவனைச் சுருக்கியெறிந்து விடுவாள்.அது அவளது கதாபாத்திரம் .இதனை அறிந்து கொண்ட ஆண்கள் பக்குவம் அடைந்து விடுகிறார்கள்.துரதிர்ஷ்டம் என்னவெனில் தள்ளாத முதுமையில் மட்டுமே ஆணை இந்த பக்குவம் வந்து சேருகிறது .அதனால் அதன் பின்னர் ஒரு பலனும் கிடையாது என்றான பிறகு. அவள் இதனை அறிந்து செய்கிறாள் என்று சொல்லமுடியாது.பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடந்து அவளை வந்தடைந்திருக்கும் தொழில் நுட்பம் இது.
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான முரண்பாடு சிறுமைப்படுத்துவதிலும்,சிறுமைப்படுவதிலும் இருந்தே தொடங்குகிறது.சிறுமையே தன் நிஜ உருவம் என்பதை ஆண் அறிவதில் முடிவடைகிறது.
கோயில் சமபந்தி ஒன்றில் நாங்கள் அமர்ந்திருந்தோம் .வயதான சாமியார் மனைவியுடன் எங்களுடன் அமர்ந்திருக்கிறார்.அவரைப் பார்த்தாலே தேஜஸ்.அருகிலிருந்த சிலரிடம் அவர் சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார்.உண்மையாகவே மிகவும் பக்குவதுடன்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார்.கேட்பவருக்கு பயன் மிக்க விஷயங்கள்தான் அவர் பேசியவை.அவரைச் சுற்றி இருந்த பலரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அந்த அம்மா அவரிடம் சன்னமான குரலில் " தெரியும் உம்மை ; பேசாமலிரும் "என பதற்றம் ஏதுமற்ற தொனியில் மெதுவாகக் கூறியதுதான் தாமதம் கொதித்துப் போனார் சாமியார்.உள்ளுக்குள் பொறியில் அடி வாங்கியவரை போன்று "உன்னுடன் இவ்வளவு காலம் வாழ்ந்ததற்கு என்னைச் செருப்பால் அடிக்க வேண்டும்" என்று கொந்தளித்தார்.இதனைச் சொன்ன பிறகு அம்மை கொஞ்சம் கூட அசையவேயில்லை.கற்சிலை போலிருந்தார். ஆரம்பத்தில் சாமியாரிடமிருந்த தெய்வம் சட்டென அகன்று வேறொரு விகாரமான தோற்றம் எழத் தொடங்கியது.அவரை வியந்து பார்த்தவர்கள் விலகி தங்கள் காரியங்களை பார்க்கத் தொடங்கினார்கள்.அம்மையார் நிம்மதியானார்.
அந்த தம்பதிகளுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும்.இத்தனை வயதிற்கு பின்னரும் அவர்கள் முரண்படுவதை கண்ட எனக்கு நமது முரண்பாடுகள் எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது.சாமியாரின் கொந்தளிப்பும் அம்மையாரின் அமைதியும் அசாதாரணமாக இருந்தன.நிச்சயமாக வாழ்வு முழுதிலும் அந்த அம்மையார் எப்படி அவரை வெற்றி கொண்டிருப்பார் என்பது துல்லியமாக எனக்கு விளங்கியது.இதனை வைத்து இது மட்டுமே அவள் குணம் என்றெல்லாம் மதிப்பிடவும் இயலாது.அவரை பிறர் யாரேனும் சிறுமைப்படுத்தினால் அவளுடைய அவதாரம் நேரெதிராகக் கூட அமையலாம்.
அப்பாவுக்கு காட்டும் முகத்தை அவள் கணவனுக்கு காட்டுவதில்லை.மகனிடம் காட்டும் முகம் மற்றவர்களால் அறிய இயலாதது.ஏன் கணவனோ ,தந்தையோ கூட அதனை அறிந்து விட இயலாது .அவள் மகனை சிறுமைப்படுத்த முடிவெடுத்து விட்டாலோ தகப்பனால் கூட அதனை தாங்கிக் கொள்ள இயலாது.
அவளுடைய முழு விகாரத்தைக் கண்டவர்கள் "இவள் இப்படித்தான் இருப்பாள்" என்று நம்பினால் இன்னொரு புறத்தில் அருளும் அன்பும் கசிய நின்று கொண்டிருப்பாள் பெண் .

இந்து மதத்திற்குள் ஒரு சிறுபான்மை மதம் அய்யாவழி

இந்து மதத்திற்குள் ஒரு சிறுபான்மை மதம் அய்யாவழி
"அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவ சிவா சிவ மண்டலம்" அய்யா வைகுண்டசாமியின் மதிய நேரத்து வழிபாட்டில் இடம் பெறுகிற "உச்சிப்படிப்பு" வாசகம் இது.மகிமைகள் நிறைந்தவனாகிய அல்லாவாலும் நிறைந்திருக்கும் சிவ மண்டலம் என அல்லாவைப் போற்றுகிறது இந்த வாசகம்.அய்யாவழியில் மதிய நேரத்து வழிபாட்டுப் பாடலுக்கு "உச்சிப்படிப்பு" என்று பெயர்.அய்யாவின் மதிய நேரத்து வழிபாட்டில் இஸ்லாமியர்களின் மதிய தொழுகையின் சாயலையும் உணர முடியும். இந்து மதத்திற்குள் அய்யா வைகுண்டர் காட்டிய வழிபாட்டு முறை என்பது முற்றிலும் புதியது.தனித்துவமானது.பல்வேறு விதமான மெய்மைகளை ஒன்றை நோக்கி நெறிப்படுத்தியவர் அய்யா வைகுண்டசாமிகள்.
அய்யாவழியில் வைகுண்டசாமியையே ஏக பரம்பொருளாகக் கண்டு வழிபடுகின்ற மக்களும் இருக்கிறார்கள்.அவரை அவதாரமாகக் கண்டு ,அவர் காட்டிய ஏக பரம்பொருளை வழிபாடு செய்பவர்களும் உண்டு.வைகுண்டசாமிகளின் வழிபாட்டுத் தலங்களான பதிகளிலும் ,நிழற்தாங்கல்களிலும் மதிய நேரத்தில் பாடப்படுகிற "உச்சிப்படிப்பு "என்கிற இந்த பாடல் மாணிக்க வாசகரின் திருவாசகத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
அய்யா வைகுண்டசாமிகள் சுட்டிக்காட்டித் தந்திருக்கும் பரம்பொருள் ,வழக்கமான இந்து மதம் சுட்டிக் காட்டிய பரம்பொருள் அல்ல.அது சிவனையோ , விஷ்ணுவையோ மட்டும் குறிப்பதல்ல.சிவனையும் விஷ்ணுவையும் அது ஒரு சேரக் குறிக்கிறது.பிறவற்றையும் சேர்த்துக் குறிக்கிறது. "அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா ;சிவசிவ சிவசிவ அரகரா அரகரா " என்பது அய்யாவழி வழிபாட்டின் மூல மந்திரம்.இது அய்யாவழியில் "உகப்படிப்பு "என்னும் வழிபாட்டுப் பாடலில் இடம்பெறக் கூடிய வாசகம்.வைகுண்ட சாமியின் அய்யாவழியைப் பின்பற்றுகிற மக்கள் பெரும்பாலோரின் நாவில் சதா உச்சரிக்கப்படும் மந்திரம் இதுவே.என்றாலும் கூட இந்த வாசகமும் அய்யா வைகுண்டர் காட்டிய பரம்பொருள் என்ன என்பதற்கு விடை சொல்வதில்லை.அது ஏக பரம்பொருளையே சுட்டுகிறது.
சிலர் தாங்கள் பின்பற்றுகிற பெருமாள் வழிபாட்டு முறைகளை சொல்லி,அதனால் நாங்களும் இந்த வழிபாட்டைச் சார்ந்தவர்கள்தாமே என்று இவ்வழியைச் சார்ந்த பெரியவர்களிடம் சொல்லும்போது மறுத்துவிடுவார்கள்.அங்கே நீங்கள் வழிபடுவது பெருமாளை அல்லது நாராயணனை மட்டுமே.ஆனால் வைகுண்டசாமிகளின் வழியில் வழிபடப்படுவது அதுவல்ல.நாமம் சூடுவது அங்கும் இருக்கிறது என்பதால் இது ,வைஷ்ணவம் அல்ல.அதுபோல சிவ நாமம் போற்றப்படுகிறது என்பதால் இது சைவமும் அல்ல. அய்யா வைகுண்டசாமிகளின் முதற்சீடரான அரிகோபாலன் சீடர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யாவின் ஏக பரம்பொருள் தத்துவத்தை விளக்கக் கூடியது.அந்த நூல் வைகுண்டசாமியால் அடியெடுத்துக் கொடுத்து படைக்கப்பட்டது என்கிற சிறப்பும் பெற்ற நூல்.
வைகுண்டசாமிகள் காட்டித் தந்திருக்கும் பரம்பொருள் ஏக பரம்பொருள்.அது சிவனையும் ,விஷ்ணுவையும் குறிப்பதோடு மட்டுமல்லாமல்,சப்த கன்னிமார்களையும் ,பகவதியையும் சேர்த்தே குறிக்கிறது.அது கன்னியாகுமரி பகவதியையும் குறிக்கிறது,மண்டைக்காடு பகவதியையும் குறிக்கிறது. அகிலதிரட்டம்மானையில் இடம் பெறுகிற இகனை திருமணங்கள்,பரம்பொருளில் பெண் தன்மையையும் இணைந்து ஏக பரம்பொருளாக்கம் பெறுவதை உணர முடியும்.அது கர்த்தாவையும் ,அல்லாஹ்வையும் தன்னின் இணைத்துக் கொள்கிறது.
ஏக பரம்பொருளில் இயற்கையின் பெண் தன்மையையும் ஒருங்கே இணைத்து தன்னில் கொண்டிருக்கிற பிற இந்து உருவகங்கள் இல்லை.அர்த்தநாரீஸ்வரரில் ஆணும் பெண்ணும் தனித்தனியாக இணைப்பு பெறுகின்றன.முப்பொருளும் ஒரு பொருள் என்னும் சித்தாந்தத்தை சுசீந்திரம் தாணுமாலயனில் காண முடிகிறது.ஆனால் அய்யா சுட்டிக் காட்டியிருக்கும் ஏக பரம்பொருள் அத்தனையும் கடந்தது,ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டவற்றிலிருந்து வேறுபட்டது.அனைத்து விதமான தன்மைகளையும் இணைக்கக் கூடியது.இது அய்யா வைகுண்டசாமியின் தனிச் சிறப்புகளில் ஒன்று .வேதாத்திரியம் அருளிய வேதாத்ரி மகரிஷியின் கருப்பொருள் மையமும் ,அய்யா வைகுண்டரின் ஏக பரம்பொருளும் ஒன்றெனக் கொள்ளலாம்.அய்யாவழியில் உள்ள பெரியவர்கள் "நீங்கள் அலைந்து அங்கேயும் ,இங்கேயுமாக குழம்ப வேண்டியதில்லை" எனச் சொல்வதற்கு வைகுண்டசாமிகளின் ஏக பரம்பொருள் தத்துவமே காரணம்.
அய்யா வைகுண்டசாமியின் வழியில் பெண்கள் வழிபாட்டு முறைகளை செய்வதற்கு உரிமை பெற்றவர்கள்.பல இடங்களில் பெண்களே நடத்துகிற , நிர்வகிக்கிற பதிகளும், நிழற்தாங்கல்களும் நிறைய உள்ளன.பெண்களுக்கு கருவறைக்குள் செல்ல அய்யாவழியில் எந்த தடையும் கிடையாது.சாதி எப்படி இங்குள்ள வழிபாடுகளை ஒருவர் மேற்கொள்ள தடையில்லையோ அது போலவே பால் அடையாளங்களும் இங்கே தடையில்லை.அய்யாவழியில் கணவன் இறந்தால் பெண் தாலியைக் கழற்றக் கூடாது.வெள்ளைப் புடவை கட்டக் கூடாது .அவள் விரும்பினால் மறுமணமும் செய்து கொள்ளலாம். அய்யாவழியில் ஆணைப் போன்றுதான் பெண்ணும் வேறுபாடுகள் கிடையாது.
தமிழ் நாட்டில் பெரும்பாலும் இந்து சமய கோயில்களில் ஆகம பூஜை முறைகளே பின்பற்றப்படுகின்றன.கேரளாவில் தாந்த்ரிக் பூஜை முறைகள் பேணப்படுகின்றன.இந்த இரண்டு விதமான முறைகளுக்கும் அய்யா வைகுண்டசாமியின் வழிபாட்டு முறைகளுக்கும் இடையே ஒரு சிறிய தொடர்பும் கிடையாது.தொடர்பு இல்லை என்பது மட்டுமில்லாமல் இவற்றுக்கு எதிரான முறையே வைகுண்டசாமிகளின் முறை ஆகும்.வைகுண்ட சாமிகளின் வழிபாட்டுத் தலங்கள் எதிலும் ஆகம பூஜை முறைகளையோ,தாந்த்ரிக் பூஜை முறைகளையோ பின்பற்றுவதற்குரிய வாய்ப்புகளே கிடையாது.அனைத்து சாதியினரும் சமமாகப் பங்கேற்கும் முறை இது.ஆகம பூஜை முறைகளில் உண்டியல் வைப்பதை போன்று அய்யாவின் தலங்களில் உண்டியல் வைப்பதற்கு வாய்ப்பில்லை.
"காணிக்கை போடாதீங்கோ ,கைக்கூலி கேளாதீங்கோ ; அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்தாண்டிடுங்கோ...எவனெவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாமே ....என்னிலும் பெரியோன் நீங்கள் ,உங்களிலும் மேலோன் நான் " என்பதெல்லாம் வைகுண்டசாமியின் வாக்குகள்.வழிபாட்டு முறைகளிலும் பின்பற்றப்படும் வாக்குகள் இவை.வைகுண்டசாமி பதிகளிலும் ,நிழற்தாங்கல்களிலும் காணிக்கை போடுகிற பழக்கம் கிடையாது.
இந்து மதம் என்பது பல்வேறு விதமான முரண்பட்ட தத்துவங்களாலும்,வேறுபாடுகளும் நிறைந்த அவற்றிற்கெல்லாம் இடமளிக்கிற பரந்துபட்ட பெரிய வெளி என்பது உண்மை.காலத்தில் இப்படியான முரண்பட்ட போக்குகள் ஒன்றிணைவதற்கு அவகாசம் அதிகமாக தேவைப்படுகிறது. கால அவகாசத்திற்கு முன்பாகவே ஒன்றிணைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள்,புதிதாக மதத்திற்குள் உருவாகும் போக்குகளை சிறுமைப்படுத்துவதாகி விடுவதோடு மட்டுமல்ல.புதிய போக்குகளின் நம்பிக்கைகளை அவமதிப்பதாகவும் ஆகிவிடும்.
அய்யா வைகுண்ட சாமியின் அய்யாவழி என்பது இந்து மதத்திற்குள் சிறுபான்மையாக உருவாகி பல லட்சம் மக்களின் நம்பிக்கையாக இன்று உருவெடுத்திருக்கும் புதிய போக்கு.தனிப் பெருஞ்சக்தி . அரசாங்கமோ,பிற தரப்பு இந்து மத பிரிவினரே இந்த வழியை கபளீகரம் செய்ய முயல்வது ; வைகுண்ட சாமிகளின் நெறிகளுக்கும் ,அதனை பின்பற்றும் மக்களுக்கும் எதிரானது.ஏனெனில் அய்யாவழி இந்து மதத்திற்குள் உருவாகியிருக்கும் சிறுபான்மை மதம்.வேறுபாடுகளற்ற பெருநெறிகளை தன்னகத்தே கொண்ட மதம்.அதனை யார் சிறுமை செய்ய முயன்றாலும் அது நன்மை தராது. "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் பேரிலக்கை தன்னகத்தே கொண்டது .அய்யாவழி தனித்துவமானது;இந்து மதத்தின் நீண்ட கிளையைப் போன்றது அது..அதனை முறிப்பதற்கு ,அச்சுறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படக் கூடாது.வைகுண்டசாமிகளின் அனைத்து முறைகளும் தூய தமிழால் ஆனவை.தமிழுக்கு இடம்மறுக்கும் தரப்புகள் இதில் தலையிடுவது ஒருபோதும் ஆரோக்கியமானதல்ல.

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

ஜெயமோகனின் "தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் " நூலுக்கு முன்னுரை எழுதித் தந்தேன்.சமீபத்தில் வாசித்த நூல்களில் எனது மனதிற்கு மிக நெருக்கமாக இருந்த நூல் இது.மிகப்பெரிய அக தரிசனம் இந்த நூல்.வழக்கமான மெய்மை பற்றிய சோர்வுகளில் இருந்து நம்மை விடுவிக்கும் நூல் இது.இந்த நூலுக்கு முன்னுரை எழுத வாய்த்தது இந்த நூலில் உள்ள தெய்வங்களின் ஆசிர்வாதமே.
இந்த நூலில் இருந்து மெய்மை பற்றி நம்மால் உரையாட இயலுமானால் உண்மையாகவே நம்மால் மெய்மையை நோக்கி சில அடிகளாவது நெருங்க இயலும் .
மிகச் சிறந்த ஆக்கம் .அவசியம் படித்துப் பாருங்கள்.

http://www.jeyamohan.in/107119#.Wprb5h1uY2x
 
இது அக வெளி 

எனது விடலை வயதில் கோணங்கி ஒருசமயம் எனது சொந்த ஊரான பனங்கொட்டான்விளைக்கு  வந்திருந்தபோது “என்னடா ரெண்டு கிலோமீட்டர் தாண்டுறதுக்குள்ள உங்கள் ஊர்ல  எட்டு சுடலையை கடக்க  வேண்டியிருக்கு “என்று ஆச்சரியமாகக்   கேட்டார்.  இத்தனைக்கும் அவர் ஊரான கோயில்பட்டியிலும் சாமிகள் அதிகமே. ஆனால் அவர் எங்கள் ஊரைப் பற்றிச் சொன்ன கணக்கு தவறு. அவர் நேரடியாக கண்ணால் கண்ட சுடலைகளை  மட்டுமே கணக்கில்  வைத்துத் திகைத்தார். உண்மையாக எங்கள் நிலமெல்லாமே பெரும்பாலும் சாமிகள்தான். விளைக்கு விளை பெரும்பாலும்  சாமிகள் இருப்பார்கள். இசக்கியும் ,சுடலையும் அதிகமென்றால் துணை சாமிகளோ ஏராளம். தோப்புத் தோப்பாக வாதைகள்  குடியிருப்பு உண்டு. இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுப் பரப்பிற்குள் தோராயமாக நூற்றுக்கும் குறையாத தெய்வங்கள் இருக்கும் .குலவாதைகளின் ஒரு குடியிருப்பென்றால் மொத்தம் இருபத்தியொரு படுக்கைகள்.  காலசாமி ,சங்கிலி பூதத்தான்,கட்டையேறும் பெருமாள்உட்பட.  இவற்றில் நான் முத்தாரம்மன் கோயில்களை சேர்க்கவில்லை.அவை சில நுற்றாண்டுகளுக்குள் வந்து சேர்ந்தவை.

சிறுவயதில் அப்பம்மைதான் வெற்றிலை பாக்கு வாங்க எங்களை கடைக்குப் பணிக்கிறவள்.  செக்கடி மாடனைப் பற்றி அவள் எச்சரித்து அனுப்புவாள். பட்டப்பகலிலேயே பயந்து பயந்து செக்கடியைத் தாண்டுவோம். போகிற வழியில் அங்கே கேட்பாரற்ற எண்ணைச் செக்கு ஒன்று சரிந்து கிடக்கும். ஏற்கனவே எங்கள் மனதில் பெரியவர்கள் சொல்லி வைத்த சங்கிலி பூதத்தான் கதைகள் உண்டு. செக்கடியைக் கடந்தால் சங்கிலி பூதத்தான் கோயில் வரும் . சற்று தென் மேற்கில் காலசாமி கோயில். திருட வந்த கள்ளனையே கண்களை இருட்டாக்கி  கையோடு கட்டி  கோயிலுக்குள் பூட்டி வைத்த சாமி அவர். காலசாமி கோயில் கொடைக்கு  செங்கிடா , கருங்கிடா என்று ஏராளம் பலிபூஜைகள்.  காலசாமி கோயிலுக்கு வடக்குப் பக்கமாக  சிறிய வெற்றிலை பாக்கு கடை உண்டு. செக்கடியை நான் பெரும்பாலும் ஓடித்தான் கடப்பேன்.  அப்போதெல்லாம் பெரியவர்களிடம் சதா மெல்லிய அச்ச உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. அந்த அச்ச உணர்வு பல்வேறு காரணிகளால் வாழ்க்கைக்குள் நுழைந்தது. அதனை அவர்கள் எங்களுக்குள் கடத்தினார்கள்.

எனது அப்பையாவின் தம்பி இளைய பாட்டனார் பெயர் வைத்தியலிங்க நாடார். ஊரே நிமிர்ந்து பார்க்கும் உயரம். பளபள என்றிருப்பார். அவருக்கு ஓய்வாக இருக்கும் போது நாங்கள் குழந்தைகள் காலை பிடித்து விடவேண்டும்.  அவர் சாய்வு நாற்காலியில் படுத்தவண்ணம் கண்களை மூடி கதை சொல்வார். அவையெல்லாம் கேட்பவருக்குத்தான் கதைகள். அவருக்கு சுயசரிதை. அவரது சுயசரிதை முழுதுமே பேய்களாலும், தெய்வங்களாலும் ஆனது. பிலா விளைக்கு தென் மேற்கே  இருந்த பன்றிமாடன் பனையை வளைத்துப் பதநீர் குடிப்பதை அவர் கண்டது தொடங்கி, பழைய   வீட்டடித் தட்டுக்கு மேற்கேயிருந்த வயலுக்கு வெள்ளம் பாய்க்கும் போது ராவிருட்டில் சுடலை தீப்பந்தத்தோடு விரட்டியது, மந்திரவாதி தூங்கியெழும்ப உவரியில் கொண்டு இறக்கி  விட்டதென எல்லாமே அவருடைய சுயசரிதைகள். அவர் சொல்லும் அனைத்து கதைகளிலும் அவரும் இருப்பார். பன்றி மாடன் பதநீர்குடிக்கும் கதையைக் கேட்கையில் ,  தந்தம் நீண்டு எப்போதும் ஒரு காளையின் அளவிற்கு  அகன்று ஊரில் நேர்ந்து விடப்பட்டு திரிந்துக் கொண்டிருக்கும் பன்றி நினைவில் நடமாடிக் கொண்டிருக்கும்.  அது முகம் திருப்பி அடித்து சிலருக்கு தொடையெலும்புகள் உடைந்திருக்கின்றன.

அப்பைய்யா  ஆதிநாராயணன் நாடார் வில்லிசைக் கலைஞராக இருந்தவர் என கேள்விப்பட்டிருக்கிறோம்.  அவர் அய்யா வைகுண்ட சாமிகளின் அய்யாவழிக்கு திரும்பிய பிறகு வில்லிசையைக் கைவிட்டார். அவரோடு கட்டிலில் ஒட்டி படுத்திருப்போம்.  அவருடைய கட்டிலில் எப்போதும் அவருடைய சுகமான உடல் வாசம் இருக்கும் . விவசாயம் உடலில் ஏற்படுத்தும் வாசம் அது. இயற்கையானது . போர்வைகளில் தணுப்பு. அது தலைப்பக்கம் உயர்ந்திருக்கும் நார்க்கட்டில். அவர் வில்லிசைக்கதைகள் பலவற்றை முழுமையாகச் சொல்லி இவையெல்லாம் பொய் என்பார். நம்பக் கூடாது என்று அறிவுறுத்துவார்.  அய்யாவழியில் நாட்டு தெய்வங்களை நம்புதல் கூடாது.  அவர்களுக்கு அய்யா வேறொரு உடன்பாடு ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.  நாட்டு தெய்வங்களோ, காட்டு தெய்வங்களோ நேரடியாக அவர்கள் மக்களிடம் பூஜைகள் கேட்கக் கூடாது. பகிரங்கமாக அவர்களுக்கு அய்யாவழி தாங்கல்களிலும் , பதிகளிலும் கருவறைக்கு வலதுபக்கமாக  சிவாய்மார் மேடை என்றொன்று  அமைக்கப்பட்டு சுத்த பூஜை செய்யப்பட்டது.

அப்போதெல்லாம் அம்மன் கோயில்கள் அதாவது முத்தாரம்மன் கோயில்கள் தவிர்த்து பிற தெய்வங்களுக்கான கோயில்களில் பொதுக்கதைகளை வில்லிசையில் பாடயியலாது . பொதுக்கதை என்பது முப்பிடாதி கதை மட்டுமே.  முப்புரத்தை அழிக்கும் கதை.  பிற தெய்வங்களுக்கெல்லாம் தனித்தனி கதைகள்.  சாராம்சத்தில் அந்த கதைகளின் ஓட்டம் ஒன்றுபோலவே இருந்தாலும் கூட சின்னச் சின்ன மாற்றங்கள் இருக்கும். எங்களூர் இசக்கியம்மன் கோயிலில் பெரியவர்கள்  பாட்டுக்காரர்களுக்கு ஊர் ஏடு எடுத்துக் கொடுப்பார்கள். அந்த கதை அந்த சாமிக்குரியது. வில்லிசைக் கலைஞர்கள் தங்களாகக் கொண்டு வந்த கதையை வைத்து ஒப்பேத்த முடியாது.  ஒவ்வொரு ஊரிலும் ஏதேனும் பெரியவரிடம் அந்த ஊர் ஏடு இருக்கும்.  கொடைக்கு அதையெடுத்தே படிக்க முடியும். எங்கள் ஊரில் அது சின்னாடாரிடம் இருந்தது.  அவர் எங்களுக்கு ஒரு சிறிய தாத்தா.

பாளையக்கோட்டை கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வை முனைவர் ராமச்சந்திரன் மேற்கொண்டிருந்த போது இந்த ஊர் ஏடுகளைத் திரட்டுவதற்காக சின்னாடாரைக் கேள்விப்பட்டு  எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். ராமச்சந்திரனிடம் அப்போது பல ஊர்களில் உள்ள தனியேடுகள்இருந்தன. சின்னாடாரிடம் எங்கள் ஊர் சாமிகளின் ஏடுகள் மட்டுமல்ல, பல ஊர் ஏடுகள் இருப்பதாக அவர் கேள்விப்பட்டு வந்திருந்தார்.  சின்னாடாரிடம் எவ்வளவோ முயற்சித்தும்  ஊர் ஏடுகளை அவரிடம் ஒப்படைக்க இணங்கவில்லை. முடியாது என மறுத்து விட்டார். இப்போது அந்த ஊர் ஏடுகள் எல்லாமே பெரும்பாலும் அழிந்து விட்டன என்று சொல்லலாம்.  எங்கள் ஊரில் மட்டுமில்லை. எல்லா ஊர்களிலும் அழிந்து விட்டன.  நினைவுகளில் எஞ்சியிருப்பவை மீதம்.  இப்போது  வில்லிசைக் கலைஞர்கள் பொதுக்கதைகளை  பாடுவதில் தைரியம் அடைந்து விட்டார்கள்.  கொஞ்சம் மிஞ்சிக் கிடைத்தவை முனைவர் ராமச்சந்திரனின் சேகரிப்பில் இருக்கக் கூடும்.  ராமச்சந்திரன் இவ்வாறே எனக்கு சிறுவயதிலேயே அறிமுகமானவர்.

இந்த தெய்வங்களின் கதைகள் அனைத்துமே மக்களின்     கண்ணோட்டங்கள் , பரிபாஷைகள், அவர்கள் வகுத்தறிந்த பார்வைகள்.  அந்த கண்ணோட்டங்கள் மூலமாகவே அவர்கள் வெளியுலகை உணர்வுகளை, மதிப்பீடுகளை வாழ்க்கையை வசப்படுத்தி வைத்திருந்தார்கள். புரிந்து கொண்டார்கள்.  அது விஞ்ஞானம் என்று வெளித் தோற்றத்திற்கு எளிதில் புலப்படாத மூல அறிவின் களஞ்சியம் .
 ஜெயமோகன் சொல்வது போல மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பழங்குடி மக்களின் வழிபாடுகளையும் சரி,  தொன்மையான நம்பிக்கைகளையும் சரி ஒருவகையான இளகாரத்துடன் குனிந்து கீழே பார்க்கிறார்கள். அவை அம்மக்களின்  அறியாமையால் உருவானவை என்றுதான் விளக்குகிறார்கள்.   எனவே இந்த பரிபாஷைகளும் ,விழுமியங்களும் அவர்களுக்கு முகம் திருப்பி கொள்கின்றன.  அவர்கள் இவையென்ன என்பதனை அறியவே இயலவில்லை.  இந்த நம்பிக்கைகளையும் , கதைகளையும் முதலில் அப்படியே ஏற்க வேண்டும். அப்படியானால் மட்டுமே அவை உங்களுக்கு முகம்காட்டும். இல்லை என்றால்  நீங்கள் அதன் சாராம்சத்திற்கு வெளியிலுள்ள ஏதோவொன்றை உளறிக்கொண்டு   நடுத்தெருவில்  நின்று கொண்டிருப்பீர்கள். முதன்முறையாக  இந்த கதைகளும் , நம்பிக்கைகளும் ஜெயமோகனின் படைப்பாற்றலில் கவித்துவமும் இணையப் பெற்று  இந்த நூலில் கண்திறந்து பார்க்கின்றன . உயிர் எழும்பி நிற்கின்றன.  வில்லடியோ,  காணியாட்டோ கேட்டு துடிகொண்டு தெய்வங்கள் துள்ளியோடி வருவதற்கு நிகராக . அதற்கு அவர் என்ன மாயவித்தை செய்திருக்கிறார் ? முதலில் அவர்களை அவ்வாறே அறிவு கொண்டு சுருக்காமல் அனுமதித்திருக்கிறார். பெரும்பாலும் கல்விப்புலங்கள் வழியே நாம் பெறுகிற சுருங்கிய அறிவு நாம் இவற்றைக் காண்பதற்கான பெருந்தடை. ஜெயமோகன் இந்த நூலில் அவற்றை அவர்களில்  விடுத்திருக்கிறார்.

இப்போது அவருடைய மொழியில் இந்த நூலில்  சொல்லப்பட்டிருக்கும் தெய்வங்கள் அத்தனையும் உயிர்ச்சாறு கூடி அருள் நிறைந்து நிற்கின்றன. நிச்சயம் இந்த தெய்வங்கள் அவருக்கு  அருள்புரியும்.  இப்படி எழுப்புவதற்காக  கன காலம் ஏங்கியிருந்த தெய்வங்கள் இவை.  மக்களின் வாழ்விற்கும் குற்றங்களுக்கும் சாராம்சமாக  இருந்த,  இருக்கும் கதைகள் இவை.  நாய்கள்,நாகங்கள் ஆகியவை ஜெயமோகனின் படைப்பாற்றலில் இந்த தெய்வங்களை அறிவதற்கு பேருதவி செய்திருக்கின்றன. ஜெயமோகனின் இந்த நூலில் பல விசேஷங்கள் உள்ளன. இந்த கதைகள் உயிர் கொண்டு எழும்பி நிற்கின்றன என்பதோடு  பணி  முடிவடையவில்லை. அப்படி முடிந்திருந்தால் இந்த தெய்வங்களுக்கு நேர்மையாகச் செய்த வேலை என்பதோடு அது முற்றுப் பெற்றிருக்கும். ஜெயமோகன் இந்த கதைகளின் வழியே மெய்மை நோக்கிய பயணத்தை மேற்கொள்கிறார். அந்த மெய்மை வழக்கமான அன்றாட ஆன்மிகம் சுட்டிக் காட்டுகிற மெய்மை அல்ல. மக்களில் இருந்து தொடங்குகிற மிகவும் சிக்கலான அதேநேரம் தீவிரமான மெய்மை இது. எளிதில் அகப்படாதது அல்லது அகப்பட கடினமானது. ஆனால் அந்த விஷேச அனுபவத்தை திறன்பட கவித்துவ சன்னதத்துடன் வாசகர்களிடம் கடத்தியிருக்கிறார்.  இந்த நூலில் ஒருவர் அடையவிருக்கிற மெய்மை மிகவும் விஷேசமானது. நாம் கோபுரங்களில்,மேல் தளங்களில் லயித்து இருக்கும் போது அதன் தாழ்வாரங்கள் எவ்வளவு கட்டுறுதி மிக்கவை என்பதனை இந்த நூல் உணர்த்துகிறது. இந்த கதைகளை ஜெயமோகன் சொல்லியிருக்கும் விதத்தில் அந்த கதைகளுக்கேயுரிய தாளலயம் ஒன்று இயல்பாக அமைந்திருக்கிறது . அதிலிருந்து மிகவும் பிரகாசமாக நம்மால் அவர் காட்டுகிற மக்களின் மெய்மை நோக்கி நகர முடிகிறது. நேர்மறை எதிர்மறை என்னும் பகுப்புகளுக்குள் அடங்காத மெய்மை இது.

மனிதனின் மெய்மை நோக்கிய பயணத்தில் ஏராளமான கதைகள். தொல்குடிகளும் ,இனக்குழு மக்களும் அதனை நிலத்தைக் கொண்டும் ,நிலம்சார் தெய்வங்களின் விழுமியங்களைக் கொண்டும் ஈடுசெய்ய முயல்கிறார்கள். இயற்கையான பிரயாசை இது. இந்த பிரயாசை மனிதனை காத்து ரட்சிக்கக் கூடியது. அதனால் தான் அவன் மீண்டும் மீண்டும் தனதாற்றல் அத்தனையையும் பயன்படுத்தி அதில் உழன்று கொண்டேயிருக்கிறான். இந்த தொல்குடிகளின் பிரயாசையிலேயே நமது அகவெளி புதையுண்டிருக்கிறது.
 ஈஸ்டர் தீவு , பசிபிக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள 163  சதுரகிமீ பரப்பளவுள்ள தீவு . இந்த தீவைப் பற்றிய செய்திகள், ஆய்வுகள் பல்வேறுஇதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்து விட்டன. பலரும் அறிந்த விஷயம்தான் இது. ராப்பா லூயீ என்கிற தொல்குடி அங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள்  உருவாக்கிய வழிபாட்டுத் தலத்திற்கு அஹு  ஆகிவி எனப் பெயர். ராணா ராக்கு என்னும் எரிமலைச் சாம்பலில் உருவாக்கப்பட்ட 887  பிரம்மாண்டமான சிலைகள் அந்த தீவில் இதுவரையில் கண்டடையப்பட்டுள்ளன.  இந்தச் சிலைகள் டாப் எனப்படும் எரிமலைச் சாம்பல் கொண்டு செய்யப்பட்டவை.  இந்தத் தீவு பற்றியும் ,இந்த சிலைகளை பற்றியும் ,இங்கு வாழ்ந்த தொல்குடி மக்களை பற்றியும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அம்மக்கள் கிபி  7ஆம் நூற்றாண்டிலிருந்து  14  ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்கள் என ஆய்வுகளின் யூகங்கள் நம்புகின்றன
.
ROBERT  D  CROLG  என்பவர் எழுதிய  HAND BOOK OF POLYNESIAN MYTHOLOGY ,STEVEN  N   ROGER FICHER என்பவர் எழுதிய ISLAND  AT  THE  END  OF THE WORLD ,JOHN FLENLEY  AND PAUL BAHN  எழுதிய THE ENIGMAS  OF  EASTER ISLAND  போன்ற நூல்களில் இருந்து எப்படி இந்த தொல்குடியை இருள் தழுவிற்று என்பதனை தெரிந்து கொள்ளலாம். அது ஜெயமோகன் ஓரிடத்தில் குறிப்பிடுவதை போன்று  உலக வரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்குத் தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தாம் .

ராப்பா லூயீ  தொல்குடிகள் உருவாக்கிய “மோய்” என்றழைக்கப்படும். பிரமாண்டமான இந்த சிலைகளே  ஈஸ்டர் தீவு பேரில் எனக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கான காரணம். ஏன் அவர்கள் இந்த பிரம்மாண்டமான சிலைகளை, உருவங்களை செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள் ? ஆத்ம சரீரம் பேரில் மனிதனுக்கு  இருக்கும் தீராத கவர்ச்சியினாலா ? எரிமலைச் சாம்பலைத்தேடித் செல்வதும் , அதிலிருந்து பிரமாண்டமான உருவங்களை வார்த்துப்படைப்பதும் அவற்றை தங்கள் நிலப்பகுதிக்குக் காவலாக முன்னிறுத்துவதும்எதற்காக ? நமது வசதிக்கேற்ப இச்செயற்பாட்டிற்கு ஏதேனும் ஒருஒற்றைப்படையான அர்த்தத்தை வழங்கிவிட முடியும். ஆனால் சிறிய அர்த்தங்களுக்காக மட்டும்தான் இந்த சிலைகளா ? மனிதன் தன்னுடைய சூக்கும உடலை சதா தேடித் கொண்டிருப்பதும் , சூக்கும உடல்கள் அவனைத் தேடித் கொண்டிருப்பதும் மனிதப் பிரயாசைகளின் பயணத்தில் முக்கிய அங்கங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த பிரயாணம் எங்கோ முடிவிலியில் தோன்றுகிறது. மற்றொரு முடிவிலி நோக்கி சென்று கொண்டேயிருக்கிறது. மனிதனின் மெய்மை நோக்கிய ஆசையும் ,பிரயாசையும் ஒருபோதும் அவனை விட்டகலவே செய்யாது.

ஜெயமோகனின் தொல்குடி தெய்வங்களை பற்றிய இந்த நூலை படிக்கும்போது எனக்கு நாம் எல்லோருமே  ஈஸ்டர் தீவு போன்றதொரு தீவிற்குள் வசிப்பவர்கள்தாம் என்று தோன்றிற்று . அந்த தீவிற்கு இடம், காலம் பெயர்கள் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கலாம். ஈடுபடும் பிரயாசை ஒன்றே தான். அந்த தீவு மனிதகுலம் ஒருபோதும் கரையேறவே இயலாத தீவு. அப்படியானால் நமது உருவங்கள், ஆண் ,பெண் என்னும் பாவனைகள் ? தெய்வங்களின் மடல்கள் அவை. சூக்கும உடல்களின் மடல்கள். அந்த மடல்கள் இளமை , முதிர்ச்சி என தங்களைத் தாங்களே கடந்து செல்கின்றன. பின் பிறிது மடல்களில், கொம்பில், தளிரில் வளர்கின்றன. ஏக்கங்கள், ஆசைகள் , துரோகங்கள், வேதனைகள் அனைத்தும் சூக்கும உடல்களாக வளர்கின்றன. அடப் பாவி… என்று கூறி தன்னில் ஓருடல் துரோகத்தால்  விடைபெறும் போது அடப் பாவி… என்பது தனியே வளரத் தொடங்குகிறது. ஏக்கம் வளர்ந்தால் அது எப்படியேனும் பற்றிக் கொள்ள வேண்டும், அதுவரையில் மீட்சியில்லை. ஆசை பொருத வேண்டும். துரோகம் பழிவாங்கப்படல் வேண்டும்.  இவை இல்லாது  சாந்தம் என்பதில்லை. அப்படியிருப்பது செயற்கையானது. “அவள் தாகம் மட்டும் உடலில் இருந்து தனியே பிரிந்து எழுந்தது ” என்றொரு வரி களியங்காட்டு நீலி கதையில் வருகிறது.  உடலில் இருந்து பிரியும் தாகம் . தனியே உயிர் வாழும் தன்மை கொண்டது. அதுதான் மெய்மையின் சிறப்பியல்பே. “நாம் காணும் மனிதர்கள் நமது கண்ணுக்குத் தெரியும் மாய வடிவங்கள். இவர்கள் உண்மையானவர்கள்  என்று நினைக்கிறோம். ஆனால் வேறெங்கோ இருக்கும் எவருடையவையோ நிழல்கள்தான் இங்கே ஆடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிழல்களை பார்த்து அந்த அசல் நாடகத்தை நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது. அந்த அசல் நாடகத்தை தெய்வங்களே பார்க்க முடியும்”  என்று இந்த நூலில் ஜெயமோகன் சொல்கிறார். இந்த நூல் முழுதையும் இணைக்கும் வாக்கியங்கள் இவை என்பது போல எனக்குத் தோன்றுகின்றன.

ஜெயமோகனின் இந்த நூலில் பெரும்பாலும் குமரி மாவட்ட நிலப்பரப்பைச் சார்ந்த தெய்வங்களின் கதைகளே அதிகம் . சிலகதைகள் கேள்விப்பட்டவை . சில கேள்விப்படாதவை . சில வில்லிசையில் கதை பாடல்கள் மூலம் அறிந்தவை. இவையெல்லாமே இந்த நூலில் ஒரு படைப்பு மனத்தின் ஊடுருவலில் உயிர் கொண்டு நிற்கின்றன. அதன் மூலம் நமது மனப்பரப்பின் எல்லைகளை மெய்மையால் அகலப்படுத்துகின்றன. நானறிந்த நிலம் , நானறிந்த தெய்வங்கள் என்பதால் எனக்கு கூடுதல் நெருக்கம் ஏற்படுகிறது. வரலாறும் , நினைவுகளும் போற்றி வைக்கப்பட்டு  எப்போது வேண்டுமாயினும் எழுந்து விட  முடியுமாயின்  நமது வெற்றுடல்களின் பொருளடக்கம்  வேறெங்கோ இருக்கிறது என்றுதானே ஆகிறது ? இந்த  தெய்வங்களை யெல்லாம்  கண்டடைந்து கவித்துவத்தால் இந்த நூலில் ஜெயமோகன் உயிர்பெறச் செய்திருக்கிறார். உதாரணமாக கவித்துவ கனவு போல நீரிலேயே வாழுகிற பிருதையை அவர் முதலில் கண்டடைந்திருக்கிறார் . பின்னர் கண்டடைந்த விதத்திற்கு மிக நெருக்கமாக நம்மை கொண்டு செலுத்தியிருக்கிறார்.
 இந்த நூலில் வரும் தெய்வங்களில் சிலவற்றை நேரடியாக எனக்குப் பரிச்சயம். விஷ்ணுபுரத்திற்கும் முந்தைய எனது ஆரம்ப காலங்களில் நேரடியாக அவர் சிலவற்றைக் காட்டியும் தந்திருக்கிறார். ஜ்யேஷ்டை அவர் அவ்வாறு அழைத்துச் சென்று கண்ணில் காட்டிய தெய்வம். அதன் செல்வாக்கு விஷ்ணுபுரத்தில் உண்டென்றே கருதுகிறேன். இந்த நூலின் மிக முக்கியமான சாராம்சமாக விளங்கும் தெய்வம் அது. இந்த நூலை ஜெயமோகனின் அகவுலகின் சான்றாகக் கருத முடியுமெனில் , அவர் கண்டடைந்த மெய்மையின் முக்கியமான தாது ஜ்யேஷ்டை எனும் தெய்வம் எனலாம். அவர் நேரடியாகக் காட்டித் தந்த போதே கடுமையாக இருந்த அகப்பொருள் அது.
ஜ்யேஷ்டைக்கு நிகராக ஆதிகேசவனின் படுக்கைக்கு கீழே அமர்ந்திருக்கும் கேசிகள்.  இருவேறு உலகத்தைச் சுட்டி நிற்பவை. “கை விரலை வைத்தால் துண்டாக்கிக் கொண்டு செல்லும் நதியொன்று ஓடுகிறது. அதைக் கடந்தே மெய்மைக்கான பாதையைத் தொடர முடியும்.”என்கிற நித்ய சைதன்ய யதியின் கூற்று ஜ்யேஷ்டையின் கதையில் பொருத்தமாக இடம் பெற்றிருக்கிறது.நாம் கோபுரங்களில் மெய்மையைத் தேடித் கொண்டிருக்கும் போது  ஜ்யேஷ்டையும், கேசிகளும் மனதின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“மகா யோகநிலை என்பது சிருஷ்டிக்கும் முந்தைய நிலை. அப்போது பிரபஞ்சத்தில் பெருமாள் மட்டுமே இருந்தார். பிறிதொன்று இலாததினாலேயே அவரும் இன்மை நிலையில் இருண்டிருந்தார்” கவித்துவத்தின் சாறு நின்றெரியும் வாக்கியங்கள் இதுபோல இந்த நூல் முழுதும் நிறைய வருகின்றன. ஆதிகேசவனைப் பற்றிய கதையில் இடம்பெற்றிருக்கும் வாக்கியங்கள் இவை.  நாட்டுத் தெய்வங்களையும் , காட்டுத் தெய்வங்களையும் பேசும் இந்த நூல் அடிப்படையில் புதிய மெய்மை ஒன்றினை அறிமுகம்செய்கிறது. அனுபவமாக்குகிறது. நமது அக வெளியினை நம்மிடம் திறந்து காணச்செய்கிறது. மகாபாரதம் பற்றிய அறிவின் மனத்தடைகளில் இருந்து வெளியேற ஐராவதி கார்வேயின் “யுகாந்தா “ஒரு யுகத்தின் முடிவு என்னும் நூல் எனக்கு பெரிதும் உதவியது.  இத்தனைக்கும் சாதாரணமான மானுடவியல் அணுகுமுறை மூலம் எழுதப்பட்ட மிகச் சிறிய நூல்தான் அது .அதுபோல நாட்டார் தெய்வங்களை பற்றிய இந்த நூலில், படைப்பு மனதின் ஊக்கத்துடன் அறிவின் பாசியை எடுத்தகற்றியிருக்கிறார் ஜெயமோகன். வாசகர்களின் மனதிலும் இது தன் வினையை மேற்கொள்ளும்.
 லக்ஷ்மி மணிவண்ணன்
நாகர்கோயில்
11  – 01 – 2018
ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது

ஜெயமோகனிடம் ஒரு நோக்கியா போன் இருந்தது


பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய மாடல் அது.பலரும் புதிது புதிதாக மாற்றிக் கொண்டிருக்கையில் அவர் மாற்றி கொள்ளவில்லை.எனக்கு அவர் அதனைக் கையில் கொண்டிருக்கக் காண மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.ஊரே ஒரு விஷயத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது என்றே கருதுவோம்.நாம் அதற்கு மாறுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்பதில் தெளிவு இருக்குமேயானால் வாழ்வின் முதல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட்டதாகக் கருதலாம்.பிரபலத்தில் ஒதுங்கியிருந்து ஒரு நாடார் தேநீர் கடையில் நின்று சுவைக்கத் தெரிந்து விடும்.இது தெரியாதவர்கள் ஆயுள் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.பிறர் எப்படி நிம்மதியாக இருக்கிறார்கள் என்று திகைக்கிறார்கள்.பேஷனை நோக்கி நீங்கள் விரட்டிப் பிடிக்காமல் உங்கள் தேர்வை செலுத்த தெரிந்தவராயின் கொஞ்சம் கொஞ்சமாக நீங்களே பிறருக்கு பேஷன் ஆகிவிடுவீர்கள்.
ஒருமுறை அவரை நான் பார்க்க சென்றிருந்த சமயம் டி சர்ட்டை மாற்றி அணிந்திருந்தார்.நெடுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன்.இன்று யாரும் அதனை அவரிடம் சுட்டிக் காட்டி அவர் சரியாக திருத்தாதிருக்கட்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். டி சர்ட்டை மாற்றியணிந்ததால் அவர் ஜெயமோகன் இல்லையென்று ஆகிவிட மாட்டார்தானே ! பிரபலத்தின் பேரில் கவனம் நமக்கு ஏற்படாதிருக்க வேண்டும்.அப்படியிருப்பது பெரிய கலை.இதனை விழிப்பு கொண்டு செய்ய இயலாது.உங்களுடனேயே இந்த பண்பு இருந்தாலொழிய இயலாது.நான் பெரிய நாகரீக பேர்வழிகளை சந்திக்கச் செல்வதாக இருப்பின் ஒரு பழைய வேட்டியை எடுத்து உடுத்துக் கொண்டு சென்று விடுவேன்.மோஸ்தரில் கரையேறுதல் முதல் படி.
நம்மில் பலபேருடைய வாழ்நாள் பிரச்சனை சமூகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதுதான்.உண்மையான கலைஞன் முதல் அடியில் தாண்டுவதே இதைத்தான்.என்னுடைய பெண் நண்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டு வருகிற போது சரியாகத் தான் பேசிக் கொண்டு வருவார்.வேற்றாள் ஒருவர் இருக்குமிடமாயின் போதும் வேறு விதமாகப் பேசத் தொடங்கி வருவார்.பொது இடங்கள் எனில் கேட்கவே வேண்டாம் ,பிறருக்காக மட்டுமே பேசிக் கொண்டு வருவார்.முதலில் எனக்கு இது விளங்கவில்லை.அவருக்கு ஏதேனும் மனநலப் பிரச்சனைகள் இருக்கக் கூடும் என நினைத்தேன்.பயணம் சென்றால் சக பயணிகள் அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று பிரச்சனை ,கடைக்குச் சென்றால் கடைக்காரர் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று சிந்தை .சாப்பாட்டில் அமர்ந்தால் இவர் சாப்பிடுவதை பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று பிரச்சனை ,பிறர் எல்லோரும் சரியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இவரை ஒத்தவர்கள் மட்டுமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது பெரிய அவஸ்தை.இந்த அவஸ்தையிலிருந்து கொண்டு எதையேனும் செய்ய இயலுமா ? ஊரே இவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க அவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா ? இந்த அவஸ்தையை மட்டும் இறக்கி வைக்க இயலுமெனில் உடலுக்கு எவ்வளவு எடை குறையும் யோசித்துப் பாருங்கள்.தன்னை மையமாக வைத்து சிந்திப்பதை நிறுத்தாத வரையில் இந்த அவஸ்தை கழியாது.
மலையாள மொழி விமர்சகர் ஒருவரின் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருந்தேன்.பலமுறை சென்றிருக்கிறேன். அவர் எனது நெருங்கிய நண்பரும் கூட.அந்த முறையில் அவர் சட்டையேதும் போடாமல் மேனியோடு இருந்தார்.அவரது மனைவி இப்படித்தான் இவர் சட்டையில்லாமல் இருப்பார் என்று கசந்து கொண்டேயிருக்க ,சட்டைக்காக அவர் இரண்டு முறை உள்ளே ஓடி போய் பதற்றத்தில் விழப் பார்த்தார்.சட்டை போட்டாலும் அவர்தான் வர போகிறார் சட்டையில்லையென்றாலும் அவர் தான் வர போகிறார்.அவர் நிர்வாணமாக வந்தாலும் கூட அவருடைய எழுத்துக்களின் வழியாகத் தான் அவரை எனது கண்கள் பார்க்கப் பழகியிருக்கிறதே தவிர ,சட்டையணிந்ததால் மதிப்பில் அதிகமுண்டாகப் போவதில்லை.குறைவதும் இல்லை. நான் அவருடைய மனைவியிடம் ,அவரும் எனக்கு நண்பரே ,நண்பரின் பெயரைச் சொல்லி ,சட்டையணிந்தாலும் அவர் தானே வருவார் ? இல்லை அவரிலிருந்து வேறு எவரேனும் வந்து விடுவார்களா ? எனக் கேட்டேன்.அவர்தான் வருவார் இருந்தாலும்... என்றார் அவர்.
எனது நண்பர் ஒருவரின் நண்பரின் மனைவி.கிராமத்தில் வளர்த்தவர்.கணவர் பெங்களூரு .அங்கேயே படித்து அங்கேயே வேலை பார்த்தவர்.திருமணம் முடிந்து அவர்கள் இருவருமாக பெங்களூரு சென்ற பிறகு சேர்ந்து வாழ்ந்தது வெறும் பதினைந்து தினங்களுக்கும் குறைவான நாட்கள்.சென்றது முதல் இருவருக்கும் ஒருவார காலமாகச் சண்டை நடந்திருக்கிறது.ஆக வெறும் சல்லிப் பிரச்சனை.வீட்டில் நிக்கர் அணிய வேண்டும் என்பது மனைவியின் கோரிக்கை.அவனுக்கு சுற்றுலாக்களுக்குச் செல்கையில் நிக்கர் தான்.வீட்டில் அது ஒவ்வாதது.மனைவி பெங்களூருகாரரைத் தேர்வு செய்ததே வீட்டில் அவர் நிக்கர் அணிவார் என்ற நம்பிக்கையில்தான் என நினைக்கிறேன்.அவர் கற்பனையில் இடி விழ, வேட்டி, நிக்கர் பிரச்சனையில் அவர் அங்கிருந்து கிளம்பி ; சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குத் திரும்பி விட்டார்.மாமனார் வீட்டிலும் இப்படி திரும்பி வந்து விட்டாள்,நீங்கள் நிக்கர் அணியலாம்தானே என ஆலோசனை செய்யவில்லை.அவள் இங்கே வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.இவன் கிறுக்கு பிடித்து பெங்களூரு நகரம் முழுதும் சுற்றியலைந்திருக்கிறான் .பின்னர் தகவல் கேள்விப்பட்டு வருகிறேன் எனக் கூறி ஊருக்கு வந்தவன்;ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய ஏராளமான நிக்கர்களை கொண்டு வந்து அவளுக்குப் பரிசளித்து விட்டு திரும்பிச் சென்று விட்டான்.வாழ்வின் காரணங்கள் அறியாமலே பிரிந்து விட்டார்கள்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் முச்சந்தியில் அண்ணாச்சியொருவர் கடை போட்டிருந்தார்.பல்வேறு குளிர்பானங்கள் மவுசு காட்டிய காலம்.விளம்பரங்களில் குளிர்பானப் புட்டிக்குள் கவர்ச்சி நிரம்பிய நடனங்களை ஆடி காட்டுவார்கள்.ஒரு விளம்பரத்தில் குளிர்பான புட்டியை உடைத்து குடித்த பின்பு குடித்தவன்,மின்சார ஒயர்களை எடுத்து இடுப்பில் சொருகிக் கொள்வான்.மற்றொரு விளம்பரத்தில் குடித்ததும் தலையை பிய்த்துக் கொண்டு ஒருவன் ஆடுவான்.இவற்றிற்கு பயந்தே பேய்கள் நடனமிடும் புட்டிகளுக்குள் நான் தலைமறைவாகியிருந்த காலம்.வீட்டில் விருந்தினர்கள் வந்தால் அப்போதெல்லாம் அந்த குளிர்பானங்களை வாங்க ஓடுவார்கள்.அதுதானே மவுசு.ஆனால் முச்சந்தி அண்ணாச்சி இவையெதையுமே பொருட்படுத்தியதில்லை.குளிர்பான புட்டிகளை தலைகீழாக சணலில் கோர்த்து வெயிலில் தொங்கவிட்டிருப்பார்.எனக்கு அவரை மிகவும் பிடித்துப் போனதற்கு வேறொரு காரணமும் கிடையாது.இந்த புட்டிகளுக்கெல்லாம் விளம்பரத்திற்கு எவ்வளவு பணம் செலவாகிறது தெரியுமா ? அண்ணாச்சி நீங்கள் தலைகீழாக உரித்துத் தொங்க விட்டிருக்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறேன்."நமக்கு இட வசதி இல்லலா புள்ளோ"என பதில் சொல்வார்.எங்கள் பகுதியில் இளநீர் வியாபாரத்தைப் பெருகச் செய்தவர் அவரே.ஆனால் அவருக்கு ஏன் இளநீர் விற்கிறது என்பது விளங்கவில்லை.வெள்ளந்தி வியாபாரம் அது.
பொதுவாகவே ஒவ்வொரு விஷயத்திலும் ஆண்களின் கோணமும் பெண்களின் கோணமும் முற்றிலும் வேறு வேறு.திருமணமான பின்னர் பதினைந்து ஆண்டுகள் வரையில் ஆண்கள் தங்கள் கோணத்தோடு ஒன்றித்தான் அவளும் சிந்திக்கிறாள் என நினைத்துக் கொள்வார்கள்.பெரியவன் பிளஸ் 2 போன பின்னர்தான் லேசாக இல்லை என்பது விளங்கும்.அதன் பிறகு அதனை எப்படியேனும் ஒன்றாகிவிட இருவரும் போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள்.அடுத்த பத்தாண்டுகள் இப்படியே போய்விடும்.ஜவுளிக் கடைகளில் பெண்களுடன் உடன் செல்லும் ஆண்கள் ,அவர்களுக்கு தேர்வு செய்யத் தெரிவதில்லை என்று நினைக்கிறார்கள்.அதனால் அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.இதில் புத்திசாலியான ஆணென்றால் இந்த போட்டிக்கே செல்லாமல் ஒதிங்கிக் கொள்ள வேண்டும்.தற்காப்பு அது ஒன்றுதான்.பெண்கள் ஜவுளிக் கடைகளுக்குச் செல்லும் போது,திருவிழாக் கடைகளை சுற்றி பார்க்கும் குதூகுலத்துடன் செல்கிறார்கள்.உடனடியாக தேர்வு செய்து விட்டேன் பார் புத்திசாலி என்னும் ஆணை அவர்கள் வெறுக்கிறார்கள்.பண்டிகையை இவ்வளவு விரைவாக முடிக்கிறானே என நினைக்கிறார்கள்.இரண்டு விஷயங்களை அவர்கள் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள்.இரண்டுமே முக்கியம்.அதனால் பண்டிகையை கொண்டாடட்டும் நான் தேர்வுக்கு உதவாமல் சும்மாயிருக்கலாம் என்றாலும் நடக்காது.இதெல்லாம் நல்லகடை சிப்பந்திகளுக்குத் தெரியும்.ஒருத்தி நுழைந்த உடனேயே ,இவள் எத்தனை ஆடைகளை எடுத்து உதறியெறிவாள் என்பதை முன் அனுமானிக்க முடிந்தால் அவனே நல்ல சிப்பந்தி.
பெண்கள் எதனால் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள்,விலகுகிறார்கள்,உண்மையில் விலகுகிறார்களா என்பதெல்லாம் மிகவும் ஆழமான ரகசியங்கள்.
இருப்பதில் முரண்படுதல் பிரதானம்.ஆனால் அது ஒரு பாவனையே.ஆழமான பற்றுறுதிகளில் சமரசமற்றவர்கள்.அதனை அவர்கள் இன்று நேற்று பெற்று வரவில்லை.ஆண்களுக்கு பற்றுதிகளில் சமரசம் உண்டு.பெண்களுக்கு பெரும்பாலும் இல்லை.ஆண் தெய்வங்களைக் காட்டிலும் பெண்தெய்வங்களை அணுகுவது சிரமமாக இருப்பதும் அதனாலேயே.பெரும்பாலான மிகை உணர்ச்சிகளில் மோஸ்தர் தளங்களில் ஆர்வம் கொள்பவளாகவும் ,நடைமுறையிலிருந்து அதனை விலக்குபவளாகவும் அவள் இருக்கிறாள்.
அந்த பையன் நிக்கரை அணிந்து தொலைத்திருக்கலாம்,அப்படியணிந்து தொலைந்திருந்தால் இரண்டொரு நாட்களிலேயே இது என்ன கோமாளி வேஷம் ? வேட்டியைக் கட்டு என்று கூட பணித்திருக்கலாம் யார்
கண்டார்கள் !.இதையெல்லாம் தாண்டி ,இந்த மோஸ்தர்களில் அகென்று பற்றுறுதி கொண்ட ஆண்களை அவளுக்கு அடையாளம் காணவும் தெரிகிறது.
எழுத்தாளனைப் பொறுத்தவரையில் தனது பொருளடக்கம் வழியாக உருவம் பெற வேண்டும்.அவனுடைய பற்றுறுதி அதனால் ஆனது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவிக்கெல்லாம் மாரடைப்பென்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை

யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்கிறார்கள்.யாருக்கு வேண்டுமாயினும் ஏற்படுவது யாருக்கு வேண்டுமாயினும் ஏற்படலாமா ? சௌந்தர்யா விமான விபத்தில் காலமடைந்த போது இறைவன் மேலானவன்தான் இல்லையென்று சொல்லவில்லை.ஆனால் அவ்வளவு தெளிவு நிறைந்தவன் என்று சொல்வதற்கில்லை என்று தோன்றியது.ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு என்னும் போது அது மேலும் ஊர்ஜிதம் ஆகிறது.

ஸ்ரீதேவி வயதான காலத்தில் நடித்த படங்களை நான் பார்த்ததில்லை.அது தர்மமல்ல.அது நன்றாக இருந்ததாகக் கூட சொன்னார்கள்,ஸ்ரீதேவிக்கெல்லாம் வயசே ஆகக் கூடாது.அப்படியொரு வேளை ஆகுமென்றால் அந்த கொடுங்கனவை நான் கண்ணால் காண வேண்டியதில்லை.ராம் கோபால் வர்மா, ஸ்ரீதேவி பற்றி ஒரு நேர்காணல் ஒன்றில் சொல்லும் போது ; ஸ்ரீதேவியை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு அவருடைய கணவரை எனக்குப் பிடிக்காது என்பதில் ,பதில்  தெரிந்து கொள்ள முடியும் என சொல்லியிருப்பார்.ஸ்ரீதேவிக்கெல்லாம் கணவர்,குழந்தைகள் என்றால் அது யோசிக்கவே மிகவும் மலிவாக இருக்கிறது.

சிறு வயதில் அன்பானவர்களுக்கும்  ,பேரழகு  படைத்தவர்களுக்கெல்லாம் மரணம் ஏற்படாது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.அதனையும் மீறி ஏற்பட்டுக் கொண்டுதானிருந்தது ,இருந்தாலும் மனம் நம்ப மறுக்கிறது.அப்படியில்லை என்று சொல்கிறது.பேரழகு என்பது இயற்கையின் விஷேசமானதொரு தோற்றம் .எவ்வளவு  எண்ணங்கள் அதற்கு, அது தோன்றுவதற்கு  பின்புலமாக இருந்திருக்கும் என யார் அறிவார்கள் ? அது எப்படியில்லாமலாக முடியும்.அது எப்படி காலமாகும் ? அதற்கு எப்படி நோய் ஏற்பட முடியும் .வளர்ந்த பிறகு படைப்பாளிகளுக்கு இப்படியேற்படாது என்று தோன்றியது .மாறாக
ஏற்பட்டது . எனினும் என்னுடைய நம்பிக்கையில் மாற்றமில்லை.அவர்கள் எந்த இடத்தில் இல்லாமலானார்கள் என்று சொல்லப்பட்டார்களோ அந்த இடத்தில் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட காலத்தின் பெண்மையின் பெருந்தோற்றம் ஸ்ரீதேவி .காலத்தை மயங்கச் செய்தவர் . அவர் அவ்விடத்தில் இருந்து கொண்டேயிருப்பார்.மாரடைப்பெல்லாம் குறுக்கிடவே இயலாத இடம் அது.

 பிறப்பென்பது சாதாரணம்.தோன்றுதல் வேறு.ஸ்ரீதேவி தோன்றியவர் , மறைவதில்லை  

போலிச் சாமியாட்டங்கள்

போலிச்  சாமியாட்டங்கள்

நடிகர்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து அரசியலுக்கு முயற்சி செய்வதை பார்க்கும் போது ,தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்திருப்பதையே உணர முடிகிறது.என் இந்த வறட்சி
நிலை ? அரசியல் பார்வைகளை சுயமாக ஏன் உருவாக்க இயலவில்லை ? அனைத்து அரசியல் பிரிவினர்களும் தமிழ்நாட்டில் பொய்மையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள்.அதிகாரத்தை தவிர்த்து இவர்களில் ஒருவருக்கு கூட ,அதாவது ஒரு பிரிவினருக்கு கூட உண்மையின் பேரில் நம்பிக்கையில்லை.அதிகாரத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒருவகையான தீய அரசியலுக்கு தமிழ்நாட்டில் பழக்கம் ஏற்பட்டு விட்டது.இதனை எளிதில் உடைத்து வெளியேறுவது உடனடியாக சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிந்ததுதான்.எதிர்காலத்திலேனும் சாத்தியமாகுமா ?

மக்களின் பிரச்சனைகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒருபோதும் உண்மையான தொடர்பே தமிழ் நாட்டில் இருப்பதில்லை.இந்த கட்சி ,அந்த கட்சி என்றெல்லாம் இதில் விலக்கு இல்லை.மக்களை கவருவதற்கான பொய்யான இலக்குகளே அரசியல் கட்சிகளிடத்தில் உள்ளன.அதிகாரம் மட்டுமே பொது இலக்காக உள்ளது. அதிகாரம் மட்டுமே இலக்கு என்னும் போது ஏராளமான பாவனைகள் அனைவரிடமும் ஏற்பட்டு விடுகின்றன.பொதுவில் முன்வைக்கப்படுகிற அரசியல் கோஷங்களுக்கும் மக்களுக்கும்  இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது.

இந்த பொய்யான இலக்கு அரசியல் கட்சிகளிடம் என்றில்லை.ஊடகங்களிடமும் ஏற்பட்டிருக்கிற தொற்று நோய்.அதிகாரம் உட்பட அனைத்தையுமே கேளிக்கையாக ,பொழுதுபோக்காக தமிழ்நாட்டில் புரிந்து கொள்கிறார்கள்.அதிகாரத்தை மட்டுமே ஏற்கும் பண்பு இதற்கு அடிப்படை.இதனை அற வீழ்ச்சி என்றே கொள்ள வேண்டும்.

புதிதாக தமிழ்நாட்டில் உருவாகிற ஊடகங்களை கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கலாம்.முதலில் அவை போலியாக உண்மைத் தன்மைக்கு மிக அருகில் உள்ள ஏதேனும் மக்கள் பிரச்னையை கையில் எடுக்கின்றன.அதன் மூலம் அடைகிற கவனத்தை பின்பு கேளிக்கையின் வணிகமாக்கிக் கொள்கின்றன.இது ஒரு மாதிரி இலக்கணம்.மக்கள் பிரச்சனைகளை பொய்யாக அணுகி ,பொய்யாக முன்வைத்து அதிகாரத்தைப் பெறும் முறை இது.இதுவே அரசியல் கட்சிகளுக்கும் இலக்கணமாக அமைந்து விட்டது.கூடங்குளம் ,ஜல்லிக்கட்டு ,மீனவர் பிரச்சனைகள் எல்லாமே இப்படி ஊடகங்களால் நம்மில் பொய்யான நடிப்பை ஏற்படுத்தியவைதாம்.இவை ஒவ்வொன்றிற்கு பின்பும் ஒரு ஊடகம் வளர்ந்த கதையும் மறைந்திருக்கிறது."தோழர் அந்த பிரச்னையை கையில் எடுக்க வேண்டும் தோழர்" என்றே அனைத்து கட்சியினரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.பிரச்சனைகளை பேசுவது அதிகாரத்திற்கான நடிப்பு என்றாகி விட்டது.இதனைத் திரையில் நடிகர்கள் மிகச் சிறப்பாக செய்துவிட முடியும் எனும் போதும் ,அவர்களின் அதிகார ஆசையும் பதவி மோகமும் நியாயம் பெற்று விடுகின்றன.

ஆனாலோ மக்கள் பிரச்சனைகளும் ,மக்களின் வாதைகளும் சிறு சிறு விஷயங்களில் தமிழ்நாட்டில் நிரம்பி வழிகின்றன.அவர்கள் மீது பெரிய பிரச்சனைகளை அரசியல் தரப்பினர் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் தலைவர்களுமே மக்கள் பிரச்னைகளின்  தலைசிறந்த நடிகர்கள். மக்களுக்கு நடிகர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு மட்டுமே கிடைக்கிறது.அவர்கள் அரசியல் கட்சிகளில் இருந்து உருவாகிற நடிகர்களா அல்லது திரையிலிருந்து வருகிற  நடிகர்களா  என்பதொன்றே வேறுபாடு.ஊடகங்கள் பொய்யான மக்கள் பிரச்சனைகளை உருவாக்குகின்றன.அரசியல் நடிகர்கள் அதில் நின்று நடனமாடுகிறார்கள்.மக்களின் நிஜ வாழ்வின் பிரச்சனைகள் ஒதுங்கி நின்று அனைத்தையும் வேடிக்கை  பார்க்க மட்டுமே முடிகிறது. பொதுவில் அனைத்து அரசியல் தரப்பினரும் ஒன்றே என்பதை மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

எனக்கு சில காலத்திற்கு முன்பு சாமியார் ஒருவர் நண்பராக இருந்தார்.நல்ல மனிதர் .யார்தான் இங்கே நல்ல மனிதராக இல்லை ? ஆசை.பேராசை.சாமி வந்தது போல நடிப்பார்.குறி சொல்லுவார்.நான் ஒரு சமயம் அவரிடம் சாமி வந்து இறங்கினால் மட்டும் ஆடுங்கள்.போலியாக சாமியாக பாவனை செய்யாதிருங்கள் என்று சொன்னேன்.உண்மையாகவே இங்கே சாமி வந்து விட்டதென்று வைத்துக் கொள்ளுங்கள் ; உங்கள் நிலைமை என்னவாகும் ? எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா ? இல்லை உண்மையாக சாமி வராது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா என்பதே அவரிடம் நான் முன்வைத்த கேள்விகள்.அவர் பரிசீலிக்க வில்லை.அவர் பொய்யாக நிமிர்ந்து நின்று ஆடிக் காட்டுவதோ மிச்சமே வைக்காமல் கழுத்தை அறுத்தெறியும் கருப்பசாமி.பின்னாள் ஒன்றில் நான் சொன்னது பலித்தது.நிஜ கருப்பசாமி வந்தார்.ஆடிய நடிப்பை அந்த வளாகத்திலேயே  அவர் அறுத்துக் கொன்று போட்டு விட்டு விடைபெற்றுச் சென்றார்.இது கதையில்லை.நடந்தது.

இவர்கள் எல்லோரும் கருப்பசாமி வரப்போவதில்லை,என்று நின்று ஆடிக் காட்டுகிறார்கள்.ஆனால் அவர் வராமல் இருக்க வழியே கிடையாது.காலம் கொஞ்சம் கூடுதல் தாமதம் ஆகுந்தோறும் ஆவேசமும் அதிகமாகும் என்பது பொருள்.புயலைப் போலே,பெரு மழையைப் போலே .மக்களால் அப்போதும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

அறம் ஒருபோதும் திரும்பாமலோ,திருப்பியடிக்காமலோ இருக்கப் போவதே இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஆடுங்கள். அப்படியான பாடங்களை தமிழ் நாட்டில் பாடத்தில் வைக்கவில்லையே என்றால் வைக்காத பாடத்தைக் காலம் உங்களுக்கெல்லாம் ஒருநாள் கற்றுத் தரப்போவது உறுதி.மாற்றமில்லை.நல்ல கல்வியை அப்போது அனைவரும் படிக்க வேண்டி வரும்.

ஈகோ

ஈகோ

சிறந்த குரு ஆரம்ப நிலையிலேயே நமது அகந்தையை அடித்து நொறுக்கி விடுகிறான்.இதுவொரு நல்ல நிலை.நமது அகந்தை அடிபட்டு விடாமல் காக்கும் நிலைக்குப் பெயரே அகங்காரம்.குரு இதில் முதலில் வலிமையான  பங்களிப்பைச் செய்து விடும்போது,நிறைய காலம் நமக்கு மீதமாகிறது . இல்லையெனில் வாழ்க்கை அகந்தையை அடித்து நொறுக்கும்.அப்போது நிறைய வலிவுணரவை அடைய வேண்டியதிருக்கும்.தன் அகங்காரத்துடன் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது.அது எங்கேனும் முட்டுச்சந்தில் போய் நிறுத்தி முட்டி நிற்கும்.ஒரு மனிதனுக்கு அகங்காரம் உடைந்த பின்னர் ஏற்படுவதே விழிப்புணர்ச்சி.

இப்போது பல இளைஞர்கள் தங்கள் அகந்தை உடைபட்டு விடக் கூடாது
என்று : மலினமான , தங்களிலும் தாழ்ந்த இடங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நிற்கிறார்கள்.அகந்தை எங்கு நோக்கிக் கண் திறந்தால் உடைந்து விழுமோ ,அந்த இடங்களை தாழ்ந்த அடையாளங்களில் நின்ற வண்ணம் தாக்கத் தொடங்குகிறார்கள்.இது மிகவும் ஏழ்மை நிலை.பரிதாபகரமானது.எது உங்களை உடைத்து நொறுக்குமோ அதை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டும்.பாதை அந்த திசையிலேயே இருக்கிறது.

என்னுடைய இளமைக் காலங்கள் முழுதும் என்னை யார் அடித்து நொறுக்குவார்கள் என்று தோன்றுமோ அவர்களை நோக்கியே இருந்தது.அவர்களைத் தேடித் சென்று அடிவாங்கி பின் திரும்புவேன்.அப்படியடி வாங்கி வாங்கியே அது கொடுத்த வளத்தில் எனது வாழ்க்கை அமைந்திருக்கிறது.இல்லையெனில் இவ்வளவு காலம் என்னை போன்ற ஒருவன் உயிர் வாழ்வதற்கு ஒன்றுமே கிடையாது.

அகந்தை நொறுங்கி விடக் கூடாது என்று எவ்வளவு தூரத்திற்கு மூடி மூடி பாதுகாத்து நடக்கிறீர்களோ அதுவரையில் பெரிய கால தாமதத்தை நீங்கள் தேடித் கொள்கிறீர்கள் என்பதே உண்மை.ஆனால் நாம் அகந்தையை அழிப்பவரை நெருங்க அஞ்சுகிறோம்.அவரை ,அத்தகையவற்றை தாக்கி அழித்து விட அகந்தையால் விரும்புகிறோம் .அப்படி முயன்று கொண்டே சென்றால் கண்டடைவதற்குள் புருவம் நரைத்து விடும் .அகந்தை உடைந்து விடாமல் நடந்து செல்வதற்குரிய பாதைகள் ஏதும் உலகில் கிடையாது.

அகந்தையை உடைத்து உடைத்து விளையாடுங்கள்.அதுதான் விளையாட்டே .
அகங்காரம் விழிப்படைய அது ஒன்றே வழி. 

திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம்

திராவிட இயக்கங்கள் நவீனமாக வேண்டியது காலத்தின் அவசியம் ஐம்பது ஆண்டுகளில் திராவிட இயக்கங்களின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி இப்போது ம...